தள்ளார்

தாரினை விருப்பமாகத்

….தலைதனில் முடிக்கும்தோறும்

நாரினைப் பொல்லாது என்றே

….ஞாலத்தார் தள்ளுவாரோ?

சீரிய தமிழ் மாலைக்குள்

….செல்வர் குற்றாலத்து ஈசர்

பேரினால் எனது சொல்லைப்

….பெரியவர் தள்ளார் தாமே!

நூல்: திருக் குற்றாலக் குறவஞ்சி

பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்

சூழல்: அவை அடக்கம்

மலர் மாலையில் உள்ள பூக்கள் நன்கு மணம் வீசும், அழகாகக் காட்சியளிக்கும், அவற்றோடு ஒப்பிடுகையில் அந்தப் பூக்களைச் சேர்த்துக் கட்டியிருக்கிற நாருக்கு அழகோ, நறுமணமோ எதுவும் கிடையாது.

ஆனாலும், மக்கள் பூவைத் தலையில் சூடிக்கொண்டு நாரை ஒதுக்கிவிடுவதில்லை. பூவினால் நாருக்கும் பெருமை கிடைக்கிறது.

அதுபோல, நான் பாடுகிற தமிழ்ச் சொற்கள் மிகச் சாதாரணமானவை, முக்கியத்துவம் அற்றவை, ஆனாலும், குற்றாலத்தில் உள்ள ஈசனின் பெருமையைப் பாடுகிற ஒரே காரணத்தால் பெரியவர்கள் இந்தத் தமிழ் மாலையை ஒதுக்கித் தள்ளிவிடாமல் ஏற்றுக்கொள்வார்கள்.

துக்கடா

 • தமிழ்க் காப்பியங்கள் பலவற்றில் ‘அவை அடக்கம்’ என்ற சுவையான பகுதி காணப்படுகிறது. இங்கே கவிஞர் தன்னைத் தானே மிகையாகத் தாழ்த்திக்கொண்டு பேசுகிறவிதமான பாடல்கள் இடம் பெறும். இதன் நோக்கம், ’என்னதான் நான் இந்தக் காப்பியத்தை எழுதிமுடித்திருந்தாலும், அதனால் எனக்கு எந்தத் தலைகனமோ கர்வமோ இல்லை, இன்னும் என் பாதங்கள் தரையில்தான் இருக்கின்றன’ என்று தெரிவிப்பது, அந்தக் காவியத்தை அரங்கேற்றும் அவையில் உள்ள மற்ற கவிஞர்கள், அறிஞர்கள், இதனை வாசிக்கப்போகும் பொதுமக்களின் முன்னே அடக்கத்துடன் வணங்கி நிற்பது
 • இது ஏதோ கத்துக்குட்டிகளின் வேலை என்று நினைத்துவிடாதீர்கள், கவிச் சக்கரவர்த்தி கம்பன் காவியத்தில்கூட அவையடக்கப் பாடல் உண்டு, நல்லவேளை அந்த காலத்துப் படைப்பாளிகளுக்கு ‘சோஷியல் மீடியா இமேஜ்’ கட்டாயங்கள் இல்லை 😉

204/365

Advertisements
This entry was posted in அவை அடக்கம், சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி. Bookmark the permalink.

4 Responses to தள்ளார்

 1. இலக்கிய அடக்கம் என்பது ’புனித பிம்பத்தனம்’ என்று ஆகி விட்டது!
  இலக்கிய அலட்டல் என்பதே படைப்பாளியின் ’சுயம்’ என்று ஆகி விட்டது!
  இன்று சுயமே முக்கியம்! சமூகம் முக்கியம் அல்ல!:) வாழி!:))

  யோவ், திரிகூட ராசப்பக் கவிராயா….இந்தப் பாட்டை மாத்தி எழுது!
  இதுவரை தமிழில் வந்த குறவஞ்சிகளில், இது தான் ஒரே குறவஞ்சி-ன்னு மாத்தி எழுதும் ஓய்!:))

 2. amas32 says:

  “நல்லவேளை அந்த காலத்துப் படைப்பாளிகளுக்கு ‘சோஷியல் மீடியா இமேஜ்’ கட்டாயங்கள் இல்லை” You said it 🙂

  பூவினால் நாருக்கும் பெருமை என்பது எவ்வளவு பெரிய உண்மை. சான்றோர்களோடு பழகுவது, அவர்கள் சொல் கேட்டு நடப்பது எல்லாமே நமக்கு நன்மை பயக்கும். ஆனால் நாம் நார் என்ற உண்மையை உணர அதற்குத் தகுந்த அடக்க மனோபாவம் வேண்டும். அப்பொழுது தான் பூவின் வாசனையோடு நாமும் மணக்கலாம்.

  இன்றைய சமுதாயத்தில் அதிக போட்டியின் காரணமாகவோ என்னவோ ‘அவை அடக்கம்’ காணாமலே போய் கொண்டிருக்கிறது.
  amas32

 3. Naanjilpeter says:

  அருமை அருமை உங்கள் விளக்கம். வடமொழிச் சொற்கள் இல்லாமை கண்டு மகிழ்ச்சி.

 4. Yaaro says:

  “வடமொழிச் சொற்கள் இல்லாமை கண்டு மகிழ்ச்சி”

  வடமொழின்னா? வடக்கில் பேசப்படும் மொழியா?
  அப்படிப் பார்த்தால், ‘துக்கடா’ எந்த மொழி? எல்லா நாளும் அது வருதே இந்த பதிவுல… அதுமட்டும் ஓக்கேவா பீட்டர் சார்?

  *துக்கடா – உருது மொழிச் சொல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s