ஒரு வித்தியாசமான தூது

என்னை உரையல், என் பேர் உரையல், ஊர் உரையல்,

அன்னையும் இன்னள் என உரையல், பின்னையும்

தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என்

கண் படா ஆறே உரை

நூல்: முத்தொள்ளாயிரம் (#82)

பாடியவர்: தெரியவில்லை

சூழல்: பாண்டிய மன்னனைக் காதலிக்கிறாள் ஒருத்தி, அவனிடம் தன்னுடைய காதலைச் சொல்வதற்காகத் தோழியைத் தூது அனுப்புகிறாள்

(வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் அல்ல, உரைநடை வடிவில் உள்ளது)

தோழி,

இரக்கம் இல்லாத யானையைக் கொண்ட தமிழர் தலைவன், அந்தப் பாண்டியன், என் காதலன், அவனிடம் எனக்காகத் தூது போவாயா?

ஆனால் ஒரு நிபந்தனை, அவனிடம் என்னைப் பற்றி எதுவும் சொல்லிவிடாதே, என் பெயரைச் சொல்லிவிடாதே, என் ஊரைச் சொல்லிவிடாதே, என்னுடைய மனம் கவர்ந்தவனாகிய அவனைச் சந்திக்கமுடியாதபடி என் தாய் என்னை வீட்டுக்குள் அடைத்துவைத்துத் துன்புறுத்துவதையும் சொல்லிவிடாதே, அவனை நினைத்து இங்கே ஒருத்தி தூங்காமல் தவித்துக்கொண்டிருக்கிறாள் என்பதைமட்டும் சொல்லிவிட்டு வா, அது போதும்!

துக்கடா

 • பொதுவாகத் தூது செல்கிறவர்கள் தாங்கள் யாருடைய சேதியைக் கொண்டுவந்திருக்கிறோம் என்கிற விவரத்தைச் சொல்லிவிட்டுதான் பேச ஆரம்பிப்பார்கள், ஆனால் இங்கே ஓர் ஆச்சர்யமான தூது, ‘என் பேரையோ ஊரையோ சொல்லிவிடாதே’ என்கிற நிபந்தனையுடன் தோழியைத் தூது அனுப்புகிறாள் ஒருத்தி, ‘அவனை நினைத்து நான் தவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதைமட்டும் சொல்லிவிட்டு வா, அந்தப் பய தேடிக் கண்டுபிடிச்சு என்னைக் கல்யாணம் செஞ்சுக்கட்டும்’ என்று சவால் விடுகிறாளோ?
 • சூட்சுமம், அந்தத் தோழி கேரக்டரில் இருக்கிறது, என்னதான் விவரம் சொல்லாவிட்டாலும், பெரிய க்ளூவாக இவள் முன்னே நிற்கிறாளே, தோழியைத் துரத்திக்கொண்டு வந்து தன்னைக் கண்டுபிடித்துவிடுவான் பாண்டியன் என்று அந்தக் காதலிக்குத் தெரிந்திருக்கிறது 😉
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • என்னை உரையலென் பேருரையல் ஊருரையல்
 • அன்னையும் இன்னள் எனஉரையல், பின்னையும்
 • தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென்
 • கண்படா ஆறே உரை

199/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், குறும்பு, தூது, பெண்மொழி, முத்தொள்ளாயிரம், வெண்பா. Bookmark the permalink.

6 Responses to ஒரு வித்தியாசமான தூது

 1. GiRa ஜிரா says:

  நல்ல பாட்டு. இதுக்குள்ள நெறைய மெல்லிய உணர்வுகள் இருக்கு. 🙂

  தலைவி என்ன சொல்றா?

  என்னை உரையலென் பேருரையல் ஊருரையல்
  அன்னையும் இன்னள் எனஉரையல், பின்னையும்
  ……………………… பெருமாற்கென்
  கண்படா ஆறே உரை

  இதுதான? இப்பிடிப் பிரிச்சுப் பாப்போமே

  என்னை உரை அல் என் பேர் உரை அல் ஊர் உரை அல்
  அன்னையும் இன்னள் என உரை அல் பின்னையும்
  ………………………… பெருமாற்கென்
  கண்படா ஆறே உரை.

  இதையா உரையா மாத்திப் பாக்கலாம்.

  என்னைப் பற்றிச் சொல். இல்லை என் பெயரைச் சொல். இல்லை என் ஊரைச் சொல். இல்லை அன்னை அடைத்து வைப்பதைச் சொல். இல்லை பாண்டியப் பெருமானுக்கென்று தூங்காமல் தவிப்பதைச் சொல்.

  இப்படியும் சொல்லலாம்ல?

  எல்லாமே சொல்லச் சொல்றா தலைவி. காதல்ல வேண்டாம்னா வேணும்னுதானே பொருள். 🙂

 2. amas32 says:

  பாண்டிய மன்னனைக் காதலிப்பவள் பெரிய இடத்துப் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். மேலும் அந்த காதல் கைகூடுவதற்கு சாத்தியம் இருப்பதால் தான் அந்தத் தாயும் பயந்து பெண்ணைப் பூட்டி வைக்கிறாள். ஒருவேளை தோழி தலைவியின் காதலை அவனிடம் வெளிப்படுத்தினாலே அந்தப் பெண் யாரென்று அறிந்து கொள்ள அவனால் முடியும் என்பது ஒரு சாத்தியக்கூறு. அல்லது, அவள் தந்தைக்கும் அரசனுக்கும் பகை இருந்து, இந்த காதல் கைகூடாது எனத் தெரிந்து அவள் தோழியிடம் தன காதலை மட்டும் அரசனுக்குத் தெரியப் படுத்தி, வேறு ஒரு தகவலும் தர வேண்டாம் எனத் தியாக நோக்குச் சிந்தனையோடும் சொல்லியிருக்கலாம். மொத்தத்தில் புதிராக உள்ளது!
  amas32

 3. R NAGARAJAN says:

  Good one

 4. பொதுவா, பெண்களுக்கு, சில அந்தரங்க விடயம்-ன்னா அம்மா தான்!
  மணமான பெண்களுக்குச் சொல்லவே வேணாம்! அம்மா வாக்கே வேத வாக்கு:)

  அப்படிப்பட்ட அம்மா-வையே இந்தக் காதலி அன்னை= இன்னள் என்று சொல்லி விட்டாள்!
  அம்மாவையே இப்படிச் சொல்லி விட்டவள், பின்னால், அம்மாவால் வந்த மற்ற அடையாளங்களைச் சொல்லக் கூட அவ்ளோ கோவம் போலும்!:)

  அதான்
  1. ஊர் சொல்லாதே
  2. பேர் சொல்லாதே
  3. என்னையும் சொல்லாதே
  – இவையெல்லாம் அம்மாவால் வந்தவை! இது எதுவும் வேணாம்!

  ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு!
  = தமிழ்நர் பெருமாற்கு, என் கண் படா “ஆறே” உரை!

  இங்கே ஆ”றே” என்ற ஏகாரம் தான் மிகவும் முக்கியம்!
  உனக்”கே” நான்-ன்னா என்ன அர்த்தம்?
  அவனுக்கும் இருக்கலாம், இவனுக்கும் இருக்கலாம், உனக்கும் இருக்கலாம்-ன்னா பொருள்?
  உனக்”கே” நான்! = உனக்கு மட்டுமே நான்!
  ஏ = தேற்றேகாரம்!

  அதே போல் என் ஆறே உரை-ன்னா = என் நிலைமையை மட்டு’மே’ சொல்!
  வேறு எதுவும் சொல்ல வேணாம்!
  அம்மாவால் எனக்கு வந்த = வேறேதும் சொல்ல வேணாம்!
  அம்மாவால் எனக்கு வராத = என்-அவன் நினைப்பை மட்டுமே சொல்!

  அடப் போங்கய்யா, நினைப்பை மட்டும் வச்சிக்கிட்டு, எப்படி அவன் இவளைத் தேடி வருவதாம்?

 5. தோழி, அறிவுள்ள தோழி!
  இதை யாருக்கும் சொல்லாதே-ன்னு ஒரு விடயத்தைச் சொன்னா,
  அவன் கிட்ட போயி, ‘ஏய், இதை யாருக்கும் சொல்லாதே-ன்னு அவ சொல்லச் சொன்னா’-ன்னு சொல்லுற தோழி:)))

  தோழி, பாண்டியனிடம் சென்று,
  “அவ பேரைச் சொல்லாதே, ஊரைச் சொல்லாதே, என்னைச் சொல்லாதே, என் தாயும் சொல்லாதே-ன்னு சொல்லச் சொன்னா! 🙂

  இதைக் கேட்ட மாத்திரத்தில் அவனுக்குப் புரிந்து போகும்! ஓ வீட்டு மேல கோவம்! இப்போ நாம போய்க் கூப்பிட்டா, தட்டாது ஒடி வந்துருவா = This is the Clue :))
  ——–

  ஆனா அடுத்த வரி = அவள் உன்னையே நினைச்சி நினைச்சி அவ கண்கள் போயின! இதை மட்டும் சொல்லு!

  இதைக் கேட்ட மாத்திரத்தில் அவன் இதயம் வலிக்கும்! உருகும்! ஏன்னா அவன் ஆண்மகன்!
  இவளை வெந்து மடிய விடமாட்டான்! நாள் தள்ளிப் போடாது, உடனே அவளை மீட்க+மீட்டக் கிளம்பி விடுவான்!
  அவன் வரும் போது, அவனுடன் “ஓடி” விடலாம்!:)))

  தனிமையில் வாடும் அவள், இப்படிச் சிந்தித்தே, தோழியிடம் சொல்கிறாள்!
  முருகா, இவளுக்காக, அவனைச் சீக்கிரம் அனுப்பு! – சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s