உழவுக்குப் பின்னால் உலகம்

சுழன்றும் ஏர்ப் பின் அது உலகம், அதனால்

உழந்தும் உழவே தலை

*

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து

*

உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம்

தொழுது உண்டு பின் செல்பவர்

*

இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலம் என்னும் நல்லாள் நகும்

நூல்: திருக்குறள் (பொருட்பால், ‘உழவு’ அதிகாரம்)

பாடியவர்: திருவள்ளுவர்

உழவர்களின் ஏர் முனைக்குப் பின்னால்தான் இந்த பூமியே இயங்குகிறது. ஆகவே, விவசாயத்தில் எத்தனைச் சிரமங்கள் இருப்பினும், அதுவே உலகத்தில் தலை சிறந்த பணி

*

உழவு செய்யமுடியாமல் இருக்கிறவர்களுக்காக விவசாயி உழைக்கிறான். அவர்களுக்கும் உணவு இடுகிறான். ஆகவே, உழவுத் தொழில்தான் இந்த உலகத்தின் அச்சாணி

*

தனக்கு வேண்டிய உணவைத் தானே பயிரிட்டு உண்பதுதான் உண்மையான வாழ்க்கை. அதைச் செய்யமுடியாத மற்றவர்கள் எல்லோரும் அந்த உழவர்களைத் தொழுது வணங்கிப் பின்னால் செல்லவேண்டியவர்கள்தான்

*

’என்னிடம் எதுவும் இல்லை’ என்று சொல்லிச் சோம்பலாக உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்தால், நில மகள் கேலியாகச் சிரிப்பாள்

துக்கடா

 • அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
 • உழவுத் தொழிலைப் போற்றும் இந்த நாளில், அதன் சிறப்பைச் சொல்லும் திருக்குறள் அதிகாரத்திலிருந்து நான்கு பாடல்கள்மட்டும் இங்கே. மற்றவை அங்கே : http://www.thirukkural.com/2009/03/blog-post_780.html
 • திருக்குறள்கள் அனைத்தும் ‘குறள் வெண்பா’ என்ற வடிவத்தைச் சேர்ந்தவை, இன்றைய பாடல்களின் வெண்பா வடிவம்:
 • சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம், அதனால்
 • உழந்தும் உழவே தலை
 • *
 • உழுவார் உலகத்தார்க் காணிஅஃதாற் றாது
 • எழுவாரை எல்லாம் பொறுத்து
 • *
 • உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
 • தொழுதுண்டு பின்செல் பவர்
 • *
 • இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
 • நிலமென்னும் நல்லாள் நகும்

193/365

Advertisements
This entry was posted in திருக்குறள், பண்டிகை, வெண்பா. Bookmark the permalink.

2 Responses to உழவுக்குப் பின்னால் உலகம்

 1. GiRa ஜிரா says:

  நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  உழவு என்ற தொழிலுக்கே ஒரு அதிகாரம் எழுதியிருக்கிறார் வள்ளுவர் என்றால் அதன் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  உழுது உண்டு வாழ்ந்தாதான் வாழ்க்கை.

  இன்றைய சூழ்நிலையில உழவுத்தொழிலுக்கு மதிப்பு குறைவு. மீண்டும் உழவுத்தொழில் நமது நாட்டிலும் உலகத்திலும் நன்னிலையையும் முன்னிலையையும் அடைந்து சிறக்க ஆண்டவனை வணங்கி வேண்டுகிறேன்.

  பி.கு – வள்ளுவர் குறள் எழுதுறப்போ மூன்று பாலா பிரிச்சாரே தவிர, ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பேர் வைக்கலைன்னு யாருக்கெல்லாம் தெரியும்? 🙂

 2. amas32 says:

  உணவு தான் வாழ்க்கைக்கு ஆதாரம். அந்த உணவு, தொழிற்சாலையில் தயாராவது இல்லை. விவசாயி சேற்றில் இறங்கினால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். இப்பொழுது நடந்த “தானே” தாக்குதலில் கடலூர், பாண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விவசாயிகள் நிலைகுலைந்து போயிருக்கின்றனர்.

  எத்தனையோ இடர்களைத் தாங்கி உழவன் பயிர் செய்து அறுவடை செய்கிறான். அவன் அதைச் செய்யவில்லை என்றால் நமக்கு ஏது வாழ்வு?

  நகரங்களில் வாழும் நாம் இன்று சூரிய பகவானை கும்பிடுவதொடு உழவர்கள் அனைவரையும் கும்பிட வேண்டும். அவர்கள் என்றும் எல்லா வளமும் பெற்று செழித்து வாழ இறைவனை இன்று பிரார்த்திப்போம்.
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s