இனிது இனிது

அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை

தேன் மயங்கு பாலினும் இனிய, அவர் நாட்டு

உவலை கூவல் கீழ

மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே!

நூல்: ஐங்குறுநூறு (#203)

பாடியவர்: கபிலர்

சூழல்: குறிஞ்சித் திணை, (செவிலித்) தாயின் காதில் விழும்படி காதலி தன் தோழியிடம் பேசுகிறாள்

தோழி,

நம் அன்னை வாழ்க!

என் காதலன், அவனுடைய நாட்டில் நன்றாக மழை பெய்கிறது, அங்குள்ள குழிகளில் நீர் தேங்குகிறது, காய்ந்த சருகுகள் அந்தத் தண்ணீரின்மீது விழுந்து கிடக்கின்றன, மான்கள் அந்தச் சருகுகளை ஒதுக்கிவிட்டுக் கலங்கிய தண்ணீரைக் குடிக்கின்றன.

அழுக்கான அந்தத் தண்ணீர், நம் தோட்டத்தில் சேகரித்த தேனைக் கலந்து குடிக்கும் பாலைவிட இனிமையானது!

துக்கடா

 • சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு, ‘அன்னை வாழ்க’ என்றும் ஒரு கொக்கியைப் போட்டுவைக்கிறாள் காதலி, புத்திசாலிதான் 😉
 • இந்தப் பாடலை நினைவுபடுத்தும் வரிகள் நம் சினிமாப் பாடல்களிலும் உண்டு, சட்டென்று நினைவுக்கு வருபவை : 1. பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய், நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய் 2. தேவதை குளித்த துளிகளை அள்ளி, தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் 3. உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக் கூடத் திருநீறுபோல் இட்டுக்கொள்கிறேன் (முதல் இரண்டும் வைரமுத்து, மூன்றாவது வாலி)

212 / 365

Advertisements
This entry was posted in அகம், ஐங்குறுநூறு, கபிலர், காதல், குறிஞ்சி, சினிமா, தோழி. Bookmark the permalink.

7 Responses to இனிது இனிது

 1. ஆனந்தன் says:

  “எட்டியெடு ஏழு பைசா;
  நான் தொட்டுத் தந்தா எட்டுப் பைசா!”
  – இந்தப் பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்! (இதை பற்றி எழுதச் சொன்னால் ஒரு பக்கம் எழுதி விடலாம், ஆனால், ஐங்குறுநூறைப் பற்றி எதுவும் தெரியவில்லையே! ‘கண்ணபிரான்’ காணாமற் போய்விட்டார்; அதற்கு முந்திய அவதாரமான ‘ராகவன்’ தான் காப்பாற்ற வேண்டும்!

  • amas32 says:

   Anandhan, எலந்தப் பழம் பாடல் ரொம்ப நாள் கழித்து ஞாபகப் படுத்தியிருக்கீங்க 🙂 எஸ், மிஸ்ஸிங் KRS!
   amas32

  • GiRa ஜிரா says:

   இசுயிசுன்னு இசுக்குது 🙂 மறக்கக் கூடிய பாட்டா அது? இந்தப் பாட்டை ஏன் எழுதுனோம்னு கவியரசர் கண்ணதாசனே வருத்தப்பட்டாராம். 🙂

   ஐங்குறுநூறும் சங்க நூல்தான். எட்டுத்தொகைல ஒரு தொகை.

   குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைன்னு ஒவ்வொரு திணைக்கும் நூறு பாட்டு. எல்லாமே சின்னச் சின்னப் பாடல்கள். அதுவுமில்லாம பத்துப் பத்துப் பாட்டா தொகுத்திருக்காங்க. இந்தப் பாட்டு இருக்கும் பத்துல எல்லப் பாட்டுமே ”அன்னாய் வாழி வேண்டு அன்னை”ன்னுதான் தொடங்குது.

   அஞ்சு புலவர்கள்தான் எழுதியிருக்காங்க. ஆளுக்கொரு தினை.
   ஓரம்போகியார் – மருதம்
   அம்மூவனார் – நெய்தல்
   கபிலர் – குறிஞ்சி
   ஒதலாந்தையார் – பாலை
   பேயனார் – முல்லை

   இதுல சிலபல பாட்டுகள் கெடைக்கலை.

 2. amas32 says:

  என்ன மாதிரி காதல்! தோட்டத்தில் திரட்டிய தேனை அவர்கள் வீட்டுப் பாலில் கலந்து குடிப்பதை விட காதலன் நாட்டில் குட்டையில் தேங்கிய மழை நீரை சுவையானது என்று குறிப்பிடுகிறாள் காதலி! காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள், சுவையும் தெரியாது போலிருக்கு 🙂
  சொக்கன் அவர்களே, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று திரைப்படப் பாடல்களும் மிகவும் பிரபலமானவை. Sometimes exaggeration says it all so well 🙂
  amas32

 3. GiRa ஜிரா says:

  ஆண்களுக்குப் பொதுவா க.மு க.பி தான். கல்யாணத்துக்கு முன். கல்யாணத்துக்குப் பின். பெண்களுக்கு ரெண்டுக்கும் நடுவில் க.கா உண்டு. கல்யாண காலம். அது என்னன்னா கல்யாணம் ஆகும் நாளிலிருந்து சில மாதங்கள்.

  அது ஏன்னா.. புகுந்த வீட்டுல பலது புதுசா இருக்கும். பொறந்த வீட்டுல பால் குக்கர்ல காய்ச்சியிருப்பாங்க. புகுந்த வீட்டுல பாத்திரத்துல காய்ச்சுற பழக்கமா இருக்கலாம். பொறந்த வீட்டுல கடலெண்ணெய் பழக்கமே இருந்திருக்காது. இங்க வந்தா எதைப் பொரிச்சாலும் கடலெண்ணய்யா இருக்கும்.

  இப்பிடி நெறைய புதுப்புது அனுபவங்கள் இருக்கும். அதே பொண்ணு அம்மா வீட்டுக்கு தீபாவளிக்கோ பொங்கலுக்கோ வந்திருக்கா.

  வந்து பொதுவாப் பேசுறது… அங்க அப்படிம்மா.. அவரு அப்படிம்மா.. அத்தை அப்படிம்மா.. பெண்கள் திருநீறு பூசீட்டுத்தான் குங்குமம் பூசனும்னு புதுப்பழக்கம் அத்தை சொல்லிக் கொடுத்தாங்க. நம்ம வீட்டு டீவிய மாத்தனும். அங்க எல்.சி.டி டீவி இருக்கு. அப்பா கிட்ட சொல்லி மாத்தச் சொல்லும்ம்மா. முப்பதாயிரம் ரூபாய்தான். காபிக்கு டிகாஷன் போடுறப்போ அதுலயே ஒரு ஸ்பூன் ஜீனியும் போட்டுரும்மா. டிகாஷன் நல்லா கெட்டியா இருக்கும். இப்படித்தான் பெரும்பாலும் பேச்சிருக்கும்.

  இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். புகுந்த வீடு தன்னோட கைக்குள்ள வந்ததும் எல்லாம் மாறீரும். 🙂

  இந்த இடைப்பட்ட க.கா நேரத்துல பேசுற பேச்சுதான் இன்றைய கவிதை.

  தலைவனோடு உடன் போன பெண். சரீன்னு பெரியவங்கள்ளாம் போய்ப் பேசித் திருமணம் செய்து வைக்கிறதா உறுதி சொல்லிக் கூட்டீட்டு வந்திருக்காங்க. அந்த ஏற்பாடுகள்ளாம் இன்னும் வேகமா நடந்தா நல்லாயிருக்கும்னு தலைவி நெனைக்கிறா.

  அப்பத்தான் இந்தக் கவிதையச் சொல்றா. தோழிக்குச் சொல்ற மாதிரி தோழி வழியா அன்னைக்குச் சொல்றா தலைவி.

  எடுத்ததும் ஐஸ் மழை – அன்னாய் (தோழி) வாழி வேண்டு அன்னை

  அடுத்து இங்க இருக்குறத விட தலைவனுடன் அவனோட ஊரில் இருப்பது பிடிச்சிருக்குன்னு சொல்லனும். அதை நேரடியாச் சொல்லாம மறைமுகமாச் சொல்றா.

  நம்ம வீட்டுத் தேனை விட அவங்க வீட்டுத் தண்ணி நல்லா இனிமையா இருக்கும்.

  அதாவது எனக்கு அந்த வீட்டுத் தண்ணியைக் குடிக்கனும்னு தவிப்பா இருக்கு. அங்க சீக்கிரமாப் போகனும்.

  இதுக்கு மேலயும் பெரியவங்க புரிஞ்சிக்கலைன்னா என்னதான் பண்றது! 🙂

  படப்பைன்னு ஒரு சொல். படப்பைன்னு ஒரு ஊரே இருக்கு. படப்பைன்னா தோட்டம்னு ஒரு பொருள் இருக்கு. அது ஆகு பெயர். வைக்கோலைப் பொதித்து வைத்திருப்பாங்கள்ள வைக்கோல்போர். அதற்கும் பெயர் வைக்கோல் படப்பை தான். அந்த வைக்கோற் படப்பை இருப்பது வீட்டுத் தோட்டத்தில். அங்கதான் மாடிருக்கும். மரமிருக்கும். கிணறிருக்கும்.

 4. Samudra says:

  பள்ளியில் படித்த பாட்டு இது..நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s