விடுக(வி)தை

பத்துக் கால், மூன்று தலை, பார்க்கும் கண் ஆறு, முகம்

இத்தரையில் ஆறு, வாய் ஈரிரண்டாம், இத்தனையும்

ஓரிடத்தில் கண்டேன்; உகந்தேன்; களி கூர்ந்தேன்;

பாரிடத்தில் கண்டே பகர்

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: சுந்தர கவிராயர்

நான் ஒரு விநோதமான மிருகத்தைக் கண்டேன். அந்த மிருகத்துக்கு:

 • பத்துக் கால்கள்
 • மூன்று தலைகள்
 • ஆறு கண்கள்
 • ஆறு முகங்கள்
 • நான்கு வாய்கள்

புதுமையான அந்த மிருகத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

அது என்ன மிருகமாக இருக்கும்? சொல்லுங்கள் பார்க்கலாம்!

விடை:

இரட்டைக் காளைகளைப் பூட்டி ஏர் ஓட்டும் மனிதன்!

 • இரண்டு காளைகளுக்கு 4 + 4 = 8 கால்கள், மனிதனுக்கு 2 கால்கள், ஆக மொத்தம் 10 கால்கள்
 • மூன்று தலைகள் (3*1)
 • ஆறு கண்கள் (3*2)
 • காளைகளின் முகங்கள் 2 + மனிதனின் முகம் 1 + கலப்பையில் உள்ள கொழுமுகங்கள் 3 = ஆறு முகங்கள்
 • காளைகளின் வாய்கள் 2 + மனிதனின் வாய் 1 + கலப்பையின் வாய் (நுனி) 1 = நான்கு வாய்கள்

துக்கடா

215/365

Advertisements
This entry was posted in தனிப்பாடல், வார்த்தை விளையாட்டு, வெண்பா. Bookmark the permalink.

6 Responses to விடுக(வி)தை

 1. amas32 says:

  இரட்டைக் காளைகளைப் பூட்டி ஏர் ஓட்டும் மனிதன் தான் அந்த வினோத மிருகமா? அது தான் கொஞ்சம் தவறாக வழிநடத்தும் சொற்றொடராக இருக்கு. ஆனால் விடுகதை என்றாலே அப்படிப் பட்ட வார்த்தை விளையாட்டு இருக்கத் தானேச் செய்யும் 🙂
  மாத்தாடு மாத்தாடு மல்லிகேயில் வருகிற மாதிரி விடுகதை பாடல்! தனித்துவமான பாடல்!
  நிச்சயமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம் 🙂
  amas32

 2. GiRa ஜிரா says:

  விடுகதை யாருக்குத்தான் பிடிக்காது. சின்ன வயசுல இருந்தே விறுவிறுப்பா கண்டுபிடிக்க முயற்சி செஞ்சிருப்போம்.

  ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அன்னாந்து பார்த்தால் ஆயிரம் முட்டை

  தென்னை மரத்துக்கு இவ்வளவு அழகான விடுகதை.

  தாளுண்ட நீரைத் தலையால் தான் தருதலால்-னு பிற்கால ஔவையார் சொன்னதும் விடுகதைக்குள் அடங்கும்.

  காளமேகத்தின் சிலேடைப் பாடல்களும் ஒருவிதத்தில் விடுகதைகள்தான். இரண்டு பூட்டு உள்ள விடுகதைகள். விடையைக் கடைசி வரியில் சொல்லி விடுவார்.

  ஆடிக் குடத்தடையும்

  ஆடும்போதே இறையும்

  மூடித் திறக்கின் முகங்காட்டும்

  ஓடி மண்டை பற்றிப் பரபரெனும்

  பாரில் பிண்ணாக்கும் உண்டாம்

  இப்படி விடுகதையைச் சொல்லீட்டு, உற்றிடும் பாம்பு எள்ளளவே ஓதுன்னு விடையையும் சொல்லீருவாரு.

  ஆட்டுனப்புறம் எண்ணெய் குடத்துக்குப் போகும். ஆடிய பிறகு பாம்பு கூடைக்குப் போகும்.

  எள்ளப் போட்டு ஆட்டுறப்போ சத்தம் வரும். பாம்பும் ஆடுறப்போ இறைச்சல் உண்டாக்கும்.

  எண்ணெய்ப் பானையின் மூடி தொறந்தா எண்ணெய்யில் முகம் தெரியும். பாம்பிருக்கும் கூடையின் மூடியைத் தொறந்தா பாம்பு படக்குன்னு முகத்தைக் காட்டும்.

  தலையில எண்ணெய் தேச்சா, நல்ல பரபரன்னு இருக்கும். பாம்பு கடிச்சா நஞ்சு தலைக்கேறி பரபரன்னு மயக்கும்.

  ஆட்டுனா பிண்ணாக்கு உண்டு. பாம்புக்கும் பிளவு பட்ட நாக்கு (பிண்ணாக்கு – பிண்ணமான நாக்கு) உண்டு.

  இப்படியாக எழுதுறது சிலேடைக்குள்ள போனாலும் எதைச் சொல்ல வர்ரார்னு ஒரு விடுகதை இருக்கத்தான செய்யுது.

  விடுகதையில பெரும்பாலும் நாம அன்னாடம் பாக்குற பழகுற பொருள்கள்தான் விடுபொருளா இருக்கும்.

  அச்சமில்லை அச்சமில்லை படத்துல கூட வைரமுத்து விடுகதைகளைப் போட்டு பாட்டெழுதியிருப்பாரு.

  வானத்திலே ஒரு கல்

  வெத்தலையிலே ஒரு கல்

  கூட்டத்திலே ஒரு கல்னு அந்தப் பாட்டு போகும். இதெல்லாம் ஊர்ப் பக்கத்து விடுகதைகள். அதைப் பாட்டில் சரியாப் பயன்படுத்தியிருக்காரு.

  என்னது விடை தெரியனுமா?

  வானத்திலே ஒரு கல் – கருக்கல்

  வெத்தலையிலே ஒரு கல் – அழுகல்

  கூட்டத்திலே ஒரு கல் – நெருக்கல்.

  இந்த மாதிரி விடுகதைகளில் சைவ அசைவ வகைகளும் உண்டு. ஊர்ப்பாட்டன்களிடம் அசைவ விடுகதை தெரிந்து கொள்வதற்காக அலைந்த இளந்தாரிகளும் உண்டு. இதுல ஒன்னு ரெண்டு எனக்கும் தெரியும். இருந்தாலும் இருக்குறதுலயே சைவமா ஒன்னு சொல்றேன். பிடிக்காதவங்க கோச்சுக்காதீங்க. இதுக்கு மேல படிக்காதீங்க. 🙂

  கலப்பை சீர் செஞ்சு

  நிலத்தில் உழுதவனோ

  அள்ளித் தெளிச்சான் ஆயிரம் விதை

  ஆண்டு போய் மொளச்சதென்னவோ ஒரு கீரை

  இதுக்குப் பொருள் நான் விளக்க வேண்டியதில்லைன்னு நெனைக்கிறேன்.

  இப்படி கேக்குறவங்களுக்கும் சொல்றவங்களுக்கும் கற்பனை வளத்தைத் தூண்டும் விடுகதைகள் ஒரு முழுமையான நூலாக உருவாகாமை வியப்புதான்! இழப்புதான்!

 3. Samudra says:

  பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே என்று
  ஒரு பாட்டு வருமே, அதை இதுவரை எழுதவில்லை என்றால்
  எழுதுங்கள்.

 4. GiRa ஜிரா says:

  காலையிலேயே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். மறந்து விட்டேன்.

  ஒரு குட்டி விடுகதை. 🙂

  கொழுமுகத்துக் குழந்தை யார்?

  யாரும் இன்று சொல்லவில்லை என்றால் நாளை சொல்கிறேன். ஆனாலும் நீங்கள் எல்லாரும் இந்தக் கேள்விக்கு விடையைச் சொல்லி விடுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. 🙂

  • GiRa ஜிரா says:

   கொழு முகத்துக் குழந்தை யார் என்ற கேள்விக்கு விடையை யாரும் சொல்லாததால் நானே கூறி விடுகிறேன்.

   சீதைதான் அந்தக் கொழு முகத்துக் குழந்தை. சனகன் ஏர் பூட்டி உழும் பொழுது அந்தக் கொழுமுகம் இடித்து வெளிவந்த பெட்டிக்குள் இருந்த குழந்தை அல்லவா. ஆகையால் சீதையைக் கொழு முகத்துக் குழந்தை என்று சொல்வது உண்டு.

   இப்போதெல்லாம் கொழுகொழு முகத்துக் குழந்தைகள்தானே நிறைய 🙂

 5. GiRa ஜிரா says:

  சுந்தர கவிராயர் என்றதும் கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று தேடினேன். எத்தனை பெயர்கள் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள் 🙂

  கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் ஜேபி அவர்களின் சுட்டி ஒன்று கிடைத்தது. அதில் சுந்தர கவிராயரின் இன்னொரு பாடல் உள்ளது. அதுவும் விடுகதை போலத்தான் உள்ளது. கவிராயர் தமிழ் விளையாட்டுப் பிள்ளையாக இருந்திருப்பார் போல.

  அந்தப் பாடலை நீங்களும் இங்கு ரசிக்கலாம்.
  http://www.visvacomplex.com/Maramadhu_MaraththilERi___.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s