அவன் வருவானா?

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்

வள்ளல் மால் இரும் சோலை மணாளனார்

பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்

கொள்ளும் ஆகில் நீ கூடிடு கூடலே!

*

பழகு நான் மறையின் பொருளாய், மதம்

ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்

அழகனார், அணி ஆய்ச்சியர் சிந்தையுள்

குழகனார் வரில் கூடிடு கூடலே!

நூல்: நாச்சியார் திருமொழி / நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல்

பாடியவர்: ஆண்டாள்

சூழல்: கண்ணனை நேசிக்கும் ஆண்டாள் அவனைத் திருமணம் செய்துகொள்ளமுடியுமா? தன் காதல் நிறைவேறுமா என்று தெரிந்துகொள்வதற்காக மண்ணில் படங்கள் வரைந்து பார்க்கிறாள்

தெளிவுடைய பக்தர்கள் பலர் கை எடுத்துக் கும்பிடும் தேவன், அவர்கள் கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் வள்ளல், மாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் மணாளன் கண்ணன்.

அந்தக் கண்ணன் இருக்கும் இடத்திற்குச் சென்று அவனுடைய திருவடிகளைத் தஞ்சமடையவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. எனது இந்த விருப்பம் நல்லபடியாக நிறைவேறும் என்றால், கூடலே, நீ கூடிடு!

*

நாம் வாசிக்கின்ற நான்கு வேதங்களின் பொருளாக நிற்கிறவன், மதம் ஒழுகுகின்ற யானை(கஜேந்திரன்)யின் கோரிக்கையைக் கேட்டு உடனே வந்து அதற்கு அருள் செய்த அழகன், நல்ல அணிகலன்களை அணிந்த ஆயர் குலப் பெண்களின் மனத்தில் குழைந்திருப்பவன், அவன் எனக்குக் கிடைப்பான் என்றால், கூடலே, நீ கூடிடு!

துக்கடா

 • மணலை நேரடியாகப் பார்க்காமல் அதில் வட்டமோ அல்லது வட்டங்களின் தொகுப்போ அல்லது வேறு குறியீடுகளையோ வரைந்து, பின்னர் அவை எப்படிச் சேர்கின்றன என்பதை வைத்து நாம் மனத்தில் வைத்துள்ள விஷயம் நடக்குமா இல்லையா என்று சொல்கிற விளையாட்டு(?)தான் ‘கூடல்’. ஆண்டாள் ’கண்ணன் எனக்குக் கிடைப்பான் என்றால் கூடலே, நீ கூடிடு’ என்று பத்து (+1) பாடல்கள் எழுதியிருக்கிறாள். அதில் இரண்டுமட்டும் இங்கே, மீதமுள்ளவை இங்கே : http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=113
 • இந்தக் கூடல் / ஆழி இழைத்தல் விளையாட்டு பற்றி ஏற்கெனவே இன்னொரு #365paa பேசியிருக்கிறது : https://365paa.wordpress.com/2011/12/26/173/
 • இரண்டாவது பாடலின் மிகச் சுவையான வார்த்தை ‘குழகனார்’ என்பது. பல ஆய்ச்சியர்கள் மனத்தில் குழைந்திருக்கிறானாம் அவன்!
 • அதே பாடலில் குறிப்பிடப்படும் கஜேந்திரன் கதை மிகப் பிரபலமானது. எல்லாருக்கும் தெரிந்திருக்கும், இருந்தாலும் குழந்தைகளுக்குக் கதை சொல்ல விரும்புவோருக்கு வசதியாக இரண்டு சாம்பிள் இணைப்புகள்:
 • 1. எழுத்து வடிவில் (ஆங்கிலம்) : http://www.riiti.com/587/gajendra_moksha_the_story_of_elephants_king
 • 2. அனிமேஷன் வடிவில் (தெலுங்கு) : http://www.youtube.com/watch?v=s0aLDwVmzGg

221/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், காதல், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி, விஷ்ணு. Bookmark the permalink.

One Response to அவன் வருவானா?

 1. amas32 says:

  எவ்வளவு எளிமையான பாடல். ஆண்டாளின் பாசுரங்கள் அமுதம்.
  பழகு, ஒழுகு, அழகனார்,குழகனார் என்று அருமையான rhyming சொற்களை கையாண்டிருக்கிறார்.

  மாலிருஞ்சோலை என்று சொல்லும் போதே அந்த சொல்லழகிலேயே அந்த இடத்தை நம் கற்பனையால் பார்த்து விட முடிகிறது.
  மணாளன் கண்ணன் என்கிறாள். பாடலிசைக்கும் பொழுதே அவனை மனத்தால் மணந்துவிட்டாள். ஆண்டாள் திருமால் மேல் மையல் கொண்டு பாடிய பாசுரங்களை அனுபவிப்பது நமது பாக்கியம்.

  பூமா தேவின் அம்சமாகிய கோதையே, எனது இந்த விருப்பம் நல்லபடியாக நிறைவேறும் என்றால், கூடலே, நீ கூடிடு என்று சிறுபிள்ளைத்தனமாக நினைக்கும் பொது நாமெல்லாம் எம்மாத்திரம். எனது இந்த வேண்டுதல் நிறைவேறிவிடும் என்றால் அர்ச்சனை தட்டில் வெள்ளைப் பூ இருக்க வேண்டும் என்று கோவிலில் இறைவன் முன் இறைஞ்சும் போது நான் நினைப்பேன் 🙂

  கண்ணனை எப்படி போற்றுகின்றாள்! வேதங்களின் பொருள், யானை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தவன், அழகன், கோபியர் நெஞ்சில் குடியிருக்கும் அன்புள்ளம் கொண்டவன், இப்படி பாராட்டினால் இறங்காதவர் நெஞ்சும் இறங்கும். கண்ணனோ அடியவர் ஒரு முறை போற்றி என்று அவனை நினைத்தாலே ஒடி வந்து விடுவான். ஆண்டாளை கைத்தலம் பற்ற உடனே முடிவு செய்து விட்டான்!
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s