கரும்பை எப்படிச் சாப்பிடுவீர்கள்?

கனைகடல் தண்சேர்ப்ப! கற்று அறிந்தோர் கேண்மை

நுனியின் கரும்பு தின்று அற்றே, நுனிநீக்கித்

தூரின் தின்று அன்ன தகைத்தரோ பண்பு இலா

ஈரம் இலாளர் தொடர்பு

நூல்: நாலடியார்

பாடியவர்: சமண முனிவர்கள்

ஒலி செய்யும் கடலின் குளிர்ச்சியான துறையைச் சேர்ந்தவனே,

நன்கு படித்து அறிந்தவர்களுடன் நீ பழகினால், ஒரு கரும்பை நுனியிலிருந்து சாப்பிடுவதுபோல அந்த நட்பு இனிக்கும், நாளாக நாளாகச் சுவை அதிகரிக்கும்.

அதற்குப் பதிலாக, பண்பு இல்லாதவர்கள், நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களுடன் நீ பழகினால், அதே கரும்பை அடியிலிருந்து தொடங்கிச் சாப்பிடுவதுபோல அந்த நட்பு ஆரம்பத்தில் இனிக்கலாம், ஆனால் அப்புறம் போகப் போகச் சுவை குறைந்து கடைசியில் கசப்புதான் மிஞ்சும்.

துக்கடா

 • நான் படித்த கோயம்பத்தூரில் இதே உவமையை வேறுவிதமாகச் சொல்வார்கள்: தேங்காய் பன் துண்டை விளிம்பிலிருந்து சாப்பிடுவது Vs முக்கோண மையத்திலிருந்து சாப்பிடுவது
 • புரியலையா? கோவைக்கு ஒரு விசிட் அடிங்கங்கங்க 😉
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
 • நுனியின் கரும்புதின் றற்றே, நுனிநீக்கித்
 • தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
 • ஈரமி லாளர் தொடர்பு

203/365

Advertisements
This entry was posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், நட்பு, நாலடியார், வெண்பா. Bookmark the permalink.

5 Responses to கரும்பை எப்படிச் சாப்பிடுவீர்கள்?

 1. //ஈரம் இலாளர் தொடர்பு//

  என்னவொரு வீச்சு சமண முனிவர்களிடம்! ஆகா!

  மனுசன்-ன்னா மனசுல ஈரம் வேணும்!
  அதை எதோடு கோர்த்துச் சொல்கிறார்கள் பாருங்கள்? = பண்பு இலா, ஈரம் இலாளர் தொடர்பு!
  ஈரம் இல்லையேல், எப்பண்பு இருந்தும், அப்பண்பு பண்பில்லையாம்!
  ஈரமே முதற் பண்பு! அதை ஒட்டியே அனைத்து பண்புகளும்!

 2. கரும்பை உவமையாகக் காட்டிய நாலடியார் மிகவும் நுட்பமானது!

  கரும்புப் பயிரைப் பார்த்தவர்களுக்குத் தெரியும்!
  கரும்பின் மேல் பாகம் = தோகை
  தோகை பார்க்கப் பசுமையாய், கண்ணுக்கு அழகாய் இருக்கும்! ஆனால் படு பயங்கரமாக் கீறி விடும்! கரும்புத் தோட்டத்தில் நடமாடுபவர்கள், சற்று எச்சரிக்கையாகவே செல்வார்கள்!

  அந்தத் தோகையின் கீழே இருக்கும் நுனிக் கரும்பு, சற்று உப்புத் தன்மையோடு இருக்கும்! ஒரு மாதிரி கசக்கும்!
  கீழே போகப் போகத் தான் இனிக்கும்!

  அடிக் கரும்பு, பார்க்க அழகா இருக்காது! வளைஞ்சி நெளிஞ்சி, வேர்களோடும், கணுக்களோடும்…ஒரு மாதிரி இருக்கும்!
  ஆனா அடிக்கரும்பே அதிக சுவையானது!

  கரும்பை நோய்கள் தாக்கினாக் கூட, அடிக்கரும்பு கெடாது! தோகையும், தோகைக்கு கீழே இருக்கும் நுனியிலும் தான் பூச்சிகள் தாக்கும்!
  எக்காரணம் கொண்டும், அடிக்கரும்பு, அந்தத் தன்மையில் மாறவே மாறாது!
  ——

  அதே போலத் தான், மனிதர்கள் தொடர்பு!
  ஆரம்ப காலத்தில் சண்டையோடு துவங்கினாலும், அதுவே இறுக்கமான காதல் ஆகிறது அல்லவா!:) = நுனிக் கரும்பு கசந்து, பின்பு அடிக் கரும்பு இனித்தாற் போலே!

  ஆனால், ஆரம்ப காலத்திலேயே, கண்டவுடன் காதல் போன்ற உடற் கவர்ச்சிகள், நாளடைவில் தேய்ந்து போகிறது! அந்தக் காதல் நிற்பதில்லை! = அடிக் கரும்பு இனித்து, பின்பு நுனிக் கரும்பு கசந்தாற் போலே!

 3. அடிக் கரும்பே, கரும்பு விவசாயத்துக்கும் அடிப்படை!

  அதிலிருந்து தான் விதைக்கரும்பு, நாற்றாங்கால் எல்லாம்!
  அறுவடையின் போதும், முழுக்க வெட்டாது, அடிக்கரும்பையே முன்னான்கு முறை வளர விடுவாங்க!
  அதுக்கப்பறம் தான் வயலை எரிச்சி, வேறெதாவது புதுப்பயிர் நட்டு, பின்பு கரும்பை நடவு செய்வார்கள் – கரும்புச் சாகுபடி இப்படித் தான்!

  இப்படி எல்லாத்துக்கும் ஈடு குடுக்கும் அடிக்கரும்பு!
  அழகில்லையே தவிர…..இனிமை, பொறுமை, மீண்டும் வளர்ச்சி-ன்னு எல்லாத்தையும் தாங்கும்! ஏன்-ன்னா அது கிட்ட நிறைய ஈரம் (சாறு) இருக்கு!
  ——

  அதே போல், மனிதர்கள்! = ஈரம்
  ஈரம் இருந்தா, எல்லாத்தையும் தாங்குவாங்க! மீண்டும் வளர விடுவாங்க!
  அந்த “ஈரம்”-ன்னு ஒரு பண்பு இருந்தா, ஒவ்வொரு பண்பா மற்றெல்லாம் தானே அமையும்!

  “ஈரமும்”, சீர் பாத சேவையும் மறவாத-ன்னு அருணகிரி, ஈரத்தைக் கொண்டாந்து நிறுத்துவார்!
  ஈர நெஞ்சினர் யாதும் உளரே-ன்னு ஆழ்வாரின் ஈரத் தமிழ்!

  ஈரம் இருந்தாத் தான், நிலத்தில் எதை ஒன்னையும் நட முடியும்!
  மனசு நனைஞ்சாத் தான், எதை ஒன்னையும், உண்மையா உணர முடியும்!

  நாலடியார் காட்டும் ஈரம், உள்ளத்தில் ஊறச் செய் முருகா!

 4. amas32 says:

  சில பேரிடம் நமது நட்பு தொடங்கி வெகு விரைவாகச் செல்லும். ஏனென்றால் அந்த நட்பில் இருபாலார்க்கும் எதோ ஒரு தேவை பூர்த்தியாகிறது. ஆனால் அதற்குப் பின்னும் அவர்கள் நட்புத் தொடர நட்புக்குத் தேவையான அடிப்படை நற்குணங்கள் இல்லாவிட்டால், அடிக்கரும்பில் ஆரம்பித்து நுனிக் கரும்பை அடைவது போல் தான். பல அரசியல் கூட்டணிகளின் சேர்க்கை இதுப் போலத் தான்.
  அதுவே சான்றோர்களுடன் நம் பழக்கம் மெதுவே ஆரம்பித்தாலும் போகப் போக வலுபெற்று நமக்கு நன்மை அளிக்கும். அடிக்கரும்பாய் இனிக்கும். இவை நாம் வாழ்வில் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம்.
  எதை உணர்வதற்கும் முதலில் மனதில் ஈரம் வேண்டும். இன்னொருவர் படும் வேதனையோ துன்பமோ நம் ஆழ் மனதில் empathy இருந்தால் தான் அதை உணர முடியும். மனதில் அந்த ஈத்தை வளர்த்துக் கொள்வோம் 🙂
  amas32

 5. Naanjilpeter says:

  மிக்க மகிழ்ச்சி. ஒரு வட‌மொழிச் சொல் கூட இன்று இல்லை. நல்ல தெளிவுரை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s