கேள், யோசி, செய்

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!

இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்

தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்!

களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த

புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி

விருந்தின் புன்கண் நோவு உடையர்!

கேட்டனை, ஆயின், நீ வேட்டது செய்ம்மே!

நூல்: புறநானூறு (#46)

பாடியவர்: கோவூர் கிழார்

சூழல்: வஞ்சித் திணை, மேல்விவரங்களுக்கு ‘முன்கதை’யைக் காண்க

முன்கதை

கிள்ளி வளவன், மலையமான் என்கிற இரு மன்னர்களிடையே போர் நடந்தது. இதில் மலையமான் தோற்றுப்போனான். அவனுடைய மகன்கள் கிள்ளி வளவனிடம் பிடிபட்டார்கள்.

மலையமான்மீது உள்ள ஆத்திரத்தில் கிள்ளி வளவன் அந்தச் சிறுவர்களைப் பழி தீர்க்கத் தீர்மானித்தான். அவர்களை மிதித்துக் கொல்வதற்காக யானை ஒன்று வரவழைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், கிள்ளி வளவனின் அவையில் இருந்த கோவூர் கிழார் என்ற புலவர் பாடிய பாடல் இது.

உரை

மன்னா,

ஒரு புறாவின் துயரத்தைப் போக்குவதற்காகத் தன்னுடைய தோலையே அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியுடைய சோழ மரபில் வந்தவன் நீ, புறாவுக்குமட்டுமல்ல, எல்லா உயிர்களின் துன்பங்களையும் நீக்குகின்றவன் நீ,

இந்தச் சிறுவர்களும் பெரிய குடும்பத்தில் பிறந்தவர்கள்தான், நன்கு படித்தவர்களும் அறிஞர்களும் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத் தாங்கள் விளைவித்த பொருள்களைப் பகிர்ந்து கொடுத்து மகிழ்கிற மரபு அவர்களுடையது,

நேற்றுவரை பாதுகாப்பான, குளிர்ந்த நிழலில் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த இந்தச் சிறுவர்கள், இப்போது உன்முன்னே கைதிகளாக நிற்கிறார்கள். சுற்றி நிற்கும் உன்னுடைய அவையினரைப் பார்த்துப் பயந்து அழுகிறார்கள்,

இவர்களைக் கொல்வதற்காக, நீ இந்த யானையைக் கொண்டுவந்திருக்கிறாய். ஆனால் இந்தக் குழந்தைகளுக்கு அது புரியவில்லை. ‘ஐ! யானை!’ என்று அழுகையை மறந்து சிரிக்கிறார்கள், மகிழ்கிறார்கள். இந்த அப்பாவிப் பிள்ளைகளை நீ கொல்லத்தான் வேண்டுமா?

நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், நீயும் கேட்டுக்கொண்டாய், இனிமேல் உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்.

துக்கடா

 • ’கேட்டனை, ஆயின், நீ வேட்டது செய்ம்மே!’ என்பது பெரியவர்களுக்கு அறிவுரை சொல்கிற எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு soft skill. ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால் நம் கருத்தை / அறிவுரையை / ஆலோசனையை / அனுபவத்தை / சிபாரிசைச் சொல்லலாம், ஆனால் அதன்பிறகு எது சரி என்று முடிவெடுக்கவேண்டியது அவர்கள்தான், ரொம்ப வற்புறுத்தினால் அவர்களுடைய கோபம் நம்மீது திரும்பக்கூடும்!
 • ‘புறவின் அல்லல்’ என்று குறிப்பிடப்படுவது சிபிச் சக்கரவர்த்தியின் வரலாறு. பிரபலமான ’குழந்தைக் கதை’யாகிய இதுவும் புறநானூறில்தான் உள்ளது. பாடல் எண் : 43

207/365

Advertisements
This entry was posted in அறிவுரை, கதை கேளு கதை கேளு, சோழன், புறநானூறு, புறம். Bookmark the permalink.

5 Responses to கேள், யோசி, செய்

 1. amas32 says:

  புலவர் கோவூர் கிழார் தான், எவ்வளவு பொறுப்பாக அரசனுக்கு அறிவுரை சொல்கிறார்.
  துர்யோதனன் சபையில் திரௌபதியை மானபங்கப் படுத்தும்போது, அங்கு அவையில் இருந்த சான்றோர்கள் அமைதியாக இருந்தனர். உண்மையை, தர்மத்தை, கருணையை எடுத்துரைக்கவில்லை. இத்தனைக்கும் அங்கே இருந்தவர்கள் பிதாமகன் பீஷ்மர், தந்தை திருதுராஷ்ட்ரன், ஆசான் துரோணர் ஆகியோர். அவர்களில் யார் அறிவுரை சொல்லியிருந்தாலும் துர்யோதனன் கேட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் செய்யவில்லை.
  இங்கே இந்த புலவர் ஒரு அரசன் ஆணைக்கு எதிரான ஒரு நேர்மையான விண்ணப்பத்தை தைரியமாக எடுத்துரைக்கிறார். அவர் அரசனை சார்ந்து இருக்கிறவர். ஆயினும் அவர் மனதில் பட்ட நேர்மையான கருத்தை அரசனிடம் தெரிவிக்கிறார். அதே சமயம் தன இடம் அறிந்து அதோடு நிறுத்திக் கொள்கிறார். அதற்குப் பின் அரசன் என்ன முடிவெடுக்கிறானோ அது அவன் செயல். சொல்வது இவர் கடமை. அதனை செவ்வனே நிறைவேற்றிவிட்டார்.
  வளர்ந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் இதனை பின்பற்றினால் வீட்டில் நல்லிணக்கம் நிலவும் 🙂
  amas32

 2. GiRa ஜிரா says:

  இன்றைய பாவைப் படிச்சதும் ஒரு நெருடல். ஒரு வருத்தம். அப்படியே கொஞ்சம் நிம்மதி.

  ஒரு பகை. ஒரு போர். ஒரு முடிவு. ஒருவனுக்குத் தோல்வி. இன்னொருவனுக்கு வெற்றி.

  பொதுவாவே விலங்கினங்களில் இருந்து வரும் வழக்கம் என்னன்னா தோல்வியடைஞ்ச விலங்கோட குட்டிகளையும் கொன்று விடுவது. அதே விலங்கு மனநிலைதான் சோழன் கிள்ளி வளவன் மனநிலையும். தோற்றுப்போன மலையமான் மகன்களைக் கொல்ல முயற்சி. அதுவும் எப்படி? ஊரைக் கூட்டிப் பொதுவில் யானையை ஏவி விட்டுக் கொல்லும் திட்டம். கொடூரத் திட்டம்.

  அந்தக் கொடுமையைக் கண் கொண்டு பார்க்க கிள்ளி வளவனும் அங்கிருக்கிறான். அப்போது அவன் மனநிலை வெறியோடுதான் இருக்கும்.

  அப்படி வெறியோடு இருப்பவனிடம் போய் யார் எடுத்துச் சொல்றது?

  சொன்னாலும் கேட்க வேண்டுமே?

  நல்ல வேளை. அங்கு கோவூர்க் கிழார் இருந்திருக்கிறார்.

  அவரும் போய் எடுத்ததுமே “அடேய் மடையா, நிறுத்து உன் கொடுமையை”ன்னு சொல்லியிருந்தா என்னவாயிருக்கும்?! அப்பப்பா!

  சிலப்பதிகாரத்துல பாத்தா, கண்ணகி எடுத்ததுமே “தேரா மன்னா செப்புவதுடையோய்”னுதான் பேசுறா. ஏன்னா பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் அமைதியாச் சொன்னதைக் கேக்கும் மனநிலையில் இருந்தான்.

  ஆனா கிள்ளி வளவன்?

  அப்படிப் பட்டவன் மனநிலையை மாத்ததும்னா என்ன செய்யனும்?

  மொதல்ல அவனைப் புகழ்ந்து ரெண்டொரு பேச்சு பேசுனா என்னன்னு திரும்பிப் பாப்பான். தன்னுடைய பெருமைக் கேட்டு ஒரு மிதப்புல இருக்குறவன் கிட்ட மெதுவா உண்மையப் புரிய வைக்கனும். அது புரியுற சமயத்துல, “இந்தப்பா, இப்பிடி நல்லது செய்ற வாய்ப்பு ஒனக்கிருக்கு. செய்றதும் செய்யாததும் உன் விருப்பம்”னு சொன்னா எல்லாம் நல்லபடி முடியும் வாய்ப்பிருக்கு.

  அதத்தான் கோவூர் கிழார் சொல்றாரு.

  நீ எப்பேர்ப்பட்ட வம்சம்
  ஒங்க தாத்தனுக்குத் தாத்தன் எவ்ளோ பெரிய ஆளு
  புறாவைக் காப்பாத்த தன்னோட சதையைக் கொடுத்தவரு
  அத்தோட இன்னும் எத்தனையோ பேருக்கு உதவி பண்ணீருக்காரு
  அப்பேர்ப்பட்ட குடும்பத்துல பொறந்த பெருமை உனக்குண்டு.

  இதக் கேட்டதுமே கிள்ளி வளவனுக்குத் தன்னோட பெருமைய நெனச்சு ஒரு மெதப்பு வந்திருக்கும்.

  அப்ப அந்தக் கொழந்தைகளோட நிலமைய எடுத்துச் சொல்றாரு
  பாருப்பா.. கொல்றதுக்கு யானை வந்துருக்கு
  அதுவரைக்கும் பயந்திருந்த கொழந்தைகள்
  யானையப் பாத்ததும் பயத்து மறந்து சிரிக்குது
  அவ்வளவு வெகுளியான சின்னக் கொழந்தைகள்
  இந்தக் கொழந்தைகள் சாகனுமா?
  சரி. சொன்னதச் சொல்லீட்டேன்.
  உனக்கு விருப்பமானதச் செய்.

  அவ்வளவுதான். அதுக்கப்புறம் கிள்ளி வளவன் கொழந்தைகளை விட்டுர்ரான்.

  புலவர்கள் காசுக்காகப் பாடியிருக்காங்க. உண்மைதான். ஆனா புலவர்கள் காசுக்காக மட்டுமே பாடியவர்களாக இருந்ததில்லை. அந்த நிலமையும் பிற்காலத்தில் வந்தது. ஆனால் சங்ககாலத்தில் காசுக்காக மட்டுமே புலவர்கள் கூவவில்லை என்பதுதான் உண்மை.

 3. GiRa ஜிரா says:

  இந்தப் பாட்டுல ரெண்டு எடத்துல புன் என்கிற சொல் வந்திருக்குது. புண் தெரியும். அதென்ன புன்?

  இப்பவும் நாம இந்தப் புன்னைப் பயன்படுத்துறோம். எங்கயா? புன்னகை. அதுல வருதே புன்.

  நகை – சிரிப்பு
  புன்னகை – மெல்லிசாச் சிரிக்கிறது.

  அப்போ புன்னுக்கு என்ன பொருள்? மெலிவது.

  சரி. பாட்டுல எந்த மாதிரிப் பயன்படுத்தீருக்காரு புலவர்னு பாப்போம்.

  புலன் உழுது உண்மார் புன்கண்

  இந்த வரி ரொம்பவும் அருமையான வரி.

  புலன் – அறிவு
  புலன் உழுது உண்மார் – அறிவை உழுது உண்கின்றவர்கள்
  நிலத்தை உழுகின்றவன் உழவன்
  அறிவை உழுகின்றவன் புலவன்

  புலன் உழுது உண்மார் புன்கண் = புலவர்கள் புன்கண்

  அறிவை உழுது வாழ்கின்ற புலவர்கள் வாழ்க்கை மற்றவர்களை விட வளமை மெலிந்தே காணப்படும்.

  புலவர்களுக்கு அந்த வறுமை (மெலிவு) வரும் பொழுது என்பதுதான் “புலன் உழுது உண்மார் புன்கண்” என்ற வரிக்குப் பொருள்.

  இன்னொரு புன் இருக்கே. அதென்ன?

  புன்தலைச் சிறாஅர்

  சிறாஅர் = சிறார்
  தலை தலைதான்.
  புன்தலை – மென்மையான, மெலிந்த, பிஞ்சுத்தன்மையை உடைய தலை. அதாவது உறுதியில்லாத எளிதில் உடைந்து போகக்கூடியத் தலை.

  இப்பப் புன் என்ற சொல்லுக்குப் பொருள் புரிஞ்சிருக்கும்.

  இன்னொரு சொல்லையும் சொல்லி முடிச்சுக்கிறேன்.

  நீ வேட்டது செய்ம்மே

  பாட்டோட கடைசி வரி. செய்ம்மே-ன்னா செஞ்சுக்கோ. நீன்னா நீ. இது ரெண்டும் புரிஞ்சிருச்சு. அதென்ன வேட்டது? வேண்டியதைச் செய்னு நாகா சொல்லீருக்காரு. அதுவும் சரிதான். இந்தச் சொல்லோட வேர்ச்சொல்லைப் பாத்தா எளிமையாப் புரியும்.

  வேட்கை என்பதுதான் வேர்ச்சொல். வேட்கைன்னா விருப்பம். வேட்டது – விரும்பியது.

  விரும்பியது போலச் செய்னு சொல்லிக் கோவூர்க் கிழார் முடிக்கிறார்.

 4. நல்ல பாடல். சிறப்பான விளக்கம்.
  //களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த// Fantastic! என்ன பிரமாதமான ஒரு கணம்.

  //புலன் உழுது உண்மார் புன்கண் //
  விளக்கத்துக்கு நன்றி. ‘அட அமாம்ல!’ என்று எண்ணவைக்கின்றன உங்கள் தெளிவான விளக்கங்கள்.

 5. @dagalti சொல்வது போல், சிறுவர்கள் யானையை பார்க்கும் இடம் அருமை. எப்பொழுதும் போல் ஜீராவின் விளக்கமும் அருமை.

  சிறுவர்கள் யானையை பார்க்கும் இடம் எனக்கு இந்த கவிதையை நினைவூட்டுகிறது. எப்படி நம்மவர்கள் பல காலங்களுக்கு முன் இது போல் எழுதினார்கள் என்று வியக்க வைக்கிறது.

  Poet : Vasko Popa (Serbia)
  Translated from Serbian by Anne Fennington

  Pig
  —–
  Only when she felt
  The savage knife in her throat
  Did the red veil
  Explain the game
  And she was sorry
  She had torn herself
  From the mud’s embrace
  And had hurried so joyfully
  From the field that evening
  Hurried to the yellow gate

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s