நெஞ்சுக்குள் பாய்ந்திடும் மாஅலை

ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!

வண்டு இமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்

உரவுக் கடல் ஒலித் திரை என

இரவில் நானும் துயில் அறியேனே

நூல்: ஐங்குறுநூறு (#172)

பாடியவர்: அம்மூவனார்

சூழல்: நெய்தல் திணை, ஓர் இளைஞன் ராத்திரியில் தூங்காமல் புரண்டுகொண்டிருக்கிறான். ‘என்னாச்சுடா உனக்கு?’ என்று அவனுடைய நண்பன் (பாங்கன்) கேட்கிறான், அதற்கு அவன் சொல்லும் பதில் இது

வண்டுகள் சத்தமிடும் குளிர்ச்சியான கடல்துறையைக் கொண்டது தொண்டி நகரம். அங்குள்ள பரந்த கடலில் எந்நேரமும் அலைகள் பாய்ந்து முழங்கியபடி இருக்கும்.

அதுபோல, இப்போது என் நெஞ்சமும்  ராத்திரி பகலாகப் பரிதவிக்கிறது, இரவில்கூடத் தூக்கம் வராமல் சிரமப்படுகிறேன்.

இத்தனைக்கும் காரணம், ஒரு பெண். ஒளி நிறைந்த தொடியை அணிந்த அந்த அரிவை என்னுடைய நெஞ்சைக் கவர்ந்து சென்றுவிட்டாள்!

துக்கடா

 • இந்தக் காட்சி பல திரைப் பாடல்களில் பல வடிவங்களில் வந்துள்ளது, மிகப் பிரபலமான உதாரணம்: ’அடி அம்மாடி, ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா?’ 🙂
 • ’அரிவை’க்கு விளக்கம் ஏற்கெனவே பார்த்துள்ளோம் (https://365paa.wordpress.com/2012/01/19/197/) இப்போது ‘தொடி’ மற்றும் ‘தொண்டி’க்கு விளக்கம் பார்ப்போம்
 • தொடி = ஒரு வகை வளையல், ஆண்கள், பெண்கள் இருபாலரும் இதனை அணிந்ததாகத் தெரிகிறது, ஆகவே இந்தக் கால Braceletபோல என்று சொல்லலாம்
 • தொண்டி = பாண்டிய நாட்டுக் கடற்கரை நகரங்களில் ஒன்று, தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது

202/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, ஐங்குறுநூறு, காதல், சினிமா, நெய்தல், பிரிவு. Bookmark the permalink.

5 Responses to நெஞ்சுக்குள் பாய்ந்திடும் மாஅலை

 1. amas32 says:

  பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது
  பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
  என்ற கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது 🙂
  இதற்குக் காரணம் காதல் தான், ஒரு அழகான பெண் தான். இந்தப் பாடலில் தொண்டி நாட்டைப் பற்றிய அழகான வர்ணனை வருகிறது. தொடி அணிந்த தொண்டி நாட்டுப் பெண் மிது மையல் கொண்ட இளைஞன் தன் நிலையை வர்ணிக்கும் அழகான பாடல்! இன்றும் காதலன் படும் பாடு தான் இது.
  amas32

 2. என்ன ஆச்சுடா ஒனக்கு?

  இதுக்கு atleast பதில் சொல்லும் நிலையிலாச்சும் இவன் இருக்கான்!
  சிலரால் அது கூட முடியாது!
  என்ன ஆச்சுடா ஒனக்கு? = ஏக்கமான மெளனம்…..
  கண்ணே காட்டிக் குடுத்து விடும்
  ———-

  * இருக்கும் போது தூக்கம் கெடுகிறது! எ.கா = நேத்து ராத்திரி யம்மா, தூக்கம் போச்சிரி யம்மா:))
  * இல்லாத போதும் தூக்கம் கெடுகிறது! எ.கா = பஞ்சணையில் காற்று வரும், தூக்கம் வராது

  காதலுக்கும் தூக்கத்துக்கும் அப்படி என்ன பகை? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!

 3. தொண்டி = மீனவர்கள் அதிகம் வாழும் ஊர்! இராமேஸ்வரத்துக்கும் திருவாடானைக்கும் கிட்டக்க தான்!
  அம்மூவனார், இந்த ஊரைப் பல முறை பாடுவாரு! ஊர்ப்பாசம் போல:) ஏற்கனவே 365paa வில் இந்த ஊரைப் பார்த்துள்ளோம்! அகநானூற்றில்!
  மீனவர்கள் மீன் பிடிச்சி, முதலில் இல்லாதவர்களுக்கு/ ஊருக்குக் குடுத்துட்டு, அப்பறம் தான் விற்பனைக்கு துவங்குவாங்களே…அந்தப் பாட்டு!
  ——

  தொடி = கை வளை!
  ஒண்தொடி, பைந்தொடி, குறுந்தொடி, நற்றொடி, பொற்றொடி-ன்னு இலக்கியங்களில் அதிகம் பேசப்படும் வளையல்!
  ——-

  இன்னும் ரெண்டு அழகான சொல் இருக்கு!
  * உரவுக் கடல்
  அது என்ன உரவு? உறவு-ன்னு இருக்கணுமோ? ஓலையைப் படி எடுக்கும் போது தப்பு பண்ணிட்டாங்களோ?:)
  இல்லை! உரம்-> உரவு!
  உரம் = வலிமை, ஆற்றல்
  ஒப்புரவு, துப்புரவு ன்னு சொல்றோம்-ல்ல? அந்த “உரவு”!
  ———-

  * இமிர் வண்டு
  பொதுவா வண்டுகள் முரலும்-ன்னு தான் சொல்லுவாங்க
  வண்டு முரலும், மயில் அகவும், குயில் கூவும், காகம் கத்தும்!

  இமிர்தல், முரல்தலை விட ஒலி மிக்கது!
  ஆனா இங்கே வண்டு மெல்லீசா முரலலையாம்! ரொம்ப இமிர்கிறதாம்! ஏன்?
  பாட்டைப் பாருங்க = வண்டு இமிர் பனித் துறை

  அதாச்சும் இந்த வண்டு பூங்காவில் இல்லீயாம்! தொண்டி என்னும் ஊரில், கடலோரமா, பனி(குளிர்) துறையில் இருக்கு! வீசும் உப்புக் காற்றில் குளிர் அடிக்குது! அதான் extra sound விடுது:))

  முரல்தல், ஞிமிர்தல், இமிர்தல், அம்முதல் – இப்படி ஒலியின் pitch வச்சே, ஒவ்வொன்றுக்கும் தமிழில் ஒவ்வொரு பேரு இருக்கு!
  யாரு சொன்னா தமிழ் மந்திரங்களுக்கு அதிர்வு இல்லை-ன்னு? இப்படியான ஒலி நுணுக்கங்கள் தெய்வத் தமிழில் நிறையவே உண்டு!

 4. //என்ன ஆச்சுடா உனக்கு? இரவில்கூடத் தூக்கம் வராமல் சிரமப்படுகிறேன்//

  நானும் தான்!
  ஊர் வந்து சேர்ந்து, இதோ விடிகாலை 4:00 மணிக்கு, எதையோ நினைச்சிக்கிட்டே…பின்னூட்டம் எழுதிக்கிட்டு இருக்கேன்:)
  Dr Muruga, இதுக்கு ஏதும் மருந்து இல்லீயா?:)

  • amas32 says:

   உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி KRS. நிறைய கற்றுக் கொள்கிறேன். உங்கள் தூக்கமின்மை நோய் விரைவில் தீர முருகன் அருள் புரியட்டும் 🙂
   amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s