வாழவைப்பவன்

மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்

வைதாரையும் ஆங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல்

கைதான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க

எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!

நூல்: கந்தர் அலங்காரம்

பாடியவர்: அருணகிரிநாதர்

உமாதேவி (பார்வதி) விரும்பியபடி இலஞ்சி என்கிற குளத்தில் தோன்றிய இலஞ்சியம் முருகன், வண்டுகள் மொய்க்கின்ற மலர்களைத் தலையில் சூடிய வள்ளியின் காதலன், மதம் பிடித்த யானையைப்போல் இருபது கைகளாலும் சண்டையிட்ட ராவணனின் பத்துத் தலைகளைக் கத்தரித்து எறிந்த ராமனின் (திருமாலின்) மருமகன்,

யாரேனும் அவனைத் திட்டினால்கூட, முருகன் கோபித்துக்கொள்ளமாட்டான், முத்தமிழ் பேசுகிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களையும் நன்றாக வாழவைப்பான்!

துக்கடா

 • இன்று தைப்பூசத் திருநாள். அதைக் கொண்டாடும்வகையில் இந்த முருகன் பாடல்!

216/365

This entry was posted in அருணகிரிநாதர், கந்தர் அலங்காரம், தமிழ், திருமால், பக்தி, பண்டிகை, முருகன், ராமன், விஷ்ணு. Bookmark the permalink.

14 Responses to வாழவைப்பவன்

 1. anonymous says:

  அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!

  * முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
  * அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
  * அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
  * அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
  * வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

  இப்படி…
  அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக; திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!

 2. anonymous says:

  முத்தமிழால் திட்டினாலும், அச்சோ தமிழ் பேசுகிறானே என்று, ஆங்கே அப்போதே வாழ வைப்பான்!
  தாழப் பேசியவனுக்கும் வாழப் பேசுபவன் என் முருகன்!

  யானை போல் மதம் கொண்ட, இருபது கை இராவணனை….பத்து தலையும் “கத்தரித்தான்”
  – பேப்பரைக் கத்தரித்தால் எப்படி களேபரம் ஆகாமல், மென்மையாக, அதே சமயம் சரக் சரக் என்று கத்தரித்து விடுமோ, அது போல் “கத்தரித்தானாம்”! – யார்?

  முருகன் அல்ல! மாலவன்! = ஏன்?

  வைதாரையும் வாழ வைப்பான் என்று இதற்கு முன்னடியில் சொல்லிவிட்டு, “அழித்தான்” என்றா சொல்வது? அதான் “கத்தரித்தான்” என்கிறார்!
  —–

  தையல்காரர் கத்தரிக்கும் போது பார்த்து இருக்கீங்களா? குறிப்பாக பிளவுஸ் பீஸ் என்னும் ரவிக்கை தைக்கும் போது…
  (இப்பல்லாம் தையல்காரர் என்ற ஒரு இனமே இல்லாதது போல் இருக்கு!
  சரணாலயத்தில், புலி என்னும் பாதுகாக்கப்பட்ட இனம் போல, தையல்காரரும் ஒரு பாதுகாக்கப்பட்ட இனம் ஆகிவிட்டனரோ என்னமோ)

  பிளவுஸ் பீஸ் என்னும் ரவிக்கை தைக்கும் போது…
  அய்யோ, காசு கொடுத்து வாங்குன துணியை இப்படிச் சரக் சரக்-ன்னு வெட்டுறாரே-ன்னு இருக்கும்!
  ஆனால் அப்பறம் தான் தெரியும் – கத்தரிப்பது துணியை அல்ல! உதிரிகளைத் தான் என்று!

  பயனற்ற உதிரிகளைக் கத்தரித்தால் தான், பயனுள்ள ஆடை வரும்!
  அது போல் “கத்தரித்த”வன்!
  அவன் ஆசை மருகன்=ஆசை முருகன்!

  * வைத சூரனை வாகனம் ஆக்கி, இன்று நம்மையும் தொழ வைக்கிறான்! = மயிலாய்!
  * வைத இராவணனை வாயிற் காப்போன் ஆக்கி, இன்று நம்மையும் தொழ வைக்கிறான் = ஜய-விஜயர்களாய்!

  இன்னும் ஒரு படி மேலே போய், இராவணனுக்குத் தன் சங்கு சக்கரங்களையும் கொடுத்து, கருவறை வாயிலில் தொழ வைக்கிறான்!
  தன் உயர்ந்த ஆயுதங்களை எதிரியிடம் குடுக்க மனம் வருமா?
  இராவணன் கையிலும் சங்கு சக்கரங்கள்!

 3. anonymous says:

  மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் = வண்டுகள் மொய்க்கும் மலர் வள்ளியை அவனும் மொய்ப்பான்!

  உமையாள் பயந்த இலஞ்சியமே! = உமையன்னை கொஞ்சிடும் குற்றால மலை இலஞ்சி முருகன்!
  இலஞ்சி என்னும் குளத்தில் உதித்த குகன்!
  இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சியில் அமர்ந்த பெருமாளே!

  இலஞ்சி முருகன் ஆலயம், குற்றாலத்துக்கு வெகு அருகில் உள்ளது! = இலஞ்சி குமாரர் கோயில்!
  பசுமையும் குளுமையும் மிக்கது!
  மொத்த ஆலயமும், வயல்கள் சூழ, “வயலூராகவே” விளங்குகிறது!
  உவேசா பதிப்பித்த இலஞ்சி முருகன் உலா என்றே உள்ளது!

  அருணகிரி, மொத்தம் நான்கோ-ஐந்தோ..(எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை) திருப்புகழ்களை இலஞ்சி முருகன் மீது பாடியுள்ளார்!
  இலங்கு தருதமிழ் விளங்க வருதிரு
  இலஞ்சி மேவிய பெருமாளே!

  கொந்தளம் ஓலை குலுங்கிட வாளி, சங்குடன் ஆழி கழன்றிட மேகம்,
  சங்கரி கொஞ்சிடும் முருகா-ன்னும் வேற ஒரு திருப்புகழ், இலஞ்சி மீது!

 4. anonymous says:

  முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான்!
  முருகனையே மடையா“-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைச் சங்கத் தமிழில் காணலாம்!

  தலைவி, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால், அவனையே எண்ணியெண்ணி அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!
  வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
  கடவுள் ஆயினும் ஆக
  மடவை மன்ற வாழிய முருகே!
  -ன்னு நற்றிணைப் பாட்டு!

  “காதலன் திடீரென்று என்னை ஒதுக்கும் போக்கில் துடிச்சிப் போய் நான் வாழுறேன்!
  இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா!
  உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தை?

  நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை!
  மடவை முருகா (மடப்பயலே முருகா)…நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!
  -ன்னு இவள்….முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி….
  இதை நினைக்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல், கண்ணில் தண்ணி தளும்பி நிக்கும்!

  திட்டிய இவளை, அவன் வாழ வைப்பானா?
  முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான்!! = என் மடவை முருகவா வாழி!!

 5. anonymous says:

  கந்தர் அலங்காரப் பொறுக்கு மணிகள்
  http://iniyathu.blogspot.com/search/label/கந்தரலங்காரம்

  • amas32 says:

   ஒரு நாள் போதுமா, உங்கள் சுட்டிகளை படிக்க ஒரு நாள் போதுமா? மிக்க நன்றி 🙂
   amas32

 6. amas32 says:

  பிருகு முனிவர் தன் நெஞ்சில் உதைத்தும் கோபப்படாமல், உம் கால் வலித்திருக்குமே என்று கவலைப்பட்ட திருமாலின் மருமகனான முருகன் மட்டும் லேசு பட்டவனா?
  நான் சிறு பெண்ணாக இருந்த பொது எங்கள் குடும்பத்தில் பல இன்னல்களை சந்தித்த வேளையில் நானும் முருகனிடம் என் கோபத்தைப் பல முறை காடியிருக்கிறேன். ஆனால் அவன் திரும்ப அன்பைத் தான் பொழிந்தான். நான் சந்தித்த இன்னல்களால் என் பக்தி தான் வலுப்பட்டது. அனைவரையும் வாழ வைக்கும் அன்புத் தெய்வம் முருகன். அதில் தமிழன் என்றால் கொஞ்சம் partiality அதிகம்.
  அன்னையிடம் வேலைப் பெற்ற இதைப்பூசத் திருநாளில் வெற்றிவேல் முருகனுக்கு ஆரோஹரா என்று கும்பிட்டு மகிழ்வோம்!
  amas32

 7. GiRa ஜிரா says:

  அடியவர் கூடும் தைப்பூசத் திருநாள். தமிழ்க்கடவுளின் திருநாள். எங்கள் ஊரிலிருந்து தூத்துக்குடி வழியாக ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் கால்நடைப் பயணமாகக் குழுவாகப் போவார்கள். அதில் கலந்து கொள்ள எனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை. முருகன் கூப்பிடும் போதுதானே நாமும் போக முடியும்.

  இதே போல பழநிக்கும் ஒரு கூட்டம் போகும். அடியவர்கள் இன்னும் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் போய்க்கொண்டுதான் இருப்பார்கள்.

  இந்தத் தைப்பூசத் திருநாளில் ஒரு அருமையான கந்தரலங்காரப் பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி பல.

  குழந்தைகளுக்கும் காதல் துணைவர்களுக்கும் அழுகு செய்த ரசித்தவர்களுக்கு நடுவில் கந்தக் கடவுளுக்கு அழகு செய்து ரசித்திருக்கிறார் அருணகிரி. அதுவும் சொல்லலங்காரம்.

  முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன் என்றால் என்ன? தமிழ் மொழியில் வைதால் மட்டுந்தான் வாழ வைப்பானா? வேற்று மொழிக்காரர்கள் வைதால் வீழ வைப்பானோ?

  இல்லை. அப்படியில்லை.

  ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் யாருக்குச் சொந்தம் என்ற உண்மைதான் அது.

  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. உண்மைதான். ஆனால் உரிமை?

  ஆண்டவன் அனைவருக்கும் பொது. அவனைப் பாராட்டுகின்றவர் பாராட்டாதவர் என்று பிரித்துப் பார்க்க முடியாத பொதுமை.

  ஆண்டாண்டு காலம் புகழ்கின்றவர்கள் கூட சில நேரங்களில் இறைவனைத் திட்டி விடுகின்றார்களே. அது தவறா?

  இல்லாத இறைவனை நம்புவதால் குற்றங்கள் கூடுகின்றது என்று இறைவனைத் திட்டுகின்றார்களே. அது தவறா?

  இல்லை. வானம் எப்படி அனைவருக்கும் பொதுவோ அப்படித்தான் இறைவனும் அனைவருக்கும் பொது.

  அதைப் புரிந்து கொள்ளாமல் நம்புகிறவன் மட்டும் திட்டலாம். நம்பாதவன் திட்டக்கூடாது என்றெல்லாம் சொல்வது முறையன்று.

  அதைச் சொல்ல நாம் யார்? ஆகையால் ஆண்டவனை என்னவும் சொல்லவும் அனைவருக்கும் உரிமையுண்டு. திட்டினார்கள் என்று பாகுபாடு ஆண்டவன் பார்ப்பதில்லை.

  அதுதான் வைதாரையும் வாழவைக்கும் முருகன்.

  திட்டினால் அவனுக்குக் கோவம் வரும் என்பதே குழந்தைத்தனமான கருத்து.
  போர்க்களத்திலே கடுகடுவென நிற்கும் சூரன் பார்த்தது என்ன? முழுமதியன்ன ஆறு முகங்கள். முன்னான்காகும் விழிகளின் அருள்.

  அப்படியிருக்க நம் மேல் ஆண்டவன் ஆத்திரப்படுவானா?

  இப்படிப்பட்ட முருகனை நாம் வணங்கி வாழ்த்துவோம்.

  இந்த நன்னாளில் திரு.கே.ஆர்.எஸ் அவர்களும் 365பாவிற்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரை முழுமனதோடு வரவேற்கிறேன்.

  முருகனருள் முன்னிற்கும்.

 8. Samudra says:

  அருமை..தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்

  முயற்சி செய்த ஒரு பாடல்..:-

  பால்வாங்கும் மென்முலையாள் பார்வதியாள் கருவதிலே
  சூல்வாங்கி நில்லாமல் சிவன் விழியின் சினப்பொறியைக்
  கால்வாங்கிச் சென்றிடவும் குமரனாய்த் தோன்றியன்னை
  வேல்வாங்கி நின்றான் வேலனை யாம் வாழ்த்துதுமே !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s