மூன்று பெயர்கள்

கார் என்று பேர் படைத்தாய்

….ககனத்து உறும்போது,

நீர் என்று பேர் படைத்தாய்

….நெடும் தரையில் வந்து அதன்பின்,

வார் சடை மென் கூந்தல்

….ஆய்ச்சியர் கை வந்து அதன்பின்

மோர் என்று பேர் படைத்தாய்

….முப்பேரும் பெற்றாயே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: ’முன் கதை’யில் காண்க

முன்கதை

இது கதையோ நிஜமோ தெரியாது, ஆனால் இந்தப் பாட்டிற்கு அடிப்படையாகப் பெரும்பாலானோரால் சொல்லப்படுகின்ற சம்பவம் இதுதான்:

ஒருநாள் காளமேகம் வெய்யிலில் நடந்துகொண்டிருந்தார். எதிரில் தலையில் கூடையுடன் ஒரு பெண் வந்தார். ‘மோர், மோர்’ என்று சத்தமாகக் கூவினார்.

காளமேகத்துக்குத் தாகம். காசு கொடுத்து ஒரு குவளை மோர் வாங்கிக் குடித்தார்.

ஆனால், அந்தக் குவளையில் மோரைவிடத் தண்ணீர்தான் அதிகமாக இருந்தது. கடுப்பான காளமேகம் அந்த ஆயர்குடிப் பெண்ணைப் பாட்டாலேயே கிண்டலடிக்கிறார் இப்படி:

உரை

என் குவளைக்குள் இருக்கும் திரவமே,

நீ வானத்தில் இருந்தபோது, உனக்கு ‘மேகம்’ என்று பெயர்.

அடுத்து, அங்கிருந்து மழையாகப் பொழிந்து பூமிக்கு வந்தாய். உன்னுடைய பெயர் ‘நீர்’ என்று மாறியது.

அடுத்து, மென்மையான கூந்தலை நீளமான சடையாகக் கட்டிய ஆயர் குலப் பெண்களின் கைக்கு வந்தாய், இப்போது உன் பெயர் ‘மோர்’ என்று மாறிவிட்டது.

ஆக, நீ மூன்றுவிதமான பெயர்களைப் பெற்றுவிட்டாய்!

துக்கடா

  • இந்தப் பாடலின் மூன்றாவது வரியை ‘வார் ஒன்று மென் நகிலார்’, ‘வார் ஒன்று மென் முலையார்’, ‘வார் ஒன்று பூங்குழலார்’ என்று பலவிதமாகச் சொல்வார்கள், அதனால் பாட்டின் அர்த்தம் மாறிவிடுவதில்லை, என்றாலும், நம்மவர்களின் ‘சென்சார்’ ஆர்வம் புரியும் 😉
  • அது சரி, காளமேகம் எழுதிய அந்த ஒரிஜினல் வரி எதுவோ? :>

194/365

This entry was posted in கதை கேளு கதை கேளு, காளமேகம், கிண்டல், குறும்பு, தனிப்பாடல், நாடகம். Bookmark the permalink.

1 Response to மூன்று பெயர்கள்

  1. amas32 says:

    காளமேகப் புலவருக்கு ரொம்ப இடக்குத் தான். மோர் விற்பவள் நீர் மோராக விற்றிருக்கிறாள். இவர் லஸ்ஸியை எதிர்பார்த்திருக்கிறார் 🙂
    ஆயர்குலப் பெண் கொடுத்த மோரை குறை கூறினாலும், அவளை நன்றாக வர்ணித்து உள்ளார் கவிஞர்!
    amas32

Leave a comment