சீதா ராமா!

பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள்

தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு என, தனக்கு வந்த

நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்,

என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள்!

நூல்: கம்ப ராமாயணம் (சுந்தர காண்டம் / திருவடி தொழுத படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: இலங்கையில் சீதையைச் சந்தித்துத் திரும்பிய அனுமன் ராமனிடம் பேசுவது

(வார்த்தைக்கு வார்த்தை எழுதிய விளக்கம் அல்ல, உரையாடல் நடையில் உள்ளது)

ராமா,

தங்கத்துக்கு இணை வேறு எதுவும் இல்லை, தங்கம்தான்.

அதுபோல, பொறுமையில் சீதைக்குச் சமமாக யாருமே கிடையாது, அந்த விஷயத்தில் சீதைக்கு இணை சீதைதான்.

அந்தச் சீதையை நீ திருமணம் செய்துகொண்டாய், உனக்கு இணையாக வேறு யாரும் இல்லை என்கிற அளவுக்கு உன்னை உயர்ந்தவனாக்கிவிட்டாள்.

அட, அதுகூடப் பரவாயில்லை, ஒரே ஒரு நாள், ஒரே ஒரு மணி நேரம் அவளைப் பார்த்துத் தூது சொல்லித் திரும்பினேன், எனக்கு இணையாக வேறு யாரும் இல்லை என்கிற அளவு என்னையும் உயர்த்திவிட்டாளே!

துக்கடா

 • இந்தக் காலத்தில் சில அரசியல்வாதிகளை / அதிகாரிகளை / தலைவர்களைக் ‘கிங் மேக்கர்ஸ்’ என்பார்கள், அதுபோல சீதை ‘Excellence maker’போல!
 • பெண்ணியவாதிகள் இந்தக் கவிதையை ரொம்ப ரசிப்பார்கள், ராமருக்குப் பெருமை அவர் மனைவி சீதையால்தான் என்று அடித்துச் சொல்கிறார் பரம ராம பக்தராகிய அனுமார் 😉
 • கம்பரின் அழகான இந்தப் பாடல் கொஞ்சம் திரும்பி நிற்கிறது, வரிக்கு வரி மாற்றிப் படிக்கவேண்டும் ‘பொன்னை ஒப்பு பொன் அலது இல்லை’, ‘தன்னை ஒப்பு தன் அலது இல்லை’, ‘நின்னை ஒப்பு நின் அலது இல்லை’, ‘என்னை ஒப்பு என் அலது இல்லை’!

196/365

This entry was posted in அனுமன், கம்ப ராமாயணம், கம்பர், நாடகம், பக்தி, ராமன். Bookmark the permalink.

12 Responses to சீதா ராமா!

 1. amas32 says:

  “இந்தக் காலத்தில் சில அரசியல்வாதிகளை / அதிகாரிகளை / தலைவர்களைக் ‘கிங் மேக்கர்ஸ்’ என்பார்கள், அதுபோல சீதை ‘Excellence maker’போல!” ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க சொக்கரே 🙂
  பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பார்கள். மனைவியின் அதிர்ஷ்டத்தில் தான் கணவன் வாழ்க்கை அமைகிறது.
  கவிஞர் கண்ணதாசன் அதையே அழகாக, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று எழுதியுள்ளார். அனால் இங்கே இறைவனுக்கே சீதை வரமாக வந்துள்ளாள்.
  பொறுமைக்கு உதாரணமாக சீதையை சொல்கிறோம், ஆனால் அந்த உதாரணத்துக்காக அவள் பட்ட இன்னல்கள் தான் எத்தனை!
  பூமா தேவியான சீதா தேவிக்கு என் வணக்கம்.
  amas32

 2. GiRa ஜிரா says:

  கம்பன் கவியமுதம் அள்ளிப் பருக யாருக்குத்தான் விருப்பமிருக்காது.

  ஐம்பெருங்காப்பியங்களுக்குப் பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த காப்பியமல்லவா. அதுதான் காத்திருந்த தமிழ் தன்னுடைய கவிச்சுவையெல்லாம் கம்பன் வழியாக எழுதிக் கொண்டது போலும்.

  கம்பன் காப்பியத்தில் ஒவ்வொரு பாத்திரமும் ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உரியவை.

  ஆழ்ந்து படித்தால் பொதுவாக இராமாயணக் கதைகளில் பெரியவர்கள் நமக்குச் சொல்லாதவைகள் புரியும்.

  கம்பன் எதையும் மறைக்கவில்லை. ஆனால் கம்பன் சொன்னான் என்பதுதான் மறைக்கப்பட்டது. சரி. போகட்டும்.

  பாவிற்கு வருவோம்.

  இதில் மொத்தம் மூன்று பாத்திரங்கள் வருகின்றன. ஒன்று பேசுகின்ற பாத்திரம். இன்னொன்று பேசப்படுவது. மற்றொன்று பேசுவதைக் கேட்கும் பாத்திரம்.

  பேசுவது அனுமன். கதையில் அனுமனின் பாத்திரம் ஒரு தொண்டன் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. சூரியனிடம் கற்றான் என்றெல்லாம் இருந்தாலும் கடைசியில் ஒரு தொண்டனாக அறியப்படுகின்றான்.

  நன்றாக பார்த்தால் அனுமன் இந்தக்கால அரசியல் தொண்டனின் நிலையைச் சரியாகப் பிரதிபலிக்கிறான். அந்த அளவிற்கு ஒப்பிடுவதற்குச் சான்றுகளைத் தருகிறான் கம்பன்.

  தன் வலிமை தனக்கே தெரியாதவன். தலைவனுக்கே எல்லாம் செய்கிறான். அதிலேயே இன்பம் காண்கிறான். தனக்கென ஒன்றுமில்லை. தலைவனுக்கு ஒன்று என்றால் சண்டையிலும் இறங்குகிறான். இதுதான் அனுமன். இதுதான் இன்றைய அரசியல் தொண்டனின் நிலையும் ஆகும்.

  போர் முடிஞ்சது. இராவணன் போயாச்சு. வீடணனுக்குப் பட்டம் கட்டியாச்சு. அனுமன் போய் சீதையக் கூப்புடப் போறான். போர் முடிஞ்சதுல சீதைக்கு மகிழ்ச்சி. அப்ப அனுமன் சொல்றான், “அம்மா, இந்த அரக்கிகள்தானே ஒங்களைத் துன்புறுத்துனாங்க. திரிசடையத் தவிர மத்தவங்களையெல்லாம் கொன்னுர்ரேன்.”
  திரிசடையாள் எம்மோய்
  மனவினில் சுடர் மாமுக மாட்சியாள்
  தனை ஒழித்து இவ் அரக்கியர் தங்களை
  வினையினின் சுட வேண்டுவன் யான் என்றான்

  இதை ஏன் அனுமன் சொல்ல வேண்டும்? அதுவும் வீடணன் அரசனாக இருக்கும் ஒரு நாட்டில்? நன்றாக யோசித்துப் பார்த்தால் இதைச் சொல்வதன் மூலம் சீதையை மகிழ்ச்சிப் படுத்த விரும்புகிறான் என்று மட்டுமே தோன்றுகிறது. பெண் என்பதால் தாடகையை வதைக்க யோசித்த தலைவனுடைய தொண்டன் காவல் பெண்டிரைக் கொல்வேன் என உரைத்த திறம் அவனுடைய தொண்டரடித்தன்மையை மட்டுமே காட்டுகிறது.

  கண்டேன் சீதையை என்றவந்தான். கடலைத் தவ்விக் கடந்தவன். என்னென்னவோ பெரியவைகள் செய்தவன் சிறியது சொல்லிய காட்சி இது.

  அத்தோட காட்சி முடியலை. ”வள் உகிரால் பிளந்து, இரை செய்வேன், மறலிக்கு, இனி”ன்னும் சொல்றான். கை நகத்தாலாயே இவங்களைப் பிளந்து கொன்னு எமனுக்கு இரையாக்குவேன்னும் சொல்றான்.

  அப்புறம் சீதை தடுத்தப்புறம் அடங்குறான்.

  நல்லா காட்சிப்படுத்திப் பாருங்க. அப்படியே இன்றைய அரசியல்/சினிமா தொண்டன் காட்சிக்கு வருவான்.

  இதிலிருந்து கம்பன் என்ன சொல்ல வர்ரான்? ஒருவன் மிகப்பெரிய அறிஞனாக இருந்தாலும் தலைவனே எல்லாம் என்று அடிப்பொடித் தொண்டனாகி விட்டால் அவன் சறுக்குவதற்கு வாய்ப்புண்டு என்றே கூற வருகின்றான்.

  என்னவோ தெரியலை. யுத்தகாண்டத்துல அதுவரைக்கும் ஒழுங்காப் பேசுன பாத்திரங்கள் நிலைமாறி உளறுகின்றன.

 3. நல்ல பாட்டு. எனக்கு வேற ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருது.
  அதுவும் ‘இதுக்கு இணை இது’ன்னு சீதையைப் பத்தி சொல்லிட முடியுமா?ன்ற ரீதியில ஒரு பாட்டு.

  சூர்ப்பனகை சீதையை ராவணனுக்கு வர்ணிக்கிறா


  வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
  பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
  சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;சொல்லல் ஆம் உவமை உண்டோ?
  “நெல் ஒக்கும் புல்” என்றாலும்,நேர் உரைத்து ஆகவற்றோ!

  உவமை சொன்னேன் பேர்வழியேன்னு ஒரு சொல்லை வைக்க முடியும். ஆனா ஒண்ணு கூட அவள் அழகை முழுமையா உணர்த்தும் விதமா அமையாது.

  • GiRa ஜிரா says:

   அட்டகாசம். அட்டகாசம். என்ன சொன்னாலும் பத்தாதுய்யான்னு சூர்ப்பனகை ஏத்தி விட்டிருக்கா. அதான் இராவணன் கிறுகிறுத்துப் போயிட்டான். 🙂

 4. காப்பியங்கள் காப்பியங்களாக இருப்பதற்கு காரணமே அவற்றை பல விதங்களில் நாம் படிக்கலாம் என்பதனால் தான். ஜிரா சொல்வது ஒரு வகையில் சரிதான். இதை அரசியல் தொண்டன் என்று நினைக்கலாம், பலர் வீட்டில் காலம் காலமாக வேலை செய்யும் ஒரு வேலைக்காரனாக நினைக்கலாம், இல்லை மேல் அதிகாரிக்கு எப்பொழுதும் சலாம் போடும் ஒரு ஊழியனாக நினைக்கலாம். ‘நம்மின பண்டு’ என்பார்கள் தெலுங்கில் (நம்பிக்கைக்குரிய ஒரு பணியாள்). இது எல்லா சமுதாயங்களிலும் வேரூன்றி இருக்கிறது என்றே சொல்லவேண்டும். எதற்காக ஒரு பலசாலி ஒருவனை தலைவனாக ஏற்றுக்கொண்டு தன் பலம் தானே அறியாமல் வாழ வேண்டும்? இந்த புதிர்க்கு விடை இருப்பதாக எனக்கு தெரியவில்லை அனால் எல்லோருக்கும் பெற்றோர்களால் இந்த பாடம் தான் புகட்டபடுகிறது: அனுமனாக இரு, ராமனாக அல்ல.

 5. 1. அனுமன் இன்றைய அரசியல் தொண்டன் அல்லன்! மாண்புமிகு முதலமைச்சர் என்பது வாரியார் வாக்கு!
  அவன் ஏன் அரசியல் தொண்டன் அல்ல என்பதற்கான வாரியார் வாய் அமுதத் தரவுகள், கீழே தொடரும்!

  2. காப்பியங்களை, கதை மாந்தர்களின் பாத்திரப் படைப்பை வைத்து நாம் அணுகுவதே இல்லை!
  நம்ம மனசில் என்ன புடிச்சிருக்கோ, அதை வைத்தே அணுகுகிறோம்! அதனால் தான் பல குழப்படிகள்!:)

  3. ஒன்னு வில்லன் & Co = கெட்டவர்கள்…. or ஹீரோ & Co = நல்லவர்கள்! இதுவே சிறு வயதுக் கதைகள் முதல், பெரியவர்களாகியும் நாம் செய்வது!
  சின்ன வயசுல இராவணன் கெட்டவன் போலக் காமிச்சாங்க! ஓவர் புனிதப் பூச்சு! நாம கட்டுடைப்போம், நாம வளர்ந்து இராகவன் அயோக்யன் என முழங்குவோம்!:))
  ——————-

  4. ஆனால், கம்பன் அப்படிக் காட்டவில்லை!

  * வாலி வதமா? = இராகவனே தன் தவற்றை ஒப்புக் கொள்கிறான்! அதற்கு கழுவாயாக, அடுத்த பிறவியில் அப்படியே இறக்கத் துணிகிறான்! ஆனால் இன்னிக்கும் நாம பட்டிமன்றங்களில் நியாயப் படுத்துகிறோம்:(
  * சீதையின் கற்பா? = இராகவனையே எதிர்த்துப் பேசுகிறாள்! புரியாத கணவனுக்குப் புரிய வைக்கிறாள்!

  * இலக்குவன் கோபக் காரனா? பரதனோ குணக் குன்று! இலக்குவனை விட மேம்பட்டவன்
  * சூர்ப்பனகை = அண்ணன் இராவணனால், கணவனையே இழந்தவள்! காமக் காப்பு ஏதுமின்றி, பாவம் பித்தானாள்!

  * இராவணன் = சீதையை அபகரித்ததை விடுத்துப் பார்ப்போம்!
  அவன் நாட்டு மக்கள் அவனைப் பற்றி என்ன பேசுகிறார்கள்? நந்தி தேவர் அவனைத் திட்டித் தீர்த்தது என்ன?
  இராவணன் மிக நுணுக்கமானவன்! அமெரிக்க அரசாங்க மனப்பான்மை மிக்கவன்!:))

  * அனுமன், இராமன் சொல்லையே மறுத்துப் பேசுகிறான் – வீடண அடைக்கலப் படலத்தில் = இவனா அரசியல் தொண்டன்?
  இராமனைச் சோதிக்க, மாறு வேடத்தில் செல்கிறான்! பின்பே தன் ஆதரவை வழங்குகிறான்! = இவனா அரசியல் தொண்டன்?
  அனுமன், இலக்குவனை இடித்து உரைக்கிறான் = குடும்ப அரசியலுக்கு தூபம் போடும் இன்றைய அரசியல் தொண்டனா இவன்?
  —————–

  5. காப்பியங்களை, ஒரு சில இடங்களில் மட்டும் பிடித்துக் கொள்கிறோம்! அதை வைத்தே மொத்தக் கதை மாந்தனையும் எடை போடுகிறோம்!
  இது எப்படி இருக்குன்னா, பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்தே, ஒருவனை ஆயுசு முழுக்க எடைபோடுவதற்குச் சமானம்:(((

 6. காப்பியங்களை, நம் மனசுக்குப் பிடித்த அளவிலேயே அணுகுகிறோம்!

  அனுமன் வெத்து அரசியல் தொண்டன்-ன்னா, முருகனுக்கு அணுக்கனாய் நின்ற வீரவாகுத் தேவரை என்னென்பது?
  சூரனை அழித்த பின், ஏதுமறியா அப்பாவிகள் வாழும் மொத்த ஊரையே, கடலில் மூழ்கடிக்க முனையும் அடியாளா = வீரவாகுத் தேவர்?:))
  ———-

  கம்பனின் மூலமான வரிகளை நாம் அதிகம் வாசிப்பதில்லை!
  பிறர் சொல்லும் கதைகள், இலக்கிய விரிவுரைகளை மட்டுமே வைத்து, நாமே பாத்திரப் படைப்பு செய்து விடுகிறோம்:)))

  வேறு யார் பேச்சையும் கேட்காமல், கம்பனை நேரே படித்துப் பாருங்கள்!
  முழுக்கக் கூட வேணாம்! ஒவ்வொரு காண்டத்திலும், ஒவ்வொரு கதைமாந்தர் எப்படி வருகிறார்-ன்னு பார்த்தாலே போதும்!

  * அயோத்தியா காண்டத்தில் இலக்குவன் எப்படி? = அன்பு மிக்கவன்
  * ஆரணிய காண்டத்தில் இலக்குவன் எப்படி? = பொறாமை பிடித்தவன்
  * கிட்கிந்தையில் இலக்குவன் எப்படி? = விரும்பியவர்காக எந்த வேலையும் செய்பவன்
  * சுந்தர காண்டத்தில் இலக்குவன் எப்படி? = அவனிலும் மிக்க அனுமனை அவன் எப்படி அணுகுறான்?
  * யுத்த காண்டத்தில், கும்பகருணனிடம் திணறும் இலக்குவன் எப்படி? = அவனை விட வீரத்தை எப்படி எதிர்கொள்கிறான்?

  இப்படி, பாத்திரப் படைப்பை,
  ஒரே புள்ளியில் பார்க்காமல்,
  விரிந்த வாசிப்பில், அதுவும் மூலநூல் வாசிப்பில் பார்த்தால் மட்டுமே,
  இலக்கியம் சாத்தியப்படும்!

  இல்லையேல் பெரியவர்கள்/மதவாதிகள் திணித்த கட்டுக் கதைகள் தான் மிஞ்சும்!

  பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்தே, ஒருவனை ஆயுசு முழுக்க எடைபோடுவது நம் கையில் தான் இருக்கு!

 7. சொக்கர் குடுத்த இந்தப் பாட்டைப் பாருங்கள்….

  உன்னை விட உன் பொண்டாட்டி சூப்பரு-ன்னு எந்தத் தலைவன் கிட்டயாச்சும் ஒரு அரசியல் தொண்டன்/ அடிப் பொடி பேசீற முடியுமா?
  உனக்கு உன் பொண்டாட்டியால தான் வாழ்வு-ன்னு publicஆ பேசீறத் தான் முடியுமா?

  அதுவும் ஆணாதிக்க இலக்குவனை அருகில் வைத்துக்கொண்டு? அத்தனை பேர் முன்னாடி?
  ——–

  1. பொன்னை ஒப்பு பொன் அலது இல்லை = பொறையில் நின்றாள்

  தங்கம் பெருசா? வைரம் பெருசா?
  = வைரம் தான் விலை மதிப்பு! ஆனா அதை இன்னோரு வைரத்தாலத் தான் அறுக்கணும்! உடையும் வேற!
  ஆனா தங்கம் = பொறுமை மிக்கது! எப்படி வேணும்-ன்னாலும் உருக்கித் தட்டலாம்! பொது மக்களுக்குத் தோதான…அதே சமயம் உயர்ந்த ஒன்னு!

  அனுமன் வெறும் ‘பொன்னே’-ன்னு சீதையை உவமித்து இருக்கலாம்! ஆனா அப்படிச் செய்யலை!
  அவ தனியா படுற துன்பத்தைப் பார்த்தவன்! தற்கொலை வரை சென்றாலும், அவ பொறுமையைப் பார்த்தவன்!

  அவளை ஒரு உறவா அடைஞ்சா, அவிங்க குடுத்து வைச்சவங்க! ஏன்னா பொண்ணு அப்பிடி!
  அதனால் எப்படி உவமையைக் கோர்க்கிறான் பாருங்க!

  * பொன்னை ஒப்பு, பொன் அலது இல்லை = எதில்? = பொறுமைப் பேறில்! அவ பேரு = சீதை!
  * தன்னை ஒப்பு, தன் அலது இல்லை = எதில்? = உறுதிப் பேறில்! அவ பேரு = சீதை!
  * நின்னை ஒப்பு, நின் அலது இல்லை = எதில்? மனைவிப் பேறில்! (நேர்ந்தாள்) அவ பேரு = சீதை!
  * என்னை ஒப்பு, என் அலது இல்லை = எதில்? தாய்மைப் பேறில்! (ஈந்தாள்) அவ பேரு = சீதை!

  சீதைக்கு முகத்துதி செய்யாமல், குணத்துதி செய்யும், இதுவல்லவோ கம்பன் தமிழ்!!! வாழி கம்பன் தமிழ்!

 8. கே ஆர் எஸ்,
  உங்கள் பின்னூட்டம் அருமை. ஆம், நாம் எல்லோரும் நம் மனப்பதிவுகளின் படிதான் கதா மாந்தர்களை எடை போடுகிறோம். என் நண்பனுக்கு ஒரு முறை சொன்னேன், “காட்டில் வாழும்பொழுது ராமன் தன் தம்பியிடம், “நாம் இப்படி இருக்கிறோம், நம் தந்தை நன்றாக மெத்தையை விரித்து தூங்கிக்கொண்டிருப்பார். அவர் கொடுத்த வரனுக்கு நாம் பலியாகிறோம்” கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் உள்ளது”. இதை என் நண்பன் நம்ப மறுத்தான். “ராமன் எப்படி அப்படி கூறுவான். அவன் மகாபுருஷன் அல்லவா”.

  இதையேதான் நானும் பல நண்பர்களுக்கு சொல்லி வருகிறேன். மூல நூலை படியுங்கள், மூல நூலை படியுங்கள் என்று என்று. இப்பொழுதெல்லாம் எதையுமே படிக்காமல் / பார்க்காமல் தடை செய்யும் கலாசாரம் வந்துவிட்டது. கம்பனை போல் வேதங்களையும் படித்தால் மாக்ஸ் முல்லர் போன்றவர்களின் கற்பனை எவ்வளவு அதீதமாக இருந்திருக்கிறது என்பது நமக்கு புரியும். எழுதியிருப்பது ஒன்றாகவும், அவர்கள் அதை புரிந்துக்கொள்வது வேறொன்றாகவும் இருக்கும்.

 9. GiRa ஜிரா says:

  நண்பர்களுக்கு வணக்கம்.திரு கே.ஆர்.எஸ் அவர்களுடைய பின்னூட்டம் நாசூக்கான உள்குத்துகளோடு இருப்பதாகவும் எடுத்துச் சொன்ன கருத்துக்கு நேரடியான விடை தராததாகவும் இருக்கிறது. இது போன்ற அவமதிப்புகளைத் தவிர்க்க, இனிமேல் கே.ஆர்.எஸ் அவர்களின் பின்னூட்டத்திற்கு பதில் சொல்லப்போவதில்லை என்று கூறிக்கொள்கிறேன். அதே போல என்னுடைய பின்னூட்டத்திற்கு அவரும் கருத்து கூறாமல் இருந்தால் நன்றி கூறுவேன். இனிமேல் இலக்கண விவகாரங்களில் என்னையும் கே.ஆர்.எஸ் அவர்களையும் சேர்த்து யாரும் எங்கும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  இதுபோன்றதொரு பின்னூட்டத்தை நாகசொக்கனின் பதிவில் இட்டது எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது. மன்னிக்கவும்.
  நன்றி,
  ஜிரா

  • இதை, இந்தியாவை விட்டுக் கிளம்புவதற்குச் சற்று நேரத்துக்கு முன்னர் தான் கண்டேன் ராகவா! மிகுந்த வருத்தத்துடன் கிளம்பினேன்!
   எதுவானாலும், என் நிபந்தனையற்ற மன்னிப்பை இங்கு கோருகிறேன்!

   கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும் ‘குத்துக் குத்து கூர்வடி வேலால்’-ன்னு வரிகளையே, முழுக்கப் பாடாமல் விழுங்கி விடுவேன்!
   ‘அசுரர் குடி கெடுத்த ஐயா வருக’ -ன்னு வரும் வரிகளை கூட விழுங்கி விடுவேன்! ஏன்னா முருகனுக்கு யார் குடியும் கெடுக்கத் தெரியாது! இது பின்னாளைய புலவரின் ஆர்வ மிகுதியால் எழுதப்பட்டு விட்டதே தவிர, முருகன் அப்படிக் கிடையாது என்று நம்பும் நான், அப்படியெல்ல்லாம் உள்குத்து குத்துக் கூர்வடி வேலால் என்பதைச் செய்யத் துணிய மாட்டேன் ராகவா!

   உள் ‘குத்து’ என்று எதைக் குறிப்பிட்டீர்கள்-ன்னு தெரியலை! அது மூல நூல் வாசிப்புக்கான கருத்து மட்டுமே! Raaga_Suresh அவர்களும் பாராட்டியே உள்ளார்!
   எது என் கருத்து மட்டுமல்ல! வாரியார் சொற்பொழிவும் அதுவே! “வணக்குத்துக்குரிய முதலமைச்சர்கள்” என்ற பொழிவில் மாணிக்கவாசகர்-சேக்கிழார்-அனுமன் என்றே பேசுவார்! அதையே எடுத்துச் சொல்லி இருந்தேன்!

   எதுவாயினும், தாளும் தடக் கையும் கூப்பித் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்! மன்னித்துக் கொள்க!

 10. ravi says:

  thanks i ad a opportunity to add a friend of like you

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s