செம்மண்ணில் கலந்த தண்ணீர்

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்பு உடை நெஞ்சம்தாம் கலந்தனவே!

நூல்: குறுந்தொகை (#40)

பாடியவர்: செம்புலப் பெயல்நீரார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள், ‘இவன் என்னைப் பிரிந்து சென்றுவிடுவானோ?’ என்று அவள் நெஞ்சுக்குள் ஓர் அச்சம். அதைப் போக்குவதற்காக அவன் சொல்லும் வார்த்தைகள் இவை

பெண்ணே,

நேற்றுவரை நீ யார்? நான் யார்? இருவருக்குமே ஒருவரை ஒருவர் அறிமுகம் இல்லை. உன்னுடைய தந்தையும் என்னுடைய தந்தையும் எந்த வழியிலும் உறவினர்கள் இல்லை.

நிலைமை அப்படியிருக்க, நீயும் நானும் ஒருவருக்கு ஒருவர் எப்படி அறிமுகமானோம்? அதுவும் புரியவில்லை.

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், செம்மண்ணில் தண்ணீர் கலந்தபிறகு, மண் எது நீர் எது என்று பிரிந்து அறியமுடியாததுபோல், அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டறக் கலந்துவிட்டன. இனி நமக்குள் பிரிவே கிடையாது.

துக்கடா

 • ஏற்கெனவே #365paa வரிசையில் இடம்பெற்ற பாடல் இது. முன்பு இதற்கு உரை எழுதியவர் நண்பர் @rsgiri : https://365paa.wordpress.com/2011/09/12/np02/
 • இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆகவே பாடலில் இடம் பெறும் முக்கியமான ஒரு வரியையே அவரது பெயராக்கிவிட்டார்கள்
 • தமிழ் சினிமாவில் இந்தப் பா, குறிப்பாக ‘செம்மண்ணில் கலந்த தண்ணீர்’ என்கிற வரி மிகப் பிரபலம். சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘நறுமுகையே’ உள்படப் பல திரைப்பாடல்களில் இந்த வரி எடுத்தாளப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை வீடியோவுடன் விளக்கும் பதிவு இது : http://karkanirka.org/2010/06/10/kurunthokai-40/ (இந்த இணைப்பைச் சுட்டிக்காட்டியவர் நண்பர் @scanman )
 • இந்தப் பாடலை (அல்லது தற்காலக் காதலைக்) கேலி செய்து எழுதப்பட்ட புதுக்கவிதை ஒன்று உண்டு. அதை எழுதியவர், கவிஞர் மீரா:
 • என் தந்தையும் உன் தந்தையும்
 • ஒரே ஊர்,
 • வாசுதேவ நல்லூர்.
 • என் தந்தையும் உன் தந்தையும்
 • ஒரே ஜாதி,
 • திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
 • நானும் நீயும் உறவின்முறை,
 • எனது ஒன்றுவிட்ட
 • அத்தை பெண் நீ.
 • எனவே
 • அன்புடை நெஞ்சம்
 • தாம் கலந்தனவே!

223/365

Advertisements
This entry was posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், ஆண்மொழி, காதல், குறுந்தொகை, சினிமா. Bookmark the permalink.

9 Responses to செம்மண்ணில் கலந்த தண்ணீர்

 1. Samudra says:

  பொதுவாக சொந்தத்தில் கல்யாணம் செய்யக் கூடாது என்று சொல்வார்கள். காதலுக்கு புதியவர்கள் தேவை. GUY OR GIRL NEXT DOOR உடன் காதல் வருவது கொஞ்சம் அரிது தான்.இதைப் பற்றி ஓஷோ, ஆணும் பெண்ணும் எந்த அளவு வேறுபட்டு இருக்கிறார்களோ அந்த அளவு நல்லது என்கிறார். அதாவது ஊர் விட்டு ஊர் அல்ல, நாடு விட்டு நாடு அல்ல கண்டம் விட்டு கண்டம் (சாத்தியமானால் கிரகம் விட்டு கிரகம்) ஆணும் பெண்ணும் சேர வேண்டும்.அப்போது தான் பிறக்கும் குழந்தைகள் அபார அறிவாற்றலுடன் இருக்கும். …….

 2. Samudra says:

  மாமன் மகளையோ தூரத்து சொந்தத்தையோ கல்யாணம் செய்து கொண்டால்
  பிறக்கும் குழந்தைக்கு ஒரு VERSATILITY கிடைப்பதில்லை.பாடகர் கல்யாணியை
  ஒரு மணிநேரம் பாடி விட்டு அடுத்த பாட்டு சங்கராபரணத்தில் ஆரம்பித்தால்
  நமக்கு கடுப்பாகி விடாதா? அப்படி.கச்சேரியில் பொதுவாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதராகங்களையே தேர்வு செய்வார்கள். கல்யாணி, ஆனந்த பைரவி, கமாஸ், ஆரபி இப்படி.ஒன்றுகொன்று தொடர்பில்லாத வண்ணங்களைக் கலக்கும் போது தான் புதிய அழகிய வண்ணங்கள் கிடைக்கும்……………

 3. Samudra says:

  இங்கும் காதலர்கள் புதியவர்கள். சொந்தம், தூரத்து சொந்தம் ஒன்று விட்ட சொந்தம் ,தெரிந்தவர்,பழக்கமானவர் என்ற எந்த வரையறைக்குள்ளும் அடங்காத புதியவர்கள்.

  எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
  யானும் நீயும் எவ்வழி அறிதும்

  – அப்படி இருக்கும் போது எப்படியோ நாம் காதலால் ஒன்றிணைந்து விட்டோம். நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே என்று சினிமாவில் பாடுவார்களே அதுமாதிரி.

  “செம்புலப் பெயல் நீர் போல” …மண்ணும் நீரும்
  வெவ்வேறு பூதங்கள் என்று நமக்குத் தெரியும். வேதியியல் படி நீர் ஆக்சிஜன் ஹைட்ரஜன்,,, மண் சிலிக்கான்!வெவ்வேறு சேர்மங்கள்..ஆனாலும் இரண்டும் இரண்டறக் கலந்து விடுகின்றன. மண்ணும் நீரும் கலந்தால் தான்
  தாவரம் நன்றாக வளரும்.அப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்த இரண்டும் இன்று இரண்டறக்கலந்து விட்டது போல நாமும் அந்நியர்களாக இருந்து இன்று அன்பில் கலந்தோம் என்கிறது இந்தப்பாடல்.செம்புல நீர் என்னும் பிரயோகம் ‘முன்பே வா என் அன்பே வா’ வில் கூட வருமே?

 4. Kaarthik Arul says:

  ‘முன்பே வா’ பாடலில் கூட ‘நீரும் செம்புலச் சேரும் கலந்தது போலே கலந்திடலாம்’ என்று வாலி எழுதியுள்ளார்.

 5. இந்த பாடல்தான் எவ்வளவு எளிமை? திரும்ப திரும்ப படித்தாலும் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தருது. காதல் கொண்டாடப் படவேண்டியது தான்!

  இந்த பாடல் London tube-இல் இடம் பெற்றது: http://www.tfl.gov.uk/tfl/corporate/projectsandschemes/artmusicdesign/poems/poem.asp?ID=148

 6. GiRa ஜிரா says:

  அனைவருக்கும் காதலர்நாள் நல்வாழ்த்துகள். 🙂

  குறுந்தொகையில் ஒரு அட்டகாசமான பாடல் காதலர் நாளில் 🙂

  உலகக் காதலர்கள் சார்பாக நாகாவிற்கு பாராட்டுகள்.

  இந்தப் பாடலைப் பார்க்கும் முன் வைரமுத்து அவர்களின் பாடல் வரி ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.
  ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
  பெண்ணின் தவிப்பு தொடங்கிவிடும்
  வேதம் புதிது படத்திலுள்ள கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல்தான் இது.

  இந்த வரிகள் எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டதோ அந்தச் சூழ்நிலையில்தான் இந்தக் குறுந்தொகைப் பாடலும் எழுதப்பட்டது.

  காதலர் கண்டனர். காதல் பெருகி இருவரும் ஒருவரையொருவர் கொண்டனர்.

  அப்படிக் கொள்ளும் போது வராத தவிப்பு கொண்ட பிறகு வருகின்றது. அதுவும் பெண்ணுக்கு.

  அந்த அச்சத்தைப் போக்குவதற்காகக் காதலன் சொன்னதே இந்தக் குறுந்தொகைப் பாட்டு.

  “பெண்ணே, நன்றாக நினைத்துப் பார். நாம் ஒருவரையொருவர் எந்த வகையிலும் முன்னம் அறியாதவர்கள். அப்படியிருந்தும் இன்று நாம் காதலராகிக் கூடிக் களிக்கிறோம். இந்தச் சேர்க்கை ஏதோ ஒரு பொருட்டால் உண்டானது. அப்படியே இது தொடரும்.

  யாயும் ஞாயும் யார் ஆகியரோ? என் தாயும் (யாய்) உன் தாயும் (ஞாய்) ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா? இல்லை.
  # இருவரும் ஊர்த் தோழிகளா?
  # அல்லது ஒரே அலுவலகத்தில் வேலை செய்கின்றவர்களா?
  # ஒரே மகளிர் மன்றத்தில் இருப்பவர்களா?
  # ஒரே பேருந்தில் செல்கின்றவர்களா?
  # ஒரே கோயிலில் கும்பிடுகின்றவர்களா?
  # ஒரே கடையில் சேலை எடுப்பவர்களா?
  # ஒரே பொற்கொல்லனிடம் நகை செய்கின்றவர்களா?
  # அரிசியும் பருப்பும் ஒரே கடையில் வாங்குகின்றவர்களா?
  # விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் எதிரெதிர் அணியில் கூட இருந்ததில்லை.
  # ஜெயா தொலைக்காட்சியில் ஜாக்பாட் நிகழ்ச்சியில் ஒரே அணியிலும் இருந்ததில்லை.

  இப்படி எதுவுமே இல்லை. இனிமேல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டால்தான் அவர்கள் முதல் சந்திப்பு நிகழ முடியும்.

  தாய்மார்கள்தான் இப்படி. தந்தையர் எப்படி?

  எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

  என் தந்தையும் (எந்தை) உன் தந்தையும் (நுந்தை = நும்+தந்தை) எந்த வழியில் உறவானவர்கள்?
  # மாமனா? மச்சானா?
  # திருட்டுச் சுருட்டைப் பள்ளியில் ஒன்றாகப் புகைத்தவர்களா?
  # ரதிநிர்வேதம் படத்தை ஒரே அரங்கில் ஒன்றாகப் பார்த்தவர்களா?
  # சைக்கிள் போட்டியில் ஒருவரையொருவர் முந்தப் பார்த்தவர்களா?
  # ஒரே தாளை இரண்டாகக் கிழித்து ராக்கெட் செய்து பெண்கள் பக்கம் விட்டவர்களா?
  # ஒரே பெண் காவலரிடம் பெண்களைக் கேலி செய்ததற்காக அடி வாங்கியவர்களா?
  # ஒரே டீக்கடையில் கூட்டமாகக் கூடிக் கதையடித்தவர்களா?
  # அல்லது பக்கத்துப் பக்கத்து வீட்டு மனைகளையாவது வாங்கியவர்களா?
  # சச்சின் நூறாவது சதமடிக்க ஒரே கோயிலாவது/தெய்வத்தையாவது கும்பிட்டவர்களா?
  # முதல்நாள் முதற்காட்சியில் பிடித்த நடிகன் படத்தை ஒன்றாகப் பார்த்தவர்களா?

  எதுவும் இல்லை. எந்த உறவும் இல்லாத இவர்களுக்கு நாம்தான் உறவு உண்டாக்க வேண்டும்.

  சரி. இவர்கள்தான் இப்படி. நாம் இருவரும் எப்படி?

  யானும் நீயும் எவ்வழி அறிதும்?
  # ஒரே தெருவில் வளர்தோமா?
  # ஒரே ஊரில் பிறந்தோமோ?
  # ஒரே பள்ளியில் சேர்ந்தோமா?
  # ஒரே கல்லூரியில் படித்தோமா?
  # ஒரே திரையரங்கில் ஒரே படத்தைப் பார்த்தோமா?
  # ஒரே பூங்காவில் விடியலில் ஓடினோமா?
  # ஒரே ஆற்றங்கரையில் நீராடினோமா?

  இப்படி எதுவுமே இல்லை.

  நாம்தாம் எப்படிச் சந்தித்துக் கொண்டோம்? ஏதோ நான் அந்தப் பக்கம் வந்தேன். நீயும் அந்தப் பக்கம் வந்தாய்.

  நானும் பார்த்தேன். நீயும் பார்த்தாய். விழியால் பார்த்தோம். ஆனால் மனமும் கரமும் முந்திக்கொண்டன.

  எது நம்மை ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு வரச் செய்து சேர்த்து வைத்ததோ அதுதான் இந்த மண்ணையும் மழையையும் சேர்த்து வைத்தது.

  எங்கோ தொலைவில் இருக்கிறது கடல்
  எங்கோ உயரத்தில் இருக்கிறது மேகம் – இருந்தாலும்
  இங்கே இருக்கும் இடத்தில்
  மேகம் வழியாக மழையாகப் பெய்கிறது கடல்நீர்
  செம்மண் நிலத்தில் பெய்யும் தூய மழைநீர், மண்ணோடு கலந்து இணைந்து அதன் நிறத்தையும் சுவையையும் தன்னோடு பெற்றது. அதைப் பிரிக்க முடியுமா? அப்படித்தான் நாமும். அச்சம் தவிர்.”

  செம்புலப் பெயனீர் போல
  அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

  பி.கு இது கார்காலத்திற்கு மட்டுமே. கார் முடிந்து வேர் வரை வெயில் அடிக்கும் போது கலந்த நீரை மட்டும் ஆவியாக்கி விடும் வெப்பம்.

  அன்புடன்,
  ஜிரா

 7. amas32 says:

  ஆணும் பெண்ணும் காதல் செய்வது ஒரு ரசாயன மாற்றத்தாலே தான். ஒருவர் மேல் மற்றவர்க்கு ஈர்ப்பு உண்டாவதற்கு ஒரு குறிப்பிட்டத் தேவை வேண்டியுள்ளது. யாரை பார்த்தாலும் நமக்குக் காதல் தோன்றுவதில்லை. அந்த குறிப்பிட்ட ஒருவரிடம் மனதை பறிகொடுப்பது ஒரு ரசாயன மாற்றத்தாலே தான். அதைத் தான் அந்த “செம்புலப் பெயல் நீர் போல” என்ற வரி சொல்கிறது. எவ்வளவு பெரிய அரிய தத்துவத்தை இந்த வரி வெளிப்படுத்துகிறது!

  கண்ணதாசனின் யார், யார் யார் அவள் யாரோ, ஊர் பேர் தான் தெரியாதோ? என்ற பாடலும் “யானும் நீயும் எவ்வழி அறிதும்” என்ற எண்ணத்தை தான் தெரிவிக்கிறது.

  இன்னொரு அருமையான கண்ணதாசன் பாடல், “யார் அந்த நிலவு? ஏன் இந்த கனவு? யாரோ சொல்ல, யாரோ என்று, யாரோ வந்த உறவு. காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு!”

  காதலுக்கும், காதலர்களுக்கும் ஒரு ஜே!
  amas32

 8. Samudra says:

  நன்றி ஜிரா மற்றும் அமஸ்32..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s