அடியார் பெருமை

காவினை இட்டும் குளம் பல

….தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று எரித்

….தீர் என்று இருபொழுதும்

பூவினைக் கொய்து மலர் அடி

….போற்றுது நாம் அடியோம்

தீவினை வந்து எமைத் தீண்டப்

….பெறாதிரு நீலகண்டம்.

நூல்: தேவாரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்

சூழல்: சம்பந்தரும் மற்ற பல சிவனடியார்களும் கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்தார்கள். அப்போது பனிக்காலம். அதனால் பலருக்குச் சளி, காய்ச்சல், மற்ற உபாதைகள் துன்புறுத்தின. இதைக் கண்ட சம்பந்தர் ‘இதெல்லாம் பனிக்காலத்தின் இயல்பு, ஆனாலும் உன்னுடைய அடியார்களைக் காப்பது உன் கடமை அல்லவா?’ என்று சிவனிடம் உரிமையுடன் கேட்டுப் பாடுகிறார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பக்தர்களே,

பூஞ்சோலைகள் அமையுங்கள், குளங்களைத் தோண்டுங்கள், கனிந்த மனத்துடன் காலை, மாலை என இருவேளையும் பூப்பறித்து, முப்புரங்களையும் எரித்த பெருமானின் மலர்ப் பாதங்களில் தூவிப் போற்றுங்கள். அடியாராக அவனுக்குத் தொண்டு செய்யுங்கள்.

அப்படிச் செய்தால், நீலக் கழுத்தினை உடைய சிவன் நம்மைக் காப்பான், தீயவினைகள் நம்மைத் தீண்டாது, துன்பப்படுத்தாது.

துக்கடா

 • நேற்றைக்கு ட்விட்டரில் ஒரு விவாதம். அதனிடையே நண்பர் @to_pvr ஒரு கேள்வி கேட்டார், ‘பக்தர் என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?’
 • எனக்குச் சட்டென்று நினைவுக்கு வந்த வார்த்தை ‘அன்பர்’ என்பதுதான், அதை அவருக்குச் சிபாரிசு செய்தேன் (உதாரணங்கள்: அன்பர் பணி செய்ய எமை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே, எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க)
 • பின்னர் மாலையில் இதுபற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது ‘அடியார்’ என்ற வார்த்தையும் இங்கே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. தேவாரத்தைப் புரட்டியபோது ஞானசம்பந்தர் இந்தப் பாடலைச் சொல்லி உதவினார்!
 • சிவன் ‘திருநீலகண்டர்’ ஆன கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும், குழந்தைகளுக்குக் காண்பித்துச் சொல்ல வசதியாக இங்கே ஒரு சிறு வீடியோ :

190/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to அடியார் பெருமை

 1. PVR says:

  A devotee generates new energy and awe in the minds of other ‘common worshipers’. And I have come across some, who ‘actually’ converse/ argue and even dictate to the Lord. One example, our @kryes . And some are a little different.

  I am still trying to locate a thin book – some 20 pages – story written by Rajaji about a christian Cobbler, who set up his work place outside a church to mend foot-ware. This cobbler never went in to the church when others were there. Because he had this habit of directly ‘dealing’ with his Jesus! One to one. Before taking up any work, he would ‘speak’ internally to his God, saying ‘hey there, don’t wander around and make me mess this up. Just stay with me, so that I do this work correctly’. All because, that cobbler did not have any fear or bhakthi – but just friendship with the God.

  Excellent story that impacted me so severely when I was in school, that I started behaving like that cobbler with my Murugan. I have irritated several in my home by refusing to go to temples and attend pujas. My inspiration was/is that cobbler!

  The clip here – what I heard was when Siva drank the first potion which was poison, Parvathi came rushing and ‘held’ Siva’s neck to prevent the poison reaching other parts. I was disappointed that an interesting sequence was missing in this clip.

  Thank you சொக்கன் ஜி, you made me reveal some thing which has been an internal thought process in me, making many wonder why I do not show keenness to go to temples or fail to do ‘puja’ like many do. Rajaji and the cobbler are culprits. இப்போது யாராவது அந்த கதையை அல்லது புத்தகத்தை எனக்குத் தந்தால், சுஜாதா சொன்னதுபோல, தந்தவருக்கு என்னுடைய பெண்ணையும் பாதி ராஜ்ஜியத்தையும் கொடுப்பேன். 🙂

  • என். சொக்கன் says:

   Thanks for the detailed explanation, very interesting story, வானதி பதிப்பகம் may have it 🙂

   //சுஜாதா சொன்னதுபோல, தந்தவருக்கு என்னுடைய பெண்ணையும் பாதி ராஜ்ஜியத்தையும் கொடுப்பேன்//

   சுஜாதாபோல் உங்களுக்கும் மகன்கள்தானா? ;))))))

  • //even dictate to the Lord. One example, our @kryes//

   முருகா! இதென்ன வம்பு!
   நான் எப்போ முருகனுக்கு ஆணை இட்டேன்?:)
   இப்படியெல்லாம் அவன் அப்பாவிப் பேரு வாங்கிக்கப் பாக்குறானா? ரொம்பத் தான்! கன்னத்துல ரெண்டு குடுத்தாத் தான் சரியா வரும்:))

  • //Rajaji and the cobbler are culprits//

   :))
   Rajaji’s Short Stories Collection are still available with Bharatiya Vidya Bhavan! – Bhavan’s Journal
   http://www.bhavans.info/store/bookdetail.asp?bid=9&bauth=C.+Rajagopalachari

   Cobbler & The Church is a story that is adapted from புனித விவிலியம் – லூக்காவின் வசனம்!
   http://www.depotdan.com/luke/luke15.htm

 2. சுப. இராமனாதன் says:

  (அரசியல்) பக்தர் = அல்லக்கை, கைத்தடி, சிஷ்யர், அடிப்பொடி, தொண்டர், குண்டர், வலது கை, … 🙂

 3. balaraman says:

  நான் ‘பக்தர்’ என்ற சொல்லுக்கு ‘இறையன்பர்’ என்ற சொல் பயன்படுத்தியிருக்கிறேன்! http://bit.ly/eFXjdO

  நல்ல பாடல். நல்ல விளக்கம். நன்றி சொக்கன் ஐயா! 🙂

 4. இந்த பாக்களை பற்றி படிக்கும் போது நம் முன்னோர்கள் எத்தனை அக்கரையோடு சுற்றுப்புற சூழலை அன்றாட வாழ்க்கையில் பின்னி வைத்தார்கள் என்று வியப்பாக, , பெருமையாக உள்ளது.

 5. amas32 says:

  தேவாரப் பாடல்கள் மிக எளிமையா புரியக்கூடிய வகையில் உள்ளது நாம் பெற்ற பேறு. பிரார்த்தனை நம் கவலைகளை போக்கும் அரு மருந்து. இறை சேவையோடு செய்கின்ற பிரார்த்தனை அவன் மனதை குளிர்வித்து நாம் வேண்டும் வரத்தை நல்கும். திருஞானசம்பந்தர் எளிய சேவையை தான் செய்யச் சொல்கிறார். காலை மாலை பூப் பறித்து நீலகண்டனுக்கு சாற்றினால் தீ வினையிலிருந்து நம்மை காப்பான் என்கிறார். திருச்சிற்றம்பலம்!
  amas32

 6. Sathya says:

  இறைவனிடம் உரிமையுடன் கேள்வி கேட்பது, என்னைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை என்றெல்லாம் சண்டை போடுவது – இதெல்லாம் புரந்தரதாசர் முதலான தாசர்களும் நிறைய செய்திருக்கின்றனர். 🙂

 7. GiRa ஜிரா says:

  திருக்கடைக்காப்பு. இதுதான் திருஞானசம்பந்தர் அருளிய நூல். அப்பர் பாடிய தேவாரம் பெரும் சிறப்புப் பெற்று, பிற்காலத்தில் தொகுக்கப்படும் பொழுது ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடியவை கூடத் தேவாரம் என்றே தொகுக்கப்பட்டன. சுந்தரர் பாடியது திருப்பாட்டு.

  சரி. பாட்டுக்கு வருவோம். ஒரு சின்னப் பையன் பாடுற பாட்டா இது?

  எல்லாரும் நிலா நிலா ஓடி வா பாடுன வயசுல “தோடுடைய செவியன்”னு பாடியிருக்கும் பையன்.

  இப்பல்லாம் கோயிலுக்குப் போனா அந்தப் பரிகாரம், இந்தப் பரிகாரம், பணம் கட்டுனா ஒவ்வொரு ஆண்டும் வீட்டுக்குத் திருநீறு வரும் (ஒருதடவ வரும். அப்புறம் வராது). லட்சார்ச்சனை பண்ணனும். திருக்கல்யாணம் பண்ணனும். இப்பிடியெல்லாம் பண்ணா பாவமெல்லாம் போய் புண்ணியம் வரும்னுதான் நாம கேக்குறோம்.

  ஆனா இந்தப் பையன் அப்படியே மாத்திச் சொல்றாரு. கொளத்த வெட்டு. ஏரியத் தூர் வாரு. பசுஞ்சோலைகளை உருவாக்கு. இவரு உண்மையிலேயே பக்தியாளரா? இல்ல சமூக சேவகரா?

  இந்தப் பாட்டுல மட்டுமில்ல. இன்னொரு பாட்டுல நாள்/கோள்/சோதிடம் ஆகியவைகளைப் போட்டு உடைக்கிறாரு.

  வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
  மிக நல்ல வீணை தடவி
  மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
  உளமே புகுந்த அதனால்
  ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
  சனி பாம்பிரண்டுமுடனே
  ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
  அடியார்க்கு மிகவே

  என்னடா இது! நாளும் கோளும் இவ்வளவுதானா? உயர் நீதிமன்றத்துல தப்பாத் தீர்ப்பானா உச்சநீதி மன்றத்துல கேக்குற மாதிரி, ஆண்டவன் இருக்குறப்போ அனைத்தும் அவனே!

  இதெல்லாம் அப்பரோட பழகுனதுல வந்த எண்ணங்கள் போல. வயசான காலத்துல அந்தப் பெரியவரு உழவாரப்பணி செஞ்சாரு. அது போல மக்கள் பயனுள்ள தொண்டு செய்யனுங்குறதுக்காகத்தான் கொளம் வெட்டச் சொல்றது. சோலை அமைக்கச் சொல்றது.

  பக்தருக்கு இணையான சொல் அன்பர்னு என்.சொக்கன் அழகா எடுத்துக்காட்டுகளோடு சொல்லீருந்தாரு.

  பக்திங்குற சொல்லுக்கு இணையான சொல் எது? அன்பு எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

  ஆனா பழைய நூல்கள்ள கலை என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வடகலை தென்கலை கேள்விப்பட்டிருப்பீங்க. அதில் இருக்கும் கலை குறிப்பது பக்திதான்.

  என்னது? எச்சக்கலைன்னு ஒன்னு இருக்கா? அதுல வர்ர கலையும் பக்திதான். எச்சில் செயல்களில் பக்தி வைப்பது எச்சக்கலை. 🙂

  இதுக்கு ஒரேயொரு ஆதாரத்தை மட்டும் சொல்றேன். சுந்தரமூர்த்தி நாயனார் தெரியுமில்லையா. அவர் கண்ணப்பனைப் பாடும் போது கலைமலி கண்ணப்பர் என்று பாடுகிறார்.

  கண்ணப்பர் என்ன ஆட்டம், பாட்டம், ஓவியம், லொட்டு, லொசுக்குன்னு 64 கலைகளையுமா படிச்சாரு? வேடன் தான். ஆனா வேட்டைல ரொம்பப் பெரிய ஆளா? அதுல பெரிய ஆளா இருந்தாலும் அதனாலயா அவருடைய புகழ் அறியப்படுது?

  இல்லை. ஆண்டவன் மேல் வைத்த தூய அன்பு. அதான் கலைமலி கண்ணப்பன். பக்தி அவர்கிட்ட மலிஞ்சிருந்திருக்கு. அதாவது அன்பு மட்டுந்தான். அதுனாலதான காலால மிதிச்சிக்கிட்டு கண்ணப் பிடிங்கி வெச்சாரு. நம்மள்ளாம் நைவேத்யம்னா மூடியத் தொறந்து காமிச்சிட்டு வந்துர்ரோமே. ஒரு வாய் சாப்பாட்டை ஆண்டவன் சாப்புடுவார்னு உண்மையிலேயே நம்புனா, தட்டை அங்கயே வெச்சுட்டு வரனுமா இல்லையா?

  அடுத்து நீங்க இலக்கியங்களப் படிக்கும் போது கலைங்குற சொல் எங்கல்லாம் வருதுன்னு பாருங்க. அதுக்குப் பொருளா பக்தின்னு நெனச்சா பொருத்தாமாயிருக்கான்னு பாருங்க. அதுக்காக நடனக்கலைன்னு வர்ர இடத்துல அந்தப் பொருளை வைக்காதீங்க. 🙂

  • amas32 says:

   நன்றி ராகவன். வேறெங்கும் போகவேண்டாம் 365பாவுக்கு வந்தாலே எவ்வளவு அறிந்து கொள்ள முடிகிறது. மறுபடியும் நன்றி 🙂
   amas32

 8. //@to_pvr ஒரு கேள்வி கேட்டார், ‘பக்தர் என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?//

  :))
  இந்தக் கேள்வி முதற்கண் எப்படிப் பிறந்தது-ன்னே தெரியலை! சரி, அறிந்ததை, அறியத் தருகிறேன்!

  பக்தி என்பது வடமொழிச் சொல்லா?
  பக்தி என்பதன் மூலச் சொல் பஜ்-பஜனம் (பஜனை/வழிபாடு)-ன்னு சிலர் சொல்லுவார்கள்! எப்படி பஜ்-பக்தி ஆச்சு-ன்னே தெரியல! ஒட்டவும் இல்ல!

  ஆனால்…”பத்தி” என்பது நற்றமிழ்ச் சொல்!
  முத்தைத் தரு “பத்தி” என்பது அவனோட திருப்புகழ்!
  ——-

  பத்தி = அதைச் செய்வது = பத்தர்!
  பத்தர் ஆவிப் பெருமாள் என்றே இருக்காரு! திருக்கண்ணமங்கை என்னும் ஊரில்!
  பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை – என்பது ஆழ்வார் அருளிச் செயல்!

  எங்கள் அப்பர் பெருமான் இன்னொரு படி மேலே சென்று…
  பத்தனாய்ப் பாட மாட்டேன்
  பரமனே பரம யோகீ
  எத்தினாற் பத்தி செய்கேன்
  என்னைநீ இகழ வேண்டா
  -ன்னு ஈசனையே மிரட்டுவாரு!:)

  இப்படி, பத்தி, பத்தர் என்பது தமிழில் பலகாலம் புழக்கத்தில் இருக்கு!
  ஆனா “பக்தி” என்னும் வடமொழிச் சொல்லு தான் “பத்தி” ஆச்சு-ன்னு ஒரே போடாப் போட்டுருவாக! தரவெல்லாம் குடுக்க மாட்டாக!
  ஆனா தமிழைத் தாங்குபவன் எவனோ, அவனே இளைச்சவன்! அவன் தான் கடேசீ வரைக்கும் தரவு குடுத்துக்கிட்டு இருக்கணும், பத்தி என்னும் சொல்லுக்கு!:((

 9. பத்தி -> பற்றி என்பதன் வேர்ச் சொல்!
  அவனைப் பற்றுதல் = பற்றி= பத்தி!

  ஒற்றிய தகரம் றகரம் ஆகும் என்னும் குற்றியலுகரப் புணரியல் விதிப்படி, இப்படி மருவுகிறது!

  பற்று = அடி! இறைவன் அடி! (பற்றுக பற்றற்றான் பற்றினை!)
  அதான் அடியவர்-ன்னு சொல்லுறோம்! அடியைப் பற்றிக் கொண்டவர் = அடியவர்!

  அடியைப் பற்றிக் கொள்ளுதல் தான் “பத்தி” என்றும் தமிழில் வழங்குகிறது!
  பத்திமை, பத்தி நெறி, பத்தி மாலை, பத்தி பாய்தல்-னு இலக்கியங்களில் பத்தி நிறையவே இருக்கு!
  பத்திமை = காதல், அன்பு, விடவே முடியாத பற்று!
  ———–

  பத்தி நடவு-ன்னு இப்பவும் கிராமத்தில் சொல்லுவது வழக்கம்!
  அதாச்சும் கன்னா பின்னா-ன்னு விளைஞ்ச நெல்லை, பின்பு, ஒரே சீராக, நாற்றாங்கால் நடும் நடவு! = பத்தி!
  அப்படி நடும் போது, மண்ணில் நல்லா பற்றிக்கும்! அந்தப் பற்றுதல்=பத்தி!

  அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
  பன்னு திருப்பாவை பல்”பதியம்”
  -ன்னு இந்த நெல்லைப் பதியம் போடுவது பற்றிச் சொல்வாள்! அந்தப் பதியம், பற்றிக் கொள்ளலே = பத்தி!

  அப்படிப் பற்றிக் கொண்டவர்கள் = பத்தர்கள்!
  ‘பத்தராய்’ப் பணிவார் தம் அடியார்க்கும் அடியேன் என்பது சுந்தரர் தேவாரம்!
  ————

  அன்பர், அடியார் என்பவை எப்படி நல்ல தமிழ்ச் சொற்களோ…
  அதே போல் பத்தி, பத்தர் என்பதும் நற்றமிழ்ச் சொல்லே! = அதுவே பக்தி!

  என் முருகனே எடுத்துக் குடுத்த தமிழ்ச் சொல்லாச்சே!
  = முத்தைத் தரு “பத்தி”!
  தமிழ்க் கடவுளான அவன் வாய்ச்சொல் தவறாது! பத்தி என்பது பைந்தமிழ்ச் சொல்லே!

 10. சொக்கரின் இந்தத் தினத்தமிழ்ப் பணி!
  இங்கே பதியும் பாக்களும், பேச்சும், உரையாடல்களும், இறையாடல்களும்…
  நற்றமிழுக்கு உளமும் வளமும் சேர்ப்பதாகவே அமைவது கண்டு மிகுந்த மகிழ்ச்சி!
  – வடபழனி முருகனின் இடத்தில் இருந்து….

  சென்னையில் இருக்கும் வரை….
  தினம் ஒரு பா போல், தினம் ஒரு முருகன்!
  I like this idea! romba nallaa irukku, this romance! Why I didnt think of this before?:)

 11. ஆனந்தன் says:

  முருகன் அருணகிரியாருக்கு எடுத்துக் கொடுத்த வார்த்தை “முத்தைத்தரு” என்பதாகும். “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்பதில் வரும் “பத்தி” அழகிய வரிசை என்னும் பொருளைத் தருவது. இவ்வாறு திருமுருக கிருபானந்த வாரியார் கூறுகின்றார்.

  • முத்து முத்தாய்ப் பாடு எனச் சொல்லி, ‘முத்து’ என்பதே முருகன் குடுத்த முதற் சொல்!
   அந்தச் சொல்லால் தொடர்ந்து வந்தது தானே முத்தைத் தரு பத்தி?:)

   பத்தி = நாற்றாங்கால் நடவு பற்றுதல் அல்லவா!
   அந்த நாற்றாங்கால் எப்படி இருக்கும்? வரிசையாத் தானே நடவு இருக்கும்? அதான் நீங்கள் சொல்லும் பத்தி=வரிசை!:)

   முத்து போல வரிசையான பற்களை உடைய தேவானைக்கு (அத்திக்கு) இறை என்பது ஒரு பொருள்!
   முத்தியைத் தரும் பத்தி! அதைத் தரவல்ல தேவானைக்கு இறை என்பது இன்னொரு பொருள்!
   (தேவானை கிரியா சக்தி ஆதலாலே, கர்ம யோகம் கூடிய பக்தியால் முத்தி என்ற சைவ சித்தாந்த ரூபமாக அவளைக் குறித்ததாயிற்று) – இந்த இரண்டுமே வாரியார் சொல்லும் விளக்கம் தான்:)

 12. K.S.Subramanian says:

  மேலோட்டமாகப்பார்த்தால் இரு சொற்களுமே (அன்பன், அடியார்) வெவ்வேறு தருணங்களில் ‘பக்தன்’ என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். நீங்கள் ‘அன்பன்’ என்பதற்கு இரு மேற்கோள் காட்டி உள்ளீர்கள். அம்மாதிரியே ‘அடியார்’ என்பதற்கும் ‘சிவனடியார்’ உடனே நினைவுக்கு வருகிறது. மற்றும் பிரபலமான
  ‘…மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்’

  ‘இல்லையே என்னாத இயற் பகைக்கும் அடியேன்’
  என்ற நாயன்மார்களிடம் பக்தியை வெளிப்படுத்திய வரிகளிலிருந்தும் அடியார் என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பது தெரிகிறது.
  இருப்பினும் என் சிந்தனையில் ‘பக்தன்’ என்ற சொல் இவற்றைக்காட்டிலும் ஆழ்ந்த ஈடுபாட்டையும் கருத்துச்செரிவையும் குறிப்பிடுகிறது என்று தோன்றுகிறது. அதோடு ‘பக்தி’ என்ற சொல் பரவலான பழக்கத்தினால் தமிழ்ச்சொல்லே என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்! பாரதியார் ‘தேசபக்திப்பாடல்கள்’ என்று இயற்றிய கவிதைகளை ‘நாட்டுப்பற்றுப்படல்கள்’ என்று சொன்னாலும் முழு உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறதா என்பது கேள்விக்குறி!! உளமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்!
  அன்புடன்,
  பிச்சை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s