ஆயிரம் இராமர்

கேட்டனன் கிராதர் வேந்தன், கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி,

மீட்டும் மண் அதில் வீழ்ந்தான், விம்மினன், உவகை வீங்க,

தீட்ட அரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில்

பூட்டிய கையன், பொய் இல் உள்ளத்தன், புகலல் உற்றான்.

*

’தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை

தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை, என்ற போழ்து, புகழினோய் தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியன் அம்மா!’

நூல்: கம்ப ராமாயணம் (அயோத்தியா காண்டம், குகப் படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: ராமனைத் தேடிக் காட்டுக்கு வருகிறான் பரதன். இதைப் பார்த்த குகன் ஆரம்பத்தில் பரதன்மீது சந்தேகப்படுகிறான், பின்னர் அவனுடைய நல்ல மனத்தை உணர்ந்து நெகிழ்கிறான். அந்தக் காட்சி இந்த இரண்டு பாடல்களில்

(சொல்லுக்குச் சொல் எழுதப்பட்ட உரை அல்ல, நாடக / வசன பாணியில் உள்ளது)

பரதன் சொன்ன வார்த்தைகளை வேடர்களின் தலைவன் (குகன்) கவனித்துக் கேட்டான். ’இப்படிப்பட்ட மனிதன்மேல் சந்தேகப்பட்டுவிட்டோமே’ என்று அவனுடைய மனம் வருந்தியது, பெருமூச்சுடன் பரதனை வணங்கினான், அப்படியே தரையில் விழுந்தான். அவன் மனம் மகிழ்ச்சியில் விம்மியது.

ஓவியத்தில் வரையமுடியாத அரிய மேனியைக் கொண்டவன் பரதன். அவனுடைய பாதங்களாகிய தாமரைகளைக் குகன் பற்றிக்கொண்டான். மனத்தில் எந்தக் கபடமும் இல்லாத அந்த வேடன் இப்படிப் பேச ஆரம்பித்தான்:

*

‘புகழ் நிறைந்த பரதனே,

உன்னுடைய தாய் கைகேயியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு உன்னை அயோத்தியின் அரசனாக்க முன்வந்தார் உனது தந்தை தசரதர். ஆனால் நீயோ, முறையற்ற வழியில் பெற்ற அந்தச் செல்வம் எனக்கு வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டாய்!

அதோடு நிறுத்தினாயா? அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தாய், உன் அண்ணன் ராமனை நேரில் சந்திக்க எண்ணினாய், அவனுக்கு உரிய அரசாங்கத்தை அவனுக்கே திருப்பித் தருவதுதான் முறை என்று முடிவு செய்து இந்த வனத்துக்கு வந்திருக்கிறாய், அந்த நல்ல சிந்தனை உன் முகத்தில் தேங்கியிருக்கிறது.

பரதா, உன்னுடைய நல்ல குணங்களையெல்லாம் எடை போட்டுப் பார்த்தால், ஆயிரம் ராமர்கள்கூட உனக்கு இணையாகமாட்டார்கள்!’

துக்கடா

209 / 365

Advertisements
This entry was posted in கம்ப ராமாயணம், கம்பர், திருமால், நாடகம், ராமன். Bookmark the permalink.

9 Responses to ஆயிரம் இராமர்

 1. amas32 says:

  கம்ப ராமாயணம் படிப்பது என்பது அமுதமான ராம ரசத்தை அனுபவிப்பது தான். பெரியவர்கள் இன்னும் பின்னூட்டம் இடவில்லை. ஆனாலும் நான் துணிந்து என் இரண்டு பைசாவை முன் வைக்கிறேன் பொறுத்தருள்க 🙂

  இலக்குவனை விட பரதன் தான் அதிகத் துன்பப் பட்டான். ராமனை பிரிந்து, 14 வருடங்கள் ராமப் பாதுகைக்கு அரியாசனத்தை விட்டுக் கொடுத்து, அயோத்தியை caretaker ஆக ஆண்டு வந்தான். தாய் கைகேயியை திரும்பிக் கூட பார்க்கவில்லை. இலக்குவன் ராமனோடு 14 வருடங்கள் கூடவே இருந்தான். ஆனால் பரதன் பிரிந்து இருந்தான்.

  பரதன் ராமாயணத்தில் வரும் இடங்கள் வெகு குறைவு. ஐந்தாறு இடங்களில் தான் பரதன் கதையில் வருகிறான். அதில் குகனை சந்திப்பது ஒரு முக்கிய நிகழ்வு. அப்பொழுது இரத்தினங்களால் பதிக்கப் பட்ட பாதுகையை எடுத்துக்கொண்டு மரவுரியில் வருகிறான் பரதன். ஆனால் தூரத்தில் இருந்து பார்த்தவுடன் குகனுக்குக் கோபம். ஆனால் அருகில் பார்த்தவுடன் மனம் மாறுகிறான். அவனுடைய உண்மையான துக்கத்தைப் புரிந்து கொள்கிறான். ராமன் இருந்த இடத்தை எல்லாம் காட்டுகிறான். அவனையும் அவனோடு வந்த மூன்று தாய்மார்களையும் தன படகில் அழைத்துக் கொண்டு செல்கிறான் குகன். அப்பொழுது குகனிடம் அவர்களை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில், தன தாயை, இந்தப் பாவியை பெற்றெடுத்தவள் இவள் என்று கைகேயியை அறிமுகம் செய்து வைக்கிறான்.

  ராமன விட உயர்ந்த இடத்தில் வைக்கப் படுகிறவன் பரதன். ராமனின் சகோதரர்களில் அவனே உயர்ந்தவன். ஏனென்றால் அவனால் தான் ராமனின் பாதுகையின் பெருமை நமக்குத் தெரிய வருகிறது. அரசாங்கத்தை பரிபாலனம் பண்ணக் கூடிய திறன் இவனிடம் இருப்பதால் தான் இவனுக்கு பரதன் என்று பெயர் பிறந்தவுடன் வைக்கப்பட்டது.

  ராமன், தந்தை சொல் படி பட்டாபிஷேகத்தைத் துறந்து காடு நோக்கிச் சென்றான். ஆனால் ராமனுக்கு 14 வருடங்கள் கழித்து அரசாட்சி வந்து விடும். 14 ஆண்டுகள் தான் அவன் ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுத்து காடு சென்றான். ஆனால் பரதனோ 14 வருடங்கள் மட்டுமே ராஜ்ஜியம் பண்ணக் கூடிய நிலையிலும் அதை வீட்டுக் கொடுத்து பாதுகையை அரியணையில் வைத்து தன் பெயர் காரணப் படி அரசாங்கத்தை நடத்தினான். ராமன் அயோத்தி திரும்பியவுடன் கஜானா நிரம்பி வழிய ராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுத்தான். எந்தத் தம்பி இப்படி செய்வான்?

  இதையெல்லாம் உணர்ந்து தான் குகன் பரதனைப் பார்த்து நீ ஆயிரம் ராமனுக்கு சமம் என்று கூறி வணங்குகிறான்!
  amas32

 2. GiRa ஜிரா says:

  பரதனைப் பத்தி ரொம்பப் பேசியாச்சு. ஆனாலும் பேச்சு அலுக்காது. 🙂

  பரதனுடைய கொடி என்ன கொடின்னு யாருக்காச்சும் தெரியுமா? மாதுளைமரக் கொடி. கொடியில் மாதுளை மரம் எழுதப்பட்டிருக்கும்.

  மாதுளை முத்துப் போல சத்தும் அழகும் மிகுந்தவன் பரதன். ஆயிரம் ராமர் ஒப்பார்னு பாரட்டப் படும் பரதன் உள்ளம் மாணிக்கங்கள் நிறைந்தது. அதுக்கு அந்தக் கொடி பொருத்தம்.

  இந்தக் கொடியைப் பற்றி கம்பர் சொல்லவில்லை. வால்மீகி சொல்கிறார். கோவிதாரா த்வஜோ ரதே.
  கோவிதாரா – மாதுளை
  த்வஜோ – கொடி
  ரதே – தேர்

  அந்தக் கொடி யார் கண்ணுல படுது? குகன் கண்ணுல படுது. பரதன் அண்ணனைத் திரும்பக் கூட்டீட்டுப் போக வர்ரான். பெரிய கூட்டத்தோட வர்ரான்.

  அப்ப யானைப் படை, காலாட்படை, குதிரைப்படை எல்லாம் பாக்குறான் குகன். யார் இந்தக் கூட்டத்தைக் கூட்டீட்டு வர்ராங்கன்னு பாக்குறப்போ தெரியுது. மஹா காயாஹ் கோவிதாரா த்வஜோ ரதே. ஓங்கி உயர்ந்த மாதுளை மரக்கொடி பொருந்திய தேர். அப்ப பரதன்னு புரிஞ்சிக்கிறான் குகன்.

  எடுத்ததுமே அவனுக்கு ஆத்திரம். கூட இருக்குறவங்களையெல்லாம் கூப்பிட்டு.. இங்க பாருங்க… வர்ரவங்களை ஒரு வழி பண்ணீரனும். அப்படீன்னு வீரவசனம் பேசுறான்.

  வழக்கமா ஆமா ஆமான்னு ஆமாம் சாமி போடுற கூட்டம் அன்னைக்கு அமைதியா இருக்கு. ஏதோ தப்புன்னு உள்ளுணர்வு சொல்லீருக்கும் போல.
  பரதன் பக்கத்துல வந்ததும்தான் குகனுக்கு உண்மையே புரியுது. அதுவரைக்கும் வெட்டுவேன் குத்துவேன்னு அருவாளோட கெளம்புனவன் ஒரு நொடியில் ஆளே மாறிப் போயிர்ரான்.

  அப்புறமா நடந்ததெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுதான் இந்த வார்த்தையச் சொல்றான். “ஆயிரம் ராமர் உனக்கு ஒப்பார்.”

  இந்த ஆயிரம் ராமர் வசனம் வால்மீகி சொல்லலை. கம்பர் சொல்றாரு. ஏன்? இந்த எடத்துல அவனைப் புகழவில்லைன்னா இந்தக் கதையில் பின்னாடி அவனைப் புகழ இதை விடச் சிறப்பான இடம் வராதுன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு. அதுனாலதான் குகன் வழியா வார்த்தை வருது.
  வால்மீகியப் பொறுத்தவரை பரதனை குகன் தேனும் மீனும் கொடுத்து உபசரிக்கிறதோட அந்தப் புகழ்ச்சியை நிறுத்திக்கிறாரு. கம்பருக்கு அது போதலை. இப்படி ஒரு பாத்திரம் இருக்கே. இத விடலாமா. அதான் மொதல்ல ஆவேசப்பட்ட குகன் வாயாலயே பாராட்ட வைக்கிறாரு.

  ஒரு கதையை எடுத்தாளும் போது கவிஞன் வெற்றி பெறும் இடங்கள் இது போன்ற கட்டங்கள்தான்.

  இதே வால்மீகியும் கம்பரும் ராமனையே பின்னாடி அலற வெச்சிருக்காங்க. அதைப் படிச்சதும் குகன் பரதனைப் பற்றிச் சொன்னது மிகமிக உண்மைன்னு புரியும். அந்தப் பாடல்களை வேறொரு சமயம் பார்ப்போம்.

 3. நல்ல பாடல்கள், விளக்கங்கள்.
  மூணை விட ஆயிரம் பெருசுன்னாலும், எனக்கு மூணு இதை விட பிடிக்கும். சொன்னது கோசலைன்றதால:
  முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்
  நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்;
  குறைவு இலன்’ எனக்கூறினள் – நால்வர்க்கும்
  மறு இல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள்.

  • GiRa ஜிரா says:

   ஒரு நல்ல பாடலைக் குடுத்திருக்கீங்க. கோசலை பரதனைப் பாராட்டித்தான் ஆகனும்.

   ஆனா கோசலை இதை எப்பச் சொன்னன்னு நீங்க சொல்லாம விட்டுட்டீங்க. அதை மட்டும் கொஞ்சம் எடுத்து விரிச்சுச் சொல்லீர்ரேன்.

   கைகேயி வரம் வாங்கியாச்சு. ராமனையும் கூப்பிட்டுச் சொல்லியாச்சு. ராமனும் காட்டுக்குப் போறதுக்கு ஒத்துக்கிட்டு வர்ரான்.

   அம்மா கிட்ட சொல்லனுமில்லையா. கோசலையின் அரண்மனைக்கு வர்ரான். ஒன்னு கவனிக்கனும். கோசலை பட்டத்தரசி. ஆனால் தசரதனுடைய அரண்மனைங்குற பேர் கைகேயின் அரண்மனைக்குத்தான். அதுனாலதான் ஊரிலிருந்து திரும்பி வர்ர பரதன் அப்பாவைப் பாக்க அம்மாவோட அரண்மனைக்குப் போறான்.

   சரி. கதைக்கு வருவோம். ராமன் வந்ததும் கோசலை பாக்குறா. ”என்னடாயிது! ஒரு மாலையக் காணோம். அலங்காரத்தக் காணோம். திருநீறு குங்குமம் சந்தனம் கூட பூசக் காணோம். மங்கல நீரையாவது மேல தெளிச்சிருக்காங்களான்னா அதையும் காணோம். என்ன நடக்குது?” இப்படித்தான் அவ மனசுல ஓடுது.

   அப்போ ராமன் சொல்றான். “அம்மா, பரதன் பட்டம் கட்டப் போறான். இனிமே அவந்தான் அரசன்.”

   ராமனை விட பரதன் நல்லவன்னு கோசலைக்குத் தெரியும். அப்பதான் இந்தப் பாட்டைச் சொல்றா கோசலை.

   முறைமை அன்று என்பது ஒன்று
   உண்டு மும்மையின்
   நிறை குணத்தவன்
   நின்னினும் நல்லனால்
   குறைவு இலன் எனக்
   கூறினள் நால்வர்க்கும்
   மறு இல் அன்பினில்
   வேற்றுமை மாற்றினாள்
    

   என்ன பொருள். “இங்க பாரு ராமா, பொதுவா மூத்தவன் இருக்க இளையவன் ஆட்சி செய்றது முறையில்லன்னுதான் சொல்வாங்க. ஆனா பரதன் மும்மையின் நிறை குணத்தவன். ஒன்ன விட நல்லவன். ஒரு குறையும் சொல்ல முடியாதவன். அவனுக்குப் பதவி பொருத்தம்தான். அவனோடு அனுசரித்து போ.”

   ஆனாலும் தன் மகன் காட்டுக்குப் போகனும்னு கேள்விப்பட்டதும் கோசலையின் மனதில் ஐயம் உண்டாகுது. பரதனும் இதுல சம்பந்தப்பட்டிருப்பானோன்னு.

   ஆனா அப்படி நெனைச்சது தவறுன்னு புரியும் கட்டமும் வருது.

   பரதன் ஊர்ல இருந்து வர்ரான். கைகேயி நடந்ததைச் சொல்றா. இனிமே இங்க இருக்க மாட்டேன்னு கெளம்பி கோசலையோட காலில் வந்து விழுகுறான். புலம்புறான். அப்ப அவன் மேல இருந்த சந்தேகம் போகுது கோசலைக்கு. இதை நான் சொல்லல. கம்பர் சொல்றாரு.

   நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா
   சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள்
   நிலம் பொறை ஆற்றலன் – இவனுக்கு நாடாளனும்னு விருப்பம் இல்ல

   நெஞ்சம் தூய்து – இவனுக்குத் தூய உள்ளந்தான்

   எனா – என்று எண்ணி

   சலம் பிறிது உற – (இதுவரை) இருந்த ஐயப்பாடு நீங்கி

   மனம் தளர்ந்து கூறுவாள் – தளர்ந்து போன மனதோடு பரதனைத் தேற்றினான்

   இதுதான் கம்பன் கோசலையைக் காட்டும் விதம்.

   ஆனா வால்மீகியோடு கம்பனை ஒப்பிட்டுப் பாத்தா சிலபல ஆச்சரியத் தகவல்களும் கிடைக்கும்.

   கம்பன் சொல்லும் அளவுக்கு வால்மீகியில் ராமனும் கோசலையும் பேசிக்கலை.

   அம்மாவைப் பாக்க வந்தவன் கண்ணுக்கு மொதல்ல பூஜையில் வெச்சிருக்கும் தின்பண்டங்கள் தெரியுது. தயிரு, தயிர்ச்சோறு, பாயாசம், கொழுக்கட்டை, இப்பிடி பலதைப் பாக்கிறான்.

   மகனை உக்காரச் சொல்லிச் சொல்லிச் சாப்புடச் சொல்றா. அப்போ ராமன் என்ன சொல்றான் தெரியுமா?

   ”மஹத் பயம் உபஸ்தித்தம். பெரிய பிரச்சனை வருது. இது உங்களுக்கும் வைதேகிக்கும் இலக்குவனுக்கும் துக்கத்தைக் கொடுக்கும். என்னை எதுக்கு உக்காரச் சொல்றீங்க? நான் காட்டுல போய் தர்ப்பைல உக்கார வேண்டியவன். ஜீவன் ஹித்வா முனிவத் ஆமிசம். இன்னும் பதினாலு ஆண்டுக்கு கறி கிறி திங்காம முனிவருங்க மாதிரி பழமும் காயும் திங்கனும்.”

   இத மொதல்ல சொல்லிப் பொலம்பீட்டுதான் அடுத்து பரதனுக்குப் பட்டம்னு சொல்றான்.

   கம்பன் காட்டிய கோசலையை வால்மீகி காட்டலை. கோசலை ஒடனே மயங்கி விழுந்துர்ரா. அப்புறம் முகத்துல தண்ணியத் தெளிச்சு எழுப்புனதும் ராமனை விடப் பல மடங்கு பொலம்புறா.

   “ஐயோ மகனே, நீ ஏன் எனக்குப் பொறந்த. இப்பிடி என்ன வருத்தப்பட வைக்கத்தான் பொறந்தியா? ஒங்கப்பா என்னைய என்னைக்கும் மதிச்சதில்ல. சக்களத்திகளும் என்ன மதிச்சதில்லை. கைகேயியோட வேலக்காரிங்கள விட என்னைய ஒங்கப்பா மோசமா நடத்துவாரே. அங்க அவமானப் பட்டேன். இங்க அவமானப் பட்டேன். ஒனக்குப் பூணூல் போட்டப்புறமா பதினேழு வருசம் நீ பதவிக்கு வர்ரதுக்குத்தான் காத்திருந்தேன். ஆனா எல்லாம் இப்பிடி வீணாப் போச்சே. நீ காட்டுக்குப் போனா நான் அவ்வளவுதான்.”

   ராமனும் பரதன் ஆட்சிக்கு வர்ரதை முதலில் சொல்லலை. கோசலையும் மிகப் பெருந்தன்மையா “நின்னினும் நல்லன்”னு சொல்லலை.

   இங்கதான் கம்பன் பாத்திரங்களை உயர்த்துகிறான். ஏன்னா.. பரதனை எல்லாரும் திட்டுவாங்கன்னும் தப்பா நினைப்பாங்கன்னும் கம்பனுக்குத் தெரியும். அது தொடரக்கூடாதுங்குறதுக்காகத்தானோ என்னவோ நின்னினும் நல்லன்னு கோசலை வாயாலையும் ஆயிரம் ராமர் ஒப்பார்னு குகன் வாயாலயும் சொல்றாரு கம்பர்.

 4. ஜி ரா,
  அருமை. தன்னுடைய ஆங்கில ராமாயணத்தின் முன்னுரையில் ராஜாஜி வால்மீகிக்கும் கம்பனுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கும் பொழுது இதைதான் சொல்கிறார். வால்மீகியின் ராமன் ஒரு சாதரணமான மனிதன். கம்பனுடைய ராமன் ஒரு ஆதர்ஷ புருஷன். அதனால் தான் அவர் தாயும் மாறுபடுகிறாள்!! நீங்கள் சொல்லும் காட்சியை பார்க்கும் பொழுது ராஜாஜி சொன்ன அந்த வித்தியாசம் துல்லியமாக தெரிகிறது. வால்மீகி இராமாயணத்தில் ராமனின் பேச்சும், கோசலையின் பேச்சும் சரசி மானிடர்கள் பேசுவது போல் உள்ளது. ராமனுக்கு ராஜாவாகி இருந்தாலும் முனிவர்போல் வாழவேண்டும் என்ற கவலை. கோசலைக்கோ அவளுடைய முக்கியத்துவம் இன்னும் குறைந்து போகும் என்ற கவலை. சராசரி மனிதர்களின் உணர்சிகளை அற்புதமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் வால்மீகி.

  கம்பனுக்கு வரும் பொழுது ராமனும் மாறுகிறான். அவன் ஆதர்ஷ புருஷன் ஆகிவிட்ட பிறகு அவன் தாயை ஒரு சாதாரண பெண்மணியாக படைப்பது சாத்தியமில்லை. மகன் அளவிற்கு அவள் குணமும் உயர்ந்து இருக்க வேண்டும். ஒருவனை மேன்மைப்படுத்தியதால் சூழ்ந்து இருக்கும் எல்லோரும் மேன்மையானவர்கள் ஆகிறார்கள். இது நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்கலாம். எப்பொழுது கம்பன் ராமனின் குணாதிசயங்களை நிர்னையித்தானோ அப்பொழுதே எல்லா கதைமாந்தர்களின் குணாதிசயங்களும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை புரிந்துக்கொல்பவன் தான் ஒரு சிறந்த கதாசிரியன். கம்பன் எவ்வளவு சிறந்த கதாசிரியன் என்பது இதையெல்லாம் வைத்து பார்த்தால் புரியும்.

  • amas32 says:

   ரொம்ப நல்ல விளக்கம், நன்றி சுரேஷ் 🙂
   amas32

  • GiRa ஜிரா says:

   நல்ல கருத்து. வால்மீகிக்கும் கம்பனுக்கும் கால இடைவெளி நிறைய. இந்தக் கால இடைவெளியில் இராமனுடைய கதை பிரபலமாகி ஒரு பாத்திரம் பெரிய நாயகனாகியிருப்பான்.

   இதே போல இன்னொரு எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம். இளங்கோவடிகள் சொன்னதற்கும் கண்ணகி திரைப்படத்திற்கும் பூம்புகார் திரைப்படத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

   ஆயிரம் ஆண்டு கால இடைவெளியில் தோன்றிய கவிஞர்களின் கற்பனையையெல்லாம் கம்பன் கருத்தில் கொண்டிருந்திருக்கிறான். அதே நேரத்தில் வால்மீகி இராமாயணமும் அவன் கையில் இருந்திருக்கிறது. படித்திருக்கிறான். அதை அப்படியே படியெடுத்து எழுதியிருந்தால் கம்பன் ஒருவேளை காணாமல் போனாலும் போயிருப்பான்.

   ஆனால் கதையையும் கதாபாத்திரங்களையும் மேலும் மெருகூட்டுகிறான். ஆனால் இரண்டு கருத்துகளில் அவன் உறுதியாக இருந்திருக்கிறான்.

   ஒன்று பரதன் மிகமிக நல்லவன். அவன் செய்த செயலுக்கு வால்மீகி உரிய மதிப்பு கொடுக்கவில்லையோ என்ற எண்ணம். இத்தனைக்கும் ராமன் காட்டுக்குப் போகும் போது தன்னுடைய செல்வங்களையெல்லாம் தானம் செய்து விட்டுப் போகிறான். திரும்பி வரும்பொழுது அயோத்தியில் இருப்பது பரதன் சம்பாதித்தது. அதை வைத்துதான் ராமராஜ்ஜியமெல்லாம்.

   இந்த பரதனுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று உறுத்திக்கொண்டேயிருந்திருக்க வேண்டும். ஒரு இடமல்ல மூன்று இடங்களில் பரதன் ராமனை விட மேலானவன் என்று கூறி விடுகிறான். மூன்று முறை கூறுவது ஒரு செய்தியை உறுதிப்படுத்துவதாகும்.

   முதல்முறை கோசலை வாயால் “நின்னினும் நல்லனால்”.
   இரண்டாம் முறை குகன் வாயால் “ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ”
   மூன்றாவதாக மறுபடியும் கோசலை வாயால் “எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவாரோ?” எப்போ இதைச் சொல்றா கோசலை? பரதன் தீக்குளிக்கப் போகும் போது.

   ஒன்று ஆயிரமாகி ஆயிரம் கோடியாகிவிட்டது. பரதன் புகழ் நிலைநிறுத்தப்பட்டது கம்பனால்.

   இரண்டாவது கருத்து ராமன் சீதையைப் பார்த்துப் பேசியது. கம்பனும் சரி வால்மீகியும் சரி, ராமன் பேசியதை வெட்டவெளிச்சமாக்கி வைத்திருக்கிறார்கள். அவன் அப்படியெல்லாம் பேசியதை இருவருமே நியாயப்படுத்தவும் இல்லை.அந்த வரிகள் ராமனைத் தெய்வமாக நினைப்பவர்களுக்கு வருத்தம் உண்டாக்கும் வரிகள்.

   இந்த இரண்டு கருத்தையும் கம்பன் தெளிவாகத் தனது காப்பியத்தில் பதிய வைத்துவிட்டே சென்றிருக்கிறான்.

 5. எழுத்து பிழைகளை மன்னிக்கவும். கொள் என்பதற்கு பதில் கொல் என்று வந்துவிட்டது. இது எவ்வளவு விபரீதமான மாற்றம் என்பதை நான் விளக்க தேவையில்லை. (அப்பாடா. விலக்க என்று வரவில்லை 🙂 )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s