பாடுதும், தொழுதும்…

மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடிப்

பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ,

பணி ஒரீஇ நின்புகழ் ஏத்தி

அணி நெடும் குன்றம் பாடுதும் தொழுதும்

அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்

ஏம வைகல் பெறுக யாம் எனவே

நூல்: பரிபாடல் (#17ன் ஒரு பகுதி)

பாடியவர்: நல்லழிசியார்

முருகா,

நீல மணியைப் போன்ற நிறம் உடைய மயில் வாகனத்தை உடையவனே, உயர்ந்த கோழிக் கொடியைக் கொண்டவனே, பிணிமுகம் என்ற யானையின் மேலேறி வருகிறவனே, செய்யும் போர்களில் எல்லாம் வெற்றி பெறுகிறவனே,

நானும் என்னைச் சுற்றியுள்ளவர்களும் எங்களைப் போன்ற / எங்களுக்குச் சமமான மனிதர்களைப் புகழ்ந்து பாடும் பழக்கத்தை விடவேண்டும், எப்போதும் உன்னுடைய பெருமையைமட்டுமே பாடவேண்டும், நீ குடிகொண்டிருக்கும் குன்றுகளைமட்டுமே வாழ்த்தித் தொழவேண்டும், அது ஒன்றுதான் எங்களுக்கு இன்பம் தரும் செயல்.

துக்கடா

 • இந்தப் பாடலில் ‘குன்றம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது திருப்பரங்குன்றம்
 • ’பிணிமுகம்’ என்றால் யானை என்றும் சிலரும், மயில் என்று சிலரும் சொல்கிறார்கள், இந்தப் பாடலில் ஏற்கெனவே ‘மஞ்ஞை’ என மயிலைக் குறிப்பிட்டிருப்பதால், அடுத்த வரியில் வருகிற ’பிணிமுகம்’ (இந்த இடத்தில்) யானையாகதான் இருக்கவேண்டும் என்று எண்ணி உரையில் குறிப்பிட்டுள்ளேன். தவறு என்றால் சுட்டிக்காட்டவும், திருத்திவிடுகிறேன்
 • இன்று ‘தினம் ஒரு பா’ 200வது நாள். தினமும் வாசித்து, கருத்துச் சொல்லி, தங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில், வலைப்பதிவில் இணைப்புக் கொடுத்து ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

200/365

Advertisements
This entry was posted in பக்தி, பரிபாடல், முருகன். Bookmark the permalink.

13 Responses to பாடுதும், தொழுதும்…

 1. முருகா…
  இது உன் தமிழ்!
  இந்த இரு நூறு பா…
  * உன் முன் – முன்னூறு ஆகி
  * நான் ஊற – நானூறு ஆகி
  * ஐய நின் ஐநூறு ஆகி
  * துயர் அறு நூறு
  * தமிழ் எழு நூறு
  * எண்ணும் தொறும் எண்ணூறு
  என…பல்கிப் பல்கிப்
  பல்லாண்டு பல்லாண்டு! பல கோடி நூறாயிரம்! தமிழ் ஆயிரம்! செவ்வித் திருக்காப்பு!

 2. GiRa ஜிரா says:

  ஒரு நூறு உயர் நூறாகி இருநூறு ஆக்கிய நாக சொக்கனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

  பரிபாடலில் இருந்து அருமையான பாடல் வரிகள் சிலவற்றை இங்கே எடுத்து இட்டிருக்கின்றீர்கள். மிக அழகு.

  பாருங்க. படிச்சாலே லேசுல புரியுது.

  பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி சிறு ஒப்பீடு.

  இந்தப் பாடல் எப்படி முடியுது? ஏம வைகல் பெறுக யாம் எனவே. இதே வரியை பெருந்தேவனாரும் பயன்படுத்துகிறார். “ஏம வைகல் எய்தின்றால் உலகே”. எங்க சொல்றாரு? குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து பாட்டுல சொல்றாரு. எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தப்போ எட்டுத் தொகைக்கும் கடவுள் வாழ்த்து எழுதுனவரு பாரதம் பாடிய பெருந்தேவனார்.

  பெருந்தேவனார் உலகமே ஏம வைகல் பெறட்டும்னு சொல்றாரு. நல்லழிசியார் ஏம வைகல் பெறுக யாம் (நாங்கள்)னு சொல்றாரு.

  சரி. உலகமோ குடும்பமோ, ஏம வைகல் பெறனும்னு ரெண்டு பேரும் சொல்றாங்க.

  அதென்ன ஏம வைகல்? பல நூல்கள்ள தேடியிருக்கிறேன். இந்தப் பயன்பாடு இப்ப இல்லைங்குறதால அதற்கான ஏற்றுக்கொள்ளக் கூடிய பொருளைத் தேடினேன். எனக்குத் தெரிஞ்சதப் புரிஞ்சதச் சொல்றேன்.

  ஏமம்னா என்ன? வைகல்னா என்ன? அத மொதல்ல புரிஞ்சிக்குவோம்.

  வைகல் – விடியல். வைகறை.
  ஏமம் – பாதுகாப்பு. இன்பநிலை

  வாழ்க்கையில் பிரச்சனையே இல்லைன்னு சொல்றவங்க எத்தன பேரு? ஆகக்கூடி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. இது போன்ற துன்ப இருளிலிருந்து விடியல் வேண்டும். அதான் வைகல்.

  அந்த விடியல் எப்படியிருக்க வேண்டும்? எப்போதும் இருக்க வேண்டும். இன்பநிலைதான் நம்மைப் பாதுகாப்பாக உணர வைக்கும். எதையும் பாத்துக்கலாம்னு தெம்பு தரும்.

  அப்படி எப்பவும் பாதுகாப்பா இன்பநிலை கொடுக்கும் விடியலுக்கு ஏம வைகல் என்று பெயர் என்பது என் புரிதல்.

  சரி. இப்பப் பாட்டுக்கு வருவோம்.
  மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடிப்
  பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ,
  பணி ஒரீஇ நின்புகழ் ஏத்தி
  அணி நெடும் குன்றம் பாடுதும் தொழுதும்

  மணி நிற மஞ்ஞை – அழகிய நீலநிற மணி போன்ற ஒளிரும் நிறம் கொண்ட மயில் (மஞ்ஞை)
  ஓங்கிய புள் கொடி – புள் என்றால் பறவை. ஓங்கி உயர்ந்த பறவைக் கொடி. என்ன பறவை? சேவல்தான். சேவலங் கொடியன்.
  பணிமுகம் ஊர்ந்த – பிணிமுகம் என்பது முருகனின் வாகனம். யானை வாகனமேதான்.
  வெல் போர் இறைவ – போரில் வெற்றி மட்டுமே பெரும் இறைவன். மிகவும் பிற்காலத்தில் காளமேகத்திடம் முருகனைப் பற்றி செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று பாடச் சொல்லி சிலர் போட்டிக்கு அழைத்திருக்கிறார். அவரும் விடாமல் “செருப்புக்கு வீரரை சென்றுழக்கும் வேலன்” என்று தொடங்கி ”வண்டே விளக்குமாறே” என்று முடித்தார். செரு என்றால் போர்க்களம். அங்கு புகுந்து வெற்றி கொள்ளும் வேலன் என்று பொருள். இதை ஒரு ஒப்புமைக்காகச் சொன்னேன்.
  பணி ஒரீஇ நின்புகழ் ஏத்தி – இந்த வரிக்கு இலக்கண விளக்கமெல்லாம் சொல்லாம ஒரு எளிய விளக்கம் சொல்றேன். உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை. ஆமா. முருகனுடைய புகழை மட்டும் ஏத்திங்குறதுதான் இதோட பொருள். பாடும் பணியே பணியாய் அருள்வாய்னு அருணகிரிநாதர் சொன்னாரே. அதேதான்.
  அணி நெடுங்குன்றம் பாடுதும் தொழுதும் – இதுல வரும் குன்றம் திருப்பரங்குன்றமேதான். திருமுருகாற்றுப்படையிலும் முதலில் சொல்லப்படும் படைவீடு திருப்பரங்குன்றமேதான்.

  கந்தன் கருணை படத்துல அறுபடை வீடு கொண்ட திருமுருகான்னு சீர்காழி பாடிய அருமையான பாட்டு இருக்கு. அதுல பழநி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்ச்சோலைன்னு ஒரு வரிசை காட்டுவாங்க.

  ஆனா அதில்லை ஆறுபடை வீட்டு வரிசை.

  திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்றுதோறாடல் (இதுல திருத்தணியும் உண்டு), பழமுதிர்ச்சோலை. இதுதான் வரிசை.

  நக்கீரர் ஆற்றுப்படுத்திய வீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். இப்போ ஆறுபடை வீடுகளாக மருவின.

 3. இந்த 200ஆம் பாடல், இசைப் பாடலா அமைஞ்சது மிகவும் மகிழ்ச்சி!
  பரிபாடல்கள், கலிப்பாடல்கள் – இரண்டுக்குமே இசை சார்ந்த தொல்காப்பிய இலக்கணம் உண்டு!

  * பரிந்து (melody) வரும் பாடல் = பரிபாடல்
  * கலி (துள்ளி/rock-rap) வரும் பாடல் = கலித்தொகை
  :))

  பரிபாடல் ஒவ்வொன்னுத்துக்கும் எழுதியவர் ஒருத்தர் இருப்பாரு! Tune போட்டவர் ஒருத்தர் இருப்பாரு!

  இந்தப் பா எழுதியவர் = நல் அழிசியார் (அழிசி நாடு என்பது இன்றைய ஆர்க்காடு)
  இந்தப் பா-வுக்கு Tune போட்டவர் = நல் அச்சுதனார்
  நோதிறம் என்கிற தமிழ்ப் பண்!!

 4. “நோதிறம்” என்பது கடவுள் வாழ்த்துக்குன்னே அமைந்த ஒரு தமிழ்ப் பண் (ராகம்)

  இந்தப் பரிபாடலில் முருகனை வாழ்த்தியது போல், இன்னோரு பரிபாடலில் நல் எழுநியார், திருமாலை, இதே நோதிறம் பண்ணால் வாழ்த்துவார்!
  (இன்று இரவு கிளம்புவதற்குள் இதைப் பாடித் தர முயல்கிறேன்)

  நோ = துன்பம்
  நோ-திறம் = துன்பத்தைப் போக்கும் திறம்! = அதுவே இறை வணக்கம்!

  என்ன அழகான ஒரு தமிழ்ப் பெயரைப் பண்ணுக்கு அமைத்து, அதை இசையாக்கி, கடவுள் வாழ்த்தாக வைத்துள்ளனர், சங்கத் தமிழர்!
  அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால்…கலி (Rock), பரி (Melody)-ன்னு!

  தமிழிசையில் இன்று கர்நாடக ராகங்களே இடம் பெறுகின்றன! பாட்டு மட்டும் தமிழ்!
  ஆனால் பண்ணும், முழவும் கொண்ட தமிழ்ப் பாடல்கள் வேணும்-ன்னா, தமிழ்ப் பண்கள் வேணும்-ன்னா…ஆழ்வார் அருளிச் செயலும், தேவாரப் பதிக வீட்டிலும் தான் கதவைத் தட்ட வேணும்!

  நட்டபாடை, இந்தளம், வியாழக் குறிஞ்சி, நோதிறம்-ன்னு பலப்பல தமிழ்ப் பண்கள்!

 5. //பிணிமுகம்’ என்றால் யானை என்றும் சிலரும், மயில் என்று சிலரும் சொல்கிறார்கள், தவறு என்றால் சுட்டிக்காட்டவும், திருத்திவிடுகிறேன்//

  பிணிமுகம் = யானை (அ) மயில் என்பது சரியே!
  இவ்விடத்தில் யானை என்பதே சரியான பொருள்!

  * முருகனுக்கு மூன்று ஊர்திகள் (வாகனம்) உண்டு! = மயில், யானை, ஆடு!

  பல ஆலயங்களில் முருகன் முன்னால் மயிலே இருந்தாலும்,
  சாமிமலையில் யானை!
  திருத்தணியில் முருகனைப் பார்க்காமல், திரும்பி நிற்கும் யானை!
  —-

  பிணிமுகம்-ன்னா என்ன?
  பிணித்தல் = கட்டுதல்! (Binding, Linking)!
  முகம் = இடம்! (துறை-முகம், செரு-முகம்)

  நெசவுத் தறியில் மாறி மாறி, ஊடு நூல் கட்டும் இடத்தைப் பிணிமுகம்/பிணி மிதி என்பார்கள்!
  அந்த நெசவுப் பா, மிதிக்கும் போது, கால் ஊடாடும்! வேகமா ஆடாது, மடக்கி மடக்கி, எடுத்து வைக்க வேண்டி இருக்கும்!

  மயில் நடப்பதைப் பாருங்க! அப்படித் தான் இருக்கும்!
  அது பறக்கவும் பறக்காது! சும்மா எத்தி எத்திப் பறக்கும்! ஏன்னா தோகையின் பாரம் அப்படி!
  யானை நடப்பதைப் பாருங்க! அப்படித் தான் இருக்கும்! ஓடுவதே, வேகமா நடப்பது போலத் தான் இருக்கும்!

  அப்படி நெசவுப் பா போல், பாவுவதால், இந்த இரண்டுக்கும் பிணிமுகம் என்ற பேரு வழங்கலாயிற்று!

 6. மணி நிற மஞ்ஞை = நீல மணிக் கழுத்து மயில் (மயிலுக்கு அழகே அதன் கழுத்தும் தோகையும் தான்!
  பெண் மயிலுக்குத் தோகை இல்லீன்னாலும், அழகு வேணும்-ல்ல? அதான் நீலக் கழுத்து ரெண்டுக்குமே உண்டு! Royal Blue)

  ஓங்கிய புள் கொடி = சேவற் கொடி
  கொடி ஏந்திய கொடியவன் = என் முருகன்:))
  டேய் முருகா, என் கொடியவா-ன்னு அப்பப்போ கூப்பிடுவேன்:)

  பிணிமுகம் ஊர்ந்த = யானை மீது மெல்ல ஊர்ந்த
  வெல் போர் இறைவ = வென்ற போர், வெல்கின்ற போர், வெல்லும் போர்!
  வெல் போர் = வினைத் தொகை!
  அது எப்படிப்பா முக்காலங்களிலும் வெல்ல முடியும்?

  வேல் இருப்பதால் என்றும் வெற்றி!
  அவனே வேல்! வேலே அவன்!
  வெல் என்ற வினைச்சொல்லே, வேல் என்று நீண்டு, பெயர்ச்சொல் ஆனது

 7. பணி ஒரீஇ = அதிகார ஆணைகள்/ பணி மொழிகள்/ அதைச் செய், இதைச் செய்-ன்னு வேலை! அதைக் கூட ஒதுக்கி விடுவோம்!

  நின்புகழ் ஏத்தி = ஆனா, உன் புகழ் ஏத்துவோம்!
  ஏன்னா மற்றதெல்லாம் தெருப்புகழ்! உன் புகழ் திருப்புகழ்!

  * தெருப்புகழ் = கொஞ்ச நாள் இருக்கும், அப்பால போயீரும்!
  * திருப்புகழ் = என்னிக்கும் இருக்கும்!

  MGR க்கு பயந்த அதிகாரிகள் எத்தனையோ பேர்! ஆனா இன்னிக்கி, சென்னையில் இராமாவரம் இல்லம், MGR வீடு பாழடைஞ்சி இருக்கு! பரிதாபமாப் பார்த்தேன்!
  = தெருப்புகழின் காலம் அவ்ளோ தான்!

  ஆனா, சென்னைப் பாரிமுனையில் கந்த கோட்டம், பல நூறு ஆண்டுகள்! ஆனா இன்னும் இருக்கு!
  பல மக்கள் சந்தடி, நெருக்கடியிலும், அந்தக் குறுகலான தெருவில், முருகா-ன்னு போய் நிக்கும் போது…கண்ணுல தண்ணி தானா வருது!
  = திருப்புகழின் காலம் என்னைக்கும் இருக்கும்!
  ———–

  அணி நெடும் குன்றம் பாடுதும் தொழுதும் = அப்படியான ஆலயம்! அணி நெடும் குன்றமான = திருப்பரங்குன்றம்!
  அந்த குன்றத்தை, அந்த முருகனை வாயால் பாடுவோம். கையால் தொழுவோம்!

  அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் = நாங்க மட்டும் தொழ மாட்டோம்! எங்கள் சுற்றமும் தொழும் முருகன் அவன்!
  எங்கள் குடிக் கடவுள்! எங்கள் குல தெய்வம்! எங்க குடும்பக் கடவுள்! = மொத்த தமிழ்க் குடிக்கும் ஒரு முருகன், அவன் திரு முருகன்!

 8. ஏம வைகல் பெறுக யாம் எனவே

  இதுவே பாட்டின் உயிர் வரி!

  இறைவனைத் தொழுவதால் வரும் பயன் என்ன? = “ஏம வைகல்”!
  What is ஏம வைகல்?

  சுவையான சாப்பாடு? ஸ்டைலா உடை? காரு-பங்களா-பலரும் மெச்சப் பணம்?
  அழகான பொண்ணு! கில்பான்ஸ்?
  அப்பாலிக்கா குடும்பம்? குழந்தை? சமூக அந்தஸ்து?
  அப்பாலிக்கா வயசு ஆக ஆக?
  அப்பாலிக்கா?
  அப்பாலிக்கா?

  யாரும் இல்ல! ஆனா நாம மட்டும் உண்டு:)
  கடைசி வரை நம்ம கூட வருவது = நாம் மட்டுமே!:)
  We are our Best Friend!

  ஆனா, இன்னொருத்தனும் வரான்!
  ஆனா, அவனை நாம ஒரு பொருட்டாப் பாக்குறதே இல்ல! ஏதோ நம்ம தேவைக்குத் தொட்டுப்போம், அப்பறம் வெட்டிப்போம்!
  ஆனா, தொட்டாலும், வெட்டாலும், அவன் நம்முடன் துணை வருவதை நிறுத்துவதே இல்லை! ஏன்?

  அவனுக்கு மான ஈனமே இல்லீயா?
  அப்போ மதிச்சோம், இப்போ கண்டுக்கறதில்ல!
  அதான் மதிக்கல-ன்னு தெரியுதே, அப்பறம் எதுக்கு மதியாதார் வாசல் அவன் மிதிக்கணும்? மானங் கெட்ட முருகன்:)))

  எதுக்கு நாய் மாதிரி பின்னாடியே வரான் இந்த முருகன்? = “ஏம வைகல்” குடுக்குத் தான்!

 9. ஏமம் = இன்பம்

  சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் என்னும்
  “ஏமப்” புணையைச் சுடும்-ன்னு குறள் ஞாபகம் வருதா?
  ஏமம் = இன்பம்! ஏமப் புணை = இன்பக் கப்பல்!

  ஏமம்+மாற்று = ஏமாற்று என்று ஆனது!
  நன் இன்பத்தை மாற்றுதல், துன்பம் தருதல் = ஏமம்+ மாற்று=ஏமாற்று!

  ஆக ஏமம் = இன்பம்!
  ——–

  வைகல் = தங்குதல்!

  * தாமரை வைகும் திருமகள் = தாமரையில் தங்கும் திருமகள்
  * வைகறை, வைகல் = ஒளி தங்கத் துவங்கும் காலம்! பொழுது முழுக்க அவ்வொளி தங்குகிறது! இரவிலும், நிலவுக்கு குடுத்து தங்குகிறது!

  ஆக, வைகுதல் = தங்குதல்!
  ——–

  இப்போ கூட்டிப் படிங்க!
  ஏம வைகல் = இன்பம் தங்குதல்!

  இன்பம் தங்கவே தங்காது! மாறிக்கிட்டே இருக்கும்!
  சும்மா ஒரு லட்டு, திருவையாறு அசோகா…என்னமா இனிப்பு, என்னமா இன்பம்!

  இந்த அசோகா/அல்வா எம்புட்டு தூரம் இன்பம் குடுக்குது?
  = நுனி நாக்கில் இருந்து, அடித் தொண்டை வரைக்கும் தான்! சுமார் பத்து செ.மீ இருக்குமா?
  அது வரைக்கும் தான் இன்பம்! அப்பாலிக்கா உள்ளாற போயி, வெளியாற வந்துரும்:))))

  ஆக, எந்த இன்பமும் = தங்கும் இன்பம் இல்ல!
  வரும் போகும்! வரும் இன்பம், போகும் இன்பம்!

  எது அப்போ தங்கும் இன்பம்? = ஏம வைகல்?
  = முருக இன்பம்!

 10. ஏம வைகல் = இதுக்கு இராகவன் சொன்னதையும் இன்னோரு முறை படிச்சிப் பாருங்க! புரியும்!
  அந்த உணர்வு! பாதுகாப்பு! இன்பம்!
  ———————–

  ஜாலியா இருக்கும் போதும் முருகா-ன்னு சொல்லுறேன்!
  மனம் ஒடைஞ்சி, தனிமையில் அழுவும் போதும் = முருகா-ன்னு வருது!
  எப்போதும் தங்கும் இன்பம் = முருக இன்பம்!

  சரி, எதானாலும், முருகன் விட்ட வழி….இறைவன் விட்ட வழி!
  என்னை எங்கோ கொண்டு போய் வைக்கத் தான் இவ்வளவும் பண்ணுறான்…தனி ஆளா…பாவம்!

  ஏம வைகல் = நிலைத்த இன்பம்! அதைக் குடுக்க அல்லாடுறான்! நான் தான் புரிஞ்சிக்கறதே இல்ல!
  நான் முரண்டு பிடிச்சாலும், முறைச்சாலும், சீ-ன்னு ஏசினாலும்…மானம் கெட்ட முருகன், என்னை விடுவதே இல்லை!

  அந்த நிரந்தர இன்பம் = ஏம வைகல் = அவனோடு உறவு!
  அவன் உறவு இன்பம் = என்னைக்கும் நிலைச்ச இன்பம்!

  அந்த உறவு, எனக்குப் புரியும் வரை, என் கிட்டயே கிடந்து அல்லாடுறான்!
  எதுக்கு? = ஏம வைகல், பெறுக யாம் எனவே

  மானங் கெட்ட முருகா,
  அவன் உறவு இன்பம் = என்னைக்கும் நிலைச்ச இன்பம்!
  அந்த உறவை எனக்குப் புரிய வை!
  ஏம வைகல், பெறுக யாம் எனவே!
  ஏம வைகல், பெறுக யாம் எனவே!

 11. amas32 says:

  இந்த சைட்டுக்கு வந்து வேடிக்கைப் பார்த்தாலே போதும் தமிழும், பக்தியும் ஒரு அறிவிலிக்கும் எளிதாக வந்து விடும்.
  நன்றிகள் சொக்கரே, ஜிரா, கேஆர்எஸ்! நான் வேறு என்ன சொல்ல முடியும்?
  amas32

 12. karthi says:

  hello kryes.. எங்கங்க இதெல்லாம் படிக்கிறீங்க ..ஏதாவது recommend புக் பண்ணுங்க

  • :))
   ஆகா! அறிந்ததை, இயன்ற வரை அறியத் தருகிறேன் கார்த்தி, அவ்ளோ தான்! பெருசா ஒன்னுமில்லை!

   எந்தப் புத்தகம் நீங்க விரும்பறீங்க-ன்னு தெரியல!
   முருகனைப் பற்றிய புத்தகம்-ன்னா, திருப்புகழ் வாசியுங்கள்! மனம் மணக்கும்!
   மேலோட்டமான பொருளோடு இங்கே இருக்கு = http://www.kaumaram.com/thiru/index.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s