கருணை போற்றி

மூஇரு முகங்கள் போற்றி,

….முகம் பொழி கருணை போற்றி,

ஏவரும் துதிக்க நின்ற

….ஈராறு தோள்கள் போற்றி, காஞ்சி

மாவடி வைகும் செவ்வேள்

….மலர் அடி போற்றி, அன்னான்

சேவலும் மயிலும் போற்றி,

….திருக் கை வேல் போற்றி போற்றி!

நூல்: கந்த புராணம்

பாடியவர்: கச்சியப்ப சிவாச்சாரியார்

முருகா,

உனது ஆறு முகங்கள் போற்றி, அந்த முகங்களில் இருந்து பொழிகின்ற கருணை போற்றி, எல்லாராலும் துதிக்கப்படுகின்ற உனது பன்னிரண்டு தோள்கள் போற்றி, ’காஞ்சி மாவடி’யில் வீற்றிருக்கும் சிவந்த தலைவனாகிய உன்னுடைய மலர் அடிகள் போற்றி, உனது கொடியாகிய சேவலும், வாகனமாகிய மயிலும் போற்றி, திருக்கைகளில் ஏந்தியிருக்கும் ஆயுதமாகிய வேல் போற்றி!

துக்கடா

 • ’காஞ்சி மாவடி’ என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலின் இன்னொரு பெயர், இந்தக் கோயிலில் உள்ள விநாயகர், முருகரைப் பாடிதான் கந்த புராணத்தைத் தொடங்குகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்
 • பாடலின் நடுவில் ‘ஏவர்’ என்று ஒரு வார்த்தை வருகிறதே, அதற்கு அர்த்தம் என்ன என்று ரொம்ப நேரம் தேடினேன், கம்ப ராமாயணத்தின் ஒரு பாடல் கிடைத்தது: ‘தேவர் தானவர் திண்திறல் நாகர் வேறு ஏவர் ஆக’. இதன் அர்த்தம், ‘தேவர், அசுரர், நாகலோகத்தைச் சேர்ந்தவர்களோ, அல்லது அவர்கள் அல்லாத வேறு யாரோ’…
 • ஆக, ‘ஏவர்’ = Others? Somebody Else? சரியாகத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

195/365

Advertisements
This entry was posted in கந்த புராணம், பக்தி, முருகன். Bookmark the permalink.

10 Responses to கருணை போற்றி

 1. GiRa ஜிரா says:

  கந்தபுராணத்தில் சில பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை.

  1. தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
  2. ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
  3. முழுமதியன்ன ஆறுமுகங்களும் முன்னான்காகும் விழிகளின் அருளும்
  4. கோலமாமஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னை
  5. மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி

  இந்தப் பாடல்கள் அவ்வளவு பிடித்தம். நெருக்கம். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு விதத்துல சிறப்பு. எடுத்து விளக்குனா ஒரு நாளாகும்.

  இன்று ஒங்க பிறந்தநாள். அந்த நாளில் நாம் எல்லாருக்கும் கடவுளான முருகப் பெருமான் பாடலைப் பதிந்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

  கண்ணீர் இனிக்கும் என்று காட்டிய பெருமான் அவன். எப்படியோ உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது முருகா என்னும் பெரும் பெயர். சங்ககாலத்திலேயே பெரும் பெயர். நக்கீரரும் கடுவன் இளவெயினாரும் ஒத்துக்கொண்ட தமிழரின் அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக.

  ஏவரும் – எல்லாரும். ஐயமே வேண்டாம். எவரும் சொல்லிப் பாருங்க. சட்டுன்னு புரியும்.

  இந்தப் பாட்டில் ஒரு சிறப்பு உண்டு. என்னன்னு கேக்குறீங்களா?

  சேவலும் மயிலும் யாரு? சூரந்தானே? அவன் முருகனோட சண்டை போட்டானே.

  இருந்தாலும் முருகா போற்றின்னு சொல்லீட்டு சேவலும் மயிலும் போற்றி!

  வேற எங்க இருக்கு இப்பிடி? ஏன் இங்க மட்டும் இப்பிடி?

  சண்டை நடக்குது. சூரன் உறுமிக்கிட்டு வாரான். யார்ரா அந்தப் பொடிப்பையன்னு. வந்து பாத்தா முருகன் நிக்கிறாரு. எப்படி?

  முழுமதியன்ன ஆறுமுகங்களோடு. முருகனோட முகம் குளுகுளுன்னு நிலா மாதிரி இருக்கு. cool dude மாதிரியா சண்டைக்கு வர்ரது? சூரனுக்குத்தான் முருகன் மேல ஆத்திரம். ஆனா முருகனுக்கு சூரன் மேல ஆத்திரம் இல்லை.

  எல்லாருக்கும் கடவுளாச்சே. எதுக்குறவனுக்கும் கடவுள்தானே. அதைத்தான் முருகன் என்னும் பெரும் கருத்து நிரூபித்தது.

  முழுமுதல் முருகா போற்றி
  கருத்தினில் கந்தா போற்றி
  வெற்றியின் வேலா போற்றி
  குறையிலாக் குமரா போற்றி

 2. amas32 says:

  முருகனைப் பார்த்து மயங்காதவர் யார் உளர்? அழகே வடிவானவன். அளவில்லா கருணா மூர்த்தி! அவனுடைய ஆறுமுகத்தை, அவன் கருணையை, அவன் புஜபல பராக்ரமத்தை நாம் போற்றி போற்றி எனப் பாடுவது இயல்பைத் தவிர வேறு என்ன?

  அவன் சேவற்கொடியோன்! மயில்வாகனன்! வேலவன்! அவனை போற்றி போற்றி என்று பாடும்போது நம் பயத்தை போக்க வல்ல அவனுடைய சேவலும், மயிலும் வேலும் போற்றி போற்றி தானே 🙂

  வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா! சேவற்கொடியோனுக்கு அரோஹரா! மயில்வாகனனுக்கு அரோஹரா!
  amas32

 3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொக்கரே!:)
  நாளுங் கெழமையுமா, முருகச்-சொக்கன் எசப்பாட்டு கேட்டா, நீங்க முருகப் பாட்டு மட்டும் போடுறீக:)) எளிய பாடல்! எளிமையால் இனிக்கும் பாடல்!
  ————

  1. மூஇரு முகங்கள் போற்றி
  = அதென்ன மூவிரு முகம்? நேரடியா ஆறுமுகம்-ன்னே சொல்லலாமே?

  மூ=தொன்மை/தொல் பழமை!
  மூதூர்-ன்னு சொல்றோம்-ல்ல?
  சங்கத் தமிழின் தொன்மையில் (மூ) இருந்தவன் = மூ + இரு
  அந்தத் தொல் தமிழ்க் கடவுள் முருகன் போற்றி-ன்னும் இன்னொரு பொருள்!

  அப்போ முருகன் அரதப் பழசா? ஆமாம்! பழசானா எல்லாப் பொருளும் குன்றிப் போகும்! ஆனா மது குன்றாது! Wine பழசு ஆக ஆக, மதிப்பு கூடும்!
  இப்படிப் பழமை என்பது = சில பொருட்களுக்கு மட்டுமே மதிப்பு! பழமை என்பது போய் மதிப்பு மிக்க தொன்மை!

  அப்படித் தொன்மையானவன் முருகன்! = மூ +இரு முகங்கள் போற்றி!

 4. 2. முகம் பொழி கருணை போற்றி
  = முகத்தில் எப்படிக் கருணை பொழியும்? கண்ணில் தானே கருணை தெரியும்?

  மரியன்னை ஆகிய மாதா-வின் திருவுருவச் சிலைகளைப் பார்த்தால், இந்த முகம் பொழி கருணை, சட்டுன்னு நம் மேல தெறிக்கும்!

  அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள்!
  சிலர் முகத்திலேயே தம் வெறுப்பைக் காட்டி விடுவார்கள்! வாய் தொறந்து பேசக் கூட வேணாம்! முகமே வெறுப்பைக் கக்கி உமிழும்!:(
  முருகனுக்கு அப்படியில்லை! முகமே கருணை பொழியுதாம்! = எப்படி?

  நாம் ஒருவரைக் கண்ணால் கண்டால், உதட்டால் சிரிக்கிறோம்-ல்ல?
  ஒன்றைக் கண்டால், இன்னொன்றில் வருகிறதே! எப்படி?

  அன்பே நிறைந்த காதலனைக் கண்டால், காதலிக்கு இதழ்/முகம் மட்டுமல்ல, பல இடங்களில் மலரும்!
  = கண்ணு தான் ஊற்று!
  அதில் ஊற்று போல் எழுந்து, நீராய் ஓடி, அருவி போல முகம் முழுதும் “பொழி”யுதாம்!

  ரெண்டு கண்ணால் ஆசையாய்ப் பார்த்தாலே, நாம் என்னமோ ஆகிடறோம்!
  இங்கோ, மூவிரு முகங்கள்! மொத்தம் 18 கண்கள்! = அப்போ அருவி எப்படி? ஒழுகுதா? பொழியுதா??

  மூவிரு முகங்கள் போற்றி-ன்னு முதலில் சொன்னவர்…
  முகம் “பொழி” கருணை போற்றி-ன்னு அடுத்து, அதே இயல்பில் சொல்கிறார்!

 5. 3. ஏவரும் துதிக்க நின்ற
  ….ஈராறு தோள்கள் போற்றி,

  எது என்ன ஏவர்?
  இவன் = ஈவன், இது = ஈது
  எவன் = ஏவன், எது = ஏது
  -ன்னு சொல்லுறோம்-ல்ல? முதல் எழுத்து நீண்டு ஒலிக்கும் (அளபெடுக்கும்)

  “இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே
  அளபு எழின் அவையே அளபெடைத் தொடையே”-ன்னு தொல்காப்பியச் செய்யுளியல்!

  அதான், எவரும் துதிக்க நின்றான் -> ஏவரும் துதிக்க நின்றான்-ன்னு ஆச்சு! (அளபெடைத் தொடை)
  எல்லோரும் துதிக்க நின்றவன் = முருகவன்!
  ———

  இப்படி “ஏவரும்” துதிக்கணும்-ன்னா, அத்தனை பேருக்கும் இடம் வேணுமே!
  குறுகிய இடத்தில் “ஏவரும்” குழுமினா, தள்ளு முள்ளு ஆகுமே!

  ரெண்டே தோள்-ல்ல “ஏவரும்” துதிக்க இடப் பற்றாக்குறை ஆகி விடும்! “சிலரை” மட்டுமே அணைக்க/அழைக்க முடியும்! “ஏவரையும்” அழைக்க முடியாது!
  அதான் ஈராறு தோள்கள் கொண்டு, அவரவர் துதிக்க வசதியாக, “ஏவரையும்” அழைத்து/அணைத்து நிற்கிறான் என் முருகவன்!

 6. 4. காஞ்சி மாவடி வைகும் செவ்வேள்
  ….மலர் அடி போற்றி,

  காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் -ன்னு சிலருக்குத் தெரிஞ்சிருக்கலாம்!
  * ஒற்றை மாமரக் கிளை = ஏக + அம்பரம் = ஏகாம்பரம்
  அதன் கீழ் தவம் செய்தவள் உமையன்னை!

  * காஞ்சியில் = தவம் தொடங்கி
  * எங்கூரு வாழைப் பந்தலில் = பூசை செய்து
  * அண்ணாமலையில் = நோன்பு முடித்தாள், இடப் பாகம் பெற்றாள்

  காஞ்சி மா மரத்தில் (மா+அடியில்) வைகும் செவ்வேள்! = அன்னையின் தவத்துக்குத் துணையாக நின்றவன் முருகன்!
  வாழைப் பந்தலில் அன்னையின் பூசைக்குத் துணையாக நின்றவன் முருகன் = செய்+ஆறு (செய்யாறு) உருவாக்கினான்!
  இன்னிக்கும் செவப்பாத் தான் ஓடும்! மண்ணு அப்படி!

  அந்தக் காஞ்சி “மா அடி” வைகும் “மலர் அடி” போற்றி!

 7. 5. அன்னான் சேவலும் மயிலும் போற்றி

  அவனைப் போற்றணும் சரி! அவன் சேவலை மயிலை ஏன் போற்றணும்?
  அதுங்க வில்லனாச்சே!
  சூரனை அழித்துத் தானே சேவலும் மயிலும்? வில்லனைப் போய் யாரேனும் போற்றுவார்களா?

  இன்றும் திருமால் ஆலயங்களில் செல்லும் போது, இந்த வில்லன்களைத் தான் முதலில் காண்கிறோம்! அவன் வாயில் காப்போராக!
  வில்லன்கள் கையிலும் எந்தையின் சங்கு சக்கரங்கள்! அட, இராவணன்-கும்பகர்ணன் கையில் சங்கு சக்கரமா? என்ன கொடுமை சரவணா!:))

  வில்லன் = வில்லனாய் இருக்கும் வரை தான் வில்லன்!
  முருகா-ன்னு உருகி அழைத்த பின், அந்த வில்லனும் வேலன் தான்!
  ——————

  சேவல் = அவன் புகழின் கொடி!
  மயில் = அவன் விரும்பி ஏறும் ஊர்தி!

  கொடியும் முன் செல்லும்! ஊர்தியும் முன் செல்லும்!
  அதுக்குப் பின்னாடி தான் அரசனே வருவான்!
  அது போல், நம் துன்பங்களில், சேவலும் மயிலும் தான் முன் வந்து நிக்குது!
  “நாங்களும் இப்படித் தான் இருந்தோம், ஆனா இப்போ எப்படி இருக்கோம் பாரு”-ன்னு சேவலும் மயிலும் காட்டுது….

  அவற்றைப் பார்த்த மாத்திரத்தில்…நாம் முருகா-ன்னு குழற,
  அவன்…முருகா என்று ஓதுவார் முன்….அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்-ன்னு வந்து நிற்பான்!…..
  அன்னான் சேவலும் மயிலும் போற்றி!

 8. 6. திருக் கை வேல் போற்றி போற்றி!

  வேல்-க்கு ஏன் இத்தனை மதிப்பு?
  பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
  வெல் = வேல்! => வெல்லும் தன்மை ஆதலால் = வேல்!

  பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
  ஈழத்தில் நல்லூர்,
  மலேசிய பத்துமலை,
  இன்னும் பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!

  ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, சிலர் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

  “சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்”-ன்னு வேலின் தோற்றம்!
  சுடர் இலை போல இருக்காம்! நெடு வேலாம்!
  ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் உன் கையில் வேல் போற்றி-ன்னு தான் பாடுறா! வேலும் சங்கமும் சங்கத் தமிழ் மரபு!

  சங்க காலத்திலும் வேல் வழிபாடு தான்! வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவாய்ங்க!
  வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
  பந்தல் இட்டு, பூ பல பெய்து
  பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி
  கழங்கு மெய் படுத்து, கன்னம் தூக்கி
  பொய்யா மரபின் முதுவேல்!!

  சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
  வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி உற்சவ வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:((
  —————–

  பல படைவீடுகளிலும் முருகன் வேல் ஏந்தி இருக்க மாட்டான்!
  அவன் தோளிலே சார்த்தி வைத்திருப்பார்கள்!

  என்னவனைப் போலவே, உயரமும் நெடிதும் அழகும் அறிவுமான = வேல்!
  தழுவ இனிய வேல்
  முந்து முந்து என்னுள் வேலாய் முருகனாய் முந்து!
  திருக் கை வேல் போற்றி போற்றி!

  வேல் வேறு, முருகன் வேறல்ல!
  வேலே = முருகன்! முருகனே = வேல்!

 9. வடமொழியில் “தியான சுலோகம்”-ன்னு சொல்லுவாங்க! = அதாச்சும் நினைவுத் துதி!
  இறைவனை, அடி முதல் முடி வரை, அங்கம் அங்கமாய் நினைவு இருத்துவது!

  அது போல், இந்தப் பாடலில், 6 இடங்களாய், முருகனை இருத்துகிறார் கவிஞர்!

  1. மூஇரு முகங்கள் போற்றி,
  2. முகம் பொழி கருணை போற்றி,
  3. ஏவரும் துதிக்க நின்ற….ஈராறு தோள்கள் போற்றி,
  4. காஞ்சி மாவடி வைகும் செவ்வேள்….மலர் அடி போற்றி,
  5. அன்னான் சேவலும் மயிலும் போற்றி,
  6. திருக் கை வேல் போற்றி போற்றி!

  தினம்-ஒரு-பாவாக,
  பாவெல்லாம் பூவாக
  பூவெல்லாம் கனியாகி, உள்ளங்கள் கனிய…
  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொக்கரே!

  பிறந்தநாள் அன்று, தனி நபர் புகழ் வேண்டாம் என்ற உங்கள் தன்னடக்கம் சிறப்பே, ஆயினும், அந்தப் பாவிற்கு ஈடாக இந்தப் பாவை, கந்தப் பாவை இட்டாலும்….
  “சொக்கன்-முருகன்” என்று வரும், நான் கேட்டுக் கொண்ட திருச்செந்தூர் பிள்ளைத் தமிழும் இட்டு மகிழ்வியுங்கள்!:) வாழி நலஞ் சூழ!!

  • amas32 says:

   நல்ல ஒரு பின்னூட்டம் KRS, நீண்ட நாட்களுக்குப் பிறகு. அந்த முருகனுக்கும் சொக்கனுக்கும் நன்றி 🙂
   amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s