உயிர் கொடுத்தோர்

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை

மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,

உயிர்க் கொடை பூண்ட உரவோய்!

நூல்: மணிமேகலை

பாடியவர்: சீத்தலைச் சாத்தனார்

சூழல்: பாத்திரம் பெற்ற காதை : வற்றாமல் உணவை அள்ளித் தருகிற அமுதசுரபி என்கிற பாத்திரத்தை மணிமேகலை பெறுகின்ற அத்தியாயம் இது. அப்போது அவளிடம் தீவதிலகை என்ற பெண் சொன்ன வார்த்தைகள் இவை

மணிமேகலையே,

பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி.

அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.

ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு!

துக்கடா

 • மணிமேகலை முழுமையையும் உரையுடன் வாசிக்க : http://www.tamilvu.org/library/l3200/html/l3200100.htm
 • இந்த மணிமேகலை காப்பியத்தின் சுருக்கமான கதையை நான் நாவல் வடிவில் எழுதியுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் அதனை இங்கே வாங்கலாம் : https://www.nhm.in/shop/978-81-8493-447-2.html

218/365

Advertisements
This entry was posted in கொடை, பெண்மொழி, மணிமேகலை. Bookmark the permalink.

17 Responses to உயிர் கொடுத்தோர்

 1. amas32 says:

  தானத்தில் சிறந்தது அன்னதானம். உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. வயிறு வாழ்த்துவதற்கு இணையாக வேறு எந்த வாழ்த்தும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். மணிமேகலைக்குக் கிடைத்த அமுதசுரபி மூலம் இந்த உலகத்தில் வாழும் பல்லாயிரத்தவர்க்கும் அவரால் உயிரூட்டமுடிந்தது..

  பசிப் பிணியை போல கொடுமையானது வேறு ஒன்றும் இல்லை.நாம் உண்ணா நோன்பு இருப்பதும் இதை உணரத்தான். நம்மால் இயன்ற வரை மற்றவர்க்கு அன்னமிட்டால் அதை விட சிறந்த அறம் வேறு இல்லை.

  புத்த மதம் கருணைக்கு முதலிடம் கொடுக்கும் மதம். பௌத்தத் துறவியான மணிமேகலைக்கு இந்த அமுத சுரபி கிடைத்தது மாபெரும் வரம்.
  தீவதிலகை மணிமேகலைக்கு சொன்ன அறிவுரை நமக்கும் பொருந்தும்.

  நீங்கள் கொடுத்த சுட்டிகளுக்கு மிக்க நன்றி சொக்கரே!
  amas32

 2. anonymous says:

  பசி
  – இதைப் பற்றி யார் பேச முடியும்? ஆத்மார்த்தமாக?

  இரண்டு பேர் மட்டுமே!
  *பணம் குன்றியதால் பசியோடு போராடுபவர்கள்!
  *மனம் குன்றியதால் பசியோடு போராடுபவர்கள்!

  ஒரு வேளை, ஒரு பொழுது இருந்து பழக்கப்பட்டவர்கள் கூட,
  ஒரு நாள் முழுக்க உபவாசம் இருந்தால்,
  அடுத்த நாள் எப்ப வருமோ, எப்போ லைட்டாச் சாப்பிடலாம்-ன்னே எண்ணம் போகும்!

  ஆனா…ஒரு வருசம் முழுக்கவே, ஒரு வேளை மட்டுமே சாப்பிட்ட ஜீவன்களும் உண்டு! வெள்ளி இரவு தொடங்கி, திங்கள் மதியம் வரை, தண்ணி குடிச்சியே ஓட்டிய ஜீவன்களும் உண்டு!
  இதை ஏன் சொல்லுறேன்-ன்னா….மனம் குன்றியதால் பசியோடு போராடுபவர்கள்!

  வள்ளலாரிடம் பணம், தான் சாப்பிடற அளவுக்காச்சும் இருந்தது!
  ஆனாலும், பசியோடு இருந்தார்! ஏன்? = மனம் குன்றியதால்!
  பலர் பசியைக் கண்டு மனம் குன்றியதால், தானும் பசியோடு போராடினார்!

  இப்படி…பணம் குன்றி/மனம் குன்றி, பசித்த ஜீவன்கள், பசியைப் பற்றிச் சொல்லும் போது…
  அந்த உண்மையில் ஓர் உக்கிரம் இருக்கும்!
  அப்படியான ஒரு பெண் = மணிமேகலை! அதான் அந்தப் பெண்ணின் தேடலில், அப்படி ஒரு உக்கிரம்!

 3. anonymous says:

  ஒரு விலைமகளின் பெண்!

  தே**** பொண்ணு தே**** ஆகத் தானே இருப்பா!
  தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை! நெல்லு வயல்ல நெல்லு தானே விளையும்!
  – இப்படியெல்லாம் ’பழமொழிகள்’ / சினிமா மொழிகள் பேசிப் பொழுதைக் கழிக்கிறோம், 21ஆம் நூற்றாண்டு விஞ்ஞான யுகத்திலும் கூட….

  ஆனா….2ஆம் நூற்றாண்டு…கிட்டத்தட்ட 2000 வருசத்துக்கு முன்னால….
  தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பாருங்க!
  * ஒரு காவியத் தலைவி = விலைமகள்
  * இன்னொரு காவியத் தலைவி = விலைமகளின் பொண்ணு

  இதெல்லாம் “கலாச்சாரத்துக்கு” அடுக்குமோ?
  எங்களுக்கும் நல்ல படம் குடுக்கணும்-ன்னு ஆசை தான்! ஆனா ஜனங்க ஏத்துப்பாங்களா சார்?
  மக்களுக்கு எது புடிக்குதோ அதானே திரையுலகம் குடுக்க முடியும்?

  ஆனா…சங்கத் தமிழ்?
  தமிழ்க் “கலாச்சாரம்” அல்ல! தமிழ்ப் பண்பாடு – பண்பட்டு குடுத்தது!

  தமிழ் மொழியின் முதல் இரு காவியங்கள்! அதன் தலைவியர் = விலை மகளிர்! விலையில்லாத மகளிர்!

  * குலத்தைக் காணாது, குணத்தைக் கண்ட தமிழ்ப் பண்பாடு!
  * சமூகத்தில், எந்தவொரு பால்-பிரிவையும் இகழாத தமிழ்ப் பண்பாடு!
  * ஆணாதிக்கம் இல்லாத தமிழ்ப் பண்பாடு!
  * காவியத் தலைவனை மிகைப்படுத்தாது, வாழும் வாழ்வை, உள்ளபடி பேசும் தமிழ்ப் பண்பாடு….
  * தான் சமைப்பதே முதல் தமிழ் இலக்கியம் என்னும் இலக்கியப் பீடாதிபதிகள் இல்லாத தமிழ்ப் பண்பாடு

  இந்த ஆதித் தமிழ்க் காவியங்களைச் சமைத்த அந்த இரண்டு தமிழருக்கும், அன்றைய தமிழ்ச் சூழலுக்கும்….தலை பணிந்த வணக்கங்கள்!

 4. anonymous says:

  பணி மிகுதியாலோ என்னவோ, சொக்கர், மிக முக்கியமான வரியைப் பாட்டில் விட்டுட்டாரு….
  அது என்னா-ன்னா…

  ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்-க்கு முன்னாடி உள்ள வரி!
  ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் என்பதே அந்த வரி!

  நாம எல்லாம் இன்னிக்கி அதைத் தான் செஞ்சிக்கிட்டு இருக்கோம்!
  யாருக்கு தேவையோ, அங்கே குடுப்பதில்லை!
  யாருக்குத் தேவை இல்லையோ, அங்கே கொட்டுகிறோம்!

  திருப்பதி உண்டியில்-ல்ல கொட்டுவோம்!
  ஆனா அவருக்கு அது தேவைப்படுதா?
  எந்த ஆழ்வார் உண்டியல்-ல்ல காசு போட்டாரு? ஆனாலும் நாம போடுவோம்!

  திருப்பதி உண்டியில்-ல்ல கொட்டுவோம்!
  ஆனா, எலிக்கறி உண்ட விவசாயிகளைக் கண்டுக்க மாட்டோம்!
  யாருக்கு தேவையோ, அங்கே குடுப்பதில்லை!
  யாருக்குத் தேவை இல்லையோ, அங்கே கொட்டுவோம்!

  நான்சென்ஸ்! பேசணும்-ன்னு பேசாதே…யாராச்சும் குழந்தைகள் நல நிதி திரட்டினாங்க-ன்னா, நான் ஆபிசில் நூறு ரூவா குடுப்பேன் தெரியுமா?

  அந்த நூறுக்கு வந்தனம்!
  ஆனா, திருப்பதியில், யாரும் திரட்டாமலேயே , நாமளே போய்க் கொட்டிட்டு வரோமே!
  இங்கே, திரட்டினாத் தான்…ஏதோ நூறாச்சும் கிடைக்குதுல்ல?

  பணத்தை விடுங்க!
  நாமா, படியேறிப் போயி, இல்லாதபட்டவங்களைப் பாக்குறோமா? இத்தினிக்கும் ஸ்பெசல் டிக்கெட் முன்னூறு ருவா இல்லாம, தர்ம தரிசனத்திலேயே, இவர்களைப் பாக்கலாம்! = ஆனால் அதுவே பகவத் விஷயம்! இது சும்மா விஷயம்!
  ———–

  இது போன்ற நம்மைத் தான், மணிகேகலை சொல்லுது!
  ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

  * தர்மத்தை விலை பேசுபவர்கள் = அற விலை பகர்வோர்
  யாரு?
  * ஆற்றுநர்க்கு அளிப்போர் = இருக்குறவங்க கிட்டயே கொண்டு போய்க் கொட்டுகிறவர்கள்!

  முருகா,
  பழனி உண்டியல் நிரப்புவோர்க்கா உன் கரிசனம்?
  பண டிக்கெட் டாம்பீகத்துக்கா உன் தரிசனம்?

  • என். சொக்கன் says:

   ரவி,

   அந்த வரி கவனக்குறைவாக விடுபடவில்லை, இந்தப் பகுதிமட்டுமே தன்னளவில் ஒரு முழுமையான பாடலாகக் கருதியே அந்த வரியையும் (பின்னால் வந்த இன்னொரு வரியையும்) நீக்கினேன், அந்த முதல் வரி அருமையாக இருப்பினும், அதனை நீக்கினால்தான் இங்கே சொல்லவந்துள்ள விஷயத்துக்கு முழு focus கிடைக்கிறது என்பது என் கருத்து.

   anyway, மணிமேகலை தனித்தனிப் பாக்களைக் கொண்டது அல்லவே, நம் விருப்பப்படி நறுக்கிப் படிக்கலாம் 🙂

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

   • anonymous says:

    ஆகா…மன்னிக்கவும் சொக்கரே!
    பணி மிகுதியால், கவனிக்கலயோ-ன்னு நினைச்சிட்டேன்! அந்த வரியும் உயிர் வரியாக இருப்பதால், அதையும் இங்கு சேர்த்துச் சொன்னேன்! மிக மிக நன்றி, இந்தப் பாடலுக்கு!

    btw,
    நான் ரவி அல்ல! யாரோ..
    🙂

 5. anonymous says:

  இப்போ சேர்த்துப் படிங்க!

  ஆற்றுநர்க்கு அளிப்போர் = அறவிலை பகர்வோர்
  ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
  =மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை!

  “மெய்” நெறி எது? “பொய்” நெறி எது? = மூச்சடக்கி, முணுமுணுத்து கண்டு புடிக்க வேணாம்! இந்த மூனே வரியே போதும்!

 6. anonymous says:

  ஆற்றா மாக்கள்!

  மா=விலங்கு! (பொதுவா)
  மா-க்கள்=விலங்குகள்!
  பூ-பூக்கள், மா-மாக்கள், உடு-உடுக்கள், பசு-பசுக்கள், வாழ்த்து-வாழ்த்துக்கள்!

  எதுக்கு மாக்கள் பசி களையணும்-ன்னு சொல்றாரு?
  அப்படீன்னா மனுசனுக்கு ஒன்னும் குடுக்க வேணாம்!
  பசு புனிதம்!
  ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் = பசுக்கள் பசியைக் களைவோர்-ன்னா பொருள்?

  இல்லை!
  மா-வும் “மா-க்களும்” ஐ அறிவினவே
  மக்கள் தாமே ஆறறிவு உயிரே
  – தொல்காப்பியம்
  ———-

  பசி வந்தா என்ன ஆகும்?
  * வயிற்றுப் பசி
  * அன்புப் பசி
  * காமப் பசி
  * பணப் பசி
  * புகழ்ப் பசி-ன்னு பல பசி இருக்கு!

  ஆனா, போதும்-ன்னு சொல்ல வைக்கறது ரெண்டே பசி தான்!
  * வயிற்றுப் பசி = நிறைஞ்சா, அதுக்கு மேல ஏலாது = போதும்!
  * அன்புப் பசி = நிறைஞ்சாலும் நிறையலீன்னாலும், தனக்கு-ன்னு எதுவும் எதிர்பார்க்காது = போதும்!

  இந்த இரண்டு பசிகள் ரொம்ப மிகுதி ஆயீருச்சின்னா….இன்றைய போலியான உலகில், “ஆறறிவு” மக்களா வாழ முடியாது! ஐஞ்சறிவா ஆயிருவாங்க!
  = அதான் மாக்கள்-ன்னு சொன்னாரு!
  ஆற்றா “மாக்கள்” அரும் பசி களைவோர்!
  ———-

  அன்புப் பசியாச்சும் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்துறலாம்!
  ஆனா வயிற்றுப் பசி?

  * ‘குடிப்பிறப்பு அழிக்கும், விழுப்பம் கொல்லும்
  * பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
  * நாண் அணி களையும், மாண் எழில் சிதைக்கும்
  * பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
  * பசிப்பிணி என்னும் பாவி!

  இப்படி இத்தனையும் ஆனா, ஒருத்தன் ஆறறிவோடவா இருப்பான்? ஐஞ்சறிவா ஆயீற மாட்டான்?
  * பசி ஒன்னு தானே = செடி, பறவை, விலங்கு, மனுசன் எல்லாத்துக்கும் பொது?

  உணவு, உடை, உறையுள் = விலங்குக்கு உடை தேவைப்படுதா? இல்லை செடிக்குத் தான் உறையுள் தேவைப்படுதா?
  ஆனா எல்லாத்துக்கும் = “பசி”!

  அந்தப் பசியைப் புரிஞ்சிக்கிடணும்! “புரிதல்” இருந்தாத் தான், துன்பத்தைப் போக்கும் மனசு வரும்! இல்லீன்னா வரவே வராது!
  அதான் மாக்கள்-ன்னு சொன்னாரு!
  ஆற்றா “மாக்கள்” அரும் பசி களைவோர்!

  • amas32 says:

   anonymous க்கு வந்தனம்
   “தமிழ் மொழியின் முதல் இரு காவியங்கள்! அதன் தலைவியர் = விலை மகளிர்! விலையில்லாத மகளிர்!” முற்றிலும் உண்மை!
   Another request, I need a new invite to the Murugan song site. Thanks.
   amas32

 7. anonymous says:

  மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
  உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே
  உயிர்க் கொடை பூண்ட உரவோய்!

  * மண்திணி ஞாலம் = மண் திணி ஞாலம்
  இந்த உலகத்துல நீர் தான் 70%, மண்ணு 30% தான்!
  அதுனால மண்ணுக்கு, நீர் மேல பொறாமை! அதை மிஞ்சத் துடிக்குது! எப்படி?

  மனுசனை எரிச்சிச் சாம்பல் ஆக்கி, மண்ணாக்குது!
  மனுசனைப் புதைச்சி, மண்ணோட மண்ணாக்குது!
  இப்படி, பல உசுருங்களையும், கடேசீல, மண்ணாக்கி, இருக்குற மண்ணு மேலயே திணிக்குது!
  “மண் திணி ஞாலம்” = புரியுதா?

 8. anonymous says:

  இப்படியாப்பட்டு, ஒன்னுமில்லாம போகப் போறோம்! அந்த மண்ணுல…உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!!

  உயிர்க் கொடை = நீங்க இரத்த தானம் குடுக்கலாம், Bone Marrow தானம் குடுக்கலாம்! ஆனா உயிரைத் தானம் குடுக்க முடியுமா?
  முடியும்!
  உண்டி குடுத்தா, உணவு குடுத்தா = ஒரு உயிரையே, அதுகிட்ட திரும்பக் குடுத்தா மாதிரி! ஐஞ்சறிவை, ஆறறிவு ஆக்கினா மாதிரி!

  வயிற்றுப் பசி ஆற்றுங்கள்! முடிஞ்சா அன்புப் பசியும் ஆற்றுங்கள்!
  ஒரு உயிருக்கு, உயிர் கொடுங்கள்!
  ———————–

  மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
  உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!!

  ஆற்றுநர்க்கு அளிப்போர் = அறவிலை பகர்வோர்
  ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
  =மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை!

  இலக்கியம் = சொல் அடர்த்தி!
  இலக்கியம் = ஐஞ்சே வரி தான்! நான் தான் நீட்டி முழக்கிட்டேன்! இந்த யாரோ-வை மன்னியுங்கள்!
  ஐஞ்சே தமிழ் வரியை மட்டும் நினைவில் நிறுத்துங்கள்! தமிழ் வாழ்க!

 9. GiRa ஜிரா says:

  பசி

  ரெண்டெழுத்துதான். ஆனா உலகத்தையே ரெண்டாக்கும் தகுதி அதுக்குண்டு.
  பசியைப் பத்தி யாரும் பேசாத நினைக்காத நிலமை வரனும். அந்த அளவுக்கு உலக மக்கள் தன்னிறைவு பெறனும். இதுதான் பெரியவங்க சொல்றது. விரும்புறது.

  பாட்டின் கருத்துக்குப் போறதுக்கு முன்னாடி சில நிகழ்ச்சிகள்.

  சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சி. பெங்களூருக்கு சுற்றுலா கூட்டீட்டு வந்திருந்தாங்க. மெஜஸ்டிக் பேருந்து நிலையம் பக்கத்துல நானும் சில நண்பர்களும் நடந்துக்கிட்டிருந்தோம். அப்ப ஒருத்தர் நிப்பாட்டுனாரு.

  “சாப்டு நாளாச்சு. ரொம்பப் பசிக்குது. இந்த ஓட்டல்ல அளவுச் சாப்பாடு இன்ன விலை. முழுச்சாப்பாடு இன்ன விலை. நீங்க பாதி சாப்டு எலையத் தூக்கிப் போட்டுருங்க. மிச்சத்தை நான் சாப்டுக்கிறேன்”ன்னு கெஞ்சுனாரு. என்ன உதவி செய்றதுன்னு யோசிக்க முடியலை. ரெண்டு ரூபாயை அவர் கையில் குடுத்துட்டு நடந்துட்டேன்.

  அப்புறம் யோசிச்சுப் பாத்தா அவருக்குச் சாப்பாடு வாங்கிக் குடுத்திருக்கலாமேன்னு தோணுச்சு. ஆனாலும் பசிக்குதுன்னு அவர் கேட்டது இன்னமும் மறக்காம இருக்கு.

  இதே போல நானும் பசிக்குதுன்னு பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டிய கதையும் நடந்திருக்கு. எல்லாம் முருகன் திருவிளையாடல்.

  2005ன்னு நெனைக்கிறேன். ஹாரிபாட்டர் புத்தகத்தின் ஐந்தாம் பாகம் வெளிவந்த ஆண்டு. அந்தப் புத்தகம் மேல அப்படியொரு ஈர்ப்பு. விடியக்காலைல போய் புத்தகம் வாங்கி வந்து பகலெல்லாம் படிச்சு. ராத்திரி வரைக்கும் தொடர்ந்து படிச்சு முடிச்சிட்டுத் தூங்கப் போனேன்.

  அடுத்த நாள் திங்கட்கெழமை. காலைல என்னால எந்திரிக்க முடியலை. கடுமையான காய்ச்சல். ஒரு சிறிய வீட்டில் தனியாக இருந்த சமயம் அது. ஒரு கட்டிடத்தில் நாலு வீடுகள். அதில் பெரிய வீட்டில் வீட்டுக்காரர் குடும்பம். ஆந்திர பிராமணர்கள். ஆனா எந்த விதமான பாகுபாடும் பார்க்காத மனிதர்கள். வைரம்னு சொல்லனும்.

  இதுல ஒரு முத்தாய்ப்பு என்னன்னா.. அந்த வீட்டுக்காரர்தான் அலுவலகத்தில் என்னுடைய மேலாளர். அவருடைய மனைவியை அக்கா என்று நான் கூப்பிடுவது வழக்கம்.

  காய்ச்சலால் என்னால எந்திரிக்க முடியல. மதியம் ஒரு மணிக்கு மேல மெதுவா எந்திரிச்சு பக்கத்துல இருந்த டாக்டரைப் பார்த்தேன். ஒரு ஊசியப் போட்டு மாத்திரையக் குடுத்தாரு. சாப்டுட்டு மாத்திரையச் சாப்பிடச் சொன்னாரு.
  சாப்பாடு நாந்தான் செஞ்சுக்கனும். வீட்ல எல்லாம் இருக்கு. ஆனா செய்யும் நிலையில் ஒடம்பு இல்லை.

  பக்கத்து வீட்டு கதவைத் தட்டினேன். அவருடைய மாமியார்தான் இருந்தாங்க அப்போ. ஒடம்பு சரியில்லைன்னு சொல்லி சாப்பாடு கேட்டேன்.
  அந்தம்மாவும் அன்னைக்கு சோமவார விரதமாம். மதியம் யாரும் வரமாட்டங்கன்னு ஒன்னும் சமைக்கல. ஆனாலும் மனசு கேக்காம, ரசம் செஞ்சுத் தர்ரதாகவும் சோறு மட்டும் வச்சுக்க முடியுமான்னு கேட்டாங்க. சரீன்னு சொல்லீட்டு வீட்டுக்கு வந்தேன்.

  பின்னாடியே அவங்களும் வந்துட்டாங்க. ஒன்னும் சமைக்க வேண்டாம்னு சொல்லி அவங்களே சோறு வெச்சி ரசம் வெச்சிக் கொண்டு வந்தாங்க.
  அடுத்த மூனு நாளும் மூனு வேளையும் அவங்க வீட்டிலிருந்துதான் சாப்பாடு வந்தது. காலைல இட்லி. மதியம் சாப்பாடு. ராத்திரி மறுபடியும் இட்லி. வயிறுக்குக் கனமா இல்லாததா கொடுத்தாங்க.

  மனசாரச் சொல்றேன். உண்மையிலேயே உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்தான்.

  அவருடைய தாத்தா ஊரில் எதுவும் சொத்து சுகம் சேத்து வைக்கலை. வேதம் படிச்சவராம். ஊருக்கெல்லாம் வீட்டு விசேஷங்களுக்குப் போவாராம். ஆனா காசுன்னு வாங்க மாட்டாராம். அப்பிடி ஒரு பொழைக்கத் தெரியாத மனிதரா இருந்திருக்காரு. ஆனா அவர் சந்ததியினர் இன்னைக்கு நல்லாயிருக்காங்க.

 10. GiRa ஜிரா says:

  பசி

  இது பொதுவா ரெண்டு வகைப்படும்.

  சோத்துக்கில்லாம இல்லாம வர்ரது.
  சோறு இருந்தும் வர்ரது.

  முதல் வகை கொடுமையானது. வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாமல் வயிறு சுருக்கிட்டு இழுக்கும் துன்பம் கொடுமை.

  சரி. ரெண்டாவது வகையைக் கொஞ்சம் பாத்துட்டு முதல் வகைக்கு வருவோம்.
  சோறு இருந்தும் ஏன் பசி வருது? பட்டினி கிடப்பதால். ஏன் பட்டினி கிடக்கனும்?
  1. கடவுளுக்கு விரதம்
  2. உடல்நிலைக் கோளாறு
  3. வீம்புப் பட்டினி

  கடவுளுக்கு விரதம்னு உளமாற இருக்குறவங்களுக்குப் பசி தெரியாது. அப்படி உண்மையா நோன்பு இருக்குறவங்க அதைப் பெருமையாச் சொல்லிக்கிறதும் இல்லை. வள்ளலார் இருந்ததும் நோன்புதான். பட்டினி அல்ல.

  உடல்நிலைக் கோளாறு ஒன்னும் பண்ண முடியாத வகை. சாப்பிட ஆசையிருக்கும். ஆனா சாப்பிட விடாம அல்சர், கொழுப்பு, சர்க்கரை, ஒவ்வாமைன்னு ஏதாச்சும் ஒன்னு தடுக்கும். இவங்க நிலமை பரிதாபம்தான்.

  மூனாவது இருக்கே வீம்புப்பட்டினி. இந்தப் பட்டினி கெடக்குறவங்களை யாரும் திருத்த முடியாது. அவங்களா உணர்ந்து திருந்துனாதான் உண்டு. இந்த மாதிரிப் பட்டினிகளுக்குக் காரணம் கோவம், வெறுப்பு, சுயதுன்புறுத்தலா இருக்கும். இப்படிப் பட்டினி கிடந்ததை பெருமையாக நினைக்கிறதும் சொல்லிக்கிறதும் உண்டு. அடுத்தவங்க சொல்ற எதையும் கேட்கும் பழக்கம் இருக்காது.

  சரி. இவங்களைப் பத்தியெல்லாம் இன்றைய பாவில் தீவதிலகை பேசவில்லை.

  தீவதிலகை குறிப்பிடுவது வயிற்றுப் பசி. சோறில்லா வயிற்றுப் பசி.
  இதை ஏன் மணிமேகலை கிட்ட சொல்லனும்னு யோசிச்சா அதுல ஒரு மிகப்பெரிய உண்மை அடங்கீருக்கு. அதுக்குப் பேர்தான் தமிழ்ப் பண்பாடு.

  குறிப்பா பெண்கள் இப்ப நான் சொல்லப் போறதைக் கவனமாக் கேக்கனும்.

  தமிழ்மொழி எப்படிச் செம்மொழியோ அப்படியே வடமொழியும் செம்மொழிதான். அதில் மாறுபாடு கிடையாது. வடமொழியிலும் புராணங்களும் நாடகங்களும் நிறைய உள்ளன.

  இந்தப் புராணங்களில் பெண் பாத்திரங்களை நாம் கூர்ந்து கவனிக்கனும். ராமாயணத்தில் வரும் சீதையையே எடுத்துக் கொள்வோம். என்ன ஆனது அவளுக்கு? வால்மீகி என்ன சொல்கிறார்.

  போர் முடிந்த பின் அந்தச் சீதை தீக்குளிக்க வேண்டியிருக்கிறது. ஏன்? தன் தூய்மையை நிறுவிக்காட்ட.

  இந்தப் பெண் மட்டுமா? உலகநாதனாகிய ஈசனின் மனைவியாகிய தாட்சாயணிக்கு என்ன ஆனது? தந்தை வீட்டுக்குப் போய் அவமானப் பட்ட பிறகு கிடைத்ததென்னவோ நெருப்புதான்.

  சீதையையோ தாட்சாயணியையோ கற்பில் குறையுள்ளவர் என்று யாரேனும் கூற முடியுமா? கூறினாலும் அதற்குக் காரணம் காட்ட முடியுமா?

  அப்படிப்பட்ட நிலையிலும் பத்தினிகளுக்கு வாய்த்ததென்னவோ நெருப்புதான்.
  பொதுவாகவே கதைகள் உருவாக்கப்படுபவை. அல்லது மிகைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள். அதில் அங்கங்கு பண்பாட்டு எச்சங்கள் ஒளிந்திருக்கும்.

  பத்தினி என்பதற்கு நெருப்புதான் சாட்சியாக வர வேண்டும் என்ற வழக்கம் வடவர்களிடம் இருந்திருக்கிறது. சதி என்ற பெருங்கொடுமையும் பலகாலம் அங்கு நடந்ததை நாம் நினைவு கூற வேண்டும்.

  ஆனால் இங்கு நடந்தது என்ன? தமிழ்நாட்டில் நடந்ததைத்தான் கேட்கிறேன்.
  இங்குதான் பரத்தை பத்தினியாகிறாள். பத்தினி தெய்வமாகிறாள்.

  கணிகையர் வீட்டில் பிறந்தவள் மாதவி. அவளால்தான் கோவலன் கண்ணகியைப் பிரிகிறான். சிலப்பதிகாரம் முடியும் பொழுது மாதவியின் துறவறம் அவள் பத்தினித்தன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.

  பத்தினியர் வழிக் குடும்பத்தில் பிறந்தவள் கண்ணகி. அவள் என்னவாகிறாள்? கதை முடியும் பொழுது பத்தினியான அவள் தெய்வமாகிறாள்.

  பரத்தை மட்டும் பத்தினியானால் போதுமா? அவள் பெற்ற மகள்? அவளும் பத்தினி வகையில் வாழ்ந்து இறுதியில் அறக்கோட்டத்தில் உறுபசி தீர்க்கும் தெய்வமாகிறாள்.

  நெருப்பு கிடையாது. சுடுசொற்கள் கிடையாது. ஆனால் பண்பாடு ஒரு பாடத்தை நமக்கெல்லாம் கற்றுக் கொடுக்கிறது.

  அந்தப் பண்பாட்டின் வழியாக மணிமேகலை தெய்வமாகிறாள்.
  அதனால்தான் நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும் என்று வள்ளுவர் கூறுகிறார். ஒரு பண்பாட்டை தெரிந்து கொள்ள அந்த மொழி நூல்களைப் படித்தாலே புரிந்து விடும்.

 11. GiRa ஜிரா says:

  பசிக்கு மீண்டும் வருவோம்.

  உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
  சேராது இயல்வது நாடு

  ஒரு நாடு எப்போ நாடாகும்? சுந்தரகாண்டம் படத்துல பாக்கியராஜ் ஒரு பெண் எப்போது பெண்ணாகிறாள்னு கேக்குற மாதிரி இருக்கா? 🙂

  பசியிருக்கக் கூடாது. மக்கள் நல்ல உடல் நலத்தோட இருக்கனும். பகைவர்கள் இருக்கக் கூடாது. இப்படியெல்லாம் இருந்தாத்தான் ஒரு நாடு நல்ல நாடு.

  இந்த மூன்றையும் சொல்றப்போ மொதல்ல பசியை வெச்சாரு வள்ளுவர். ஏன்?
  அது வந்தால் மத்ததெல்லாம் போகும்.

  பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

  அந்தப் பசியைப் போக்குவது எது? சாப்பாடுதான். அந்த உண்டி கொடுத்தோரை உயிர் கொடுத்தோர்னு சொல்றது மிகப் பொருத்தம்.

  இந்தப் பாத்திரம் மணிமேகலைக்குக் கிடைக்கிறதுக்கு முன்னாடி யார் கிட்ட இருந்தது?

  ஆபுத்திரன் கிட்ட இருந்தது. அப்புறமா மணிமேகலை கைக்குக் கிடைச்சிருக்கு. ஆனா இந்தப் பாத்திரம் எடுத்ததுமே சாப்பாடு கொடுக்காது. மணிமேகலை யாரிடமாவது அதில் உணவு வாங்க வேண்டும். அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். அப்பதான் அதிலிட்ட சோறு எடுக்கக் குறையாது வளர்ந்து எல்லாருக்கும் பயன்படும்.

  அப்படி மொதல்ல உணவிட்டது ஆதிரை. சரி. முதல்ல இந்தப் பாத்திரம் யாருடைய பசியைப் போக்குச்சு? அந்தப் பெண்ணின் பெயர் காயசண்டிகை.

  காயசண்டிகைக்கு இருந்த நோய் யானைத்தீ நோய். எவ்ளோ சாப்டாலும் பசிக்கும். அந்தம்மாவுக்கு அதிபயங்கர வளர்சிதை மாற்றம் (metabolism) போல. இப்பத்தான் இருபது இட்டிலி உள்ள போயிருக்கும். அண்டா சோறு கொண்டான்னு பசி கேக்க வைக்கும். இதுவும் ஒருவித வேதனைதான். தீராப்பசியாச்சே.

  எல்லாருக்கும் சாப்டா பசி அடங்கீரும். சாப்டாலும் பசிச்சிக்கிட்டேயிருந்தா?
  அந்தக் காயசண்டிகைதான் முதன்முதலா உண்டு அந்த நோயும் நீங்கப் பெற்றாள்.

 12. anonymous says:

  ஒன்னே ஒன்னு சொல்ல விட்டுப் போச்சு! – தீவதிலகை!

  என்ன அழகான பேரு-ல்ல?
  தீவுக்கே திலகம் = தீவதிலகை! (இந்தப் பாட்டிலே மணிமேகலையிடம் பேசுபவள்)

  இவளுக்கு இன்னிக்கும் காஞ்சிபுரத்தில் கோயில் இருக்கு! கச்சி வரதராசப் பெருமாள் கோயிலுக்கு அடுத்தாப்புல…பெளத்தக் கோயில்!
  அப்படியென்ன பெருமை இந்தத் தீவதிலகைக்கு?
  = பசி போக்கும் அமுதசுரபியை, மணிக்கு காட்டிக்குடுப்பதே திலகை தான்!
  ——

  மணிமேகலாத் தெய்வம், மணியைக் கொண்டு போய் தீவில் விட்டுருச்சே தவிர, தரும பீடிகையைக் காட்டி முற்பிறவி சேதியெல்லாம் தெரிஞ்சிச்சே தவிர….உலக நன்மைக்கு என்ன வழி-ன்னு, அப்பவும் மணிக்குத் தெரியல!

  மணிமேகலாத் தெய்வம், மணிக்கு மந்திர சக்தியெல்லாம் சொல்லிக் குடுக்குது! காற்றில் பறக்கும் மந்திரம், சாப்பிடாமலேயே பசி இல்லாம இருக்கும் மந்திரம் etc etc…
  ஆனா மணிக்கு அதுவா வேண்டும்? தான் சாப்பிடாம இருந்து என்ன பயன்? பல மக்கள் பசி இல்லாம இருப்பது எப்படி?

  இதைத் தான் ‘அன்புப் பசி’-ன்னு குறிப்பிட்டேன்!
  இது இருந்தாத் தானே, அடுத்தவன் வயிற்றுப் பசி புரியும்!
  “புரிதல்” இருந்தாத் தானே, துன்பத்தைப் போக்கும் மனசு வரும்! இல்லீன்னா வரவே வராது!

  பாருங்க! மணி-க்கு பசியில்லாம இருக்கும் மந்திரம் கிடைச்சிருச்சி!
  ஆனாலும் பசியோடயே, தீவையே சுத்திச் சுத்தி வரா!
  ஏன் – ஏதாச்சும் நோன்பா? வீம்பா?? பெருமைக்கு இருக்கிறாளா?

  அதான் பறக்கும் மந்திரம் வேற கிடைச்சிருச்சே! நேரா ஊருக்குப் போக வேண்டியது தானே! எதுக்குப் பசியோட சுத்திச் சுத்தி வரணும்?

  இல்லை! அவளுக்குத் தன் பசி முக்கியமில்லை! பல மக்கள் பசி இல்லாம இருப்பது எப்படி-ன்னு தெரியலையே! = அந்த ஆற்றாமை!
  வீம்பு அல்ல! ஆற்றாமையால் இருக்கும் பட்டினி!

  இந்த ஆற்றாமைக்கு, அன்புப் பசிக்குத் தான்…மணிமேகலை முன்னாடி வந்து நிக்குறா ஒரு தெய்வப் பொண்ணு = தீவதிலகை!

 13. anonymous says:

  தீவதிலகை தான், மணியைச் சரியாப் புரிஞ்சிக்கிட்டு, சொல்லிக் குடுக்குறா!
  இன்னிக்கி தான் கோமுகிப் பொய்கையில், அமுதசுரபி என்னும் அந்தப் பாத்திரம் தோன்றும்!
  அது உனக்குக் கிடைச்சா, உன் மனசுல நினைச்சிக்கிட்டு சுத்திச் சுத்தி வரீயே, அது நிறைவேறும்-ன்னு நல்ல வார்த்தை சொல்லித் தேற்றுகிறாள்! அன்புப் பசிக்கு உணவு = நல்ல வார்த்தை!

  ஆனா, அந்தப் பாத்திரம் வேற ஒருத்தரது! ஆபுத்திரன் என்னும் நல்லவன் (அ) திமிர் பிடிச்சவனுக்குச் சொந்தம்!:)
  ————–

  ஆபுத்திரன் கையில் தான் முதல்ல அமுதசுரபி இருந்துச்சி! அவனும் பல பேர் பசியைப் போக்கினான்!
  ஆனா அவன் விரும்பாவிட்டாலும், கூடவே புகழும் வருதே! அதனால் வேற ஒருத்தருக்குப் பொறாமையும் வருதே! இந்திரனுக்கு அப்படிப் பொறாமை வந்துருச்சி!

  நாட்டுல நல்லா மழை பொழிஞ்சி, விளைச்சலைக் கூட்டி, பசியே இல்லாமப் பண்னீட்டான்!
  இப்போ என்னடா பண்ணுவ ஆபுத்திரா? உன் அமுதசுரபிக்கு வேலை இல்ல! ha ha ha!

  தனக்குப் பெருமை-ன்னா ஆபுத்திரன் செஞ்சான்? நாட்டுல விளைச்சல் நல்லது தானே!
  இந்தப் பாத்திரத்தை இனி இங்க வச்சிக்கிட்டு என்னா பண்ணுறது? இல்லாதபட்டவங்க ஊருக்கு நாமே தேடிப் போவோம்! அங்கே போய் அறம் செய்வோம்-ன்னு கெளம்பிட்டான்!
  ————

  ஆனா காமம் புடிச்ச இந்திரன் குணம் தெரியாதா?
  வழியெல்லாம் மாயம் செய்யறது…கடேசீல ஆபுத்திரன் தனித்த தீவுல மாட்டிக்கிட்டான்! வெளியே மீளவும் வழி தெரியல! = அதான் மணிபல்லவத் தீவு!

  அங்கிட்டு ஆள் அரவமே இல்ல! ஆபுத்திரனுக்கு மனசே வெறுத்துப் போச்சி! ச்சே நாய்க்கு கெடைச்ச வைக்கோல் போர் போல ஆயிருச்சே!
  இவ்ளோ அருமையான பாத்திரம்! இது யாருக்கும் பயன்படாம, தனியாத் தன் கூட தீவில் மாட்டிக்கிச்சே-ன்னு கேவிக் கேவி அழுவறான்! = ஆற்றாமை!

  அவனுக்குப் பசிக்குது!
  அட, அதான் அமுதசுரபி பாத்திரம் இருக்கே! தின்ன வேண்டியது தானே!
  இல்ல! சாப்பிடல!
  ஊருக்கே சாப்பாடு போட்டவன், தனியாப் பட்டினியா இருக்கான்!
  ஏன்? = வீம்பா??
  இல்லை! ஆற்றாமை!

  ஆற்றாமையால் இருக்கும் பட்டினி!
  மாயத் தீவில் மீள வழியில்லை-ன்னு தெரிஞ்சதும், பாத்திரத்தைக் கோமுகிப் பொய்கையில் கைகூப்பிப் போட்டு விட்டு, பட்டினி இருந்தே செத்துப் போறான்!
  – இது வீம்பா?
  துவண்டவனிடத்தே சொல்லு முக்கியம்! அது வீம்புப் பசியல்ல! ஆற்றாமைப் பசி!
  ———

  இதைத் தான் தீவதிலகை மணி-க்கு காட்டிக் குடுக்குறா! அந்தக் குளத்தில் அன்னிக்கி ஆபுத்திரன் இட்ட பாத்திரம் தான் மணி கைக்கு வருகிறது!
  ஆபுத்திரன், அவன் நல்ல மனசுக்கு, நல்ல பிறவி கிடைச்சி, அரசனா ஆகி, மக்களுக்குத் தொண்டு செய்யுறான்!

  இப்படி, உலக உசுருக்கெல்லாம், பசிப்பிணி போக்கும் பாத்திரத்தை மீண்டும் காட்டிக் குடுத்த தேவதை = தீவதிலகை!
  அதான் காஞ்சியில் அவளுக்கு இன்னிக்கும் கோயில்! மணிமேகலையில் தீவதிலகை பேரே அழகு! கதாபாத்திரங்கள் இன்னும் அழகு!

 14. amas32 says:

  இந்த இணையத்தளத்துக்குத் தமிழ் அறிந்த அனைவரும் வந்து அனுபவிக்க வேண்டும் என்பது என் ஆவல்.
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s