மணி நா ஆர்த்தவன்

முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு

பைங்கால் கொன்றை மென் பிணி அவிழ

இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்

பரல் அவல் அடைய, இரலை தெறிப்ப

மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப

கருவி வானம் கதழ் உறை சிதறி

கார் செய்தன்றே, கவின் பெறு கானம்

குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி

நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாது உண் பறவை பேது உறல் அஞ்சி

மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்

உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்

கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது

நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்

போது அவிழ் அலரின் நாறும்

ஆய்தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே

நூல்: அகநானூறு (#4)

பாடியவர்: குறுங்குடி மருதனார்

சூழல்: முல்லைத் திணை, காதலியைப் பிரிந்து சென்ற காதலன் ‘மழைக்காலத்தில் திரும்பி வருவேன்’ என்கிறான். இப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஆனால் அவன் இன்னும் வரவில்லை. வருந்திய காதலியிடம் பேசுகிறாள் தோழி

ஆராய்ந்து தேர்ந்தெடுத்த வளையல்களை அணிந்த அரிவையே,

முல்லைக் கொடிகளில் கூர்மையான முனையை உடைய அரும்புகள் தோன்றிவிட்டன. தேற்றா மரம், கொன்றை மரம் ஆகியவற்றின் அரும்புகள் மெல்லமாக மலரத் தொடங்கிவிட்டன.

இத்தனை நாளாகத் தண்ணீர் இல்லாமல் வருந்திய இந்த உலகத்தின் துயரத்தைப் போக்குவதற்காக, மின்னல் வெட்டுகிறது, மேகம் மழைத்துளிகளை வேகமாகக் கீழே அனுப்புகிறது, மழை பொழிய ஆரம்பித்துவிட்டது, இனிமையான கார்காலம் இது!

மழை தொடர்ந்து பெய்வதால், பரல் கற்களை உடைய பள்ளங்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து நிற்கிறது. இரும்பை முறுக்கிவிட்டதுபோன்ற கருப்பான, பெரிய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்கள் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு மகிழ்ச்சியாகத் துள்ளுகின்றன. ஒட்டுமொத்தக் காடும் அழகு பெற்றுவிட்டது.

சிறிய மலைகளைக் கொண்ட நகரம் உறையூர். அங்கே மக்கள் ஆரவாரத்துடன் திருவிழா கொண்டாடுகிறார்கள். அந்த உறையூருக்குக் கிழக்கே உள்ள நீண்ட, பெரிய மலையில் காந்தள் அரும்புகள் மலர்கின்றன, அந்தப் பூக்களைப் போல் மணக்கின்ற அழகு உன்னுடையது.

ஆகவே, இந்தக் கார்காலத்தைப் பார்த்தவுடன் உன் காதலனுக்கு உன்னுடைய ஞாபகம் வரும். உடனடியாகக் கிளம்பி வருவான்.

அவனுடைய தேரில், சிறப்பான பிடரியைக் கொண்ட குதிரைகள் கட்டப்பட்டிருக்கும். அவை தங்களுடைய தலைகளை வளைத்து ஆட்டிக்கொண்டே கடிவாளம் நெகிழும்படி அதிவேகமாக ஓடும்.

உன் காதலன் வருகின்ற வழியில், ஒரு பூஞ்சோலை இருக்கும். அங்கே யாழின் இசையைப்போல் இனிமையாகச் சத்தமிட்டபடி வண்டுகள் காதல் செய்யும்.

அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன், உன் காதலன் தேரை நிறுத்திவிடுவான். தன்னுடைய தேரின் மணிச் சத்தத்தைக் கேட்டு அந்த வண்டுகள் பயந்து விலகி விடுமோ என்று எண்ணி, குதிரைகளின் கழுத்தில் உள்ள மணிகளைச் சத்தம் எழாதபடி கட்டிவிடுவான்.

கவலைப்படாதே தோழி, அவன் விரைவில் இங்கே வந்துவிடுவான், உன்னுடைய பிரிவுத் துயரம் தீரும்!

துக்கடா

 • தோழி என்ன சொல்ல வருகிறாள்? ‘வண்டின் காதலைக்கூடத் தடை செய்ய விரும்பாத காதலன், உன்னை ஏமாற்றமாட்டான்’ என்று தேற்றுகிறாளா, அல்லது ‘இப்படிக் குதிரைக் கழுத்தில் உள்ள மணிகளைச் சத்தம் எழாதபடி மாற்றிக் கட்டியதால்தான் அவன் வரத் தாமதமாகிவிட்டது’ என்று சாக்குப்போக்குச் சொல்கிறாளா? :>
 • அரிவை = பெண்களுக்குரிய ஏழு பருவங்களில் ஒன்று, 20 முதல் 25 வயதுவரை

197/365

Advertisements
This entry was posted in அகநானூறு, அகம், இயற்கை, தோழி, நாடகம், பிரிவு, முல்லை, வர்ணனை. Bookmark the permalink.

11 Responses to மணி நா ஆர்த்தவன்

 1. காதல் செய்கையில் கிலுங்கப் போகும் உன் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த வளையல்களைத் துறந்து அணைத்துக்கொள்ள கதவருகில் நில்லு என்கிறாளோ…

 2. இந்தப் பாடலை கல்லூரியில் படித்த ஞாபகம். மிக நல்ல தேர்வு. “தோழி என்ன சொல்ல வருகிறாள்?” என்பதற்கு, “தலைவன் திரும்பி வருவான், அவன் வரும் போது தேரில் பூட்டிய மணியின் சத்தம் கேக்கும், மணிச் சத்தத்தை கேட்க இயலவில்லை என்று வருந்தி, தலைவன் வருவானோ, மாட்டானோ என்று வருந்திய தலைவிக்கு தோழி சொன்னதாகவும் கொள்ளலாம்.”

  தலைவன் தேர்ப்பகனுக்கு சொல்வதாகவும் கூட ஒரு பாடல் உண்டு. நன்றி !

 3. சங்கப் பாடல்கள்-ன்னாலே 1. சொல் அடர்த்தி, 2 காட்சிப் படுத்தல் 3. பொருள் தேற்றம் – மூன்றுமே உண்டு!
  ரொம்ப சொல்லைப் போட்டு நீட்டி முழக்காது, அந்தக் கற்பனையை வார்த்தையில் விரிக்காமல், படிப்பவர் மனத்தில் விரிக்கும் கலை = சங்கத் தமிழுக்கே உரியது!

  இந்தப் பாட்டைப் பாருங்கள்….
  மகரந்தம் மாந்தும் வண்டுக்கு, இடையூறு செய்யுமோ மணிச் சத்தம்?-ன்னு தலைவன் நினைக்கிறானாம்!
  அதுவும் தனி வண்டு அல்ல! துணையுடன் கூடிய வண்டு! = பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த…

  இந்தச் சேதியைத் தலைவி கூடச் சொல்லவில்லை! தோழி சொல்கிறாள்!
  அப்படீன்னா, அது அந்தரங்கமா இல்லாம, பல பேருக்கும் தெரிஞ்சே இருக்கு! அவன் மெல்லிய குணம்!
  அஞ்சுறானாம்! அஞ்சுவதா ஆண்மை?
  ஆமாம்! = வன்மைக்கு அஞ்சாமை! மென்மைக்கு அஞ்சுதல்!
  கருணையின் பாற்பட்டு வந்த அஞ்சுதல்!

  இப்படிப்பட்டவனா அவன்?
  வண்டை வாட விடாதவன், வண்டு விழியாளை வாட விடுவானோ?
  ————-

  பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த…
  தாது உண் பறவை பேது உறல் அஞ்சி
  மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்

  மூனே வரியில் மொத்த பாட்டும் முடிஞ்சிருச்சி!
  ஆனா இதை மட்டும் சொன்னாச் சேதி ஆயீரும்! சேதியைக் கவிதை ஆக்கணும்! எப்படி?

 4. அவனை இவள் காதலித்தாள் = இது சேதி!

  அந்தக் காதல் எப்படிப்பட்டது, அவள் ஆற்றாமை, அவன் தொழில்,
  அவள்-அவன் கூடுதல், இன்பம்,
  இன்பத்தில் தான் மட்டும் அல்லாமல், சுற்றியுள்ள பலதும் மலர்தல் = இதையெல்லாம் சொன்னாச் சேதி->கவிதை ஆகிறது!

  இந்தக் கவிதையில் சொல்லாட்சி, சொல்லடர்த்தி பாருங்க!
  * முல்லை வைந்நுனை => வை=கூர்மை!

  வை இலை நெடு வேல் -ன்னு முருகனின் வேல்!
  முல்லைப் பூவும் கூர்மையா இருக்கு! அப்படீன்னா அது முல்லை அரும்பு, இன்னும் பூவா விரியல! அதுக்குள்ள அவசரப்படாதே டீ-ன்னு தோழியின் குறிப்பு:)
  அதாச்சும் கார் காலம் இப்போ தானே துவங்கியது? முதல் நாளே உனக்கென்ன அப்படி அவசர அலைபாயும் மனசு? வருவான்-ன்னு குறிப்பு!

  * பைங்கால் கொன்றை = கொன்றைப் பூவின் கால் பச்சையா இருக்காம்! அதாச்சும் மரத்தில் அப்போ தான் புதுசாப் பூத்த கொன்றை!
  பூ நல்லாப் பூத்துருச்சின்னா, அந்தப் பூங் காம்பு சிவப்பா/பழுப்பா மாறிடும்! பச்சையா இருக்காது! இங்கே பச்சையா இருக்குன்னா, Just now Girl, Whatz the Hurry?:)

  * இரும்பு திரித்து அன்ன மா = நம்ம Twisted Steel Rod ன்னு சொல்லுறோமே! அது போல் பின்னிவிட்ட கொம்பு! அப்படியான மான்!

  * இரு மருப்பின் பரல் அவல் அடைய, இரலை தெறிப்ப = மான் குதிப்பதே அழகு! அதிலும் அது தண்ணியில் கால்பட்டுத் தெறிச்சி, குதிப்பது அழகோ அழகு!

  * மலர்ந்த ஞாலம் = கருவி வானம்
  ஆகா! வானம் தான் கருவி! அதனால் மலர்வது உலகம்! ஒரே வரியில் எப்படி வைக்கிறாரு!

  * கார் செய்தன்றே கவின் பெறு கானம்
  சாப்பிட என்னப்பா செய்ய?
  தோசையும் கறிக்குழம்பும் செய்யுங்க-ம்மா!
  அது போல, காடு செய்யுதாம்! என்னத்த? கார் காலத்தை!

  காலம் தானாக உருவாவது! ஆனால் அதைக் காடு செய்து, நம் விழிக்கு உணவு அளிக்குது என்பது போல் கவிஞர் வரைஞ்சு காட்டுறாரு!

 5. * குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
  குரங்குதல் = வளைதல்! சும்மா வளைஞ்சிப் பாய்ஞ்சிக் கிட்டே இருப்பதால் அந்த விலங்கு=குரங்கு!
  ஆனா இங்கே சொல்லப்படுவது குதிரை! அது தலையை வளைச்சிக்கிட்டே இருக்குதாம்! அதனால் பிடரி மயிர்கள் விரிஞ்சி இருக்கு!

  * நரம்பு ஆர்த்தன்ன = வண்டுகள் துணையோடு போடும் சத்தம்….ங்ங்ங்கொய்ய்ய்ங்….
  ஒத்தைத் தம்பூரா நரம்பைச் சுண்டி விட்டா, என்ன சத்தம் வரும்? அந்தச் சத்தம்

  இந்த அமைதியான லயிப்பான இசைக்கு….
  டங் டங்-ன்னு யாராச்சும் மணி அடிப்பாங்களா?

  அது மாதிரி இசையுள்ளம் கொண்ட தலைவன்….
  இந்த ஓசைக்கு இடையூறு வராமல், தன் குதிரையின் மணிகளை, அந்த மணியின் நாவைக் கட்டுகிறான்! இவனல்லவோ ஆண்மகன்! என்னவொரு மென்மைப் புரிதல்!
  ——-

  யாரு இவன்?
  = குறும்பொறை நாடன்
  = உறந்தைக் குண அது = உறந்தை (எ) உறையூருக்கு கிழக்கே
  = நெடும் பெரும் குன்றத்தன்
  (தஞ்சாவூர் பக்கம் மலை கிடையாது; இது திருச்சி/உறையூர் தாண்டி கிழக்கால தொடங்கும் கொல்லி மலைச் சாரல்)
  = நின் மாண் நலம் படர்ந்தே = உன் நலங்கள் அத்தனையும் அறிந்தவனடி இவன்….

  உன்னைப் பிரிந்து இருந்த காம வேட்கை தணித்துக் கொள்ள, ஓடி வரும் அவசரத்திலும்…
  இன்னொரு காதல் ஜோடியான வண்டுகளின் இன்ப கீதம் தடைப்படாமல் வரணும்-ன்னா…..அவனுக்கு எத்தனை மெல்லிய உள்ளம்….

  அவன் வருவான்…
  அவன் வந்தவுடன் கோபித்துக் கொள்ளாது…
  அவனுக்கு எல்லாம் வழங்கு-ன்னு
  மென்மையான அவனுக்கு நீ எல்லாம் வழங்கு-ன்னு
  அவளைத் தோழி தயார்ப்படுத்துகிறாள்! :))

  இதுவே சங்கத் தமிழின் நுண்ணிய காதல் இன்பம்!

 6. amas32 says:

  காதலன் காதலி இருவரின் நற்குணங்களையும் சொல்லும் தோழி நல்லவள், மேலும் வல்லவள்! அவள் நல்லவள், ஆதலால் தலைவியின் ஏக்கத்தையும், விசனத்தையும் தெரிந்து அவளை அமைதி படுத்துகிறாள். அவள் வல்லவள், ஏனென்றால் தலைவனின் நுண்ணிய குணத்தையும் அறிந்து வைத்திருந்தாள். அசூயை இல்லாமல் தோழிக்கு, இப்பொழுது தான் கார்காலம் தொடங்கியுள்ளது
  என்று அதற்கான காட்சிகளை விவரிக்கிறாள். அதே சமயம் காதலனின் நற்குணங்களைச் சொல்லி அவன் விரைவில் வந்து விடுவான் என்று தேற்றுவதுடன், அவனை நன்கு மகிழ்விக்கவும் தூண்டுகிறாள் இந்த தயாள
  குணமுடைய தோழி! காதலைத் தான் எவ்வளவு அழகுறக் காட்டுகின்றன சங்கப் பாடல்கள்!
  amas32

 7. ஆனந்தன் says:

  எப்பேர்ப்பட்ட ஒரு பாடல்! எப்பேர்ப்பட்ட ஒரு ரசனை! அடடா!
  சொக்கநாதா! கண்ணபிரானே! நீவிர் வாழ்க இணையத்தில் பல்லாண்டு.

 8. Pingback: நெஞ்சுக்குள் பாய்ந்திடும் மாஅலை | தினம் ஒரு ’பா’

 9. Pingback: நிலவு விரிந்தது | தினம் ஒரு ’பா’

 10. Pingback: ரசனை | மனம் போன போக்கில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s