கள்வனே!

ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்

ஊணொடு ஓசை ஊறுமாகி ஒன்று அலாத மாயையாய்

பூணி பேணும் ஆயனாகி பொய்யினோடு மெய்யுமாய்

காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல்

பாடியவர்: திருமழிசை ஆழ்வார்

இறைவா,

ஆணும் நீ, பெண்ணும் நீ, இவை இரண்டும் அல்லாதவற்றிலும் நல்லவை நீ, சுவை நீ, ஓசை நீ, தொடு உணர்வு நீ, இவை எதுவும் இல்லாத மாயையும் நீ, பசுக்களைக் காக்கும் ஆயனாக வந்தவனும் நீ,

பூமியைக் காப்பதற்காக வாமன உருவம் எடுத்து வந்தவனே, பக்தர்களின் உள்ளம் கவரும் கள்வனே, உன்னை வணங்குகிறோம்!

துக்கடா

 • திருமழிசை ஆழ்வார் எழுதிய இந்தப் பிரபந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் ட்விட்டர் நண்பர் எதிராஜன் (https://twitter.com/#!/Ethirajans) அவருக்கு நன்றிகள்
 • பூணி, காணி, மாணி என்ற வார்த்தைகள் ஒலி நயத்துக்காகமட்டுமின்றி, மிகச் சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம், பூணி = பசுக்கள், காணி = பூமி (’காணி நிலம் வேண்டும், பராசக்தி’), மாணி = வாமனன்
 • திருமழிசை ஆழ்வார்பற்றி சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்று இங்கே : http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=azhvar_sujatha_thirumazisai

201/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நண்பர் விருப்பம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி. Bookmark the permalink.

17 Responses to கள்வனே!

 1. GiRa ஜிரா says:

  திருமழிசை – சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் வழியில் இருப்பது. ஒவ்வொரு முறையும் அந்தச் சாலையில் செல்லும் பொழுது திருமழிசையாழ்வார் பாடிய, வணங்கிய, மங்களாசாசனம் செய்த கோயில் தெரிகிறதா என்று தேடுவேன். என் கண்ணில் சிவன் கோயில்தான் மாட்டும். அதுதான் சாலை மேல் இருக்கிறது.

  திருவாலங்காடும் அருகில்தான் இருக்கிறது. காரைக்கால் அம்மையார் பாடிய இடம். உயிரடங்கி உணர்வடங்காப் பேய்களுக்கும் வாழ்வு காட்டிய அம்மைக்கு ஈசன் கயிலை காட்டிய ஊர்.

  பக்தி இலக்கியங்களின் காலம் என்று சொல்லப்படுகின்ற, அதாவது வைதீக மத மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது தொண்டை நாட்டிலே என்றே சொல்லலாம். ஓரளவு அதுதான் உண்மையும் கூட. பல்லவப் பேரரசும் அதற்கு ஒரு காரணம்.

  தொண்டை இருப்பதே இறைத் தொண்டை பாடத்தான் என்று தொண்டை நாட்டில் பக்தி ஆட்சி செலுத்திய காலகட்டம்.

  இந்தத் திருமழிசையில் துணைநகரம் அமைக்கப் போவதாக இன்றைய அரசு கூறியிருக்கிறது. பார்க்கலாம்.

  • GiRa ஜிரா says:

   சிறிய தவறு. மன்னிக்க.

   தொண்டை இருப்பதே இறைத்தொண்டைப் பாடத்தான் – எனப் படிக்கவும்

 2. GiRa ஜிரா says:

  சரி. இந்தப் பாடலுக்கு வருவோம்.

  இந்தப் பாடலில் ஆழ்வார் செய்ய முற்படுவது என்ன? இறைவனை விளக்க முற்படுகிறார். முடியுமா? சொல்லில் முடியுமா? சொல்லத்தான் முடியுமா? ஆழ்வார் மட்டுமல்ல நாயன்மார்களும், அருணகிரிநாதரும் இதைச் செய்ய முயன்றிருக்கிறார்கள்.

  முடியாது என்று தெரிந்த ஒன்றை எப்படி முடியும் என்று விளக்குவது?

  கடவுள் எங்கெல்லாம் இருக்காருன்னு கேட்டா, வீட்டுல இருக்காரு. சொவத்துல இருக்காரு. கதவுல இருக்காரு. தட்டுல இருக்காரு. சோத்துல இருக்காரு. கொழம்புல இருக்காரு. கொழம்புல இருக்குற காய்ல இருக்காரு. இப்பிடி அடுக்கிக்கிட்டே போகனும். அந்தப் பட்டியல் எவ்வளவு பெருசாயிருக்கும்?!?! அடேங்கப்பா!

  ஆனா எல்லாத்தையும் கடந்து எல்லாத்துக்கும் உள்ளும் இருக்காரு கடவுள்ன்னு சொன்னா சுருக்கமா இருக்கும்ல. அது மாதிரியான முயற்சிதான் இந்த மாதிரி விளக்கங்கள். தெரிஞ்சத வெச்சி தெரியாததைப் புரிய வைக்கிறது.

  ஆணோ, பெண்ணோ, நல்லவனோ, கெட்டவனோ, திங்குற சோறோ, அதிலிருக்கும் சுவையோ, கேட்கும் ஒலியோ உணர்வோ, இல்லை மாயையோ… எல்லாம் நீதானப்பா.

  இதே மாதிரி அருணகிரி பாடுனதுதான் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் பாட்டு.

 3. amas32 says:

  பாசுரம் கவி நயத்தோடு உள்ளது. ஒரு முறை படித்த பின் மறு முறை படிக்கத் தூண்டும் பாடல்.
  திருமழிசை ஆழ்வார் நாராயணனே முதல்வன், அவனே எல்லாம் என்பவர். நாராயணனை எல்லா புலன்களாலும் துதிக்க வேண்டும் என்கிறார்.
  காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே
  ரொம்ப அருமையான வரி. ஒரே வரியில் நாராயணனின் அவதார மகிமையை சொல்லி விடுகிறார். எப்பொழுதெல்லாம் தீமை தலைவிரித்தாடுகிறதோ அப்பொழுதெல்லாம் வருவேன் என்றார் கண்ணன் கீதையில். அந்த சொல் படி பூமியை காப்பதற்காக வாமன அவதாரம் எடுத்தார். அது மட்டுமே அவர் நோக்கம் இல்லையே. நம்மையும் ஆட்கொள்ள வேண்டுமே. அதையும் செய்கிறார். நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். அவன் செய்கையை புரிந்து கொண்டு அவனை வணங்குவது நமக்கு இன்பமே!
  amas32

 4. GiRa ஜிரா says:

  திடீரென்று தோன்றியது. திருமால் பெருமை படத்தில் விட்டுணுசித்தராக நடித்த சிவாஜி உருகிப் பேசினால் எப்படியிருக்குமென்று ஒரு வசனநடை.

  மாதவா கேசவா அச்சுதா
  கண் கொண்டு பூக்கண்டேன்
  கொய்துணக்குக் கொடுத்திட மனம் கொண்டேன்
  அன்பெனும் விழி நோக்கப் புரிதல் கொண்டேன்
  செழித்து வளர்ந்த பசுஞ்செடி உன் யாக்கை
  நீண்டிருக்கும் கிளைகள் நின் திருக்கரங்கள்
  மொட்டுகள் வெண்சங்கம்
  மலர்ந்தவையோ பொற்றட்டம் (பொன்+தட்டம் = சக்கரம்)
  கொத்தென நின்றவை உன் திருமுடியே
  மொத்தமாய் மண்ணில் வேர் பாய்தவை திருவடியே
  உனைக் கொய்து உனக்கிட்டு உனை வணங்கி உன்னருள் பெற என்னால் ஆகுமோ!
  பார்க்காத பார் புகழும் திருமாலே – உன்
  பேர் சொல்லி வாழ்கிறேன்  – எப்பொழுதும்
  நான் பிழைப்பதுன் திருவருளாலே!

  • மிக அழகான வசனகவிதை!

   * செழித்து வளர்ந்த பசுஞ்செடி உன் யாக்கை!
   * அன்பெனும் விழி நோக்கப் புரிதல் கொண்டேன்!

   நான் பிழைப்பதுன் திருவருளாலே! புரிதலாலே! உன் பசுஞ்செடி யாக்கையாலே!

 5. GiRa ஜிரா says:

  தேசிகனின் வலைத்தளத்திற்கு சுட்டி கொடுத்தமைக்கு நன்றி. வலைப்பூவில் இருந்த காலத்தில் அவருடன் தொடர்பு இருந்தது. வெளிநாட்டுப் பயணம் அது இது என்று ஆயிரம் காரணங்களோடு தொடராமல் போனது. அவர் எழுதிய பெண்களூர் கட்டுரை மிக அழகான கட்டுரை. இன்னும் பெங்களூரில்தான் இருக்கிறார் என நினைக்கிறேன்.

  சுஜாதாவின் திருமழிசை ஆழ்வார் பற்றிய கட்டுரையை அந்தச் சுட்டியில் படிக்க நேர்ந்தது. பொதுவாகவே வலைத்தளங்களில் நாயன்மார்கள்தான் பிணக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஆழ்வார்கள் எழுதியதில்லை என்று சாதித்தவர்களும் உண்டு. வைணவப் பாடல்களில் திருப்பாவை நீங்கலாக எதிலும் பழக்கம் இல்லாததால் அந்தக் கருத்தை மறுத்துக் கூறவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாத நிலை. ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்த பிறகுதான் முதலாழ்வார் காலகட்டத்திலேயே பிணக்குப் பாடல்கள் இருந்திருக்கின்றன என்று.

  நாயன்மார்களும் பிணக்குப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். மறுப்பதிற்கில்லை. ஆனால் பொதுவாகவே பிணக்குப் பாடுவது இரு பக்கங்களிலும் வழக்கமாக இருந்திருக்கிறது என்றே புரிகிறது.

  இதோ சுஜாதா எடுத்துக் காட்டும் திருமழிசை ஆழ்வார் பாடிய இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம்.
  அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
  சிறியார் சிவப்பட்டார் செப்பின்-வெறியான
  மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
  ஈனவரே யாதலாம் இன்று
  மாலவனை வணங்காதார் ஈனவர் என்கிறார். அது சமணரோ பௌத்தரோ சிவனடியாரோ.. யாரோ. இது போன்ற பாடல்களைச் சைவத்திலும் காணலாம். இதை திருமழிசை ஆழ்வாரை குறைத்துச் சொல்வதற்காகச் சொல்லவில்லை. இந்தப் பிணக்குகள் ஒரு காலகட்டத்தில் மலிந்திருந்தது என்பதற்காகச் சொன்னேன். காரணம் இந்தப் பாடல்கள் காலத்தின் கண்ணாடி. ஒரு காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதை இலக்கியங்களிலிருந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

  வள்ளுவரும் அதைத்தானே சொல்கிறார். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்.
  இன்றும் சிலருடைய மனதில் இத்தகைய பிணக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. படிப்பது ராமாயணம். இடிப்பது திருமால் கோயில் என்பார்களே. அது போல.

  திருமழிசை ஆழ்வார் பாடிய நல்ல பாடல்கள் நிறைய உள்ளன. அவைகளை நாம் முன்னிறுத்தி ரசிப்போம்.

 6. இந்த இசைப் பாட்டைத் தேர்ந்தெடுத்துக் குடுத்த எதிராஜனுக்கும் சொக்கருக்கும் நன்றி!

  திருமழிசை ஆழ்வார் எழுதியவை இரண்டு நூல்கள் – நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்!
  இந்தப் பாட்டு, திருச்சந்த விருத்தம் என்ற ஆழ்வார் அருளிச் செயலில் உள்ளது!
  ——

  அப்போதெல்லாம் தமிழ் இலக்கியத்தில் இசைப் பாடல்கள் மிகவும் குறைவு! நிறைய இயல் பா தான்! இசைப் பா கிடையாது!
  பரிபாடல், கலித்தொகை மட்டுமே முதல் இசைப் பாக்கள்! பரிதல்=Melody! கலி= Rock:)
  பின்பு சிலப்பதிகாரத்தில், இசை நிறைய விரவி வரும்! ஆனால் நூல் முழுதும் இசைப் பாடல் அல்ல!

  மொத்த நூலும் சந்தமாகவே அமைத்த பெருமை, தமிழ் இலக்கியத்தில் இருவருக்கே உண்டு = திருமழிசை ஆழ்வார் & அருணகிரி!
  திருமழிசை, காலத்தால் சற்று முற்பட்டவர்! அன்னாரின் திருச் “சந்த” விருத்தம், அப்படியே ஒரு Marchpast மெட்டில், தொம் தொம்-ன்னு சந்தமோடு வரும்!

  நடந்த கால்கள் நொந்தவோ, நடுங்கும் ஞாலம் ஏனமாய்
  இடந்த மெய் குலுங்குவோ, விலங்கு மால் வரைச் சுரம்
  கடந்த கால் பரந்த கா விரிக் கரை குடந்தையுள்
  கிடந்த வாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே!

  இப்படி இறைவனை அதட்டியே பாடுவாரு!:)
  ஆழ்வார்களில் இவரை மட்டும் திருமழிசைப் “பிரான்”-ன்னு சொல்லுவது வழக்கம்! ஏன்னா, இவர் சொல்லுக்கு அவன் கட்டுப்பட்டதால், அவன் திருக்குடந்தை “ஆழ்வான்” ஆகி விட, இவர் திருமழிசைப் “பிரான்” ஆகி விட்டார்:)

  • திருமழிசை, பலப்பல சமயங்களில் இருந்து மாறி மாறி வந்தவர்! அதனால் ஒரு பாசுரத்தில் மட்டும், தான் முன்பிருந்த நெறிகளைப் பேசுவார்!

   தன்னுடைய இறைவனை (திருமாலை), சமணர் அறியார், பவுத்தர் புரியார் என்று சொல்லுவார்! உண்மை! திருமாலை அவர்கள் அதிகம் அறிய மாட்டார்கள் தானே!
   ஆனால் அவர்களை ஏசியோ, அவர்கள் மயிரைப் பறித்துக் கொள்வது போன்ற அவர்களின் தனிப்பட்ட பழக்கங்களைச் சாடுவதோ செய்யவே மாட்டார்!
   மொத்த களப்பிரர் காலத்தையும் ‘இருண்ட காலம்’ என்று சொல்லும் போக்கெல்லாம் இருக்கவே இருக்காது!

   அறியார் சமணர், அயர்த்தார் பவுத்தர், செப்பார் சிவபட்டர்! அது அவர்கள் வழக்கம்!
   ஆனால் திருமாலின் சமயத்திலேயே சிலர், செப்பி, ஆனால் ஏத்தாதார் உள்ளனர்! ‘செப்பின், வெறியான மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் – ஈனவரே யாதலாம் இன்று’!
   இப்படித் திருமாலின் சமயத்தில் இருந்து கொண்டே, வாயளவில் செப்பி, ஆனால் ஏத்தாதார் உள்ளனரே…அவர் ஈனவர்கள்’ என்பதே பாடலின் பொருள்!

   இந்தப் பிறருக்கு ஊறு இல்லா “வீறு” கூட இரண்டே இடங்களில் தான்- மொத்த 4000இல்!
   ஒன்று திருமழிசையின் இந்தப் பா; இன்னொன்று தொண்டரடிப்பொடியின் தற்கொலைப் பா!
   மற்ற எந்த ஆழ்வார்களும், பிணக்கைத் தொடவே தொடாமல், இணக்கத்தைத் தொட்டே செல்வார்கள்!
   தங்கள் இறைவடிவத்தை உயரத் தூக்கி வைத்துக் கொள்வார்கள்! ஆனால், பிற சமூகங்களையோ, அவர்கள் பழக்க வழக்கங்களையோ, இழிவு படுத்தல் என்பது இருக்கவே இருக்காது! மொத்த நாலாயிர அருளிச் செயலும் வாசித்தால், இது புரியும்! வள்ளலாரின் திருவருட்பா உரையும் இதை உறுதி செய்யும்!

 7. முதல் நான்கு ஆழ்வார்களும் சென்னையைச் சுற்றியே அமைந்தது வியப்பிலும் வியப்பு:)
  திருமழிசை – பூவிருந்தவல்லிக்கு அடுத்து இருக்கு! பனிமலர் கல்லூரிக்கு அடுத்தாப்புல!
  NH4 இல் செல்லும் போது, வலப்பக்கம், சற்று உற்றுப் பார்க்க வேணும்! Main Roadஇல் இல்லாமல், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருக்கு!
  ——-

  பன்னிரு ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் மட்டுமே “வீறு” மிக்கவர்! நாவில் சக்கரம் வைத்துக் கொண்டு பேசுபவர்-ன்னு சொல்லுவாய்ங்க:)
  யாருக்கும் அடங்காதவர்! இறைவனையே அதட்டுபவர்:)
  ——-

  பொதுவாக, ஆழ்வார் அருளிச் செயல்களில், “அருளே” மிகுந்து இருக்கும்! அதான் அருளிச் செயல்!
  மற்ற சமயங்களை இழித்தோ பழித்தோ இருக்காது! குறிப்பாகச் சமணத்தை ஒவ்வொரு பத்தாம் பாட்டிலும் வைத்து நறுக்குவது இருக்கவே இருக்காது!
  சமணப் பழக்க வழக்கங்களை வைத்து, ’மயிர் பறிக்கும் கோப்பாளிகள்’-ன்னு எல்லாம் கடுஞ்சொல் சொல்வது இருக்கவே இருக்காது!
  – இதைச் சொல்வது ‘அருள் திரு’ வள்ளலார்! திருவருட்பா – உரைநடைத் திருமுறை

  மொத்த 4000 பாசுரத்திலும் இரண்டே இடங்களில் தான், மாற்று சமயம் பற்றிய பேச்சே எழும்!
  மத்தபடிக்கு, தங்கள் இறைவனை உசர வைத்துத் துதித்துக் கொள்வார்களே அன்றி, ஒருக்காலும் பிற இறைத் திருவுருவங்களை இழிவு படுத்த மாட்டார்கள்!

  * திருமழிசை ஆழ்வாரின் ’அறியார் சமணர்’ பாசுரம்,
  * தொண்டரடிப் பொடியின் தற்கொலைப் பாசுரம்
  – இவை இரண்டு மட்டுமே மாற்று சமயம் குறித்துப் பேசும்! ஆனால் தனித்த வசைச் சொற்கள், எள்ளல், ஒவ்வொரு பத்தாம் பாட்டிலும் நொறுக்குதல், மற்ற சமய நூல்களை எரிக்கச் சொல்லுதல் – இதெல்லாம் இருக்கவே இருக்காது!
  ———

  திருமழிசை ஆழ்வார், பல சமயங்களிலும் இருந்து வந்தவர் ஆதலால், அவர் நா வீறு கொண்ட பாடிய பாடல் அது ஒன்னே!
  அதிலும், தங்கள் இறைவனை, சமணர் அறிய மாட்டார்கள், பவுத்தர்கள் புரிய மாட்டார்கள் என்ற அளவில் மட்டும் நிறுத்தி விடுவார்! ’மயிர் பறிக்கும் கோப்பாளிகள்’ என்றெல்லாம் இகழ மாட்டார்!

  அறியாதவர்களும் புரியாதவர்களும் ஏத்த இயலாது! மொதல்ல அறிந்தால் தானே ஏத்துதற்கு? அதனால் அவர்கள் ஈனவர்கள் அல்ல! அவர்கள்=செப்பார்!
  அடுத்து, செப்பின் வெறியான மாலவனை ஏத்தாதார்; செப்பின் என்ற சொல் முக்கியம்!
  அதாச்சும் செப்பிக் கொண்டே (சொல்லிக் கொண்டு) ஏத்தாதவர்கள், அறிந்தே ஏத்தாதவர்களை மட்டுமே ஈனவர் என்று குறிப்பிடுவார்!

  தொண்டர் அடிப்பொடிகள், இன்னும் கொஞ்சம் வீறாக, இப்படி என் இறைவனை வீதியில் பழித்துக் கொண்டே இருந்தால், தான், தன் தலையை அறுத்துக் கொண்டு, தற்கொலை செய்து கொள்வதே உத்தமம் என்று ஓரிடத்தில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டுப் பாடுவார்!
  * ஆக, நாலாயிரத்தில், இந்த இரண்டே இடங்கள் தான்! ஆனால், அதுவும் பிறரை வதைத்து அல்ல!
  வேறு எந்த ஆழ்வார் பாசுரத்திலும், இது போல் “வீறு” இருக்காது! அருளே இருக்கும்!
  ———

  மற்றபடிக்கு,
  பிணக்கு என்பது அந்தக் காலக் கட்டம்! சமயப் போட்டிகள்! ஒன்றை ஒன்று நிறுவும் முயற்சிகள்!
  அதை நாம் மாற்றி அமைக்க முடியாது! அது வரலாறு!
  You can never go into history & apply today’s correction for yesterday’s mistakes!
  ஆனால் அந்த வரலாற்றை, மூல நூல்கள் வாயிலாகக் குறைவறத் தெரிந்து கொண்டு, நம்மை நல்ல வண்ணம் இயக்கிக் கொள்ளுதலே சிறப்பு!

  * பிறைத் தங்கு சடையானை வலத்தே வைத்து
  * அரன்-நாரணன் நாமம், இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து
  -ன்னு பல பாசுரங்கள், ஈசனையும் போற்றியே சொல்லும்!

  1000 ஆண்டுகளுக்கு முன்பே…
  “சாதி அந்தணர்களேலும், நுமர்களைப் பழிப்பார் ஆகில், அவர்கள் தான் புலையர் போலும், அரங்க மா நகருளானே”-ன்னு பாட எத்தனை துணிவு வேண்டும்!
  இது போன்ற சமூகச் சீரமைப்பும், தமிழ் நெறியுமே அருளிச் செயல்களில் கொட்டிக் கிடக்கும்!

  • GiRa ஜிரா says:

   ஐயா வணக்கம். உங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய பின்னூட்டத்திற்கு மறுமொழியோ அதைத் தொடர்ந்து கருத்தொட்டி எழுதுவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். வாதம், விவாதம், கருத்து முன்னிறுத்தல் செய்யாமல் இருக்க வேண்டுகிறேன். இதை இரண்டாம் முறை சொன்னதோடு என்னை நிறுத்திக் கொள்ள விடுங்கள். இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

   நன்றி

 8. பழைய பின்னூட்டத்தை, இந்தியாவை விட்டுக் கிளம்புவதற்குச் சற்று நேரத்துக்கு முன்னர் தான் கண்டேன் ராகவா! மிகுந்த வருத்தத்துடன் கிளம்பினேன்!
  எதுவானாலும், என் நிபந்தனையற்ற மன்னிப்பை இங்கு கோருகிறேன்!

  கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும் ‘குத்துக் குத்து கூர்வடி வேலால்’-ன்னு வரிகளையே, முழுக்கப் பாடாமல் விழுங்கி விடுவேன்!
  ‘அசுரர் குடி கெடுத்த ஐயா வருக’ -ன்னு வரும் வரிகளை கூட விழுங்கி விடுவேன்! ஏன்னா முருகனுக்கு யார் குடியும் கெடுக்கத் தெரியாது! இது பின்னாளைய புலவரின் ஆர்வ மிகுதியால் எழுதப்பட்டு விட்டதே தவிர, முருகன் அப்படிக் கிடையாது என்று நம்பும் நான், அப்படியெல்ல்லாம் உள்குத்து குத்துக் கூர்வடி வேலால் என்பதைச் செய்யத் துணிய மாட்டேன் ராகவா!

  பழைய பின்னூட்டத்தில், உள் ‘குத்து’ என்று எதைக் குறிப்பிட்டீர்கள்-ன்னு தெரியலை! அது மூல நூல் வாசிப்புக்கான கருத்து மட்டுமே! Raaga_Suresh அவர்களும் பாராட்டியே உள்ளார்!
  எது என் கருத்து மட்டுமல்ல! வாரியார் சொற்பொழிவும் அதுவே! “வணக்குத்துக்குரிய முதலமைச்சர்கள்” என்ற பொழிவில் மாணிக்கவாசகர்-சேக்கிழார்-அனுமன் என்றே பேசுவார்! அதையே எடுத்துச் சொல்லி இருந்தேன்!

  எதுவாயினும், தாளும் தடக் கையும் கூப்பித் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்! மன்னித்துக் கொள்க!

 9. இன்னொன்று…
  பின்னூட்டத்துக்கு மறுப்பு என்ற அளவில் எதையும் எழுதவில்லை!
  இது ஆழ்வார்கள் பற்றிய பொதுக் கருத்து, ஆதலால், பொதுவில் வைத்தேன், அவ்வளவே!
  எதையும் விவாதிக்காமல், மூல நூலில் இருந்து, அதே வரிகளை எடுத்து அவையில் வைப்பதென்பது, எதிர்ப்பாகாது! கருத்து மட்டுமே!
  ‘அதைக் கூடச் சொல்ல வேண்டாம், பார்த்தது பார்த்தபடி போம்’, என்றால்…மீண்டும் என் மன்னிப்பைக் கோருகிறேன்!

  • GiRa ஜிரா says:

   நீர் உத்தமராகவே ஆகுக. உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதைத் தடுக்க நான் யார்? நான் சொன்னதை ஒட்டியோ வெட்டியோ மேற்கோள் காட்டியோ என் பெயரைக் குறிப்பிட்டோ முன்பு நான் பயன்படுத்திய வரிகளைச் சொல்லியோ பயன்படுத்த வேண்டாம் என்றுதான் கரங்கூப்பிச் சிரந்தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

   உம்முடைய கருத்துக்கு மறுப்பு கூற முடியுமாயினும் ஒதுங்கிப் போகிறேன் நான். அதைத் தொடர உதவுங்கள் என்பது என் வேண்டுகோள்.

   இதற்கு மேல் இதைப்பற்றிப் பேச விருப்பமில்லை.

   நன்றி.

 10. ஆழ்வார் அருளிச் செயல்/ நாயன்மார் பதிகங்கள் பற்றிய பிழையான தகவல் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்குமாயின்,
  பரவாயில்லை, அதைக் ’கண்டும் காணாதது போல் செல்’ என்று என் ஆருயிர் முருகனே சொன்னாலும், கேட்கவியலாது!
  வாராது வந்த மாமணி – தமிழ்ச் சான்றோர்கள்! அருளாளர்கள்! அந்த உண்மை நிலையை, மூலப் பாடல் மூலமாகவே, பொதுவில் வைக்கும் கடமை உளது! எனக்கு என்னாயினும் பரவாயில்லை, இதில் தவறேன்!

  மற்றபடி, எவர் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாது,யாருடனும் பொருதாது, மூல நூல் வரிகளை மட்டுமே ’தகவலாக’ வைத்துச் செல்கிறேன்!

  //அதைத் தடுக்க நான் யார்? //
  தங்களுக்குக் கட்டுப்பட்டவனே ஆயினும், தெய்வத் தமிழ் விடயத்தில், கடமை தவறேன் என்று மட்டும் சொல்லிக் கொண்டு, தங்களிடம் மன்னிப்பைக் கோருகிறேன்! என்னை மன்னியுங்கள்!

  நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
  மலையினும் மாணப் பெரிது

  • GiRa ஜிரா says:

   நல்லது. உமது வேலை தொடரட்டும். நான் ஒதுங்கிக்கொள்கிறேன்.

   நன்றி

 11. ஆனந்தன் says:

  இதென்ன விபரீதம்? அடியார்களுக்கிடயில் அடிபாடு வரலாமா?
  கருத்துப் பரிமாற்றம் இருந்தால்தானே சபை களை கட்டும்?
  மோதல் வேண்டாம். ஒதுங்கவும் வேண்டாம். ஜி.ரா – மீண்டும் வருக! பார்வைகள் வெவ்வேறு கோணங்களிலிருந்து வரட்டுமே!
  தமிழின் சுவையில் குளிக்கும் எமக்குத் திடீரென்று ஒரு குழாயில் தண்ணீர் தடைப்பட்டது போலுள்ளது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s