ஞாபகங்கள் நீரூற்றும்!

பொறிவரித் தடக் கை வேதல் அஞ்சிச்

சிறுகண் யானை நிலம் தொடல் செல்லா;

வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே

அன்ன ஆரிடை யானும்

தன்மை செய்தவித் தகையோள் பண்பே

நூல்: ஐங்குறுநூறு (#327)

பாடியவர்: ஓதலாந்தையார்

சூழல்: பாலைத்திணை. வேலை நிமித்தம் காதலியைப் பிரிந்து போகிறான் காதலன், வழியில் ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது, தாங்கமுடியாத வெப்பம். அதற்கு நடுவிலும் அவனுக்கு இனிமை தருகிற அவளுடைய நினைவுகளைப் பற்றிப் பாடுகிறான்

இந்தப் பாலைவனப் பாதையில் மூங்கில்கள் உயரமாக வளர்ந்திருக்கின்றன. ஒருகாலத்தில் இங்கிருந்த சோலைகளெல்லாம் வெப்பம் தாங்காமல் உலர்ந்துபோய்விட்டன. சிறிய கண்களை உடைய யானைகள் நிலத்தைத் தொடாமல் நடக்கின்றன. காரணம், புள்ளிகள், வரிகளைக் கொண்ட தங்களுடைய தும்பிக்கைகள் கீழே பட்டால் வெந்துபோய்விடுமோ என்று அந்த யானைகளுக்குப் பயம்.

இப்படிப்பட்ட கடினமான பாலைவனத்திலும், என்னை வெப்பம் தாக்கவில்லை, குளிர்ச்சியாகதான் உணர்கிறேன். காரணம், பண்புள்ள என் காதலியின் நினைவுகள்!

துக்கடா

 • காதல் கொண்டாட்டம் வரிசையில் இது முதல் பாடல். ரொம்ப நாளாக #365paa வரிசையில் ’பாலைத்திணை’ இடம் பெறவில்லையே என்று வருத்தப்பட்ட தோழர்களுக்காக, பிரிவுப் பாலையில் தொடங்கி இணைவுக் குறிஞ்சியில் முடிப்போம் 🙂
 • இரண்டு நாள் முன்பாக ஒரு சின்ன போட்டி வைத்திருந்தேன் ( https://365paa.wordpress.com/2012/02/08/217/ ) அதற்குச் சரியான விடை, ‘அலைபாயுதே’ படத்தில் இடம் பெற்ற ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ என்ற பாடல். அதை உடனடியாகச் சொன்ன நண்பர் ராகவன் அவர்களுக்குப் பாராட்டுகள். (இது நம் வலைப்பதிவில் தொடர்ந்து பின்னூட்டம்வழி விரிவுரைகள் எழுதிவரும் ஜிரா இல்லை என்று நினைக்கிறேன். இந்த ராகவனின் ஈமெயில் முகவரி raghavan@talksintamil.com ). புத்தகப் பரிசை அனுப்ப வசதியாக அவர் என்னைத் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்

220/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, ஐங்குறுநூறு, நெஞ்சுக்குச் சொன்னது, பாலை, பிரிவு. Bookmark the permalink.

4 Responses to ஞாபகங்கள் நீரூற்றும்!

 1. amas32 says:

  திரு ராகவனுக்கு வாழ்த்துகள்!

  பொதுவாக காதலியை பிரிந்து வாடுபவர் காதல் தாபம் ஏற்படுத்தும் வெப்பத்தால் தவிப்பர். தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது என்று கவிஞர் வைரமுத்துவும் காதலில் இருப்பவர் உணர்வு பற்றி சொல்லியிருப்பார்.

  இந்தப் பாடலில் அதற்கு மாறாக, கடும் பாலைவன சூட்டில் பயணம் செய்யும் காதலன் காதலியின் இனிமையான நினைவுகளால் குளிர்ச்சியாக உணர்கிறான். ஓதலாந்தையார் பண்புள்ள காதலி பற்றிய நினைவுகள் என்கிறார். நிச்சயமாக ஒரு நல்ல பெண் காதலியாக அமையும் பட்சத்தில் நல்ல நினைவுகளே மேலோங்கி நிற்கும். வாழ்க காதலர்கள்! 🙂
  amas32

 2. GiRa ஜிரா says:

  புத்தகப்பரிசு பெற்ற ராகவன் அவர்களுக்கு வாழ்த்துகள். ஒங்க முகவரியை அனுப்பீட்டீங்களா? பரிசு வந்ததும் என்ன பரிசுன்னு சொல்லுங்க. 🙂

  நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதேன்னு இந்தப் புலவர் பாட்டெழுதியிருக்காரு.

  வெளீயூர் போறப்போ பெட்டியில துணிமணி பணமெல்லாம் எடுத்து வைக்கிற மாதிரி நினைவுகளையும் எடுத்துக்கிட்டு போறாரு பாட்டில் வரும் தலைவன்.

  இது இப்பவும் மக்கள் செய்றதுதான். ஒவ்வொருத்தர் பர்சையும் எடுத்துப் பாருங்க. நாகரீகமில்லைதான். ஆனாலும் அதுக்குள்ள ஒரு படம் இருக்கும். அலுவலகத்துல கூட நான் பார்த்திருக்கேன். தன்னுடைய மனைவி/கணவன் மக்கள் படத்தை வெச்சிருப்பாங்க.

  என்னுடைய தோழி ஒருத்தியின் கணவர் மிகவும் வேகமாக வண்டி ஓட்டுவார். ஒருமுறை அவரோடு காரில் சென்று எனக்கே கிறுகிறுத்து விட்டது. எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவர்களுக்கு மகள் பிறந்ததும் அந்த வேகம் அப்படியே அடங்கிவிட்டது. வீட்டிலிருக்கும் மகள் மீதான பாச நினைவுகள் வண்டி ஓட்டும் போது கட்டுப்படுத்துகின்றன.

  இப்படி நிறைய பேர் வாழ்க்கையிலிருந்தே இந்தப் பாடலுக்கு எடுத்துக் காட்டலாம்.

  சரி. பாட்டில் நான் சுவைத்த சிலவற்றைச் சொல்லி முடிக்கிறேன்.

  பொறிவரித் தடக்கை – இது என்னன்னு கேக்குறீங்களா? இதுதான் யானையின் தும்பிக்கை.

  முந்தி ஒரு பாட்டுல ( https://365paa.wordpress.com/2012/01/28/206/ ) தடமருப்பு எருமைன்னு பாத்தோமே. அதுல அவர்ர அதே ”தட” தான் இந்தத் தட.

  இன்னொரு எடுத்துக்காட்டு சொல்றேன்.

  ஆறிருத் “தட”ந்தோள் வாழ்க

  தடதடன்னு ஒலகமே ஆடுற மாதிரி இருக்கா. 🙂 பொதுவாகவே ”தட” என்னும் உரிச்சொல் நீளம், வளைவு ஆகியவைகளைக் குறிக்கும்.

  துதிக்கை நீளமாகத்தானே இருக்கு. அதான் தடக்கை என்றால் துதிக்கை.

  அதென்ன பொறிவரித் தடக்கை. அந்தத் துதிக்கைல பொறி பொறியா இருக்கு. அதாவது புள்ளிபுள்ளியா இருக்கு. நல்லா உத்துப் பாத்திருந்தீங்கன்னா தெரியும். அது போல வரிவரியாகவும் இருக்கும்.

  புலவருக்கு இயற்கையறிவு நிறைய. அந்தக்காலத்துல இயற்கையோடு இணைந்த வாழ்வுதானே.

  அந்தத் தும்பிக்கையை எப்படி வெச்சிருக்கு யானை?

  வேதல் அஞ்சி நிலம் தொடல் செல்லா

  வழக்கமா துதிக்கை தரை வரைக்கும் தொங்கும். கோயில்கள்ள பாத்திருப்பீங்க.

  ஆனா இங்க தரையைத் தொடல. ஏன்? வேதல் அஞ்சி. நிலமோ பாலை நிலம். சூடாயிருக்கும். தும்பிக்கை நுனி மிகவும் நுட்பமானது. அதைச் சுட்டுக்குமா யானை?

  அதுனால நிலம் தொடாம யானை போகுதாம்.

  டிஸ்கவரி சேனலில் பல இயற்கை நிகழ்வுகள் அடங்கிய படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஆப்பிரிக்கக் கண்டத்து யானைகள் நீரைத் தேடிச் செல்லும் போது தும்பிக்கையைத் தரையைத் தொடாமல் செல்வதையும் சில யானைகள் துதிக்கையை வாயில் வைத்துக் கொண்டு செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

  நாமள்ளாம் படமாப் பாக்குறதை நேர்ல பாத்திருக்காரு புலவர்.

 3. Raghavan says:

  @nchokkan, @amas32, @GiRa ஜிரா : நன்றி மக்களே. பின்னூட்டங்களில் நான் அவ்வளவு எழுதுகிறவன் இல்லை (ஏதாவது தெரிந்தால் தானே). படிப்பதோடு சரி. இணையத்தில் உலாவும் (எனக்குத் தெரிந்த) தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் படிக்கும் தளம் இது. சின்ன விஷயம் தான் என்றாலும், 365paaல் வெல்வது எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. உடன் Facebookல் Update செய்யப்போகிறேன் 😉

 4. Samudra says:

  இது போன்ற போட்டிகள் நிறைய வைத்து
  வாசகர்களை ஊக்குவிக்கவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s