நானே!

’காண்கின்ற நிலம் எல்லாம் யானே’ என்னும்,

‘காண்கின்ற விசும்பு எல்லாம் யானே’ என்னும்,

‘காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே’ என்னும்,

‘காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே’ என்னும்,

‘காண்கின்ற கடல் எல்லாம் யானே’ என்னும்,

காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொல்லோ?

காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?

காண்கின்ற என் காரிகை செய்கின்றனவே

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல்

பாடியவர்: நம்மாழ்வார்

சூழல்: ஒரு தாய், அவருடைய மகள் திருமால்மீது நேசம் கொண்டுவிட்டாள், எந்நேரமும் அவரையே எண்ணிக்கொண்டிருக்கிறாள், இதைக் கண்டு கவலை கொள்ளும் தாயாகத் தன்னை உருவகித்துக்கொண்டு பாடுகிறார் ஆழ்வார்

மக்களே,

கண் எதிரே தோன்றுகின்ற இந்த உலகம்மட்டும்தான் உங்களுக்குத் தெரியும், உங்களிடம் நான் என்ன சொல்லமுடியும்? என்னுடைய மகள் செய்கிற விநோதச் செயல்களைப் பற்றிச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியுமா?

நடக்கும் வழியில் எதிர்ப்படும் நிலத்தைப் பார்க்கிறாள், ‘இந்த நிலம்முழுவதும் நான்தான்’ என்கிறாள். மேலே உள்ள வானத்தைப் பார்க்கிறாள், ‘இந்த வானம்முழுவதும் நான்தான்’ என்கிறாள், கண்ணில் படும் கொடிய நெருப்பையெல்லாம் காண்பித்து ‘அதுவும் நான்தான்’ என்கிறாள், ‘வீசுகிற காற்றுமுழுவதும் நான்தான்’ என்கிறாள், ‘கண்ணில் படும் கடல்முழுவதும் நான்தான்’ என்கிறாள்.

இவளுக்கு என்ன ஆகிவிட்டது? பார்வைக்கு இனியவனாகிய, கடல் வண்ணம் கொண்ட திருமால் இவளை ஆட்கொண்டுவிட்டானோ?

துக்கடா

 • ’இறைவன் அம்சம் நான், அதனால் நிலம், வான், நெருப்பு, காற்று, நீர் எனப் பஞ்ச பூதங்களும் நானே’ என்று சொல்லும் இந்தப் பெண்ணைப் பாரதியார்கூடப் பாடியிருக்கிறார், அதுவும் இரண்டு இடங்களில்:
 • 1. http://goo.gl/olsMO
 • 2. http://goo.gl/De2zg

205/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி, விஷ்ணு, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to நானே!

 1. amas32 says:

  இறைவன் பால் இருக்கும் ஆழ்வாரின் எல்லையில்லா அன்புக்கு இந்தப் பாசுரம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு. நாயிகா பாவத்திலும் அவர் பாசுரங்கள் இயற்றியுள்ளார்.
  இங்கே இறைவன் மேல் காதல் கொண்ட மகள் படும் வேதனையை கண்டு தாயின் நிலைமையில் விவரிக்கிறார். ஆனால் தந்தையும் அவரே மகளும் அவரே.
  வேதத்தின் சாரம்சத்தை பிரபந்தத்தில் காணலாம். அதுவே இந்த பாசுரத்தில் தெரிகிறது. நானே நீ, நீயே நான் என்கிறாள் இந்தப் பெண். நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு இவைகள் அத்தனையிலும் இறைவனை காண்கிறாள்.
  பிரபஞ்சமே நான் தான் என்கிறாள். இந்த மனோபாவம் வருவது எவ்வளவு கடினம்! நாம் நெருங்கிய உறவின் இடத்திலேயே பேதம் பார்க்கிறோம்.
  நமக்கும் படிப்படியாக நல்ல புத்தி வர நம்மாழ்வார் திருவடிகளைச் சரணடைவோம்.
  amas32

 2. ஆழ்வார்கள் கண்ணன் மீது கொண்ட பக்தியை எதையுடன் ஒப்பு நோக்குவது என்ற திகைப்பே மேலிடருகிறது. இன்னுமொரு ஆழ்வார் பாடலே நினைவுக்கு வருகிறது.

  இந்த உலகம், கண்ணனின் மீது கொண்ட மையல். குலசேகர ஆழ்வார், பாடியது:

  மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ்
  வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
  ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
  மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே

  அரங்கா!

 3. இந்தப் பாடலும் விருப்பப் பாடல் தான் சொக்கரே! இதை இன்று பார்த்து இட்டமைக்கு மிகவும் நன்றி!:)

  ஒன்னே ஒன்னு எல்லாரையும் கேட்கட்டுமா? யோசிச்சிச் சொல்லுங்க பார்ப்போம்:)

  ’காண்கின்ற நிலம் எல்லாம் யானே’ என்னும்,
  ‘காண்கின்ற விசும்பு எல்லாம் யானே’ என்னும்
  -ன்னு சொல்றாரு-ல்ல?

  “காண்கின்ற” நிலம்-ன்னா, அப்போ “காணாத” நிலமும் ஒன்னு இருக்கு!
  காண்கின்ற நிலம் எல்லாம் கடவுளைச் சொன்னவர், ஏன் காணாத நிலத்தைச் சொல்லவில்லை?:) நாம் காணாத நிலத்தில் கடவுள் கிடையாதா?

  வேற மாதிரி கேட்கிறேன்!
  வெறுமனே “நிலம் எல்லாம் கடவுள், விசும்பு எல்லாம் கடவுள்”-ன்னு சொல்லி இருக்கலாமே!
  அதென்ன “காண்கின்ற நிலமெல்லாம்” கடவுள்?
  Any Answers?:))

 4. இதே பாட்டில் சிவபெருமானையும் ஆழ்வார் பாடுவாரு!
  உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்
  உரைக்கின்ற முகில் வண்ணன் யானே என்னும்
  ன்னு வரும்…

  பொதுவா ஆழ்வார்கள், பிற தெய்வங்களை அதிகம் பாட மாட்டார்கள்,
  வைணவர்கள் ஈசன் கோயிலுக்கெல்லாம் வர மாட்டார்கள், ஆனா நாங்க பெருமாள் கோயிலுக்குப் போறோமே-ன்னு சிலர் குறையாகச் சொல்வதுண்டு!:)

  ஆழ்வார்களுக்குப் “பரந்த மனப்பான்மை” இல்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு!:))
  ———-

  ஆனால்….அது உண்மையல்ல!
  ஆழ்வார்களின் முதல்வரான நம்மாழ்வார் தொட்டு, இன்னும் பலரும் சிவபெருமானைப் பலவாறு வாழ்த்தும் பாசுரங்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன!

  சொல்லப் போனால், 32 வயதில், நம்மாழ்வாரின் இறுதிக் கட்டத்தில், மோட்சம் புகும் வேளையிலும்….
  “முனியே, நான் முகனே, முக்கண் அப்பா” – என்று மறக்காமல் சிவனை அப்பா-ன்னு பாடுவார்!
  ———–

  அப்பறம் ஏன் இந்தக் குற்றச்சாட்டு-ன்னு பாத்தீங்க-ன்னா….
  ஆழ்வார்கள், என்ன தான் ஈசனைப் பாடினாலும், தங்கள் குடிக்கடவுளான திருமாலை, உசர வைத்துக் கொள்ளுவார்கள்!
  ஆனால், ஒரு போதும், ஈசனைத் தாழ்த்த மாட்டார்கள்!

  நரசிம்ம அவதாரமா, அதை அடக்க சரபம்! வாமன அவதாரமா, அதை அடக்கிச் சட்டையாய் மாட்டிக்கிட்ட சட்டநாதர்-ன்னு வலிந்து கதைகட்டித் தாழ்ச்சியும் இருக்காது, உயர்ச்சியும் இருக்காது!
  ஈசன் கோயிலில், திருமாலை ஒரு பரிவார தேவதை/ அடங்கிய தேவதையாக வைத்து, ‘பாத்தீங்களா பரந்த மனப்பான்மை’? என்பதைக் காட்டிலும்…..
  ஈசனை, திருமால் ஆலயங்களில் வைக்கவும் வைக்காது, அதே சமயம் அடங்கிய ஒன்னாகத் தாழ்த்தவும் தாழ்த்தாது…எவ்வளவோ மேல் அல்லவா?:)

  ஈசனை, சமண ஆலயங்களில் வைப்பரோ? அங்கு நாமே எதிர்பார்க்க மாட்டோம்! ஆனால் இங்கு மட்டும் ஏனோ ஒரு எதிர்பார்ப்பு:)
  ———

  நிற்க…
  ஏன் இப்படி?-ன்னு உண்மையான காரணம் தெரியணும்-ன்னா…
  பல ஆழ்வார்கள் – இறைவனை (திருமாலை) நாயகி பாவத்திலேயே கண்டார்கள்! அதாச்சும் தன்னைப் பெண்ணாகப் பாவித்து, அவனை ஆணாகப் பாவித்தல்…

  இப்படிக் காதலனாக மட்டுமே வரித்து விட்டதால்…
  அவனும் காதலன், இவனும் காதலன்-ன்னு சொல்ல முடியுமா?
  திருமாலும் காதலன், ஈசனும் காதலன்-ன்னு சொல்ல முடியுமா? :)))
  நல்லா இருக்காது-ல்ல? அதான் காரணம்!

  மற்றபடி, ஈசனை, திருமாலுக்கு ஒரு உறவாகப் பார்த்து, அவனை மதித்தே போற்றுவார்கள், பாசுரங்களில்!
  * பிறைத் தங்கு சடையானை வலத்தே வைத்து = திருமங்கை ஆழ்வார்
  * அரன்-நாரணம் நாமம், இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து = முதலாழ்வார்கள்
  * கபாலி ஈசன் விடுதந்தான் தாலேலோ = பெரியாழ்வார்! (கண்ணன் குழந்தைக்கு, பூவால் ஆன காப்பை பரிசு அனுப்புறாராம் ஈசன்)

  இப்படி நிறைய உண்டு!
  எனவே. இதைப் புரிந்து கொண்டால், இந்த “நாயகி பாவத்தை” புரிந்து கொண்டால், நமக்கு அசூயை வராது!

 5. இன்னொன்னும் சொல்லணும்!
  என் ஆருயிர்க் காதலன் முருகனை, ஆழ்வார்கள் அதிகம் பாடவில்லை! மொத்தம் மூனு இடம் தான்!

  ஆனா, பின்னாளில் வந்த அருணகிரியார், முருகனைப் பாடும் போதெல்லாம், திருமாலைப் பாடுறாரே, ஆழ்வார்கள் அப்படி ஏன் பாடவில்லை?-ன்னும் ஒரு கேள்வி எழும்:)
  ஆனா, நாயன்மார்களே, முருகனை அதிகம் பாடவில்லை! அதான் உண்மை!:))) அப்பறம் தானே ஆழ்வார்கள் பாடுவதற்கு?:)
  ———

  இது ஏன்னா…
  சமய நிலப்பரப்பு = சைவம் (சிவன்)/ வைணவம் (திருமால்)-ன்னு அமைந்துவிட்டது! இவர்களே பிரதான இறைவடிவங்கள் என்று ஆகி, முருகப் பெருமான் சைவத்துக்குள் அடங்கி விட்டார்!
  அதனால் ஆழ்வார்கள்/ நாயன்மர்கள் இருவருமே, பிரதான வடிவத்தில் மட்டுமே Focus செய்தனர்!

  ஆனால் சங்கத் தமிழில் இப்படி இல்லை!
  மாயோன் (திருமால்), சேயோன் (முருகன்) மட்டுமே தொல்காப்பியத் தமிழில் முக்கிய வடிவங்கள்!
  ஆனா பண்பாட்டுக் கலப்புக்குப் பிறகு இது ஏனோ மாறிவிட்டது!

  பின்னாளில் வந்த அருணகிரி, மீண்டும் தமிழ் முருகனையும், தமிழ்த் திருமாலையும் முன்னிறுத்தி, பலவாறு பாடினார்!

  முருக ஆலயங்களில் தமிழே ஒலிக்க வேண்டும் என்பது அருணகிரியின் தீராத ஆசை!
  திருமால் ஆலயங்களில் அவ்வாறு தமிழ் ஒலிப்பதைக் கண்டு ஏங்கி, “வண் தமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்”-ன்னு திருமாலை அருணகிரி வாழ்த்திப் பாடினார்!
  ——-

  ஆழ்வார்கள் முருகனை அதிகம் பாடாததன் காரணம் இது தான்!
  நாயன்மார்களே முருகனை அதிகம் பாடவில்லை:)

  அதனால் என்ன முருகா? உனக்கு ஒரு குறையா?
  நான் பாடுறேன் உன்னை!
  ஆழ்வாருக்குத் திருமாலிடத்தில் நாயகி பாவம்-ன்னா, எனக்கு உன்னிடத்தில் முருகா…
  நான் பாடுறேன்டா உன்னை – நெஞ்சார, வாயார, உடம்பார, உதட்டார….நான் பாடுறேன் முருகா ஒன்னை…என் செல்வமே!

 6. இன்னும் ஒன்னே ஒன்னு சொல்ல விழைகிறேன்:)

  மேலே சொக்கர் குடுத்த பாடல் = திருவாய்மொழி!
  இதுக்கு “திராவிட வேதம்”, “தமிழ் வேதம்” என்ற பெயர் உண்டு!

  அப்போ மத்தது எல்லாம் தமிழ் வேதம் இல்லையா? அது என்னா இது மட்டும் ஸ்பெஷல்?-ன்னு கேட்கலாம்!:)
  வேதம்-ன்னா ஏதோ பெரிய ’அந்தஸ்து’-ன்னு எடுத்துக்கிட்டாத் தான் இந்த ஈகோ பிரச்சனை! இராமாயாணம் என்பது தனி நூல், அதுவும் வேதம் தானே-ன்னு கேட்போமா? ரெண்டுமே சிறப்பு தான்! ஆனா அது வேற, இது வேற!

  ஆண்டாள், குலசேகராழ்வார்-ன்னு யாருடைய நூலும் திராவிட வேதம்-ன்னு சொல்வதில்லை!
  நம்மாழ்வாரின் திருவாய்மொழியே திராவிட வேதம்!
  இதைச் சொன்னது = சிறந்த சிவ பக்தரான, இடைக்காட்டுச் சித்தர்!

  குருகூர்….
  சேய்மொழி என்பார் சிலர், இவ்வுலகில்
  தாய்மொழி என்பேன் தகைந்து
  -ன்னு சித்தரே, இதுக்கு தமிழ் வேதம் என்று பெயர் வைத்தார்! = ஏன்???
  ———–

  ஒரு காலத்தில்……எல்லார்க்கும் பொதுவான வேதம், ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டுமே தங்கி விட்டது!
  அதிலும் அந்தச் சாராரின் பெண்களே ஓதக் கூடாது, ஆண்கள் மட்டுமே ஓதணும்-ன்னு எல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து விட்டார்கள்!

  நல்ல இறைக் கருத்துக்கள், இப்படிச் சமுதாயத்தில் ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கி விட்டதைக் கண்ட, மாறன் என்னும் சிறுவன் (நம்மாழ்வார்)….
  வேதக் கருத்துக்கள் அத்தனையும், தமிழிலே செய்து வைத்தான்! – இப்போ ஆண்/பெண், சாதி/பேதமின்றி….யாரும் அறிந்து கொள்ளலாம்/ஓதலாம்-ன்னு ஆயிருச்சி!

  இதனால் தான் “வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்”-ன்னு பாடல்!
  அதுவும் அதைச் சொல்லிச் சிறப்பித்தது, சிவநெறிச் செல்வர் = இடைக்காட்டுச் சித்தர்!
  இப்படி நோக்கத்துக்குத் தான் = தமிழ் வேதம்-ன்னு பேரே தவிர, பெருமைக்கோ/டாம்பீகத்துக்கோ அல்ல!

  எய்தற்கு அரிய மறைகளை – இன் தமிழால்
  செய்தற்கு வரும் சடகோபன்
  -ன்னு பாடல்!
  இதை நாம மட்டும் சொல்லிக்கலை! வடக்கிலும், சமஸ்கிருதத்திலும், அவிங்களும் ஒத்துக்கிட வேண்டிய கட்டாயம் ஆகிப் போச்சு!:))
  சஹஸ்ர சாகோ உபநிஷத் சமாம்யஹம்
  நமாம்யஹம் “திராவிட வேத” சாகரம்
  -ன்னு நம்ம தமிழ் நூலை, வடமொழியில் புகழ வேண்டிய கட்டாயம், அவிங்களுக்கு ஏற்பட்டுப் போச்சு:)))

  இது பற்றி, என் விரிவுரையை, எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டு இருந்தார்! இதோ http://www.jeyamohan.in/?p=13066

 7. எழுத்தாளர் சுஜாதா…சிறந்த கதை சொல்லி! உயிர்ப்பு மிக்க நாவல் ஆசிரியர்! நான் உட்பட பலருக்கும் உந்து சக்தி!
  ஆனா….எல்லாரும் எல்லாமும் அறிந்து விட முடியாது அல்லவா? கிரிக்கெட் பத்தி என்னைய கேட்டா…பேப்பே தான்:))

  சுஜாதா – தன்னோட “ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்” புத்தகத்தில்,
  “வேதத்தை translate பண்ணாப் போலத் தெரியலையே…சும்மா ஒரு இதுக்காக தமிழ் வேதம்-ன்னு சொல்லிட்டாங்களோ?”-ன்னு ஒரு ஜாலிக்குச் சொல்லுவார்:)
  “எளிய அறிமுகம்” தானே? So he might not have gotten down to deep details!

  இதைச் சொல்லுறத்துக்கு வேதமும் தெரியணும், திருவாய்மொழியும் தெரியணும்! அப்போ தான் ஒப்பிட முடியும்!
  Itz NOT a direct translation word by word! But a factual representation of the Vedas in Tamizh, –to benefit all castes & women!
  ———-

  * தமசோ மா ஜ்யோதிர் கமய
  = மயர்வறு மதிநலம் அருளினன் யவனவன்

  * பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய
  = இல்லதும் உள்ளதும்–எல்லையில் அந்நலம்

  * அசேஷ சித்-அசித் ப்ரகாரம், ப்ரம்மம் ஏகமேவ தத்வம்
  = அவை அவை தோறும், உடல் மிசை உயிரென, கரந்தெங்கும் பரந்தே!

  இதெல்லாம் வேத வாக்கியங்கள் (Maha Vaakyas)!
  அதைத் தமிழாக்கித் தருகிறான் – மாறன் நம்மாழ்வார் என்னும் இந்தப் பையன்! பாவம் 32 வயசுலேயே போய்ச் சேர்ந்துட்டான்!
  ———

  சொக்கர் குடுத்த இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
  வேதத்தைத் தேடிப் புடிச்சிக் குடுத்து இருக்கீக சொக்கரே:)

  * காண்கின்ற நிலம் எல்லாம் யானே’ என்னும்,
  = பர்ஜன் யோவா பாம ஆயதனம், ஆயதனவான் பவதி

  * காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே’ என்னும்,
  = அக்னிர் வா பாம ஆயதனம், ஆயதனவான் பவதி

  * காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே’ என்னும்
  வாயோர் வா பாம ஆயதனம், ஆயதனவான் பவதி

  இப்போ புரியுதா, ஏன் “தமிழ் வேதம்”-ன்னு?
  வேதம் தமிழ்ச் செய்தான் = மாறன் சடகோபன்
  திருவாய் மொழிக்கு உருகாதார், ஒரு வாய் மொழிக்கும் உருகார்

 8. இத்தோட முடிச்சிக்குறேன்:)))
  முக்கியமா, #365paa நண்பர்கள் எல்லோருக்கும் ஒன்னு சொல்லணும்!
  ————–

  இந்த #365paa…..ஏதோ, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் காட்டிக் கொள்ளும் தளம் அல்ல!
  இது தமிழ்த் தளம்!
  நம்ம தமிழில், நம்ம மரபில்….. எப்படியெல்லாம் “மானுடம்” செழித்தது-ன்னு, புதையல் தோண்டி எடுத்துக் குடுக்கும் தளம்! – ஆனா, சீரியசா இல்லாம, ஜாலியா:)

  எத்தனையோ செம்மொழிகள்…
  வடமொழி (எ) சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம், ஹிப்ரூ-ன்னு எத்தனையோ வளமான மொழிகள்…
  எல்லாமே நல்ல மொழி தான்! ஆனா இன்னிக்கி, அவற்றின் நிலை என்ன?
  ————-

  ஏன் தமிழ் மட்டும் உயிரோட இருக்கு?
  ஏன்-ன்னா….தமிழ் வெறுமனே கோட்பாடு மொழியும் அல்ல! தத்துவ மொழியும் அல்ல! ஒரு சிலருக்குன்னே புழங்கும் மொழியும் அல்ல!

  சைவம் = பெரும்பான்மை,
  வைணவம்/சமணம்/பெளத்தம் = சிறுபான்மை
  ஆனா….தமிழ், எல்லா உணர்வுக்கும் மதிப்பு குடுக்கும்!

  களவு மணம், கற்பு மணம் = ரெண்டுமே மனித உணர்வு தான்! தமிழ் இரண்டையுமே ஆதரிக்கும்!
  உணவு, உடை, உறையுள், தன் முன்னேற்றப் பெருமை-ன்னு எல்லாம் உண்டு!

  ஒவ்வொருத்தருக்கும் தமிழ் ஈடு குடுக்கும்!
  ஏன்னா…தமிழின் வேர் அப்படி = சங்கத் தமிழ்!
  சங்கத் தமிழின் அடிநாதம் = மானுடம்!!!

  ————

  சமஸ்கிருதமா? = தத்துவம்/வேதம்
  இலத்தீன், கிரேக்கமா? = காவியம்/ மேட்டுக் குடி
  ஹிப்ரூ-வா? = சமயம் மட்டுமே…
  ஆனா தமிழ் = ???
  அதான் இன்னும் உயிர்ப்போடு இருக்கு!

  அந்தத் தமிழைத் தான்….வேர் முதல் நாடி, சங்கத் தமிழ்ப் புதையலை, நம் மரபைக் காட்டிக் கொடுக்கறாரு சொக்கன் அண்ணா!
  * இது வெத்துப் பெருமைக்கோ, நம்ம தமிழ்ப் புலமையைக் காட்டிக்கணும்-ன்னோ இல்ல!
  * தமிழின் அடிநாதம் = “மானுடம்”, (Humaneness)
  அதை அப்பப்போ ஞாபகப் படுத்திக்க! சீரியசா இல்லாம, சுவையா நினைவு படுத்திக்க…
  ————

  இந்தத் தமிழ்த் தேரை….வாசகர்கள் அனைவரும் நல்ல முறையில் இழுத்துக் குடுக்கணும்!
  இதை ஒரு இறைத் தொண்டா நினைச்சிக்குவோம்! “மானுடம்” என்பதே இறைத் தொண்டு தானே!…மானுடத்தை இன்னிக்கும் உயிர்ப்போட வச்சிருக்கும் தமிழ்…

  அதுக்கு #365paa போன்ற தளங்கள், ஒரு உந்து சக்தி!

  அதனால், இந்தத் தேரை, கலகல-ன்னு இன்பமா வச்சிருந்து,
  எல்லாரும் இழுத்துக் குடுத்து, பரவச் செய்யணும்-ன்னு,
  உங்க எல்லாரையும், என் முருகன் சார்பா, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!:)

 9. ஒரு சில தனிப்பட்ட காரணங்களுக்காக….நான் விலகிக் கொள்ள வேண்டிய வேளை வந்து விட்டது….
  இதுவே என் கடைசிப் பின்னூட்டம்:)

  இது நாள் வரை, நல்ல சொற்கள் சொல்லி, உற்சாகம் ஊட்டி, கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-ன்னு பழகிய அனைவருக்கும்….
  “நன்றி”-ன்னு வாயால் மட்டும் சொல்லாது, உணர்வாலும் சொல்லிக்கறேன்!
  ———–

  இந்தத் தமிழ்த் தேர்…எப்பவும் இனிதே வலம் வர….
  இனியது கேட்கின் எரிதவழ் வேலோய்-ன்னு…என்-அவனை, வேண்டிக் கேட்டுக்கறேன்!
  ஏன்-னா, அவன்….”முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான்”!

  அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ
  சடகோபன் “தமிழ்நூல்” வாழ….
  மாறிலா வள்ளி வாழ்க!
  வாழ்க சீர் அடியாரெல்லாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s