சோழ நாடு நீருடைத்து…

அன்னம் ஆடும் அகன் துறைப் பொய்கையில்

துன்னும் மேதி படியத் துதைந்து எழும்

கன்னி வாளை கமுகின்மேல் பாய்வன

மன்னு வான்மிசை வானவில் போலுமால்

*

காவினில் பயிலும் களி வண்டு இனம்

வாவியில் படிந்து உண்ணும் மலர் மது

மேவி அத்தடம் மீது எழப் பாய் கயல்

தாவி அப்பொழிலில் கனி சாடுமால்

நூல்: பெரிய புராணம்

பாடியவர்: சேக்கிழார்

சூழல்: சோழ நாட்டு வர்ணனை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பெரிய குளம். அதில் மகிழ்ச்சியோடு ஆடுகின்றன அன்னப் பறவைகள். அந்தக் குளிர்ச்சியை விரும்பி வந்து தண்ணீரில் விழுகின்றன எருமைகள்.

இந்த எருமைகள் திடுமென்று வந்து குதித்ததும், அந்தக் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த இளம் வாளை மீன்களுக்கு அதிர்ச்சி. துள்ளி மேலே பாய்கின்றன. கரையில் உள்ள பாக்குமரத்தைத் தொட்டுத் திரும்புகின்றன. இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, விண்ணில் தோன்றும் வானவில்போலத் தெரிகிறது.

*

வண்டுகள் பூங்காக்களில் மகிழ்ச்சியாக வாழ்கின்றன. பசி எடுத்தால் குளத்துக்கு வருகின்றன, அங்கே உள்ள மலர்களை உறிஞ்சித் தேன் அருந்துகின்றன.

அப்போது அந்தக் குளத்தில் உள்ள மீன்கள் மேல் நோக்கிப் பாய்கின்றன. குளக்கரையில் இருக்கும் மலர்ச் சோலையில் உள்ள மரங்களின்மீது படுகின்றன, அதனால் அந்த மரங்களில் இருந்து பழங்கள் உதிர்கின்றன.

துக்கடா

 • வாளை மீன் குளத்திலிருந்து மரத்தை நோக்கிப் பாய்கிற curve shape பாதை, வானவில்லைப்போல் இருக்கிறதாம், மீன்கள் மரத்தின்மீது பட்டுப் பழங்கள் உதிர்கிறதாம்… மிகைப்படுத்தல்தான், ஆனாலும் அழகு! உயர்வு நவிற்சி அணி
 • இன்றைய பாடலைத் தேர்வு செய்வதற்காக நேற்று ‘பெரிய புராண’த்தின் ஒரு பகுதியை நிதானமாகப் படித்துக்கொண்டிருந்தேன், அதில் சுவாரஸ்யமாகத் தோன்றியது, மனு நீதிச் சோழன் கதை
 • என்னய்யா காமெடி? நமக்கெல்லாம்தான் மனு நீதிச் சோழன் கதை நன்றாகத் தெரியுமே! அரசன் : இளவரசன் : வேகமாக வண்டி ஓட்டுகிறான் : கன்று அடிபடுகிறது : வேதனையில் தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடிக்கிறது : சோழன் வருந்தித் தன் மகனைத் தேர்க்காலில் வைத்து நசுக்குகிறான் : நீதி நிலைநாட்டப்படுகிறது…. இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கமுடியும்?
 • இந்தக் கதையை மேலோட்டமாகப் படிக்கும்போது, அந்த ராஜாவின் மகன் ஒரு வில்லனாக, திமிர் பிடித்த பணக்காரர்களின் பிரதிநிதியாகவே தோன்றுகிறான். அவனை நினைக்கும்போது சில தமிழ்ப் படக் காட்சிகள்கூட உங்கள் நினைவுக்கு வரக்கூடும்
 • ஆனால், பெரிய புராணத்தில் வரும் மனு நீதிச் சோழனின் மகன் அப்படி இல்லை. தன்னுடைய தேரில் ஒரு கன்று அடிபட்டுவிட்டது என்றவுடன் துடித்துப்போகிறான், ’என்னால் சோழ குலத்துக்கு இழிவு வந்துவிட்டதே’ என்று மயங்கி விழுகிறான். தந்தையின் ‘தண்டனை’யை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்கிறான்
 • இன்னொரு விஷயம், மனு நீதிச் சோழன் மகனுடைய தண்டனையைத் தானே நிறைவேற்றவில்லை. அந்தப் பொறுப்பை ஓர் அமைச்சரிடம் ஒப்படைக்கிறான். இந்த அமைச்சர் இளவரசரைக் கொல்லத் தயங்குகிறார், அதேசமயம் அரச ஆணையை மீறவும் தயக்கம், தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார்!
 • அப்போதும், மனு நீதிச் சோழன் சளைக்கவில்லை, தானே தேரில் ஏறித் தண்டனையை நிறைவேற்றுகிறான்
 • அதன்பிறகு, சிவபெருமான் தோன்றி அவனை வாழ்த்துகிறார், கன்று, அமைச்சர், இளவரசன் மூவரையும் உயிரோடு திரும்பக் கொண்டுவருகிறார்
 • சுவையான இந்தப் பாடல்கள் அனைத்தையும் #365paa வரிசையில் தருவது சிரமம், அதனால் சுருக்கமான கதைமட்டும் இங்கே, மிச்சத்தைத் தேடிப் படித்து மகிழ்வீர்களாக 🙂

189/365

Advertisements
This entry was posted in இயற்கை, உயர்வு நவிற்சி அணி, கதை கேளு கதை கேளு, சேக்கிழார், பெரிய புராணம், வர்ணனை. Bookmark the permalink.

6 Responses to சோழ நாடு நீருடைத்து…

 1. GiRa ஜிரா says:

  “வாளை கமுகின் மேல் பாய்வன” இந்த வரியைப் படிக்கும் போது திருமால் பெருமை படத்திற்காக கவியரசர் கண்ணதாசன்,
  “கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு
  உறையூரின் காவலனே நீ வாழிய நீடு”
  என்று எழுதியது நினைவிற்கு வருகிறது.

  மீன்கள் மரமும் ஏறும். எந்த மீனென்று நினைவில்லை. வாளையாகவேக் கூடயிருக்கலாம். ஒரளவு நீருக்கு வெளியே தாக்குப் பிடிக்கும். விரால் மீனும் குறைந்த நீரிலும் தாக்குப் பிடிக்கும்.

  எட்டுத்தொகையில் குறும்பாடல்களில் இயற்கையழகு வெளிப்பட்டாலும், பத்துப்பாட்டுகளில்தான் விளக்கமாக நாட்டுவளம் பாராட்டப்பட்டுள்ளது. பத்துப்பாட்டின் முதல் நூலாகிய தமிழில் வந்த முதல் ஆன்மீக நூலாகிய திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இந்த விரிவான வளம் விளக்கலைத் தொடக்கி வைக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

  பகழிக்கூத்தர் பாடிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் இதுபோல ஒரு காட்சி. “பாம்பால் உததிதனைக் கடைந்து” என்று தொடங்கும் பாடல்.

  முகையுடைக்கும் பூம்பாசடைப் பங்கயத் தடத்திற் புனிற்றுக் கவரி முலை நெரித்துப் பொழியும் அமுதந்தனைக் கண்டு புனலைப் பிரித்துப் பேட்டெகினந் தீம்பால் பருகும் திருச்செந்தூர் 🙂

  திருச்செந்தூர்ல ஒரு கொளம். அதுல தாமரை மலர்கள் பூத்திருக்கு. எருமைமாடெல்லாம் உள்ள எறங்கி ஒளப்புது. இளம் மாடு. மடியெல்லாம் பால்.

  கொளத்துல விரால் மீன்கள் நெறைய. விளையாட்டுப் போக்குல எருமையோட மடிய இடிக்குது. கன்னுக்குட்டிதான் இடிக்குதோன்னு பாலைக் குளத்துல பொழிஞ்சிருது.

  அந்தக்குளத்துல ரெண்டு அன்னங்கள். ஆண் அன்னம் வெளிய போயிருக்கு. பெண் அன்னம் குளத்துல கலந்தப் பாலைப் பாக்குது. தண்ணீல இருந்து பாலைப் பிரிச்சுப் பருகுது. 🙂 அப்பவே கணவனை விட்டுட்டுச் சாப்புடுற பழக்கம் இருந்திருக்கு. 🙂

 2. amas32 says:

  மனு நீதிச் சோழன் கதையில் தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள். பள்ளியில் விழாவில் இந்தக் கதையை நாடகமாகி இருக்கிறோம், ஆனால் அதில் கூட அரசனின் மகனை நல்லவனாகக் காட்ட வில்லை என்றே நினைக்கிறேன்.
  மீன்கள் பல நிறத்தில் இருந்தன போலும், வானவில்லின் பல நிறங்களை ஒத்து.
  என்ன வளமான நாடு! அதற்கு ஏற்றாற்போல் சேக்கிழார் பிரானுக்கு என்ன அருமையான கற்பனை வளம்!
  மன வருத்தத்தில் இருந்தால் கூட இந்தப் பாடலை படிக்கும் பொழுது மகிழ்ச்சி ஏற்படும். எருமைகள் குளத்தில் குதிக்கின்றன, வண்டுகள் தேன் அருந்துகின்றன, உயரப் பறக்கும் மீன்கள் இடித்து பழுத்தக் கனிகள் உதிருகின்றன!
  amas32

 3. GiRa ஜிரா says:

  மேல சொன்ன பாட்டுல இன்னொரு விவரம் இருக்கு.

  புனிற்றுக் கவரின்னா எருமை மாடுன்னு பாத்தோம்.

  இதுல கவரிங்குறத எங்கயாச்சும் கேள்விப்பட்டிருக்கீங்களா?

  ஆமா. கவரிமான்னு சொல்றோமே 🙂

  மானத்துக்கு எடுத்துக்காட்டா வள்ளுவர் சொன்னது.

  மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் மானம் வரின்

  ஆனா இந்தக் கவரி மான் அல்ல. மாடு. 🙂 

  நல்லாப் பாருங்க. வள்ளுவரு கவரிமா அன்னார்னுதான் சொல்லீருக்காரு. கவரிமான் அல்ல.

  பகழிக்கூத்தரும் சொல்றாரு புனிற்றுக் கபரின்னு.

  உயர்ந்த மலைப்பகுதியில் இருக்கும் மாடுகளுக்கு முடி நெறையா இருக்கும். குளிர்ல இருந்து காப்பாத்தும். இந்த முடி இல்லைன்னா குளிர்ல மாடு செத்துப் போகும்.

  அதுதான் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா(டு)

  இதப் புரிஞ்சிக்காம நீங்கள்ளாம் போற்றும் ரொம்பப் பெரியவங்களும் மான்னு எழுதியிருக்காங்க.

  இனிமே கவரின்னா மான் இல்லை. மாடுன்னு எல்லார்ட்டயும் சொல்லுங்க. 🙂

  • amas32 says:

   எவ்வளவு சினிமாக்களில் பலர் மானம் போய் விட்டால் கவரிமான் போல் நான் உயிரை விட்டு விடுவேன் என்று சொல்லக் கேட்டிருக்கேன். இப்பொழுது உண்மை அர்த்தம் தெரிவித்ததற்கு நன்றி 🙂
   amas32

   • GiRa ஜிரா says:

    ஆமா. எல்லாரும் சொல்றாங்க. நானும் சொல்றேன் மாதிரி கவரிமாடு கவரி மான் ஆயிருச்சு. 🙂 கவரிமான்னு நடிகர் திலகம் நடிச்சே படம் வந்தது. படத்துக்குப் பேர் போடும் போது கூட பின்னணியில மான் ஓடும். 🙂

 4. balaraman says:

  அருமையான பாடல். துக்கடாக் கதை ஈர்த்தது. முழுக்கத்தை எனக்கு இதற்கு முன்பு தெரியாது, தெரியப்படுத்தியதற்கு நன்றி. 🙂

  இந்தப் பாடல் சோழக் குல(ள)த்தின் செழுமையைக் காட்டுகிறது. இதைப் படித்தவுடன் எனக்கு “ஆயிரத்தில் ஒருவன்”(கார்த்தி நடித்த படம்) படத்திலிருந்து ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது!

  ஒரு சோழ மன்னன் வருந்தி பாடுகிறான்:

  “நெல்லாடிய நிலமெங்கே???
  வில்லாடிய களமெங்கே???
  சொல்லாடிய அவைஎங்கே???
  கல்லாடிய சிலைஎங்கே???”

  இந்தப் பாடலையும் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s