அறம் கூறு அவையம்

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி

சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்…

நூல்: மதுரைக் காஞ்சி (வரிகள் 489 முதல் 492வரை)

பாடியவர்: மாங்குடி மருதனார்

இது, அறம் கூறு அவையம். வழக்குகளை ஆராய்ந்து நீதி சொல்லும் மன்றம்.

ஒரு பிரச்னையோடு இங்கே வருகிறவர்கள் ‘நமக்கு நீதி கிடைக்குமா?’ என்ற அச்சத்தோடு இருப்பார்கள், ‘ஒருவேளை நியாயம் கிடைக்காமல் போய்விடுமோ’ என்று சந்தேகம் / வருத்தம் கொள்வார்கள், ’ஒருவேளை நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துவிட்டால் எல்லாச் சொத்துகளையும் ஆனந்தமாக அனுபவிக்கலாம்’ என்று ஆசைப்படுவார்கள், இப்படிப் பலவிதமான உணர்வுகள் அவர்களுக்குள் பொங்கும்.

ஆனால், இந்த நீதிமன்றத்துக்குள் நுழைந்துவிட்டால் அந்த உணர்வுகள் எல்லாம் நீக்கப்பட்டுவிடும். காரணம் இங்கே ஒருவர் சந்தோஷப்படும்படியும் இன்னொருவர் வருத்தப்படும்படியும் ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்புச் சொல்லும் வழக்கமே கிடையாது. தராசுக்கோலைப்போல் நடுநிலையில் நின்று சிறப்பான, சரியான நியாயத்தைச் சொல்லும் மன்றம் இது.

துக்கடா

 • நான்கே வரிகளில் நீதிமன்றத்திற்கான இலக்கணத்தைச் சொல்லிவிடுகிறது இந்தப் பாடல்!
 • நாளை தொடங்கி ஒரு வாரத்துக்கு #365paa காதல் திருவிழா. மேற்கத்தியக் காதலர் தினத்தைச் சங்க இலக்கிய ‘அக’ப் பாடல்களுடன் கொண்டாடுவோம் 😉

219/365

Advertisements
This entry was posted in அறிவுரை, நீதி, மதுரைக் காஞ்சி. Bookmark the permalink.

10 Responses to அறம் கூறு அவையம்

 1. amas32 says:

  கட்டப் பஞ்சாயத்துகள் நிறைந்த இந்நாளில், தராசுக்கோலைப்போல் நடுநிலையில் நின்று சிறப்பான, சரியான நியாயத்தைச் சொல்லும் நீதி மன்றம் பற்றிய இந்தப் பாடல் மிகவும் அருமை.

  அநீதி இழைக்கப்பட்ட ஒருவர் படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. நீதி மன்றம் சரியான தீர்ப்பை மட்டும் அல்ல சரியான காலத்திலேயும் அந்த தீர்ப்பை வழங்க வேண்டும். Justice delayed is justice denied.

  இக்காலத்தில் பலர் நீதி மன்ற்ம் செல்லாமல் வேறு முறையில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு முக்கிய காரணம் நமது நீதி மன்றங்களில் நிகழும் கால தாமதம் தான்.

  ஏழை எளிய மக்களுக்கு உரிய பாதுகாப்பை ஒரு சிறந்த நீதி மன்றமே தரும். இல்லாவிட்டால் அவர்கள் எங்கு போய் நியாயம் கேட்க முடியும்?
  amas32

 2. Samudra says:

  நல்ல பாடல்..

 3. GiRa ஜிரா says:

  Court எனப்படும் இடத்திற்குத் தமிழில் என்ன பெயர்?

  இன்னைக்கு உள்ள பெயர் நீதிமன்றம். ஆனா சங்கத்தமிழ் இன்னும் அழகான பொருத்தமான பெயர் கொடுக்குது.

  அறம் கூறு அவை(யம்)

  அறத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற அவை. அதுவும் நடுநிலையான அவை. அப்படியிருந்தால் தான் அது அறங்கூறு அவை.

  இதைச் சொல்றது மாங்குடி மருதனார். மதுரைக்காஞ்சி என்னும் நூலில் சொல்கிறார்.

  தூங்கா நகரம் எதுன்னா டக்குன்னு மதுரைன்னு சொல்லீருவோம். விடியவிடிய ஏதாச்சும் நடந்துக்கிட்டே இருக்கும்.

  இன்னைக்கு மட்டுமில்ல. அன்னைக்கே அப்படித்தான் இருந்திருக்கு. பொழுது அடைந்த பிறகு ஒவ்வொரு யாமத்துலயும் மதுரைல என்னென்ன நடக்குதுன்னு எடுத்துச் சொல்றாரு.

  அதெல்லாம் சரி. இந்த நூல மாங்குடி மருதனார் ஏன் எழுதுனாருன்னுதானே கேக்குறீங்க. சொல்றேன்.

  பாண்டிய மன்னனா நெடுஞ்செழியன் பட்டம் கட்டினான். வயசு குறைவு. மத்த நாட்டுக்காரங்களுக்கெல்லாம் அவனை அடிச்சு நாட்டைப் பிடிச்சிரனும்னு விருப்பம். எல்லாரும் ஒன்னு சேந்து படையெடுத்து வர்ராங்க.

  தலையானங்கானம் அப்படீங்குற ஊர்ல போர் நடக்குது. யாருக்கு வெற்றி?

  நெடுஞ்செழியனுக்குத்தான் வெற்றி.

  அதுனால அவனுக்குக் கிடைத்த பட்டப் பெயர் தலையானங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன்.

  போர் முடிஞ்சது. பெரிய வெற்றிதான். அந்த வெற்றி நெடுஞ்செழியன் தலையில் ஏறாமல் இருக்கனும். அதே நேரத்தில் மன்னனுக்குரிய கடமைகளையும் செய்யனும். இதையெல்லாம் எடுத்துச் சொல்ல மாங்குடி மருதனார் எழுதுனதுதான் மதுரைக் காஞ்சி.

  பாராட்டோடதான் தொடங்குறாரு. நல்லாப் பாராட்டி முடிச்சப்புறமா நிலையாமை தத்துவத்தைப் பத்திச் சொல்றாரு. இதுக்கு முன்னாலும் அரிய செயல் செய்தவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது இல்லைன்னு சொல்லி மறைமுகமா செருக்கு வேண்டாம்னு சொல்றாரு.

  அப்புறமா மதுரையப் பத்திச் சொல்றாரு. நெறைய சொல்றாரு. அந்தப் பட்டியலப் பாப்போமா? ஊர்ல என்னென்ன இருக்கு
  # மக்கள் என்னென்ன சாப்டுறாங்க
  # என்னென்ன செய்றாங்க
  # என்னென்ன கோயில்கள் இருக்கு
  # என்னென்ன திருவிழாக்கள் நடக்குது
  # பொழுது சாஞ்சதும் ஒவ்வொரு யாமத்துலயும் ஊர்ல என்ன நடக்குது
  # காலை எழுந்ததும் மன்னனின் கடமைகள் என்ன
  இந்த மாதிரி மதுரையப் பத்தி நெறைய எடுத்துச் சொல்றாரு.

 4. GiRa ஜிரா says:

  அப்படி மாங்குடி மருதனார் எடுத்துச் சொன்னதுல சில சுவாரசியமான தகவல்களைப் பாப்போம்.

  நெடியோன் – இந்தப் பெயரைச் சொன்னதும் அது விஷ்ணுவைக் குறிப்பதாக எல்லாரும் சொல்வார்கள். மிகவும் பிற்காலத்துல வந்த அருணகிரிநாதர் கூட “நெடிய மாமனார் ஆட”ன்னு விஷ்ணுவைத்தான் சொல்கிறார். அந்த அளவுக்கு நெடியோன் என்ற பெயர் விஷ்ணுவுக்குப் பொருந்தீருக்கு. ஓங்கி உலகு அளந்தார்ல. அப்ப நெடியவராத்தானே இருந்திருக்கனும்.

  அந்த நெடியோன் என்னும் பெயரை விஷ்ணுவிற்குப் பயன்படுத்தியதோடு மட்டுமில்லாம இன்னும் ரெண்டு பேருக்குப் பயன்படுத்துறாரு மாங்குடி மருதனார்.
  1. தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
  2. சிவபெருமான்

  பேரிலேயே “நெடும்”னு இருக்கும் நெடுஞ்செழியன் உயரமானவனாகவே இருந்திருக்கலாம். அதுனால கூட மாங்குடி மருதனார் நெடியோன் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

  சிவபெருமானையும் நெடியோன்னா சொல்றாரு? ஆமா.

  மழுவாள் நெடியோன் தலைவனாக – இப்படி ஒரு வரியைச் சொல்றாரு.
  அந்த வரியை முழுசாப் பாத்தா யாருக்குத் தலைவன் ஆனார்னு புரிஞ்சிரும்

  நீரும் நிலனும் தீயும் வாளியும் விசும்போடு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன்

  பஞ்ச பூதங்களையும் கொண்டு வந்தாச்சு. உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. ஆக உலகத்திற்கே தலைவனாக ஆனார் சிவபெருமான்.

  அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையோனும் நெடியோன் என்பது பொருத்தமே.

  இன்னொரு கொசுறுத் தகவல். மாங்குடி மருதனார் காட்டும் சிவன் கோயிலில் விலங்குகளைப் பலி கொடுக்கம் வழக்கம் இருந்திருக்கிறது.

  அதுவுமில்லாமல் சிவன் கோயில்களில் அந்தணர்கள் இல்லை.
  என்னது? எப்படித் தெரியுமா?

  அதையும் மாங்குடி மருதரே சொல்றாரு.

  மதுரையில் என்னென்ன கோயில்கள் இருக்குன்னு சொல்லிக்கிட்டு வரும் போது பௌத்தப் பள்ளி அமணப் பள்ளியோடு அந்தணப் பள்ளி என்று ஒன்று தனியாக இருந்ததையும் சொல்றாரு. கோயில் வேற. அந்தணர்களின் பள்ளி வேற. பழைய நூல்களைப் பாக்குறப்போ எல்லாக் கோயில்களிலும் பலியிடுதல் வழக்கமாக இருந்திருக்கு. பலியிடல் இல்லாத பௌத்தப்பள்ளி, சமணப்பள்ளி, அந்தணப்பள்ளி ஆகியவை தனியா இருக்கு.

  இந்த மாதிரியான காட்சிக்காதை சிலப்பதிகாரத்திலும் இருக்கு. ஊர்காண்காதைன்னு பேரு. மதுரையக் கோவலனும் கண்ணகியும் வேடிக்கை பாத்துக்கிட்டே நடக்குறாங்க. மாங்குடி மருதனார் காட்சிப்படுத்தியது போலத்தான் இளங்கோவடிகளும் காட்சிப்படுத்துறாரு.

  ஓணம் பண்டிகை எங்கு கொண்டாடப் படுகிறது?

  இப்படி ஒரு கேள்வி தேர்வில் வந்தா எல்லாரும் கேரளம்னு எழுதி சரியான மதிப்பெண் வாங்கீருவோம்.

  ஆனா மாங்குடி மருதனார் மாத்திச் சொல்றாரு. மதுரையில் ஓணம் பண்டிகை நடக்குதாம். மாயோனுக்குரிய ஓணம் பண்டிகை மதுரையில் நடக்கிறது.
  கணம் கொள் அவுணர் கடந்த பொலந் தார் மாயோன் மேய ஓண நல் நாள்
  இந்த ஓணப்பண்டிகை கொண்டாடப்படுவது பற்றி மற்ற நூல்கள்ள குறிப்பு இருக்கான்னு தெரியலை. ஆனா மாங்குடி மருதனார் குறிப்பெழுதி வெச்சிருக்காரு.

 5. GiRa ஜிரா says:

  இப்படி ஒன்னொன்னா சொல்லீட்டு வரும் போது அறங் கூறு அவையம் பத்தியும் மாங்குடி மருதர் சொல்றாரு.

  அறங்கூறு அவையைப் பத்தி நாகா அழகா விளக்கம் கொடுத்ததால, அடுத்த கருத்துக்குப் போறேன்.

  நீதிமன்றம் எப்படி இருக்கனும்னு மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனுக்குச் சொன்னாரு. ஆனா அதுக்கு எடுத்துக்காட்டா இன்னொரு நெடுஞ்செழியன் பிற்காலத்தில் வாழ்ந்து மறைந்தான்.

  நம்ம எப்பவாச்சும் நீதிமன்றம் பக்கம் போவோமா?

  போகனும்னுதான் ஆசைப்படுவோமா?

  கோர்ட்டு வாசல மிதிக்க வெச்சிட்டியேங்குற வசனம் எத்தன படத்துல நாடகத்துல கேட்டிருக்கோம்.

  மொத்தத்துல நீதிமன்றம் தவிர்க்கப்பட விரும்பும் இடமாகவே இருக்கிறது.

  தூத்துக்குடியில் எங்க மாமா வக்கீலா இருந்தாரு. ஒவ்வொரு சமயம் நான் அவருக்குச் சாப்பாடு கொண்டு போவேன். அதுக்குக் காரணம் அங்க இருந்த நாவல் மரங்கள். அந்தப் பழங்கள் மேல அவ்வளவு ஆசை. அப்படிப் போறப்போ அங்க வந்தவங்க முகங்களைப் பாக்கனுமே. நமக்கே பரிதாபமா இருக்கும். என்னாகுமோ ஏதாகுமோன்னு ஒரு தவிப்பு.

  ஏன் அந்தத் தவிப்பு? அறம் வெற்றி பெறுமான்னு ஒரு ஐயப்பாடு.

  ஆனால் பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக்கு வரும் கண்ணகி அந்த ஐயப்பாட்டோடா வர்ரா?

  அவ நடந்து அவைக்கு வர்ரப்போ மக்கள் பாக்குறாங்க. அவளுடைய தோற்றம் மக்களுக்கு ஒரு வித அச்சத்தைக் கொடுக்கிறது.

  அந்த இடத்திலேயே கண்ணகி தெய்வமாகி விடுகிறாள்.

  “செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம் பொருட்டு வம்பப் பெருந்தெய்வம் வந்தது”

  சாமி வந்துருக்குன்னு மக்களுக்குத் தோணுது அதென்ன சாமி? வம்பப் பெருந்தெய்வம்.

  நமக்கு ஏதோ துன்பம் கொடுத்து திருத்துறதுக்காக சாமி வந்திருக்குன்னு மக்களுக்கே புரிஞ்சு போச்சு.

  பாண்டியன் நெடுஞ்செழியன் நல்லவன். அவனுடைய அவையில் நீதி கிடைக்கும்னு உள்ள போறா கண்ணகி.

  நெடுஞ்செழியனுக்கு கெட்ட நேரம். யாரும்மா நீன்னு கேட்டுர்ரான்.

  அப்பதான் கண்ணகி சொல்றா. “தேரா மன்னா”

  ஏன் தேரா மன்னா? மன்னனாகத் தகுதியில்லாதவனே என்று பொருள்.

  ஏன் அப்படிச் சொல்லனும்?

  கோவலனுடைய தலையையும் உடம்பையும் சூரியன் சாட்சியா ஒன்னாக்கிப் பேச வெச்சிருக்கா. அதுக்கப்புறம் ஊர் முழுக்க நடந்து அவைக்கு வந்திருக்கா. மக்கள் கூட்டம் பாத்திருக்கு. இப்படி ஒன்னு நடந்திருக்குங்குற செய்தி கண்ணகி வந்து சொல்ற வரைக்கும் பாண்டியனுக்கு வரலையே!

  ஒற்றர்கள் கொண்டு வந்து சொல்லீருக்க வேண்டாமா? என்ன நடக்குதுன்னு தெரியாம ஒரு மன்னன் இருந்தால் என்ன மன்னன்னு கண்ணகி கேக்குறா. அப்புறம்தான் வழக்கு.

  கோவலன் குற்றமற்றவன்னு நெடுஞ்செழியனுக்குப் புரிஞ்சு போச்சு. அவன் தீர்ப்பு சொல்லனும்.

  ஆனா உயிரையே விட்டுர்ரான். அசிங்கப்பட்டுப் போயிட்டோமே! இதுக்கு மேல எப்படி உயிரோட இருக்குறது. “கெடுக என் ஆயுள்’. இந்த ஒரு வார்த்தைதான். அப்படியே விழுந்து இறந்தான். நல்லவன்.

  அவன் இறந்ததுமே கோப்பெருந்தேவியும் உடனே இறந்து விழுந்தாள். ஒரு பேச்சு கூடப் பேசலை. முணுக்குன்னு கண்ணுல தண்ணி விட்டு அழுகலை. அவன் போனான். அவளும் போனாள். அவ்வளவுதான்.

  இப்பச் சொல்லுங்க. பாண்டியன் நெடுஞ்செழியனின் நீதிமன்றம் அறங்கூறும் அவையா? இல்லையா?

  உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி. இந்த நீதிமன்றக் காட்சியில் எத்தனை சிலம்புகள் உடைந்தன?

  சரியான விடை சொன்னா புத்தகப்பரிசு உண்டு. 🙂 copy catனு நாகா நினைக்கிறது எனக்குக் கேக்குது. 🙂

  • amas32 says:

   இரண்டு, ஒன்று அரசியுடயது, மற்றொன்று கண்ணகியுடையது. என்ன புத்தகம்? :))
   amas32

   • amas32 says:

    நான் சிறு வயதில் கோப்பெருந்தேவியாக நடித்திருக்கிறேன். கோடை காலத்தில் எங்கள் தெருவில் சிறுவர்கள் நாங்கள் ஒன்று கூடி நாடகம் போடுவோம். எங்கள் வீடு கார் ஷெட் தான் நாடக மேடையாக உருமாறும். இருப்பதிலேயே பெரிய அண்ணா இயக்குனர் ஆவார். ரிஹர்சலில் எல்லாம் சரியாக நடிக்காமல் நாடகத்தன்று நன்றாக நடித்து பெயர் வாங்கி விட்டேன் 🙂 அப்போ என் வயது 8 அல்லது 9 இருக்கும்.
    amas32

   • GiRa ஜிரா says:

    அம்மா நீங்க மட்டுந்தான் இந்தக் கேள்விக்கு விடை சொல்லீருக்கீங்க. 🙂 இந்தக் கேள்விக்கு விடையா ஒரு பதிவே போட வேண்டியதாப் போச்சு.

    உங்களுக்குக் கண்டிப்பா பரிசு உண்டு. 🙂

    http://gragavanblog.wordpress.com/2012/02/13/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/

 6. GiRa ஜிரா says:

  ஒரு குட்டி இலக்கிய ஒப்புமை. சிலப்பதிகாரம் பத்திப் பேசியாச்சு.

  பாண்டியன் போனான். கோப்பெருந்தேவியும் போனாள். இதே மாதிரி காட்சி பின்னாடி வந்த கந்தபுராணத்திலும் கம்பராமாயணத்திலும் வருது.

  அங்க பதுமகோமளை தனது கணவன் சேவலும் மயிலும் ஆனான்னு கேள்விப்பட்டதுமே உயிரை விட்டா. ஒரு பேச்சு கெடையாது.

  கம்பராமாயணத்துல மண்டோதரி அப்படியில்ல. ஓடி வந்து கணவன் மேல விழுந்து அழுது புலம்பிக் கதறிக் கண்ணீர் விட்டுத்தான் உயிரை விட்டாள். அந்தக் காட்சியும் ஒரு சுவையான சோகக் காட்சி. அதை இன்னொரு சமயம் ஆழமாப் பாக்கலாம்.

 7. Kumaran says:

  இராகவன்,

  திருவோண விழாவைப் பத்தி பெரியாழ்வாரும் பாடியிருக்கார். திருப்பல்லாண்டில் வர்ற பாசுரம்.

  உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு
  தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன; சூடும் இத்தொண்டர்களோம்
  விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
  படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s