விருந்தினர் போற்றுதும்

தடமருப்பு எருமை மட நடைக் குழவி

தூண் தொறும் யாத்த காண் தகு நல் இல்

கொடும் குழை பெய்த செழும் செய் பேழை

சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப

வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ

புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்

பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்

அம் துகில் தலையில் துடையினள், நப்புலந்து

அட்டிலோளே; அம் மா அரிவை

எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பு ஆண்டு

சிறு முள் எயிறு தோன்ற

முறுவல் கொண்ட முகம் காண்கம்மே

நூல்: நற்றிணை (#120)

பாடியவர்: மாங்குடி கிழார்

சூழல்: மருதம் திணை, கணவனுக்கு மனைவிக்கும் ஏதோ சின்னச் சண்டை, அப்போது வீட்டுக்குச் சில விருந்தினர்கள் வந்துவிடுகிறார்கள், அவர்கள் முன்னால் தன் கோபத்தைக் காட்டிக்கொள்ளாமல் எதுவும் நடக்காததுபோல் சமையல் வேலைகளைக் கவனிக்கிறாள் மனைவி, நிம்மதிச் சிரிப்போடு கணவன் பாடும் பாட்டு இது

வளைந்த கொம்பை உடைய எருமையின் கன்றுகள் மெல்ல நடக்கின்றன. அந்தக் கன்றுகளை வீட்டுத் தூண்களில் கட்டிப்போட்டிருக்கிறோம்.

எங்கள் வீட்டுக்கு இன்று சில விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அழகிய மாமை நிறம் கொண்ட என் மனைவி, வளைந்த வடிவத்தில் உள்ள ‘குழை’ என்கிற தோடுகளையும் விரல்களில் ஒரு சிறிய மோதிரத்தையும் அணிந்தவள், அவர்களுக்காகச் சமையல் செய்கிறாள்.

முதலில், அவள் வாழை இலையின் தடிமனான அடிக்காம்பை அறுத்து எடுக்கிறாள். இதனால் அவளுடைய மென்மையான விரல்கள் சிவந்துபோயிருக்கின்றன.

அடுத்து, சமையல் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. அடுப்புப் புகையில் அவளுடைய கண்கள் கலங்கியிருக்கின்றன. அழகான பிறை போன்ற அவளுடைய நெற்றியில் சின்னச் சின்ன வியர்வைத் துளிகள் தோன்றுகின்றன. அவற்றை அழகிய சேலைத் தலைப்பால் துடைத்துக்கொள்கிறாள்.

சிறிது நேரம் முன்னால்வரை, இவளுக்கு என்மேல் ஏகப்பட்ட கோபம். ஆனால் விருந்தினர்கள் வந்திருப்பதால் அதையெல்லாம் மறைத்துக்கொண்டு எதுவுமே நடக்காததுபோல் சமையலைக் கவனிக்கிறாள்.

இதுபோன்ற விருந்தினர்கள் அடிக்கடி வந்தால் நன்றாக இருக்கும், அப்போதுதான் என் மனைவியின் ஊடல் தீரும், சிறிய, கூர்மையான பற்கள் தெரியும்படி என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள், அதைப் பார்த்து நான் மகிழ்வேன்.

துக்கடா

 • பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பாட்டு என்று இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா? கொஞ்சம் ஒடித்துப் போட்டு மாற்றி எழுதினால் fresh புதுக்கவிதை தயார்!
 • ‘அம் துகில் தலையில்’ என்றால், அழகிய ஆடை(சேலை / புடைவை)யின் தலைப்பகுதி, அதாவது முந்தானை (முன்+தானை)
 • வாழை இலையில் சாப்பிடும் பழக்கமே அரிதாகிவிட்டது, அதன் தடிமனான காம்பை வெட்டி, தரையில் flatஆக இருக்கும்படி அமைத்துப் பின் உணவைப் பரிமாறுகிற நுணுக்கமான தகவலெல்லாம் இனிமேல் யாருக்கு ஞாபகம் இருக்கப்போகிறது?
 • ‘அதிதி தேவோ பவ’ என்பார்கள், புறத்துக்குமட்டுமல்ல, அது அகத்துக்கும் பொருந்தும்போல 😉

206/365

Advertisements
This entry was posted in அகம், காதல், நற்றிணை, நாடகம், மருதம். Bookmark the permalink.

10 Responses to விருந்தினர் போற்றுதும்

 1. GiRa ஜிரா says:

  இந்தப் பா இன்று காலையில் ஒரு இனிய அதிர்ச்சியாகவே வந்திருக்கிறது. அதற்குக் காரணம், இந்தப் பாடல் பள்ளிப் பாடத்தில் இருந்தது. ஆனால் மனப்பாடப்பாடல் கிடையாது. இலக்கணம் படிக்கும் பொழுது இலக்கணப் புத்தகத்தில் சில எடுத்துக்காட்டுகள் இருக்கும். அவைகளைப் பயன்படுத்தாமல் உரிச்சொல் தொடருக்குத் தடமருப்பு என்று செய்யுளில் இருந்தே எடுத்துப் பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரிச் செய்கைகளால் தமிழாசிரியர் சௌந்தரா கைலாசம் எழுதிய பாடலை என்னையே வகுப்பெடுக்கச் சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்படிப் பல நினைவுகளைத் தூண்டி விடும் இந்தப் பாடலை இன்று பதிவிட்டமைக்கு நன்றி. சில நினைவுகளை நினைப்பதே சுகம். 🙂

 2. balaraman says:

  அருமையான பாடல். அனைத்து வீடுகளில் இன்றும் இது நடந்துக் கொண்டுதான் இருக்கும்.
  என்னவோ தெரியவில்லை, இந்தப் பாடலைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் அன்னையின் முகம் தான் எனக்கு தோன்றியது.
  நன்றி.

 3. GiRa ஜிரா says:

  இந்தப் பாட்டுக்கு விளக்கம் சொல்லும் போது பல செய்திகளைக் கவனிக்க வேண்டியிருக்கு. சொல்ல வேண்டியிருக்கு. நான் உக்காந்து பெரிய பின்னூட்டமா அடிச்சிக்கிட்டேயிருந்தேன். எழுதி முடிச்சதும் லேப்டாப் கிராஷ் ஆயிருச்சு. எழுதுனது வீணாப் போச்சேன்னு நெனச்சேன். சரி. திரும்ப எழுதலாம்னு முடிவு பண்ணி லேப்டாப்பைத் தொடக்கி பயர்பாக்ஸைத் தொடங்குனா 365பா வலைப்பக்கமும் அதுக்கு நான் எழுதி வச்சிருந்த பின்னூட்டமும் அப்படியே இருக்கு.

  ஒரு தமிழ்த்தொண்டில் என் பிணக்கை நுழைத்த குற்றத்தை முருகன் நினைவுபடுத்தி இனிமேல் அப்படிச் செய்யாமல் தொடர்கன்னு பின்னூட்டத்தைக் காப்பாத்திக் குடுத்ததாவே எனக்குத் தோணுச்சு. எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு. பொறுப்பது உன் கடன். முருகா.

  சரி நம்ம பாவுக்கு வருவோம்.

  பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு வரலாற்றுத் தகவல். அது முடிஞ்சதும் அடுத்த பின்னூட்டத்துல பாவின் விளக்கத்தைப் பார்க்கலாம்.

  பாட்டு எப்படித் தொடங்குது? தட மருப்பு எருமை.

  மாடுகளை நல்லாப் பாத்தவங்களுக்குத் தெரியும். ஆவுக்கும் காளைக்கும் கொம்பு மேல பாத்து வளரும். ஆனா எருமைக்கு? ஒரு மாதிரி கட்டாணிமுட்டாணியா அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு (அல்லது) தட்டையா பக்கவாட்டுல போகும். கொம்ப மட்டும் வெச்சே அது எருமைன்னு சொல்லீரலாம். அதுனாலதான் தட மருப்பு எருமை.

  இதச் சொல்லும் போது ஒரு வரலாற்று நிகழ்ச்சியைச் சொல்லியே ஆகனும். கிருஷ்ணதேவராயர் கிட்ட வேலை பார்த்தவர் அரியநாத முதலியார். அந்தப் பக்கமெல்லாம் துர்க்கையம்மனுக்கு எருமைக் கிடா பலி குடுப்பது வழக்கம். அரசரும் ஒரு நல்ல எருமைக் கெடாவை நேந்து விட்டிருக்காரு. ஆனா பலிபீடத்துக்கு வரும் போதுதான் பிரச்சனை புரியுது. கொம்பு வளைஞ்சு லேசா கழுத்தை மறைச்சாப்புல இருக்கு. இப்பக் கிருஷ்ணதேவ ராயரு வெட்டனும். ஒழுங்கா வெட்டீட்டா நல்லது. இல்லைன்னா அது அபசகுணமா கருதப்படும்.

  அப்ப அரியநாதமுதலியார் ஒரு திட்டம் சொல்றாரு. எருமைக்கு முன்னாடி சின்னதாக் குழிதோண்டி அதுக்குள்ள புல்லப் போடச் சொல்றாரு. இப்ப எருமை நல்லாக் குனிஞ்சு புல்லத் திங்குது. கழுத்தை நல்லாத் தெளிவாக் காட்டிக்கிட்டு. அப்புறமென்ன பலி பிரமாதமா கொடுத்தாச்சு. இந்த அரியநாத முதலியார்தான் விசுவநாத நாயக்கரோடு சேந்து தமிழ்நாட்டுக்கு வந்து அமைச்சரா இருந்தாரு. அறுபத்துநான்கு பாளையங்களாப் பிரிச்சுப் பாளையக்காரர்கள் கிட்ட கொடுத்து ஒரு அமைதியான சூழலை திரும்பக் கொண்டு வந்ததுக்கு இவரும் காரணம்னு சொல்வாங்க.

 4. GiRa ஜிரா says:

  இந்தப் பாடலோட துறை விளக்கத்தைப் பாத்தா ஒரு உண்மை புரியும். அதாங்க.. தலைவனும் தலைவியும் எதுக்காக சண்டை போட்டாங்கன்னு தெரியும். தலைவன் போகக் கூடாத எடத்துக்குப் போயிட்டு வந்திருக்கான். அதான் தலைவிக்கு ஆத்திரம். அதுல உண்டானதுதான் சண்டை.

  முன்னாடியெல்லாம் ஒருத்தர் செல்வந்தரான்னு எப்படி முடிவு செய்வாங்க தெரியுமா? எத்தன மாடு இருக்குங்குறத வெச்சுத்தான். அதுனாலயே மாடுங்குற சொல் செல்வம் என்னும் பொருளிலும்ம் வழங்கப்பட்டது.

  எடுத்துக்காட்டு வேணுமா? 🙂

  கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
  மாடல்ல மற்றை யவை

  திருக்குறள்தான். இதுல வரும் மாடல்ல என்னும் சொற்றொடர் செல்வத்தைதான் குறிக்கிறது.
  அப்படீன்னா, செல்வம் = மாடு = வளமை

  ஒரு மொழியின் தொடக்கம் வளமையா இருக்கனுமில்லையா. அதான் தமிழ் அகரத்துல தொடங்குது. “அ” எழுத்தைப் பக்கவாட்டுல பாருங்க. ஒரு மாட்டின் முகம் தெரியுதா? இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு விளக்கம் இருக்குன்னு சொல்றாங்க.

  சரி. இதை ஏன் இப்பச் சொன்னேன்னு கேக்குறீங்களா? பாட்டோட முதல் ரெண்டு வரிகள் மறைமுகமாச் சொல்ற சேதியே இதுதான். தலைவனும் தலைவியும் நல்ல செல்வந்தர்கள். வசதியான வீட்டில் இருக்கிறவர்கள்.

  தடமருப்பு எருமை மடநடைக் குழவி
  தூண் தொறும் யாத்த காண் தகு நல் இல்
  இந்த ரெண்டு வரிக்குள்ள புலவர் என்னென்ன விவரங்கள் சொல்றாரு தெரியுமா?

  காண் தகு நல் இல் – வீட்டப் பாத்தாலே பளிச்சுன்னு இருக்கனும். இந்த வரியில் ஒவ்வொரு சொல்லிலும் சில எழுத்துகளைச் சேக்குறேன். அதோட பொருள் படக்குன்னு புரிஞ்சிரும்.
  காண் தகு நல் இல்
  காணத் தகுந்த நல்ல இல்லம்

  இவ்வளவுதாங்க பொருள். எல்லாமே நமக்குத் தெரிஞ்ச சொற்கள்.

  இந்தப் பாட்டில் வரும் தலைவன் தலைவியின் வீடுதான் அந்த இல்லம். தலைவி அவ்வளவு அருமையா வீட்டை வெச்சிருக்கா. என்னது? தலைவன் என்ன செஞ்சானா? காசு குடுத்ததோட சரி. அப்புறந்தான் போகக்கூடாத எடத்துக்குப் போயிர்ரானே. அதுனாலதானே சண்டை. இந்தத் தலைவனா வீட்டை பளிச்சுன்னு வெச்சுக்க உதவுவான்?!

  தடமருப்பு எருமை – வளைந்த கொம்புகளை உடைய எருமை
  மட நடைக் குழவி தூண் தொறும் யாத்த – இந்த வரிக்குள்ளேயும் சேதி ஒளிஞ்சிருக்கு.
  மட நடைக் குழவின்னா என்ன? நடைன்னா நடக்குறது. மட நடைன்னா? மடத்தனமா நடக்குறதா? ஆமா. நடக்கத் தெரியாம தத்தக்கா பித்தக்கான்னு நடக்குறதுதான் மடநடை. யார் அப்படி நடக்குறாங்க? எருமைக் குழவி. அதாவது எருமைக் கன்னுக்குட்டி.

  அது ஏன் அப்படி நடக்குது? ஏன்னா அது புதுசா ஈன்ற கன்று. அதுனால அப்படி நடக்குது. கொஞ்சம் பழகுனா நடை வந்துரும். ஆனா புதுக்கன்று உதறலோடதான் நடக்கும். அதுனால அதை மாட்டுக்குப் பக்கத்துலயே கட்டாம, பாதுகாப்பாத் தூண்ல கட்டிப் போட்டிருப்பாங்க. வீட்டுக்கு உள்ள இருக்கும் தூண்ல கட்டமாட்டாங்க. முன் வாசல்லயே தூண்கள் இருக்கும். தொழுவத்திலும் தூண்கள் இருக்கும். அதுல கட்டிப் போட்டிருப்பாங்க.

  அப்படி எத்தன கன்றுக்குட்டி இருக்கு? தூண் தொறும் கட்டி வெச்சிருக்காங்க. ஒவ்வொரு தூண்லயும் ஒவ்வொரு கன்னுக்குட்டி. ஒரே நேரத்துல இத்தனை கன்றுகள் ஈன்றெடுக்கனும்னா மாடுகள் நெறைய இருக்கனும். இருக்கு. அவ்வளவு வசதியான வீடு.

  இன்னொன்னு கவனிக்கனும். தூண் தொறும் யாத்த. கம்பு நட்டியெல்லாம் கட்டிப் போடலை. தூணே கட்டியிருக்காங்க. அதாவது கட்டப்பட்ட வீடு. கட்டப்பட்ட தொழுவம். அதுலயிருந்து அந்த வீட்டோட வளமையைப் புரிஞ்சிக்கலாம்.

  இப்ப அந்த வரியைப் படிச்சுப் பாருங்க. நல்ல வசதியான வீடுன்னு புரியும்.
  தடமருப்பு எருமை மடநடைக் குழவி தூண் தொறும் யாத்த

 5. GiRa ஜிரா says:

  இந்தப் பாட்டின் பொதுப்பொருளை நாகா மிக அழகாகச் சொல்லி விட்டார். என்ன பொருள்? கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை. எதனால்? கணவன் பரத்தை வீட்டுக்குப் போய் வந்தான். சரி. அப்புறம் என்ன ஆச்சு. அந்நேரம் பாத்து வீட்டுக்கு விருந்தாளி வந்தாச்சு. ஆகா! நல்ல நேரம் பாத்து வந்திருப்பாங்களோ!

  ஆனா அது நல்ல நேரந்தான். ஏன்னா. வீட்டுக்கு வந்த விருந்தினரை விருந்தோம்பல் செய்யனுமே. அது பெருமையாச்சே. அதுனால சண்டைய சட்டுன்னு மறந்துட்டு தலைவி விருந்தாளிகளுக்குச் சமைக்கப் போறா.

  இதுல யாருக்கு லாபம்? தலைவனுக்குதான். சண்டை முடிஞ்சிருச்சே. அதான் அவளோட இந்த உயர்வான விருந்தோம்பல் பண்பைப் பாராட்டுறான்.
  அதுல அங்கங்க சிலபல தகவல்கள்.

  தலைவியை விளக்கும் வரியில் பாட வேறுபாடு ஒன்றும் உண்டு. பாட வேறுபாடுன்னா என்னதா? அதாவது ஒருத்தர் ஒரு பாட்டை ஓலையில எழுதுறாரு. திருக்குறள்னே வெச்சுக்குவோமே. ஆதிபகலன் முதற்றே உலகுன்னு எழுதுறாரு. இன்னொருத்தர் கொஞ்ச நாள் கழிச்சு அந்த ஓலையைப் படியெடுக்குறாரு. கையெழுத்து கொஞ்சம் முன்னப் பின்னதான் இருக்கு. ஆதிபகலன் என்பதை ஆதிபகவன் என்று பிரதி எடுத்து விட்டார். கொஞ்ச நாள் கழிச்சி இந்த ரெண்டு ஓலையுமே ஒருத்தருக்குக் கிடைக்குது. ஒன்னுல ஆதிபகலன். இன்னொன்னுல ஆதிபகவன். இதுக்குதான் பாட வேறுபாடு அல்லது பாடபேதம்னு பேர்.

  இந்தப் பாட்டுல அப்படி என்ன பாட வேறுபாடு இருக்குன்னு கேக்குறீங்களா?
  கொடும் குழை பெய்த செழும் செய் பேழை
  இதுதானே பாட்டோட மூன்றாவது வரி.
  இன்னொரு ஓலையில் இப்பிடி இருந்திருக்கு.
  கொடும் குழை பெய்த செழும் செய் பேதை
  ரெண்டையும் வெச்சிப் பொருள் சொல்லலாம். பாட்டோட மையக் கருத்து மாறாது. ஆனா ஓலையாராய்ச்சி செய்றவங்க இந்த மாதிரி வேறுபாடுகள் இருக்குன்னு சொல்லீருவாங்க.

  நல்ல பண்புள்ள அந்தத் தலைவி ஒரு அரிய பேழைதான். அதே நேரத்தில் கணவனோடு இந்த மாதிரி சண்டை போட வேண்டி வருவதனால் பேதையும்தான். 🙂

  அதே போல வாழை ஈர்ந்தடிங்குறதும் ஒரு நல்ல வழக்கம். இளம் வாழையிலைன்னா அப்படியே போடலாம். கொஞ்சம் பெரிய இலைன்னா நடுவுல இருக்கும் தண்டு தடியா இருக்கும். அடிப்பக்கமா அந்தத் தண்டப் பாதியா வெட்டீட்டா சாப்பிட வசதியா இருக்கும். இதை எங்க ஊர்கள்ள செஞ்சி பாத்திருக்கேன். சாப்பாட்டுக்கடைகள்ளயே இலை போடாத இந்தக் காலத்துல இத எங்க பாக்குறது?!

 6. சொக்கன் சொல்வது போல் இதை அருமையான ஒரு புதுக்கவிதையாக மாற்றி விடலாம். சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் அவர்களின் வாழ்கைமுறையை அருமையாக சித்தரித்திருப்பார்கள்.

  ஜிராவின் விளக்கம் அருமை. சங்க பாடல்களை நாம் இப்படித்தான் கூர்ந்து கவனிக்கவேண்டும். தமிழ் மொழியின் உச்சகட்ட சாதனை சங்க இலக்கியம் தான் என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

 7. amas32 says:

  அந்த காலம் முதல் இந்த காலம் வரை விட்டுக் கொடுத்து, குடும்பத்தை செம்மையாக நடத்திச் செல்வது மனைவி தான்! கணவன் மானத்தை கப்பலேற்றாமல் அடுப்படியில் வேர்வை சிந்த உழைக்கிறாள், அதையும் கணவன் நிம்மதி பெருமூச்சுடன் ரசிப்பதாகக் காட்டியுள்ளார் புலவர். இப்படித்தான் பல சமயங்களில் பல கணவன்மார்கள் escape ஆகி விடுகிறார்கள். இந்தப் பாடலில் பல நுண்ணிய தகவல்கள் ரசிக்க வைக்கின்றன.
  இன்றும் பண்டிகை காலங்களில் எங்கள் வீட்டில் வாழை இலையில் தான் உணவு பரிமாறுகிறோம் 🙂
  amas32

 8. Madhan says:

  அட்டகாசம் சொக்கன் & ஜி.ரா 🙂

 9. Gira you should be writing separate posts like this, your knowledge in Tamil is very commendable and admirable. You have the knowledge to be a Tamil lecturer. Great poem sokkan, thanks for posting and lovely explanation Gira.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s