ஞானத் தளர் நடை

உடையவர்கள் ஏவர் எவர்கள் என நாடி,

….உளம் மகிழ ஆசு கவி பாடி,

’உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது’

….என உரமும் ஆன மொழி பேசி

நடை பழகி மீள வறியவர்கள் நாளை

….நடவும் என வாடி முகம் வேறாய்

நலியும் முனமே உன் அருண ஒளி வீசு

….நளின இரு பாதம் அருள்வாயே!

விடை கொளுவு பாகர், விமலர், திரிசூலர்

….விகிர்தர், பரயோகர், நிலவோடே

விளவு, சிறுபூளை, நகுதலையொடு ஆறு

….விட அரவு சூடும் அதி பாரச்

சடை இறைவர் காண, உமை மகிழ ஞானத்

….தளர் நடை இடாமுன் வருவோனே

தவ மலரு நீல மலர் சுனை அநாதி

….தணிமலை உலாவு பெருமாளே!

நூல்: திருப்புகழ் (#245)

பாடியவர்: அருணகிரிநாதர்

காளை மாட்டை வாகனமாகக் கொண்டவர், தூய்மையானவர், திரிசூலத்தை ஏந்தியவர், உயர்ந்தவர், மேலான யோக நெறியைக் கொண்டவர் சிவபெருமான்.

அந்தச் சிவபெருமான் பிறைச் சந்திரன், வில்வ இலை, சிறிய பூளைப்பூ, சிரிக்கின்ற பற்களைக் கொண்ட ஓடு, கங்கை ஆறு, விஷப் பாம்பு ஆகியவற்றை அணிந்திருக்கிறார், மிகவும் எடை அதிகமான ஜடாமுடியைத் தரித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட சிவபெருமானும், உமாதேவியும் பார்த்து மகிழும்படி ஞானத் தளர்நடை போட்டு அவர்கள் முன்னே நடந்து வருகின்றவனே, முருகா!

நீல மலர்கள் நிறைந்து வளர்கின்ற நீர்ச் சுனைகளைக் கொண்ட பழமையான திருத்தணி மலைமீது உலாவுகின்ற பெருமாளே, உன்னிடம் ஒரு கோரிக்கை.

சில புலவர்கள், இந்த உலகத்தில் செல்வம் நிறைந்தவர்கள் யார் யார் என்று தேடி அலைகிறார்கள், அவர்களிடம் தஞ்சம் அடைந்து, அவர்கள் மனம் மகிழும்படி கவிதைகள் பாடுகிறார்கள், ‘உன் புகழ் மேரு மலை அளவுக்கு உயர்ந்தது’ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

இப்படித் தினமும் அவர்களுடைய மாளிகைக்கு நடையாக நடந்தும் என்ன பலன்? இந்தப் புலவர்களுடைய வறுமை நீங்கவில்லை. அந்தப் பணக்காரர்களை இவர்கள் எத்தனைதான் புகழ்ந்தாலும் ‘நாளைக்கு வா, பார்க்கலாம்’ என்றுதான் பதில் கிடைக்கிறது. இவர்களும் மனம் வாடி, முகம் மாறி வெறும் கையோடே திரும்பி வருகிறார்கள்.

அதுபோன்ற நிலைக்கு என்னை ஆளாக்கிவிடாதே முருகா, உன்னுடைய சிவந்த, ஒளி வீசுகின்ற, தாமரை போன்ற இரண்டு பாதங்களை இப்போதே எனக்குத் தந்து அருள் செய்!

துக்கடா

 • இந்தப் பாடலில் பல அழகான காட்சிகள், அவற்றில் முக்கியமானது, சிவனும் பார்வதியும் தங்கள் மகன் (முருகன்) நடக்கும் அழகைப் பார்த்து மகிழ்வது. அதுவும் சாதாரண நடை இல்லையாம், தத்தித் தத்தி நடக்கின்ற தளர் நடையாம், அதிலும் விசேஷமாக ‘ஞானத் தளர் நடை’யாம்!
 • அடுத்து, புரவலர்களை நாடிச் செல்லும் புலவர்களின் பரிதாப நிலைமையை அழகாகக் காட்சிப்படுத்துகிறார் அருணகிரிநாதர். ‘இந்தப் பயலுவளுக்கு எத்தனை ஐஸ் வெச்சாலும் மசியமாட்டேங்கறானுங்களே, முருகா, இவனுங்களைப் பாட எனக்கு விருப்பம் இல்லை, பாடினாலும் பிரயோஜனம் இல்லை, உன்னைமட்டும் பாடறேன், நாளைக்கு வான்னு திருப்பி அனுப்பிடாம இப்பவே உன் பாதத்தைக் கொடுத்துடு, அங்கேயே விழுந்து கிடக்கிறேன்!’

213/365

Advertisements
This entry was posted in அருணகிரிநாதர், சிவன், திருப்புகழ், பக்தி, முருகன். Bookmark the permalink.

9 Responses to ஞானத் தளர் நடை

 1. GiRa ஜிரா says:

  திருப்புகழ்.

  உலகத்தில் ஒவ்வொருவரும் பலவிதமான புகழ்களைப் பெற விரும்புகிறோம். ஆனால் திருப்புகழைப் பெற எத்தனை பேர் விரும்புகிறோம்?

  திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்
  எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
  – இது கவியரசர் கண்ணதாசன் வாக்கு.

  அருணகிரியே திருப்புகழில் இப்படிச் சொல்கிறார்.
  பூர்வ உத்தர தட்சிண பச்சிம திக்குள பக்தர்கள் அற்புதம் என ஓதும்
  சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழைச் சிறிது அடியேனுஞ் செப்பென

  பூர்வ உத்தர தட்சிண பச்சிம திக்குஅ பக்தர்கள் – நான்கு திசைகளிலும் உள்ள பக்தர்கள் (பூர்வா-கிழக்கு, உத்தரம்-வடக்கு, தட்சிணம்-தெற்கு, பச்சிம்-மேற்கு)

  அற்புதம் என ஓதும் – இதுக்கு விளக்கம் தேவையில்லை 🙂

  சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழை – அழகுடைய கவித்துவச் சந்தங்கள் நிரம்பிய திருப்புகழை

  சிறுது அடியேனுஞ் செப்பென – கொஞ்சமேனும் அடியேன் செப்பிடல் வேண்டும். அருணகிரியே தன்னை அடியேன் என்று சொல்லியிருக்கிறார் என்றால் நாமெல்லாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

  இப்படிப் பட்ட திருப்புகழை நாமும் படித்துப் பயன் பெற வேண்டும்.

  அந்தத் திருப்புகழில் ஒரு புகழை இன்று கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

 2. anonymous says:

  //இப்பவே உன் பாதத்தைக் கொடுத்துடு, அங்கேயே விழுந்து கிடக்கிறேன்!//

  முருகவா…..

 3. anonymous says:

  தணிகைமலைப் பாட்டாத் தேடிப் பிடிச்சி போட்டு இருக்கீக! மிக்க நன்றி!
  உண்மையில், இது வேற “தணியட்டும்”!
  வள்ளியை முருகன் மணந்த மலை=தணிகை மலை! அந்த…இச்சைத் “தணிகை”!

  தண்ணி குடிச்சாத் தாகம் ’தணியும்’!
  தணி-ந்தது-ன்னா = தண் = குளிர்ந்தது!
  இச்சை தணிந்த (குளிர்ந்த) இடம் = தணிகை!

  அவள் இச்சை = அவனே என்னும் இச்சை = அது முருக இச்சை! அது தணியுமோ?
  தண்ணி குடிச்சாத் தாகம் ’தணியும்’!
  ஆனா மறுபடி தாகமே எடுக்காதா என்ன?

  தாகம்-தணிகை என்பது தொடர் சுழற்சி!
  அதே போல் அவளுக்கு, முருக தாகம்-முருக தணிகை! என்றென்றும் அவனே! இச்சைத் தணிகை = திருத் தணிகை!
  ——

  பூளை படம் = http://goo.gl/fSQzv
  தனியாக் கெடைக்கல! ஆனா இதுல, பொடியா இருக்குற வெள்ளைப்பூ தான் பூளை!
  வேப்ப இலை, பூளை, ஆவாரம்பூ (மஞ்சள்) = மூனும் ஒன்னாக் கட்டி, பொங்கல்-க்கு வீடு/தொழுவத்துல கட்டுவாங்க ஊர்ல!
  ——

  விளவு=வில்வம்
  சிறுபூளை=பூளைப்பூ
  நகு தலையொடு = சிரிக்கும் தலை அதாச்சும் மண்டையோடு…
  எலும்புக்கூடு மண்டையோடு வாய் பொளந்து சிரிக்குது-ல்ல? அதான் நகு+தலை
  ஆறு = கங்கை
  விட அரவு = தட்சகன் எனும் பாம்பு
  தவ மலரு நீல மலர் = சால, உறு, தவ, நனி, கூர், கழி….அந்த பொருளில் தவ = மிகுதி! நிறைய நீலக் குவளை மலர்கள்!

 4. anonymous says:

  ஞானத் தளர் நடை
  = இது ஞானத்தோடு கூடிய தளர் நடையா?
  = இல்ல ஞானம் தளர்ந்து போகும் நடையா?:)

  ஞானம் நிறைய இருந்தா, கம்பீரமாத் தானே நடப்பாங்க? தளர்ந்து போய் நடக்க மாட்டாங்களே? ஞானத் தளர் நடை-ன்னா என்ன?

  முருகன் ஞானமே உருவானவன் = ஞான’ஸ்’கந்தன் = அப்பனுக்கே அறிவுறுத்திய சுப்பன்!
  அப்படியான ஒருத்தன், எதுக்கு ஞானம் தளர நடக்கணும்?

  தளர = சற்றே குறைய! = தளர்த்துதல்!
  (விதிகளைத் தளர்த்து-ன்னு சொல்றோம்-ல்ல? அந்தத் தளர்த்து! விதி இருக்கும், ஆனா தளர்த்தப்படும்)

  தணிகை மலை = வள்ளியை மணம் புரிந்த மலை, ஆதலாலே…
  மணத்துக்கு அடுத்து வரும் இன்பம் = இச்சை = இச்சா சக்தி (வள்ளி)
  அதனால் ஞான சக்தியைச் சற்றே தளர்த்தி, இச்சா சக்தியோடு நடக்கிறான்! = அதான் ஞானம் ’தளர்’ நடை!

  ஒரு மாப்பிள்ளை ஞான நடை நடந்தா நல்லாவா இருக்கும்?:)
  ஒய்யார நடை, மாப்பிள்ளை நடை = ஞானம் தளர்ந்த நடை!
  அதைப் பெற்றோரும் காண, அதனால் இன்னும் வெட்கம் ஏற்பட்டு….ஒரு டைப்பா உலாத்துறான் என் மாப்பிள்ளை முருகன் = தணி மலை “உலாவும்” பெருமாளே!

 5. anonymous says:

  இந்தத் தனிமையான நேரத்தில்…ஒருவரை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்…
  திருத்தணி என்பதால்…

  திருத்தணிக் கோபுரத்தைப் பாத்துக்கிட்டே உயிர் விட்டவரு,
  அவர் சமாதி இன்னிக்கும் திருத்தணிக் கோபுரத்தைப் பாத்துக்கிட்டே தான் இருக்கு!
  = VT சுப்பிரமணிய பிள்ளை

  இன்னிக்கி பல பேருக்கு இவரு யாரு-ன்னே தெரியாது!
  உ.வே.சா தான் பலருக்கும் தெரியும்!
  ஆனா, திருப்புகழ்-ன்னு ஒன்னு, ஒரு வலைப்பூவில் போட முடியுது-ன்னா, அதுக்குக் காரணம் இவரே! = VTS!

  பல இடங்களில் அலைஞ்சி திரிஞ்சி, பல பேரைக் கெஞ்சி, இருந்த சொச்சம் காசு குடுத்து, வீட்டு வாசல்களில் அவமானம்…விரட்டப்பட்டு….
  ஓலைச் சுவடியாத் திரட்டி = திருப்புகழ்!

  மொத்தம் 16000 திருப்புகழ்-ன்னு சொல்லுவாங்க!
  இன்னிக்கி இருப்பது = 1311 திருப்புகழ்!

  அறுபடை வீடு, பஞ்ச பூதத் தலங்கள், தொண்டை நாட்டுப் பதிகள், சோழ நாட்டுப் பதிகள்…ன்னு வரீசையா தொகுத்தும் வச்சாரு
  சுவடி எடுத்தது மட்டுமில்ல! சொந்தக் காசு போட்டுப் பதிப்பிச்சாரு! சாதாரண கோர்ட்டு குமாஸ்தா…
  உ.வே.சா காலத்துக்கும் சற்று முன்னாடியே இதெல்லாம்….இத்தனை பாடு எடுத்த ஒருத்தரு…VTS…

  இவரை யாருக்கும் தெரியலீன்னாலும்….அந்தத் திருத்தணி கோபுரத்துக்கு இவர் பாடு என்ன-ன்னு தெரியும்!
  அருணகிரியை நினைக்கும் போதெல்லாம் VTSஐயும் நினைப்போம்! – முகம் தெரியாத தனிமையில் வந்த யோசனை!

 6. anonymous says:

  //நலியும் முனமே உன் அருண ஒளி வீசு
  ….நளின இரு பாதம் அருள்வாயே!//

  அருண ஒளி = சூரியன் உதிப்பதற்கு முன்னரே வரும் செவ்வொளி! aurora (dawn light)

  மன்னர்களிடம் வீடேறிப் போய்ப் பாடின பிறகு தான்…ஏதோ ஒன்னு கிடைக்கும்…அன்னிக்கே கிடைக்குமா-ன்னும் தெரியாது!
  பரிசு கிடைக்காமல், வீடேறிப் போய், பழியும் அசிங்கமும் கூடக் கிடைக்கலாம்! துவண்டு ஒடிந்து மடிந்து போக வேண்டியது தான்!

  ஆனா முருகனிடம் போய் நிக்கணும்-ன்னு இல்ல! அதுக்கும் முன்னரே அவன் அருள் வந்துரும்…
  சூரியன் உதிக்கும் முன்னரே, அருண ஒளி வருவது போல்…
  நாம் எழுந்து சூரியனை வணங்கும் முன்னரே, அருண ஒளி தானே வருவது போல்…தானே வந்துருவான்!

  தானே புரிஞ்சிக்குவான்..
  வந்துருவான்….

 7. amas32 says:

  குழந்தை சாப்பிட வர மாட்டேன் என்று அடம் பிடித்தால், தாயார் அவனுக்குப் பிடித்ததை மணக்க மணக்க சமையல் அறையில் செய்ய ஆரம்பிப்பாள். அந்த மணத்தை நுகர்ந்து கொண்டே பிள்ளை அம்மாவை தேடி சாப்பிட வந்து விடும். திரு சொக்கனே நன்றி, அருணகிரிநாதரின் அழகிய பாடலை தேர்ந்தெடுத்து முருகனின் குழந்தையை, தோழனை, bossஐ திரும்ப உங்கள் வலை தளத்திற்கு வரவழைத்தமைக்கு 🙂

  எப்பொழுதுமே எனக்குக் கலைஞர்கர்களை பற்றிய ஒரு வருத்தம் உண்டு. அவர்கள் செல்வந்தரை அண்டி வாழ வேண்டிய சூழ்நிலை எக்காலத்திலும் இருந்திருக்கிறது. அந்தக் கருத்து அருணகிரியாரின் இந்தப் பாடலிலும் வெளிவருகிறது.

  சிவபெருமானின் தோற்றத்தை அற்புதமாக விவரிக்கிறார் அருணாகிரிநாதர். பெற்றோரின் மகிழ்ச்சியும் வெளிப்படுகிறது. அதோடு அவர் முருகனிடம் நயந்து வைக்கும் கோரிக்கையும் அருமை.

  முருகனின் அழகிய தளிர் பாதங்களை அன்புடன் வணங்குகின்றேன். அவன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். திருப்புகழை தந்த அருனகிரிநாதரையும் தொழுது வணங்குகிறேன்.
  amas32

 8. PVR says:

  திக்கி அன்பாய் பாடினாலும்
  திருப்தி கொள்வான் தோழி – தோழி
  கந்தன் என்னும் பெயரினிடம் காதல்
  கொண்டேன் தோழி

  தமிழ் இலக்கணம் தெரியாமலும், செய்யுள்களைப் பிரித்துப் படிக்கத் தெரியாமலும் நான் தயங்கும் போதெல்லாம், மேற்கண்ட வரிகள்தான் என் நினைவுக்கு வரும். ‘ஞானத் தளர் நடை’ படித்து, மனதால் குடித்து, அதனால் மயங்கித் தளரும்போதே, Anonymous எழுதிய அஞ்சும், முருகனைக் கொஞ்சியும், TRS மீது ஒரு பொறாமை ஏற்படுத்தும் விதத்தில் உணர்வுகளைத் தட்டி எழுப்பியும்… மிக்க நன்றி.

 9. PVR says:

  According to me 213/365 is the Masterpiece. In every aspect, including the responses.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s