நீர்ப் பெயர்ச்சி

குற்றாலத் திரிகூட மால்வரை உற்றே மேகம் பொழிந்த நீர்

கூடப் பொருநை நாடித் திருமுக்கூடல் பதியை வலம் கொண்டே

வற்றா மடுவில் பறவை, குறவை, வாளை, கோளை, தேளி மீன்,

மயிந்தி, உழுவை, அயிந்தி, கூனி, மணலி, ஆரால், ஓரா மீன்,

பற்றா அயிரை, கெண்டை, கெளிறு, பருவராலும் அணையிலே

பாய, காலில் பாய, குளத்தில் பாய, வயலில் பாயவே

சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மனப் பெருமைபோல்

சித்திரா நல் நதி பெருகி வாற சித்திரம் பாரும் பள்ளீரே!

நூல்: முக்கூடற்பள்ளு (#51)

பாடியவர்: தெரியவில்லை

குற்றால அருவியைத் தன்னுள்ளே கொண்டது திரிகூட மலை. அந்த மலையின் சிகரங்களில் தங்கிய மேகங்கள் மழை பொழிகின்றன. நீர் வெள்ளமாகப் பெருகி ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றோடு கலக்க வருகிறது.

இப்படிப் பொங்கிப் பாய்கின்ற புது வெள்ளம் திருமுக்கூடலை வணங்கி வலம் வருகிறது. அங்கே உள்ள வற்றாத குளங்களில் பாய்கிறது.

இதனால், அந்தக் குளங்களில் வாழும் பறவை மீன், குரவை மீன், வாளை மீன், கோளை மீன், தேளி மீன், மயிந்தி மீன், உழுவை மீன், அயிந்தி மீன், கூனி மீன், மணலி மீன், ஆரால் மீன், ஓரா மீன், கைகளில் பிடிக்கமுடியாத அயிரை மீன், கெண்டை மீன், கெளுத்தி மீன், பெரிய வரால் மீன் போன்ற பலவகை மீன்கள் உற்சாகமடைகின்றன. துள்ளிப் பாய்ந்து அணையில் குதிக்கின்றன, வாய்க்காலில் குதிக்கின்றன, மீண்டும் குளத்தில் குதிக்கின்றன, வயல்களில் குதிக்கின்றன.

இந்த ஆற்றின் பெயர், ‘சித்திரா நதி’. எல்லோரும் இதனைச் ‘சிறிய ஆறு’ என்றுதான் அழைப்பார்கள். ஆனால், உருவத்தால் சிறியவர்களாக இருக்கிறவர்கள் மனத்தால் பெரியவர்களாக இருப்பதுபோல் இந்த நதி வெள்ளத்தில் பொங்கிப் பெருகுகின்ற அழகான காட்சியைப் பார்க்க வாருங்கள் பள்ளியர்களே!

துக்கடா

 • பொருநை = தாமிரபரணி (காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்ட ஓர் வையை, பொருநை நதி : பாரதியார்)
 • இந்தப் பாடலில் ‘சிறியவர் மனப் பெருமை’ என்ற வரிக்குத் திருமாலின் வாமன அவதாரத்தைச் சுட்டிக்காட்டி விளக்கம் தருவதும் உண்டு
 • ’பெருகி வாற’ என்பது இலக்கிய வழக்கு அல்ல, மக்கள் வழக்கு, முக்கூடற் பள்ளு மக்கள் இலக்கியமாச்சே!
 • இத்தனை மீன் வகைகளில் எவையெல்லாம் இப்போதும் உள்ளன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

210/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், ஆறு (நதி), இயற்கை, பட்டியல், பள்ளு, வர்ணனை. Bookmark the permalink.

2 Responses to நீர்ப் பெயர்ச்சி

 1. GiRa ஜிரா says:

  முக்கூடற்பள்ளு. இந்தப் பேருக்குள்ளயே நிறைய தகவல்கள் அடங்கியிருக்கு. கொஞ்சம் பிரிச்சிப் பாத்தா புரிஞ்சிரும்.

  முக்கூடல் + பள்ளு

  இந்த நூலை இப்ப இருக்கும் கவிஞர்கள் எழுதுனா நூலோட பேர் என்னவாயிருக்கும் தெரியுமா?

  சீவலப்பேரிப்பள்ளு

  அதிர்ச்சியாயிருக்குல்ல. ஆனா அதுதான் உண்மை.

  தாமிரபரணி ஆற்றின் பழைய பெயர் பொருநை. வைகை ஆற்றுக்குப் பழைய பெயர் வையை. பிற்கால இலக்கியங்களில்தான் தாமிரபரணி வைகைன்னு பாக்க முடியும்.

  இந்தப் பொருநை ஆற்றோடு சித்திராநதியும் (சிற்றாறு) கோதண்டராமநதியும் கலக்கும் இடம்தான் சீவலப்பேரி என்ற முக்கூடல்.

  பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாண்டியன் மாறவர்மன் சீர்வல்லபன் அந்த முக்கூடல்ல பெரிய ஏரியை உருவாக்கினார். அந்த ஏரிக்கும் அவர் பெயரையே வெச்சாங்க. சீர்வல்லப/ஸ்ரீவல்லப ஏரி.

  இந்தப் பேர்தான் மருவி சீவலப்பேரி ஆயிருச்சு. தூத்துக்குடிக்குத் தண்ணீர் வர்ரதும் இந்த ஏரியில் இருந்துதான். கிட்டத்தட்ட தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு அரசன் சிந்திச்சுச் செயல்படுத்துன திட்டம் இன்னும் பயன்படுது. அப்படிப்பட்ட திட்டங்களைத்தான் அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் உருவாக்க வேண்டும்.

  இந்தச் சீவலப்பேரி எனப்படும் திருமுக்கூடல் ஊரில் வாழும் உழவர் (பள்ளர்) வாழ்க்கையைச் சொல்வதுதான் முக்கூடற்பள்ளு.

  பள் – தாழ்வான எடம். பொதுவாக வயல்கள் சற்றுத் தாழ்வான எடத்துலதான் இருக்கும். நெல்லுக்குத் தண்ணீர் வேணுமில்லையா. அந்த வயல்களில் உழைக்கும் மக்களும் அந்தத் தாழ்வான இடங்கள்ள இருந்ததால அவங்களுக்கும் பள்ளர்னு பேர் வந்துருச்சு. ஆண் என்றால் பள்ளன். பெண் என்றால் பள்ளி.

  உழைக்கும் மக்களோட நூல். அப்ப அவங்க பேச்சு நடை வாழ்க்கை நடையெல்லாம் வரணுமில்ல. முள் – முள்ளு. கல் – கல்லு. அது மாதிரி பள் – பள்ளுன்னு ஆயிருச்சு.

  இதுதாங்க முக்கூடற்பள்ளு பெயர்க்காரணம்.

  நாக சொன்னது போல இந்த நூலை எழுதியது யார்னு தெரியாது. பேர் சொல்லாத புண்ணியவான் எழுதி வெச்சிட்டுப் போயிட்டாரு. அவர் போனாலும் அவர் பேர் போனாலும் நூல் இன்னும் இருக்கு. எழுதுனா இந்த அளவுக்காச்சும் நிலைச்சு நிக்கிற நூலை எழுதனும்.

 2. amas32 says:

  ஆற்றில் நீர் இல்லாமைக்கு ஆறு காரணம் இல்லை. இங்கே நல்ல மழை பொழிந்து ஆற்றில் நீர் சுழித்துச் செல்கிறது. அதனால் ஏரி குளங்களும் நிரம்பி வழிகின்றன.மீன்களும் துள்ளி விளையாடுகின்றன. செல்வ செழிப்புக்குத் தேவை மழை.

  ‘சிறியவர் மனப் பெருமை’ என்ற வரிக்குத் திருமாலின் வாமன அவதாரமகிமை பற்றியது என்று குறிப்பிடுள்ளீர்கள். மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியதாக இருப்பது சிறப்பு. சிறிய நதியாக இருப்பினும் வளம் கொடுப்பதில் ‘சித்திரா நதி’ பெரிய நதிக்கு ஈடாக உள்ளது.

  பள்ளர் பற்றிய பாடல் மிகவும் அழகாக உள்ளது!
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s