பெய்யும் மழை

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

நூல்: வாக்குண்டாம்

பாடியவர்: ஔவையார்

(இந்த எளிய பாடலுக்கு உரை அவசியமில்லை. எனினும், சும்மா ஒரு தொடர்ச்சிக்காக இது)

உழவர்கள் தங்களுடைய நெற்பயிர் செழித்து வளர்வதற்காகத் தண்ணீர் இறைத்து ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீர் வாய்க்கால் வழியாக ஓடிப் பக்கத்தில் உள்ள புல்லின்மீதும் கசிகிறது, அதையும் நன்கு வளரச் செய்கிறது.

அதுபோல, பழமையான இந்த உலகத்தில், நல்லவர் ஒரே ஒருவர் இருந்தால்கூடப் போதும், அவருக்காக மழை பெய்யும், மற்றவர்களும் அதில் பலன் அடைவார்கள்.

துக்கடா

 • ஔவையின் இந்தப் பாட்டுக்கும் இப்போதைய Global Warmingக்கும் சம்பந்தம் உண்டு என்று நீங்கள் நினைத்தால், அதற்குக் கம்பேனி பொறுப்பேற்காது :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
 • புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் … தொல்லுலகில்
 • நல்லா ரொருவ ருளரேல் அவர்பொருட்
 • டெல்லார்க்கும் பெய்யும் மழை

191/365

Advertisements
This entry was posted in அறிவுரை, உவமை நயம், ஔவையார், வாக்குண்டாம், வெண்பா. Bookmark the permalink.

8 Responses to பெய்யும் மழை

 1. what is meant by பொசி-யுமாம்?:)

 2. GiRa ஜிரா says:

  பாட்டுன்னா இப்பிடி இருக்கனும். சொல்ல வந்த கருத்தும் நச்சுன்னு இருக்கு. பாட்டோட இலக்கணமும் பச்சக்குன்னு இருக்கு. எழுதுனா இப்பிடி ஒரு பா எழுதனும். இல்லைன்னா எழுதாமலேயே இருந்திரலாம். என்ன இருந்தாலும் கெழவி கெழவிதான்.

  இந்தப் பாட்டை எழுதுனது ஔவையாரு.  ஆனாலும் ஒரு கேள்வி. ஔவை யாரு? ஔவையாருங்குற பேர்ல இருந்தது ஒருத்தரா? பலரா?

  ஏன் இந்தக் கேள்வின்னு நீங்க நெனைக்கலாம். அதுக்குக் காரணமிருக்கு. ஔவையார் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் நூல்கள்ள இருக்குற சொற்பயன்பாட்டு வேறுபாடுகள் அப்படி கேக்க வைக்குது.

  குறிப்பா இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க. மிக எளிய சொற்கள். பிற்காலத்துல வந்ததா இருக்கனும். பழைய பாட்டெல்லாம் அப்பிடியா இருக்கு? எட்டுத்தொகை நூலான குறுந்தொகைல கூட ஔவையார் எழுதியிருக்காரு.  பாட்டுல சில வரிகள் சொல்றேன். எப்படியிருக்குன்னு பாருங்க.

  பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு

  தொல்மூதாலத்துப் பொதியில் தோன்றிய

  நால் ஊர்க் கோசலர் நல்மொழி போல …..

  படிக்கக் கடினமா இருக்குல்ல. மொழிநடையே மாறுது பாருங்க.

  இன்னொரு எடுத்துக்காட்டு சொல்றேன். இன்னைக்கு என்.சொக்கன் எடுத்தாண்டிருக்கும் மூதுரைல இன்னொரு பாட்டு. “கானமயிலாட கண்டிருந்த வான்கோழி”. இந்தப் பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.

  இதுல வர்ர வான்கோழி தமிழ்நாட்டுலயே இருந்து வந்த பறவை கெடையாது. வெளிநாட்டுல இருந்து வந்தது. கொண்டு வந்தது போர்ச்சுக்கீசியர்கள்னு நெனைக்கிறேன். பழைய நூல்கள்ள வான்கோழியத் தேடிப்பாருங்க. இருக்காது. இப்படித்தான் நூல்களின் வயதாராய்ச்சி செய்ய வேண்டியிருக்கு.

  பொதுவாகவே வயதான பெண்களை ஔவை என்னும் வழக்கம் முன்னாடி இருந்தது. இது இன்னைக்குத் தெலுங்குல அவ்வான்னு சொல்லப்படுது.

  அப்படி இருந்த வயதான பெண்கள் புலவர்களாகவும் அறிவாளிகளாகவும் இருந்தா மரியாதையா “ஆர்” விகுதி சேத்து ஔவையார்-னு சொல்வாங்க.

  இந்த நூலுக்கு மூதுரைன்னு பேர் கேள்விப்பட்டிருக்கேன். வாக்குண்டாம்னும் ஒரு பேர் இருக்குன்னு இன்னைக்குதான் கேள்விப்படுறேன். வேங்கடசாமி நாட்டார் உரையில் கூட இந்தக் குறிப்பைக் காணாததால் இது எனக்குப் புதுச் செய்திதான்.

  ஆனா இந்த வாக்குண்டாம் பாட்டு சாமிப்பாட்டு கெடையாதுன்னு சொல்றவங்களும் உண்டு. அது மருத்துவப் பாட்டாம்.

  என்ன சொல்லுது அந்தப் பாட்டு?

  வாக்குண்டாம்

  நல்ல மனமுண்டாம்

  நொக்குண்டாம்

  மேனி நுடங்காது

  இது மூன்றும் மருந்தினால் உண்டாகும் பயன்கள். நல்ல வளமான குரல். அழுத்தம் குறைந்த மனது. நல்ல கண்பார்வை. மேனி நுடங்கல் இருக்காது. ஏனென்றால் நரம்பு மண்டலம் சீராகும்.

  சரிய்யா.. யாருக்கு? துப்பார் – உண்ணுகின்றவர்களுக்கு. ( துப்பார்க்குத் துப்பாய திருக்குறளை நினைவில் கொள்க )

  சரி. எதை உண்ணனும்?

  திருமேனி – குப்பைமேனி – முந்தி குப்பைன்னா செல்வம்னு பொருள். திருன்னாலும் செல்வம்தானே. இதுல ஒரு வியப்பான செய்தி. திப்பே என்றால் கன்னடத்துல குப்பை. ஆனா பழைய கன்னடத்துல செல்வம்னு பொருள். திப்பசந்திரான்னு பெங்களூர்ல ஒரு எடமே இருக்கு. பலபேருக்கு இந்தத் திப்பேக்குப் பொருள் தெரியாது. திப்பசந்திரா குப்பசந்திரான்னு சொல்வாங்க. அவங்களுக்கும் மொழிவரலாறு மறந்து போச்சு. நம்மளப் போலவே.

  தும்பி – தும்பை

  கையான் – கரிசலாங்கண்ணி

  பாதம் – சிறுசெருப்படி (இதோட பழைய பேரு சிறுசெருப்படை. செருப்படை செருப்படி ஆயிருச்சு)

  இப்படியாகப் போகுது அந்த விளக்கம். இதில் சொல்லீருக்கும் அத்தனையும் மூலிகைகள். எனக்குத் தெரிஞ்சு குப்பைமேனி பாத்திருக்கேன். தோட்டத்துல இருக்கும். ஆனா எப்படியிருக்கும்னு மறந்து போச்சு.

 3. //அதுபோல, பழமையான இந்த உலகத்தில், நல்லவர் ஒரே ஒருவர் இருந்தால்கூடப் போதும், அவருக்காக மழை பெய்யும், மற்றவர்களும் அதில் பலன் அடைவார்கள்//

  அறிவியல் நோக்கோடு பார்த்தால், இந்தத் தமிழ்ப் பாட்டை எள்ளி நகையாடி விடலாம்! 🙂

  நல்லவங்களுக்கும் மழைக்கும் என்னய்யா சம்பந்தம்?
  அமெரிக்காவுல மழை கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டுது! அதுக்காக அங்கிட்டு நல்லவங்களா?
  ஈராக்கில் வறட்சி-ன்னா அங்கே எல்லாரும் கெட்டவங்களா?-ன்னு சுளுவா மடக்கீற முடியும்:))

  ஆனா முருகனே மடக்கிய ஒரு தமிழ்ப் பாட்டியை அம்புட்டுச் சுளுவுல மடக்க முடியுமா என்ன?:)
  பாட்டின் மெய்யான பொருள் வேற! நானு வேற வெளக்கஞ் சொல்லுறேன்:)
  ————-

  புல்லு எங்கும் தான் விளையுது!
  சாலையோரம், திடல், குப்பை மேடு-ன்னு புல்லு உண்டாகாத இடமே இல்லை! ஆனா அங்கெல்லாம் புல்லுக்குத் தண்ணி பாயாது!

  எங்கே பாயும்? நெல்லு எங்கே விளையுதோ, அங்கே இருக்குற புல்லுக்குத் தான் தண்ணி பாயும்!
  நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழியோடி = ஆக…வாய்க்கா பக்கத்துல இருக்குற புல்லுக்கு மட்டும் தான் தண்ணி பாயுது!

  அதே போல், ஒரு சிலர், ரொம்ப நல்லவர்களா இல்லீன்னாலும், நல்லவர்கள் இருக்கும் இடத்தில் தாங்களும் இருப்பார்கள்!
  அப்படி இருக்கும் போது, கொஞ்சம் கொஞ்சம் அந்த நல்ல குணங்கள் இவிங்க மேலேயும் படும்! அதனால் தாங்களும் சில குணங்கள் அமையப் பெறுவார்கள்!

  எப்படி நெல்லுக்கான நீரு, வாய்க்கா புல்லுக்கும் பாயுதோ…
  அதே போல், நல்லவர்களுக்கான குணங்கள், அங்கே அண்டி இருக்கும் அல்லாதவர்க்கும் பாயும்!

  எனவே…நாம நல்லார் தொடர்பில் இருக்க முயல வேணும்!
  நாம நல்லவங்களோ இல்லீயோ, நல்லார் தொடர்பில் இருந்தால், நாமும் நற்குணங்கள் கொஞ்சம் கொஞ்சமா அமையப் பெறுவோம் என்பதே பாட்டின் உட்கருத்து!

 4. மூதுரை = முதுமை + உரை!

  ரொம்ப பழைய உரை-ன்னு பொருள் இல்லை!:)
  முதுமையை (முதிர்ச்சியை) எதிர்கொள்வது பற்றி உரைப்பது = மூதுரை!
  30 வெண்பா!
  கடவுள் வாழ்த்து பின்னாளில் எழுதிச் சேர்த்தது என்பாரும் உளர்!

  “வாக்குண்டாம்”-ன்னு பிள்ளையார் மேல் எழுதிய வாழ்த்தால், நூலுக்கும் அந்தப் பெயரைச் சிலர் வழங்கத் துவங்கினார்கள் – நூலின் முதல் வரியை வைத்து!
  கண்ணி நுண் சிறுத்தாம்பு, வாரணமாயிரம், ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் -ன்னு நூலின் முதல் வரியை வைத்து, மொத்த நூலையும் சொல்லுறோம்-ல்ல? அது போல!

  மூதுரையின் வெண்பா ஈற்றடிகளை மட்டுமே தனியாப் பட்டியல் போடுங்க! நூலின் பெருமை தனிச்சித் தெரியும்!

  * சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
  * குலத்தளவே ஆகுமாம் குணம்
  * ஏற்ற கருமம் செயல்
  * கல்லாதான் கற்ற கவி
  * விதியின் பயனே பயன்
  * சென்ற இடமெல்லாம் சிறப்பு
  * எல்லார்க்கும் பெய்யும் மழை

  இப்படி ஈற்றடியின் அழகே அழகாய் இருப்பதை, ஒளைவையின் தமிழ்க் கவிதைகளில் கண் கூடாக் காணலாம்! சும்மா ஒவ்வொரு ஈற்றடியும் நச்-ன்னு இருக்கும்:)

 5. பொசி-ன்னா என்னா?
  பொசிதல், கசிதல் ரெண்டும் வெவ்வேறா?
  பொசி, கசி, வடி, உமிழ்-ன்னு தமிழில் ஒவ்வொன்னும் ஒவ்வொரு பொருள்!

  இரத்தம் கசியும்-ன்னு சொல்லலாம்! ஆனா இரத்தம் பொசியும்-ன்னு யாரும் சொல்ல மாட்டாங்க!
  நீர் கசியும்-ன்னும் சொல்லலாம்! நீர் பொசியும்-ன்னு சொல்லலாம்!

  கசிதல் = Leak
  பொசிதல் = Ooze

  * நாமே நீரைத் துளை வழியாப் பாய்ச்சினா = பொசிதல்
  * நாம் பாய்ச்சாம, ஏதோ ஒரு தவறால் பாய்ஞ்சா = கசிதல்!
  இப்படி நுட்பமான வேறுபாடுகள் சொற்றமிழுக்கு உண்டு!

 6. ஆனந்தன் says:

  கசிதல் – எங்கிருந்து (Eg: தண்ணீர்) வருகிறது என்பதை முதன்மையாக வைத்துக் கூறுதல்.
  பொசிதல் – எங்கே (Eg: தண்ணீர்) போய்ச்சேருகிறது என்பதை முதன்மைப் படுத்திக் கூறுதல் என்பது என் கருத்து.
  இந்தப் பாடலில், வாய்க்காலிலிருந்து நீர் கசிந்து புல்லுக்குப் பொசிகிறது.
  ஒருவருக்குக் கிடைக்க வேண்டியது அவருக்குக் கிடைக்காமற் போனால் “அவனுக்குப் பொசிப்பில்லை” என்று கூறுவார்கள்.

 7. v r villavankothai says:

  பொசிப்பு என்ற சொல் உயிர்ப்பு, பிழைப்பு, கொடுப்பினை என்ற பொருள்களையும் தரும் என எண்ணுகின்றேன். நீர்மம் நிறைந்துள்ளதொரு கலத்தின் பக்கச் சுவரின் வழியாக அந்நீர்மம் வெளியேறுவது கசிதலாகும். திறந்தநீர் பக்கவாட்டில் ஈரம் தருவது பொசிதலாகும். கசிவதற்கு முந்தைய படி பொசிவதாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. ஆனந்தன் அவர்களது விளக்கமும் இத்துடன் பொருந்தியே வருகின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s