ஆழம் அறிதல்

நிலையும் நிரையும் நிரைப் புறத்து நின்ற

சிலையும் செரு முனையுள் வேகி … இலை புனைந்த

கள் அவிழ்க் கண்ணிக் கழல்வெய்யோய் சென்று அறிந்து

நள் இருள் கண் வந்தார் நமர்

நூல்: புறப்பொருள் வெண்பா மாலை (#6)

பாடியவர்: ஐயனாரிதனார்

சூழல்: வெட்சித் திணை, எதிரியின் நாட்டுக்குள் சென்று அவனுடைய பசுக்களைக் கவர்ந்து திரும்புதல்

தேன் சிந்துகின்ற மலர்களையும் இலைகளையும் சேர்த்துத் தொடுத்த மாலையைச் சூடியவனே, வீரக் கழல் அணிந்தவனே, போருக்குத் தயாராக வந்து நின்றிருக்கிறவனே,

நம்முடைய ஒற்றர்கள் இரவோடு இரவாக எதிரி நாட்டுக்குள் ஊடுருவிச் சென்றார்கள், அவர்களிடம் உள்ள பசுக்கூட்டங்கள் எத்தனை, அவை எங்கே நிற்கின்றன, அவற்றைக் காவல் காப்பதற்காக நிற்கும் வில் வீரர்களின் எண்ணிக்கை எத்தனை என்றெல்லாம் தெரிந்துகொண்டு திரும்பி வந்துவிட்டார்கள்!

துக்கடா

 • ’புறப்பொருள் வெண்பா மாலை’ ஓர் அழகான நூல். இலக்கணப் புத்தகத்தை இத்தனை சுவாரஸ்யமாகச் சொல்லமுடியுமா என்று வியக்கவைக்கும் படைப்பு
 • சங்கத் தமிழ்ப் பாடல்கள் அகம், புறம் என்று பிரிக்கப்பட்டிருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்தப் புறத்துக்குள் பன்னிரண்டு திணைகள் உண்டு, அவை ஒவ்வொன்றுக்குள்ளும் சுமார் இருபது துறைகள் உண்டு, இவை அனைத்தின் இலக்கணத்தைச் சொல்லி, உதாரணமாக ஒரு வெண்பாவையும் தரும் அருமையான புத்தகம் இது. படிக்கப் படிக்க அந்தக் காலப் போர்க்களங்கள், அங்கே பின்பற்றப்பட்ட நெறிமுறைகள், மனிதர்களின் உணர்வுகள், Best practices, சந்தோஷக் களியாட்டங்கள் என்று சகலமும் கண்முன்னே விரியும்
 • இந்தப் புத்தகத்தின் மேன்மைக்கு, இன்றைய பா, ஒரு நல்ல எடுத்துக்காட்டு, நான்கு வரிகளில் அந்தக் கால ஒற்றர்களின் தன்மைபற்றியும் அவர்கள் எதையெல்லாம் தெரிந்துகொண்டு திரும்பவேண்டியிருந்தது, எவ்வளவு எச்சரிக்கையாகச் செயல்படவேண்டியிருந்தது என்று சகலத்தையும் சொல்லிவிடுகிறது
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • நிலையும் நிரையும் நிரைப்புறத்து நின்ற
 • சிலையும் நெருமுனையுள் வைகி, இலைபுனைந்த
 • கள்ளவிழ்க் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து
 • நள்ளிருட்கண் வந்தார் நமர்

198/365

Advertisements
This entry was posted in இலக்கணம், புறம், போர்க்களம், வெண்பா. Bookmark the permalink.

5 Responses to ஆழம் அறிதல்

 1. amas32 says:

  நம்முடைய சங்க காலப் பாடல்கள் தான் என்ன ஒரு சொல்லோவியங்கள்! எவ்வளவு descriptions!
  ஒரு அரசன் என்றால், அவன் எப்படிப்பட்டவன் என்று ஒரு வரியில் விவரித்துச் சொல்லிவிடுகின்றனர் புலவர்கள்! மேலும் நம்முடைய தொன்மையான, அருமையான நாகரிகத்தை இந்தப் பாடல்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
  இலக்கணத்தை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்ல முடியுமா? நீதிக் கதைகளில் ரசிக்கும்படியான கதையினூடே நீதியும் சொல்லப்படுவது போலே இந்த இலக்கண நூல், படிக்கத் தூண்டும் பாடல்களின் மூலம் இலக்கணத்தையும் சொல்லிக் கொடுக்கின்றது.
  இதை பற்றிச் சொன்னதற்கு ரொம்ப நன்றி சொக்கரே 🙂
  amas32

 2. அருமையான நூல் தேர்வு!
  புறப்பொருள் வெண்பா மாலை = தொல்காப்பியத்துக்குப் பிறகு, தமிழில் புறப்பொருளுக்கு-ன்னு இருக்கும் ஒரே இலக்கண நூல்!

  * அகம் = காதல்/அன்பு = மனம் தொடர்பானவை
  * புறம் = வீரம்/வாழ்க்கை = உடல் தொடர்பானவை

  அகத்திணைகள் = குறிஞ்சி முதலான ஐந்து
  புறத்திணைகள் = வெட்சி முதலான பன்னிரெண்டு

  தொல்காப்பியத்துக்குப் பிறகு பல இலக்கண நூல்களைப் பலரும் எழுதினாங்க! நன்னூல் அதில் மிகவும் பிரபலம்!
  ஆனா…எல்லாரும் எழுத்ததிகாரம், சொல்லதிகாரத்தோட நின்னுட்டாங்க! யாருமே பொருளதிகாரத்தைத் தொடலை!

  அப்படீன்னா பாத்துக்கோங்க, தொல்காப்பியர் செஞ்ச தமிழ்த் தொண்டு!
  அப்பவே…மூனு அதிகாரத்துக்கும் எழுதிய தமிழ்த் தலைமகன் அவரு!

  * எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் = வெறுமனே மொழி, அதன் அமைப்பு/இலக்கணம் மட்டுமே பேசும்!
  * பொருளதிகாரம் தான் மக்கள், வாழ்வு, சமூகம் பற்றியெல்லாம் பேசும்!

  இன்னைக்கும் பண்டைத் தமிழ் மொழி மட்டுமல்லாது, தமிழ்ச் சமூகமும் அறியணும்-ன்னா…தொல்காப்பியர் ஒருவரே காலத்தின் கண்ணாடி!
  அவருக்குப் பின் வந்த எவரும், மூனுமே தொட்டச் செல்லலை!:((
  ————–

  இந்த நூலையே எடுத்துக்கோங்க!
  பொருளதிகாரம் பற்றி மட்டுமே பேசுது; அதிலும் புறப் பொருள் மட்டுமே! அகப் பொருள் அல்ல!
  எழுத்தோ/சொல்லோ கூடப் பேசலை!

  ஆனா, இது பாராட்டப்பட வேண்டிய முயற்சி!
  தொல்காப்பியத்துக்குப் பின், சமூக மாற்றம் எவ்வளவோ! அதில் புறப் பொருளை மட்டுமாச்சும் பேசத் துணிந்தாரே இந்தத் தமிழர் = ஐயனார் இதனார்! அவருக்கு நம் வணக்கம்!

 3. ஐயனார் இதனார் = சேர நாட்டுக் காரர்!
  சேர நாடு, தமிழுக்கு ஆற்றிய தொண்டு….பாண்டியன், சோழனைக் காட்டிலும் அதிகம்!
  ஆனா, இன்னிக்கு முல்லைப் பெரியாறு அணைக்கு அடிச்சிக்கிட்டு இருக்கோம்:(

  பதிற்றுப் பத்து, சேர மன்னர்களுக்கு மட்டுமேயான தமிழ் நூல்! வேற எந்தத் தமிழ் மன்னர்க்கும் முழுநூல் இல்லை!
  முதல் இலக்கியங்கள் = சிலம்பும் மேகலையும் சேரர்கள் தந்ததே!
  ஆனால், பிற்காலச் சமய அரசியலில், சேரர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டனர்! சோழத்தின் வழியாகக் கிரந்தமும் நன்கு பரவியது:(
  ————

  தொல்காப்பியர் காட்டியது…
  அகத்திணை = 5+2; புறத்திணை = 7
  கால ஓட்டத்தில், போர் முறைகள் மாற, புறத்திணை = 12 ஆச்சு! அதை ஐயனார் இதனார், புறப்பொருள் வெண்பா மாலையில் காட்டுவார்!

  மக்கள் விளையாட்டு, பேச்சு, வணிகம், போர், சமூக ஒழுக்கம்….பல செய்திகள் வரும்! மக்கள் பேச்சு/சொல்லு கூட வரும்!
  தாள் – தாழ் ரெண்டும் சரியான சொல்லே! இதையும் பு.பொ.வெண்பா மாலை காட்டும்!

 4. இந்தப் பாட்டுக்கு வருவோம்!
  எளிமையான பா!
  போர்த் துவக்கம் எப்படி-ன்னு சொல்லுது!
  முதல் திணை = வெட்சி!

  வெட்சி = எதிரி நாட்டு எல்லையில் பசுக் கூட்டங்களைக் கவர்வது!
  கரந்தை = அதை எதிர்த்து இவர்களும் போர் செய்வது

  போர் துவங்கிய பின், பயிர்களுக்கோ, பசுக்களுக்கோ, உணவுக்கோ துன்பம் வரக் கூடாது-ன்னு முன்னமேயே, அவைகளை ஓட்டி வர முனைவார்கள்!
  கொடுமைப்படுத்தாமல், அந்த நாட்டின் பால் வளத்தைத் திசை திருப்பிப் பாதுகாக்கும் கலை!

  ஏன்னா போர் துவங்கி விட்டால், இவைகளைக் காப்பாற்ற நேரம் இருக்காது! ரத்த வெள்ளம் தான் மிஞ்சும்! அதான் இப்படி!
  அணு குண்டு போட்டு, ஸ்வாஹா-ன்னு ஒட்டு மொத்தமும் பஸ்பமாக்கும் வழக்கம் தமிழ்ப் பண்பிலே கிடையவே கிடையாது – இதுவே சான்று!
  ——-

  அதான் இந்தப் பாட்டிலே, வெட்சித் திணை பேசுறாங்க!
  ஒற்றர்கள் முன்னமேயே போய், பசுக் கூட்டங்கள் எங்கே, அதன் காவல்காரர்கள் எப்படி, எப்படிச் சேதம் இல்லாமல் ஓட்டி வர முடியும்-ன்னு Survey செய்து திரும்புகிறார்கள்!
  பின்பு, வெட்சிப் பூச் சூடி இவர்கள் போய் கவர, அவர்கள் கரந்தைப் பூச் சூடி எதிர்ப்பார்கள்!

  அப்பறம் அப்படியே போர் கொஞ்சமாய், கொஞ்சமாய் விரிந்து, உச்ச நிலைக்கு வரும்!
  1. வெட்சி x கரந்தை = பசு/ உயிரினம் பாதுகாத்தல்
  2.வஞ்சி x காஞ்சி = படை நடத்திச் செல்லல்
  3. உழிஞை x நொச்சி = கோட்டை முற்றுகை
  4. தும்பை x வாகை = பொது இடத்தில் போர்
  – இவையே போர் முறைகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s