தேரை விரட்டு

படுமழை பொழிந்த பயமிகு புறவின்

நெடுநீர் அவல பகுவாய்த் தேரை

சிறுபல்லியத்தின் நெடுநெறிக் கறங்கக்

குறும் புதல் பிடவின் நெடுங்கால் அலரி

செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப

வெம்சின அரவின் பை அணந்தன்ன

தண்கமழ் கோடல் தாது பிணி அவிழத்

திரிமருப்பு இரலை தெள் அறல் பருகிக்

காமர் துணையொடு ஏமுற வதியக்

காடு கவின் பெற்ற தண்பதப் பெருவழி

ஓடு பரி மெலியாக் கொய்சுவல் புரவித்

தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப

ஊர்மதி வலவ தேரே சீர்மிகுபு

நம்வயின் புரிந்த கொள்கை

அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே!

நூல்: அகநானூறு (#154)

பாடியவர்: பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்

சூழல்: முல்லைத் திணை, வேலை முடிந்து திரும்புகிற காதலன் தன்னுடைய தேர்ப்பாகனை ‘விரட்டு’கிறான்

தேர்ப் பாகனே,

பலத்த மழை பொழிகிறது. பயனுள்ள முல்லை நிலத்தின் ஆழமான பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. அவற்றில் தங்கியிருக்கும் பிளந்த வாய்த் தேரைகள் சத்தமிடும், ஒலி பல வாத்தியங்கள் கலந்த இசையைப்போல வழி நெடுகிலும் கேட்கிறது.

சிறிய புதர்களில் இருந்து உதிர்கின்ற நீண்ட காம்புகளைக் கொண்ட பிடவப் பூக்கள் செம்மண் நிலமெங்கும் உதிர்ந்து கோலம் போடுகின்றன. கொடூரமான கோபத்தைக் கொண்ட பாம்பின் படம் போல காந்தள் பூக்கள் மலர்ந்து விரிந்து மணக்கின்றன.

முறுக்கிய கொம்பைக் கொண்ட ஆண் மான், தெளிவான நீரைக் குடிக்கிறது. பின்னர் தன் மனத்துக்குப் பிடித்த துணை மானுடன் சென்று தங்குகிறது.

இப்படியாக, மழையும் குளுமையும் இந்தக் காடுமுழுவதையும் அழகு செய்திருக்கின்றன. காட்டின் நடுவே உள்ள பெரிய பாதையில் வேகமான குதிரைகளை ஓட்டிச் செல்கிறாய் நீ.

உன்னுடைய குதிரைகளின் பிடரி மயிர் அளவாகக் கத்தரிக்கப்பட்டுள்ளது, அவற்றின் கழுத்தில் உள்ள மாலைகள் கால்வரை தழைந்து தொங்குகின்றன, அந்த மாலைகளில் உள்ள மணி கம்பீரமாகச் சத்தமிடுகிறது.

பாகனே, தேரை இன்னும் வேகமாக ஓட்டு. அழகிய மாமை நிறம் கொண்ட என் காதலி, என்மீது ஆசை வைத்திருக்கும் அந்த அரிவையைச் சீக்கிரமாகச் சென்று சேர்வோம்.

துக்கடா

 • கார்காலம் தொடங்கிவிட்டது. அவன் காதலியிடம் திரும்பவேண்டிய நேரமும் வந்துவிட்டது. காட்டில் பெய்யும் மழையும் குளிரும் தண்ணீரில் கத்துகின்ற தவளைகளும் செம்மண்ணும் அதில் கிடக்கும் பூக்களும் காற்றில் மிதக்கும் வாசனையும் மான்களும் சகலமும் அவனுக்கு அவளை நினைவுபடுத்துகின்றன. அவளும் இதேபோல் ஏங்கிக் காத்திருப்பாள் என்பதற்காகவும், ‘கார்காலத்தில் திரும்புவேன்’ என்று அவளுக்குக் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவும் டிரைவரிடம் காரை, ச்சே, தேரை ‘ஓவர் ஸ்பீடில்’ ஓட்டச் சொல்கிறான். இந்த சிம்பிள் மேட்டரைச் சொல்வதற்கு எத்தனை செறிவான கவிதை!
 • இந்தப் பாடலில் நான் இன்று தெரிந்துகொண்ட வார்த்தை ‘பல்லியம்’ : பல வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கும் Orchestraவாம்!

222/365

Advertisements
This entry was posted in அகநானூறு, அகம், ஆண்மொழி, காதல், பிரிவு, முல்லை. Bookmark the permalink.

19 Responses to தேரை விரட்டு

 1. anonymous says:

  இதைப் பாடியவர் ஒரு பெண் கவிஞர் = புல்லாளங் கண்ணியார்! (புல்-ஆளம்)

  பேரு, ஏதோ பொன்னாங் கண்ணி போல இருக்கே-ன்னு ஐயம் வந்தா நான் பொறுப்பல்ல!
  பொன்னாங் கண்ணி, கரிசலாங் கண்ணி-ன்னு “கண்ணி”க் கீரை வகைகள்! முடத்தாமக் கண்ணி என்ற புலவரும் உண்டு!

  “பொதும்பில்” புல்லாளங் கண்ணியார் ஒரு கிராமத்துப் பொண்ணு!
  பொதும்பில் என்கிற ஊரு! பொதும்பு-ன்னு ஆயிருச்சி! மதுரைப் பக்கம்…
  பழனி முருகனைப் பாக்கப் போகும் போது, மதுரை-திண்டுக்கல் சாலையில் வரும்!
  —-

  இந்த அழகிய பாடல், ரெண்டு ரெண்டு அடியாப் படிக்கணும்! படிச்சிப் பருங்க! பிடிச்சிப் போகும்!

  படுமழை பொழிந்த பயமிகு புறவின்
  நெடுநீர் அவல பகுவாய்த் தேரை

  தேரை-ன்னா என்ன?
  கல்லுக்குள்ளும் தேரை இருக்கும்! அதுக்கும் இறைவன் படி அளக்கிறான்-ன்னு சொல்லுவாங்க!
  தேரை வேற, தவளை வேறயா? பார்த்து இருக்கீங்களா?

 2. anonymous says:

  * தேரை = Toad
  * தவளை = Frog

  சில சமயம் பாக்க ஒன்னே போல் இருந்தாலும், தேரை தோலு சொரசொர-ன்னு இருக்கும்!
  தவளை போல மழுமழுப்பா இல்லாம, தோல் வறண்டு இருக்கும்!
  கல்லு நகர்த்தும் போது, கல்லு இடுக்கில் ஓடி, காலில் ஏறி, விஷம் பட்ட காலமும் உண்டு!

  தேரை ஓடும்! தவளை போல எம்பி எம்பிக் குதிக்காது!
  எங்கே வேணும்-ன்னாலும் தண்ணியே இல்லாமக் கூட வாழும்! தவளைக்குத் தண்ணி தேவை!
  —-

  இந்தத் தேரைகள், தவளை போல ஒரே soundஐக் குடுக்காது…விதம் விதமாக் குடுக்கும்!
  அதுவும் ஒன்னு ஆரம்பிச்சா, அடுத்தது கொஞ்ச நேரம் கழிச்சி ஆரம்பிக்கும்! Relay Music தான்…..நெடுநேரம்!

  “சிறு பல்லியத்தின் நெடுநெறிக் கறங்க”
  -ன்னு என்னமாச் சொல்லுறாங்க இந்தப் பெண் கவிஞர்!

  பல்லியம் = பல்+இயம்; பல இசைக் கருவி; Orchestra
  நெடுநெறி = Long Sound….
  கறங்க = ஒலிக்க…

  Orchestra-வில் வயலின் இசை, ஒன்னு மாத்தி ஒன்னு, இ்ழு இழு-ன்னு இழுப்பாங்களே…
  அது போல தேரைகள், இழு இழு-ன்னு இழுக்கின்றனவாம்! Voila! What an observation of this female poet!

 3. anonymous says:

  Sorry! Sorry! ரெண்டு ரெண்டு அடியாப் படிக்கணும்-ன்னு சொன்னேன்-ல்ல?
  படுமழை பொழிந்த பயமிகு புறவின்
  நெடுநீர் அவல பகுவாய்த் தேரை

  பகுவாய்த் தேரை = பகுக்கப்பட்ட வாய் = ரெட்டை நாக்கு!

  தேரையின் நாக்கு, வாய்க்குள்ள ஒட்டிக்கிட்டு இருக்கும்! ஆனா பூச்சி பிடிக்கும் போது மட்டும், வெடக்-ன்னு பெருசா நீளும்!
  அவ்ளோ பெரிய நாக்கை, உள்ளே மடக்கி வச்சிக்க வசதியா, பொறக்கும் போதே, வெட்டி டிசைன் போட்டிருக்கான் இறைவன்! = “பகுவாய்த் தேரை”
  —–

  ஏன் திடீர்-ன்னு தேரைகள் Orchestra இசை போடுது?

  படுமழை பொழிந்த
  = மழை சாதாரணமாப் பெய்யல! “படு” மழை! நிலத்தில் படும் ஒலி கேக்குற அளவுக்குப் பட பட-ன்னு போடுது!

  பயமிகு புறவின்
  = புறம் போக்கு நிலம் = புறவு! ஒரே காடு! அதனால் “பயம் மிகு புறவு”

  நெடுநீர் அவல
  = நீர் தேங்கி, தட்டையா மிதக்குது! ‘அவலுதல்’-ன்னா தட்டையாதல் (அரிசியைத் தட்டையாக்கினா அவல் வருது-ல்ல?)
  —-

  கல்லுக்குள் இருக்கும் தேரையெல்லாம், இந்த “அவலும் நீர்” பட்டு, என்னமோ ஏதோ-ன்னு வெளியே வர…
  கல்லுக்குள் ஒடுங்கியே இருந்த தேரைகள்….இத்தனை தேரைகளை வெளியே பார்த்து…ஒன்னோட ஒன்னு காதல்…

  அதான் காதலுக்கு, இளையராஜா Orchestra போல Lengthy Notes போடத் துவங்குதுங்க! அதுவும் ஒன்னு மாத்தி ஒன்னு, தொடர் இசை! = “சிறு பல்லியத்தின் நெடுநெறிக் கறங்க”!
  —–

  Read two two at a a time!
  படுமழை பொழிந்த…பய(ம்)மிகு புறவின்
  நெடுநீர் அவல…பகுவாய்த் தேரை
  You can see the video before u! Short words, Scenic Lines!
  Thatz the “Poetic Density” of Sanga Tamizh!

 4. amas32 says:

  “வினையாளை வேலை முடிவில்” என்று பாராட்டிலக்கனத்தில், வேலைக்காரர்கள் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பணியைச் செய்து முடித்தவுடன் பாராட்டவேண்டும் என்று ஔவையார் சொல்லியிருந்தார் (365 பா பிப் 5 )
  அதற்கு சமுத்ரா அவர்கள் பின்னூட்டலில், வினையாளை வேலை செய்யும் முன்பே புகழணம் (நீ நல்லா செய்வேன்னு தெரியும்) என்பது தான் இந்த காலத்துக்குப் பொருந்தும் என்று குறிப்பிடிருந்தார்.
  அதைத் தான் இந்தக் காதல் வயப்பட்டத் தலைவன் இந்தப் பாடலில் செய்கிறான். தேரோட்டியை சற்றே புகழ்ந்து, குதிரைகளை சிட்டாகப் பறக்கவிட்டு விரைந்து எனது காதலியிடம் கொண்டு சேர் என்கிறான்!
  கார் காலத்தைத் தான் இந்த பெண் புலவர் எவ்வளவு நுணுக்கமாக விவரித்திருக்கிறார். KRS அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி படித்தால் இந்தப் பாடலின் அழகு பன்மடங்காகிறது. பலமுறை படித்துவிட்டேன்.
  amas32

 5. anonymous says:

  பல்லியம்-ன்னா என்ன?-ன்னு சொல்லச்சொல்லி வரச் சொன்னாக! ஆனா வேற என்னமோல்லாம் பேசிட்டேன்! Sorry!

  பல்லியம் = பல் + இயம் = Orchestra
  * இயம் = இயம்புதல்
  * பல் இயம் = பலவும் இயம்புதல்
  (ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கும்-ன்னு மாணிக்கவாசகர் திருவெம்பாவை)

  Orchestra = கூட்டியம்-ன்னு இப்போ சொல்றாங்க! ஆனா பல்லியம்-ன்னு இதுக்கு சங்கச் சொல்லே இருக்கு!
  பல்லியம் ஆவது பாற்கடல் அரங்கம்-ன்னு ஆழ்வார் திருமொழி!

  பல்லியம், இன்னியம், அந்தரப் பல்லியம், முழவியம்-ன்னு தமிழிசைக் கூறுகள்!
  இசையில் “Jugalbandhi”-ன்னு சொல்லிக்கறோம்! ஆனா “பல்லியம்” தெரியல!
  இசைக்கு மொழியேது?-ன்னு சொல்லிச் சொல்லியே, தமிழிசையை Museumக்கு அனுப்பி விட்டோம்!:(
  —–

  Sorry, ஆற்றாமையால் I tend to deviate & write more!

 6. anonymous says:

  குறும் புதல் பிடவின் நெடுங்கால் அலரி
  = பிடவம்-ன்னா காட்டு மல்லி-ங்க!
  அது புதர்-ல்ல தான் பூக்கும்! குறும் புதல் (புதர்)

  (இப்போ சென்னையில் காட்டுமல்லி-ன்னு ஏதோ விக்குறாங்க! அதுக்கு வாசம் இல்ல! ஆனா மெய்யான புதர்க் காட்டுமல்லி கிராமத்துல இருக்கும்! வாசம் ஏழூருக்குத் தூக்கும்)

  * நெடுங் கால் = காட்டு மல்லிக்கு நீட்டுநீட்டு கால்
  * அலரி = முழுக்க மலர்ந்து, மகரந்தம் எல்லாம் பரவி…
  * செந்நில மருங்கின் = செம்மண் பூமியில்
  * நுண் அயிர் = Fine Sandஇல்…
  * வரிப்ப = வரி வரியாக் கோலம் போட….

  மல்லிப்பூவின் மகரந்தப் பொடி, தங்கத் தூள் போல் பரவி வந்து விழுதாம்!
  எங்கே? = செம் மண்ணிலே…
  எப்படி? = வரி வரியா

  பாட்டைப் படிக்கும் போதே தெரியல, ஒரு பொண்ணு எழுதியது-ன்னு! எப்படிக் கோலம் போடுறா பாருங்க = கவிதைக் கோலம்!
  ——-

  4 lines தாண்டியாச்சி-ன்னா…Reverse-ல போயி, பாட்டைக் கூட்டிக் கூட்டிப் படிக்கணும்!
  1st two, next two!
  Then two & two together!

  படுமழை பொழிந்த பயமிகு புறவின்
  நெடுநீர் அவல, பகுவாய்த் தேரை
  = கோலம் போடுவதற்கு முன், மழை பெய்து நிலத்தை ஈரம் ஆக்கிருச்சி!

  சிறு பல்லியத்தின் நெடுநெறிக் கறங்க
  = பின்னணி இசையும் கூடிருச்சி!

  குறும் புதல் பிடவின் நெடுங்கால் அலரி
  செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப
  = இப்போ, ஈர மண்ணுல, மல்லிப்பூ தங்கப் பொடிகளைத் தூவி, வரிக் கோலம்!
  ——-

  எப்படி இருக்கு?
  சங்க இலக்கியம்-ன்னாலே = காட்சிப் படுத்தல்!
  இப்படி வாசிக்கும் போதே காட்சிப் படுத்திக்கணும்!

 7. anonymous says:

  அலரி-ன்னு சொன்ன போதே, சொல்லணும்-ன்னு நினைச்சேன்!
  அலறி = கத்துதல்
  அலரி = பரவுதல்

  காதலர்கள் பற்றிய Rumourக்கு “அலர்”-ன்னே பேரு! ஏன்னா ஊரெல்லாம் பரவுதுல்ல?:)
  அலர்தல் = பரவுதல்!

  அதை எதுக்கு, ஒரு பூவுக்குச் சொல்லணும்?
  பூவின் ஒரு பருவத்தில், அதன் மகரந்தப் பொடிகள் காற்றில் ‘பரவும்’-ல்ல?
  அப்படி விரிந்த கட்டத்தில் உள்ள பூவை = “அலர்” ன்னு குறிப்பிட்டான் தமிழன்! அத்தனையும் காரணப் பெயர்!
  ——

  * அரும்பும் போது = அரும்பு
  * அரும்பி முத்தாகும் போது = முகை!
  * வெடிக்கத் தயாரா இருக்கும் போது = மொக்குள்!

  * விரிந்து கொண்டே இருக்கும் போது = போது
  * மணம் வீசத் தொடங்கும் போது = முகிழ்
  * மலர்ந்த பின் = மலர்
  * இன்னும் விரிந்து, மகரந்தப் பொடி அலரும்(பரவும்) போது = அலர்

  * வீழும் போது = வீ
  * உதிர்ந்து கிடக்கும் பூக்கள் = பொம்மல்
  * பழுப்பாய் வாடிய பின் = செம்மலர் (செம்மல்)

  இவை தான் பூவின் பருவங்கள்!
  இது தமிழ்ப் பூ-ன்னு இல்ல! எல்லாப் பூவுக்கும் இப்படித் தான்! ஆனா தமிழ், அந்த ஒவ்வொரு இயற்கையும் காட்சிப்படுத்துது!
  ——

  எங்கு ஒதுங்கி ஓரத்தில் இருந்தாலும்….
  தமிழும் மகரந்தமும் நெஞ்சுள் இனிப்பவை!

 8. anonymous says:

  இனி ரொம்ப பேசலை!
  பல்லியம்-க்கு வந்தா எங்கோ இழுத்துட்டுப் போவுது!
  Will finish fast! Same, Two by Two Approach

  வெம்சின அரவின் பை அணந்து அன்ன
  தண்கமழ் கோடல் தாது பிணி அவிழ
  = கோடல்-ன்னா வெண்-காந்தள் பூ! பளீர் வெள்ளை! அது விரிஞ்சி இருப்பது, வெள்ளைப் பாம்பு படமெடுத்து விரிஞ்சாப் போல இருக்காம்!

  திரிமருப்பு இரலை தெள் அறல் பருகிக்
  காமர் துணையொடு ஏமுற வதியக்
  = இரலை-ன்னா Antelope! மான்! வளைஞ்ச கொம்பு= திரி மருப்பு!
  அது தெள்-அறல் பருகி = தெளிஞ்ச தண்ணியக் குடிச்சி….
  அறல்= அறுத்துச் செல்லும் நீர், Flowing Water (காரணப் பெயர்)

  காமர் துணையொடு=Darling மானோடு, ஏமுற வதிய=நிலைத்த இன்பத்தில் இருக்கு!
  (முருகன் பாட்டுல “ஏம”வைகலே-ன்னு பார்த்தோம்-ல்ல? அந்த ஏமம்=நிலைச்ச இன்பம்! ஏமுற வதிய-ன்னு இங்கிட்டு படிக்கும் போதே, அங்கிட்டு தொடர்பு படுத்திக்கணும்! சரியா?:)

 9. anonymous says:

  காடு கவின் பெற்ற தண்பதப் பெருவழி
  ஓடு பரி மெலியாக் கொய்சுவல் புரவித்
  = காடு கவின் (அழகு) பெற்று விளங்குது! போற வழி குளிர்ச்சியா (தண்பதம்) இருக்கு

  பரி/புரவி = குதிரை, உங்களுக்கே தெரியும்!
  அந்த ஓட்டம் மெலியலையாம் = ஒடு பரி மெலியா! ஆரம்பிச்ச வேகம் குறையாமல்…
  ——-

  ஊர்மதி வலவ தேரே
  = வலவன் (Driver)! இன்னிக்கு ஓட்டுநர்-ன்னு சொல்லுறோம்! வலவன் = நல்ல தமிழ்ப் பெயர்! = வல்லவன் (சிம்பு படம் அல்ல)
  Dear Driver, வல்லவரே, தேரை ஊர்ந்து ஓட்டுங்கள்!

  என்னாது? வேகமாத் தானே ஓட்டச் சொல்லணும்? ‘ஊர்ந்து’-ன்னு சொல்லுறானே இந்தக் காதலன்?

  ஊர்ந்து = Slow கிடையாது! பாம்பு ஊர்ந்து தானே செல்லும்? அது Slowவா? மின்னல் வேகம்-ல்ல!
  எறும்பு ஊர்வது Slow போலத் தெரிவதால், எல்லாத்தையும் அப்படிப் பொருள் எடுத்துக்க கூடாது!

  ஊர்தல் = நிலத்தில் காலை எடுக்காமல், நகர்ந்து கொண்டே இருத்தல்!
  தேரை, Brake போடாம, ஊரச் சொல்கிறான் காதலன்!
  ——-

  “தாள் தாழ் தார்” மணி தயங்குபு இயம்ப
  = என்ன அழகான சந்தம்…தேர் ஓடுறாப் போலயே…தயங்குபு இயம்ப

  “தாள் தாழ் தார்” = வரிசையா (எதுகை)மோனை வைக்கறாரு! தா-தா-தா
  = தாள் வரை தாழும் தார் (மாலை)
  குதிரையின் முழங்கால் வரை தாழும் மணிமாலையாம்! கால் சிக்காது ஓடும் அளவுக்கு கட்டி இருக்காங்க!
  ——

  அந்த மணியை, இசைத்துக் கொண்டே ஓட்டச் சொல்லுறான் தலைவன்!
  Why?
  முன்பு ஒரு பாட்டில், பூவில் வண்டு கூடும் கண்டு, அந்த ஜோடிக்கு இடைஞ்சலா இருக்கும்-ன்னு மணியைக் கழட்டி வைக்கச் சொன்னான்!
  – ஞாபகம் இருக்கா? = தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்!

  இங்கே, இவன் வேற மாதிரிச் சொல்லுறானே! சரியான காமம் புடிச்சவனா இருப்பானோ? he he:))
  காமம் நல்லது தான், பிறர் காமங்களையும் மதிக்கும் போது, புரிந்து கொள்ளும் போது! = மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

  * அப்போ கார் காலம் = வண்டு ஜோடியாத் தேன் குடிக்குது; So Bells Silent!
  * இப்போ கார் காலம் முடியப் போவுது! மகரந்தமெல்லாம் அதான் கீழே விழுந்து கோலம் போட்டுருச்சே! No Bees now!
  = Hence Fast & Bells Ringing! Already late! Gotto meet & mate her:)
  பாவம்…எப்படியெல்லாம் காத்து இருக்காளோ, அந்தப் பேதை!

 10. anonymous says:

  //சீர் மிகுபு நம் வயின் புரிந்த கொள்கை
  அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே!//

  இதுக்குப் பொருள் சொன்னா….நான் கலங்கிப் போயி, இரவெல்லாம் தனியா இருக்கணும்! வேண்டாம்!
  நீங்களே யோசிங்க!
  அதென்ன “கொள்கை”-அந்தப் பொண்ணுக்கு?
  ஒரு பையன் கிட்ட….ஒரு பொண்ணுக்கு……என்னாங்க “கொள்கை” வேண்டிக் கிடக்கு?

  தாவில் “கொள்கை” மடந்தையொடு சின்னாள்
  ஆவினன்குடி அசைதலும் உரியன்:
  -ன்னு வள்ளியைப் பாடுவரு, முருகாற்றுப்படையிலே! அங்கேயும் “கொள்கை” தானா? What the heck is this கொள்கை?
  —-

  அதாச்சும் கார் காலம் எப்பவோ தொடங்கி, இதோ முடியக் கூடப் போகுது! பல தலைமகன்கள் வந்துட்டாங்க! இவன் மட்டும் இன்னும் வரல!
  அந்தப் பொண்ணு, காத்து இருக்கா!
  எவ்ளோ நாள்? = தெரியாது! No email, No phone, No gtalk…Nothing!
  Just wait…
  On what basis? = Heart Basis!
  —-

 11. anonymous says:

  சுத்தி முத்திப் பாக்குறா! All men came back! எல்லாத் தலைவன்-தலைவியும் சேர்ந்துட்டாங்க! தான் மட்டும்…?
  வீட்டில் அம்மா, வேற பேச்சையும் எடுக்கறாங்க! ரொம்ப நாள் அடக்கி வைக்க முடியாது!

  எதுக்கு இந்தக் கஷ்டம்? தவிப்பு? அல்லாடுறது? – தேவையா?
  காதலன் தானே, புருசனா என்ன?
  இவளுக்கு ஆளா இல்ல? அதான் பல தலைமகன்கள் திரும்பியாச்சே! பொருள் தேடப் போயி, கொண்டாந்தும் இருக்காங்க! அவங்களில் யாராவது ஒருத்தரு?

  I waited for sometime man; I have the justification!
  How long is the wait? = Indefinite?
  Cmon, Be realistic! Know what to expect!
  Everybody has priorities in life! If it matches, stay…If not hai & bye…
  —–

  வள்ளி, காத்துக்கிட்டே இருக்கா முருகனுக்கு!
  முன்னே பின்னே பார்த்து இருக்காளா முருகனை? Nopes!
  முருகனுக்கு இவளைப் பிடிச்சிருக்கா? தெரியுமா? Nopes!

  முற்பிறவியில், தவம் இரு-ன்னு சொன்னதோட சரி! இப்பிறவியில், முருகனை முன்னே பின்னே பார்த்தது கூட இல்ல!
  வேட்டுவ அம்மா அப்பா, தெய்வமாக் கும்புடறாங்க முருகனை!
  இவளோ…மனசுக்குள்ளேயே….. = வருவானா? யாருக்குத் தெரியும்?
  —–

  நம் வயின் புரிந்த “கொள்கை” = எனக்காகப் புரிந்த கொள்கை!
  எது?
  (காத்து)இருத்தலும், இருத்தல் நிமித்தமும்!
  = முல்லை நிலத்து உரிப்பொருள்! = அதுவே “கொள்கை”!

  “அம் மா” அரிவையைத் துன் உகம் விரைந்தே = “அம் மா” பொருள் ஒன்றும் அறிந்திலனே என்பார் அருணகிரி!
  அவ மனசை யாரே அறிவார்! = “அம் மா” அரிவை!

  அவ கொள்கையால், அவ அழிஞ்சி போனா-ன்னு பேரு வரக் கூடாது!
  மணிகள் அதிர்த்து ஒலிப்ப, ஊர்மதி வலவ தேரே!

  நம் வயின் புரிந்த “கொள்கை” = தாவில் “கொள்கை” மடந்தை
  = இருத்தலும், இருத்தல் நிமித்தமும்!
  மாயோன் பெத்த முல்லைப் பெண்ணுக்கு இது தான் கதி!
  காலமெல்லாம்….இருத்தலும், இருத்தல் நிமித்தமும்!………..முருகா!

  • anonymous says:

   Happy Valentines Day!:)

   shd get rose for murugan?…ithukellaam onnum koRaichal illa…where to go n get in this desert? cheri vaanguRen:)

 12. anonymous says:

  ஒரு வேண்டுகோள்:
  காதலர் தினம் அதுவுமா…பூக்கள் குறித்து…

  பல பூக்கள் (சங்க இலக்கியத்தில் இடம் பெறும் பூக்கள்), வரும் காலங்களில், என்னான்னே தெரியாம போயிட வாய்ப்பிருக்கு!

  இந்த #365paa தளம், இலக்கியத்தில் மட்டுமே நடை பயில்வதால்…
  எப்பப்போ எல்லாம் பூ வருதோ…
  அப்பப்போ, அந்தப் பூவின் பெயரையும், படமும் சேர்த்து, google docs/தனிப் பக்கத்தில் பதிந்து வைத்தால்….நல்லா இருக்கும்-ன்னு தோனியது!

  கட்டாயமில்லை! இயன்ற வரை தான்!
  பதிவின் சுட்டியோடு, ஒருங்கே தொகுத்து வைப்பது, இப்போ இல்லீன்னாலும், பின்னாளில் பயன் தரும்!
  ———

  முன்பு வந்த சில-பல பாடல்களுக்கு, ஓணம் குறித்த சங்கப் பாட்டுக்கெல்லாம் பூவின் படம் குடுத்து இருப்பேன்! இந்தப் பாட்டில்…
  பிடவம் = காட்டு மல்லி = Wild Jasmine http://www.flowersofindia.in/catalog/slides/Wild%20Jasmine.jpg
  கோடல் = வெண் காந்தள் = White Flame Lily http://www.bhopalbirds.com/images/flowers/gloriosa_superba_1.jpg

 13. Samudra says:

  இந்தப் பாடலின் தமிழை சான்றோர்கள் ஏற்கனவே அலசி விட்டதால் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை சொல்ல அனுமதிக்கவும்:

  வீட்டை நெருங்கும் போது எல்லாருக்கும் ‘மன’ வேகம் அதிகரிக்கும்.
  (ஏதாவது தப்பு செய்திருந்தால் ஒழிய. மனைவிக்குத் தெரியாமல்
  குடித்து விட்டு வந்திருந்தாலோ இல்லை கோவலன் போன்று வேறு இடத்துக்கு
  சென்று வந்திருந்தாலோ மனம் தயங்கும்) Otherwise , வீட்டை நெருங்கும்போது (மன)வேகம் அதிகரிக்கும்.இயற்பியலின் படி வேகத்தைக் குறைத்தால் தான் வீட்டை அடைய முடியும்.ஆக்சிலரேட்டரை விட்டு கிளட்சை மிதித்து கடைசியாக பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்த வேண்டும். ஆனால் இந்த பொல்லாத மனம் வண்டி போய்ச் சேரும் முன்னேயே ஆயிரம் முறை மானசீகமாக ஒளிவேகத்தை விடவும் வேகமாகப் பயணித்து வீட்டை முற்றுகையிட்டு விடுகிறது.

  இத்தனை நாள் பொறுத்தவருக்கு இன்னும் கொஞ்சநேரம் பொறுக்க முடியாதா
  என்று தோன்றும்.வீட்டை நெருங்க நெருங்க கிட்டத்தட்ட பொறுமை இழந்து மனம் பைத்தியமாகி விடுகிறது. அதுவும் நெடுநாள் பிரிந்து இருந்த காதலி, காதலன் என்றால்!பிரிந்தது அப்பா அம்மா அக்கா தம்பி என்றால் அது மனத்தின் எதிர்பார்ப்பு தான். ஆனால் தலைவன் மற்றும் தலைவிக்கோ அது மனம் + உடல் இரண்டின் தகிப்பாக இருதலைக்கொள்ளி !

  இந்த அவசரத்தில் யாருக்கும் வெளியே தெரியும் காட்சிகளை ரசிக்கத் தோன்றாது.முதலில் அவளை (அவனை) சந்திக்க வேண்டும். பின்னர் தான் வேறு எல்லாம் என்ற மனநிலை இருக்கும்.ஆனால் அவனுக்கு காண்பவை எல்லாம் காதல் மயமாகவே காட்சி அளிக்கின்றன.மழை பொழிந்து நிலத்தில் கலக்கிறது. தேரைகள் தங்கள் துணையை அழைக்கின்றன.பூக்கள் மலர்ந்து மகரந்தங்களை உதிர்க்கின்றன. மான்கள் இணையுடன் அலைகின்றன.
  குதிரைகளைப் பார்க்கும் போது அவையும் ஜோடியாக ஒரே லயத்தில் இணைந்து
  ஓடுகின்றன.சர்வம் காதல் மயம் !kind of தற்குறிப்பேற்ற அணி?

  மழை என்றாலே ரொமான்ஸ் தானே? அதான் அந்தக் காலத்தில் வெய்யில் காலத்தில் வெளியே போய் அலைந்து போய் சம்பாதித்து வந்து மழை தொடங்கியதும் வீட்டுக்குள் காதலுடன் முடங்கி விடுவார்கள் போலிருக்கிறது. பொதுவாகவே மழை பெய்யும் வேளையை விட மழை பெய்து முடித்த அந்த சமயம் அழகாக இனிமையாக இருக்கும். தலைவனை இது இன்னும் தொந்தரவு செய்கிறது. மழைக் காலம் எப்பவோ தொடங்கி விட்டது. தலைவியைப்
  பிரிந்து நாளாகி விட்டது. அங்கே என்ன சூழ்நிலையோ தெரியாது. தேகம் வேறு தன் பசியைக் காட்ட ஆரம்பித்து விட்டது. இப்படி பாட்டெல்லாம் பாடி மனதை
  DIVERT செய்தால் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.Happy Valentine’s Day!

 14. GiRa ஜிரா says:

  கார்காலம். அது காதலர்கள் சேர் காலம்.

  தாய்மடியாம் மேகத்திலிருந்து விடுபட்ட மென்னீர்த்துளி விரைந்து காதலனாம் மண் மேல் வீழுந்து செம்புலம் சேர்ந்த நீராகக் கலப்பது கார்காலம்.

  மழை பொழியும் போது நடப்பதும் கலப்புதான். அதனால்தான் மண்ணில் உயிர்கள் விளைகின்றன.

  மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ என்பார் திரிகூடராசப்பக் கவிராயர்.

  மனம் நினைக்கும் பொழுதே விழி பார்க்க, விழி பார்க்கும் பொழுதே கரம் தீண்ட, காதல் நெருப்பு பரவியது.

  ஆனால் இந்த அகநானூற்றுத் தலைவனுக்கு அதற்கு வழியில்லை. ஏனென்றால் தலைவி வீட்டில் இருக்கிறாள். தலைவனின் தேர் இன்னும் காட்டிலிருக்கிறது.

  மனம் முந்திவிட்டது. ஆனால் விழியும் கரங்களும் முந்த முடியவில்லை. அதனால்தான் அவனுக்கு அவ்வளவு அவசரம்.

  மனத்தின் வேகம் எப்படி அவன் கட்டுப்பாட்டில் இல்லையோ, அதே போல தேரின் வேகமும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. மனத்தின் வேகம் கூடக்கூட தேரின் வேகம் குறைவது போல இருக்கிறது. அதனால் தேரோட்டியை விரைந்து செலுத்தச் சொல்கிறான்.

  பாட்டோட முதல் வரியிலேயே தலைவன் செய்த தவறு தெரிந்து விடுகிறது. “படுமழை பொழிந்த” என்ற சொற்றொடர் மூலம் மழை நன்றாகப் பெய்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

  எப்போது வரவேண்டியவன் தலைவன்? கார்காலம் தொடங்கும் போது வரவேண்டியவன். தொடக்கத்தில் மெல்லிய தூறல்களாகத்தான் தொடங்கும். ஆனால் தலைவன் தொழில் நிமித்தம் சென்றவன் தாமதப்படுத்தி விட்டான். அதனால்தான் முதல் மழை பெய்த பிறகு அவன் வீடு திரும்புகிறான்.

  அங்கங்கு ஏரிகளும் குளங்களும் நிரம்பி வழிகின்றன. அங்கு இருக்கின்றது தவளைக் கூட்டம். தவளைக்கு மட்டும் கார்காலம் கசக்குமா? தொண்டை கிழியக் கத்தி அழைக்கின்றது காதல் துணையை.

  அப்படிக் கத்தி அழைக்கும் போது ஏற்கனவே நீளமான தேரைகளின் வாய் பிளவுபட்டது போல இருக்கிறது. அதைத்தான் புலவர் “பகுவாய்த் தேரை” என்கிறார். பகுக்கப்பட்ட வாயை உடைய தேரை என்று பொருள். தவளையின் வாயை சற்று மனக்கண்ணில் பாருங்கள். இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி வரை விரிந்து பிளந்து இருக்கும்.

  ஏன் தேரையைப் பற்றிச் சொல்ல வேண்டும்?

  தேரையின் கத்தல் இருவரை அழைக்கும். ஒன்று இன்பம். மற்றொன்று துன்பம்.

  புரியவில்லையா?

  தேரை கத்தும் போது பெண் தேரைகளும் வரும். அது இன்பக் கூடலில் முடியும்.
  அந்தக் கத்தல் ஒலியினால் பாம்புகளும் இரைதேடி வரும். அது துன்பத்தில் முடியும்.

  தலைவனுடைய மனம் கத்திக்கொண்டிருக்கிறது அந்தத் தேரையைப் போல. தலைவி வரவில்லை. அவள்தான் வீட்டிலிருக்கிறாளே. ஆனால் அவளுடன் கூடிய நினைவுகள் நீண்ட தொடராக (பாம்பு போல) வந்து அவனை விழுங்குகின்றன.

  அதைச் சொல்லத்தான் “பகுவாய்த் தேரை சிறு பல்லியம் கறங்க” என்கிறார் புலவர்.

  வழியெல்லாம் பூக்கள். பிடவம் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கிறது. பாம்பின் படத்தை உருவத்தில் ஒத்த காந்தள் மலர்கள் மலர்ந்து எங்கும் மகரந்தத்தூள்களை விசிறிக் கொண்டிருக்கிறது.

  அது தலைவியின் நிலையைக் குறிக்கும். எப்படி மலர்கள் மலர்ந்து மகரந்தம் நிரம்பிக் காத்திருக்கின்றனவோ அது போலத் தலைவியும் இல்லத்தில் தலைவன் வருகைக்காகக் காத்திருக்கிறாள்.

  இவன் சென்றால்தானே மகரந்தச் சேர்க்கை நடக்கும்.

  அந்தப் பக்கம் ஒரு கலைமான் தனது துணையோடு இன்பம் துய்த்துக் கொண்டிருக்கிறது.

  இப்படிப் பார்கின்ற அனைத்துமே அவன் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.

  அவனுடைய மனதின் வேகத்திற்கு வண்டியின் வேகம் கூட வேண்டும். விரைந்து ஓட்டும் படி தேரோட்டியிடம் சொல்கிறான்.

  அந்த விரைவு எப்படி இருக்க வேண்டும்?

  ”தார்மணி தயங்குபு இயம்ப” விரைந்து செல்ல வேண்டும். அதாவது குதிரையின் கழுத்தில் தொங்கும் மாலையிலுள்ள மணிகள் நன்கு ஒலிக்குமாறு விரைந்து தேரினை ஓட்டச் சொல்கின்றான்.

  ஏன் அந்த மணி நன்கு விளங்கி ஒலிக்க வேண்டும்?

  தேர் வீட்டின் அருகின் வரும் பொழுதே அந்த ஒலியைக் கேட்டு தலைவிக்குத் தான் வருவதைச் சொல்ல விரும்புகிறான் தலைவன்.

  கார்காலம் காதலுக்கு வேர் விடும் காலம் என்பது சரியாகத்தான் இருக்கிறது.

  நீரின் குளுமையும் நிலத்தின் புதுமணமும் மண்ணில் ஒளிந்துள்ள எத்தனையோ விதைகளைத் தூண்டி விட்டுச் செடிகளாகவும் மரங்களாகவும் மாற்றுவது போலே, காதலர் உள்ளங்களில் ஒளிந்திருக்கும் அன்பை ஒளிர்ந்திருக்கும் அன்பாக மாற்றுகின்றன.

  அன்புடன்,
  ஜிரா

 15. Samudra says:

  ஒவ்வொருத்தரும் என்னவாக விளக்கம் சொல்கிறார்கள்? நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s