தழை கொடுத்தான்

சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா

அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக

கன்று தாய் மருளும் குன்ற நாடன்

உடுக்கும் தழை தந்தனனே, யாம் அஃது

உடுப்பின், யாய் அஞ்சுதுமே, கொடுப்பின்

கேளுடைக் கேடு அஞ்சுதுமே, ஆய்இடை

வாடல கொல்லோ தாமே அவன் மலைப்

போர் உடை வருடையும் பாயா,

சூர் உடை அடுக்கத்துக் கொயற்கு அரும் தழையே?

நூல்: நற்றிணை (#359)

பாடியவர்: கபிலர்

சூழல்: குறிஞ்சித் திணை. காதலிக்குத் தழையால் ஆன ஓர் ஆடையைப் பரிசாகத் தருகிறான் காதலன். அதனை ஆசையோடு பெற்றுக்கொள்கிறாள் காதலி. ஆனால் பக்கத்தில் இருக்கும் தோழிக்கு ஒரு குழப்பம்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தோழி,

சிறிய கொம்பை உடைய கன்றுக்குட்டியும் அதன் தாய்ப்பசுவும் மலையில் மேய்கின்றன. அப்போது காற்று வீச, அதனால் அசைந்த காந்தள் மலரின் மகரந்தங்கள் கீழே உதிர்கின்றன. திடீரென்று ஏதோ தன்மீது விழுகிறதே என்று அந்தக் கன்றுக்குட்டியும் பசுவும் பயந்து நடுங்குகின்றன.

அப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் உன் காதலன், அவன் தழைகளால் பின்னிய ஓர் ஆடையை உனக்குப் பரிசாகக் கொடுத்தான்.

இந்தப் புதிய ஆடையை நீ உடுத்திக்கொண்டாள், அம்மாவுக்கு உங்களுடைய காதல் விஷயம் தெரிந்துவிடுமோ? ‘இந்த ஆடையை யார் கொடுத்தது?’ என்று அதட்டுவாளோ? பயமாக இருக்கிறது.

பேசாமல், அவனிடமே இதைத் திருப்பிக் கொடுத்துவிடலாமா? அப்படிச் செய்தால் அவனுடைய மனம் வருந்தும், அதைப் பார்த்து நீயும் வருத்தப்படுவாய்.

இப்படிக் குழப்பத்திலேயே நாள்கள் சென்றால், ஆடையில் உள்ள தழைகள் வாடிவிடும். அதுவும் பெரிய தவறு.

ஏனெனில், இது சாதாரண ஆடை அல்ல. உன்னுடைய காதலனின் பெரிய மலையில், போர் செய்கிற ஆடுகூடச் சுலபமாகப் பாய்ந்து செல்ல முடியாத உயரத்தில், தெய்வம் குடிகொண்டிருக்கும் மலைத் தொடரில் உள்ள அரிய மரங்களில் இருந்து பறித்த தழைகளால் நெய்யப்பட்டது.

துக்கடா

 • தோழி சொல்ல வருவது என்னவென்று அந்தக் காதலனுக்குப் புரிந்ததோ இல்லையோ, நமக்குப் புரிகிறது, ‘அடேய், தழை ஆடையை உடுத்தறதா வீசி எறியறதா ஒளிச்சுவைக்கறதான்னு புரியாம இவளைத் தவிக்கவிடாதே, சீக்கிரமா இவளைக் கல்யாணம் செஞ்சுக்கோ!’
 • சங்க காலத்தில் நல்ல நேர்த்தியான ஆடைகள் இருந்தன, ஆனாலும், காதலிக்குத் தழையால் பின்னிய ஆடைகளைப் பரிசாகத் தருவது ஒரு மரபு. இதைப்பற்றி முனைவர் சுந்தர ஆவுடையப்பன் ஒரு மிகச் சுவாரஸ்யமான கட்டுரை எழுதியுள்ளார், அதிலிருந்து சில தகவல்கள் இங்கே:
 • தழை ஆடையில் வெறும் தழைகள்மட்டுமல்ல, மலர்களும் இருக்கும். நெய்தல், ஞாழல், ஆம்பல், குவளை, நொச்சி போன்ற தாவரங்களின் தழைகளும் மலர்களும் அதில் இடம் பெறுவது வழக்கம்
 • குளிர்ச்சியான ஆடை இது. ஆனால் இதனை உடல்முழுவதும் அணிகிற வழக்கம் இல்லை, இடுப்பில்மட்டும்தான்
 • தழை ஆடையை இடிப்பில் சுற்றிக் கட்டிப் பொருத்துவதற்கு வசதியாக, அதில் ‘கயில்’ என்ற அமைப்புகூட (கொக்கிபோல?) இருந்ததாம்
 • இந்த ஆடையில் தழைகளை வரிசையாக வைத்துத் தைக்கமாட்டார்களாம், குறுக்கும் நெடுக்குமாக வைத்து இடைவெளி தெரியாதபடி அக்கறையாகச் செய்வார்களாம்

188/365

Advertisements
This entry was posted in அகம், கபிலர், காதல், தோழி, நற்றிணை, பெண்மொழி. Bookmark the permalink.

4 Responses to தழை கொடுத்தான்

 1. nvaanathi says:

  தோழிகளுக்கு மட்டும் தான் இப்பிடி எல்லாம் டவுட்டு வரும்.

 2. amas32 says:

  தோழி என்பவள் சினிமாவில் வரும் மனசாட்சி கேரக்டர் மாதிரியோ?

  காந்தள் மலரின் மகரந்தங்கள் தங்கள் மேல் உதிர்வதை கண்டு பசுவும் கன்றும் பயப்படுகின்றன. அப்படியென்றால் அவ்வளவு மலர்கள் பூத்துக் குலுங்குகின்ற வளமான நிலத்தையுடவன் அந்த தலைவன் என்பாதைப் புரிந்து கொள்ளலாம்.

  அம்மன் கோவில்களில் இன்றும் நெருக்கமாகாக கட்டப்பட்ட வேப்பிலை ஆடையை உடுத்தி மாரியம்மனை வணங்குவது ஒரு வித நேர்த்திக் கடன் வழிபாடு. வேப்பிலை ஆடையும் மிகவும் குளிர்ச்சியை கொடுக்கும்.

  ஆனால் இங்கே காதலன், மலர்களும் அரிய இலைகளையும் தழைகளையும் பிணைத்து ஒரு ஆடையை காதலிக்கு அன்புடன் கொடுத்து இருக்கிறான்.(specially made to order, gift :-)) ஆனால் அதை அணிந்து கொள்வதில் தான் சிக்கல்!
  amas32

 3. GiRa ஜிரா says:

  இன்றைய பாடலுக்கு என்.சொக்கனின் விளக்கம் மிகமிகப் பொருத்தம். அத்தோடு அந்தத் துக்கடாக்கள் அட்டகாசம். 🙂

  ஆகையால் பாட்டுக்குள் போகாமல் இந்தப் பாடலோடு தொடர்பு படுத்தும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறேன். பழம்பாக்களைப் படித்துப் பொருள் சுவைக்கின்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  முன்பு பார்த்த ஒரு பாடலில் ஒரு அடி முசுக்குத்தி நக்கும் மலைநாட என்று தொடங்கும். அடுத்த அடி பசுக்குத்தி என்று  தொடங்கும்.

  பசுக்குத்தி என்று வருவதால் முசுக்குத்தி என்று புலவர் பொருத்தமாகச் சொன்னார் போல என்று ஒருவர் சொல்லியிருந்தார். யாரென்று மறந்து விட்டது.

  ஆனால் அந்தக் கருத்து உண்மையல்ல. பாடலுக்குத் திணை வகுத்தவர்கள் காரணத்தோடுதான் கருப்பொருட்களையும் உரிப்பொருட்களையும் திணைக்கு வகையாக வைத்தார்கள்.

  பாடலில் வரும் மலர், செடி, விலங்கு மற்ற கருப்பொருட்கள் பாடலோடு தொடர்புடைய பாத்திரங்களின் நிலையைத் தெரிவிக்கின்றன.

  இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம். என்னென்ன விலங்குகள் வருகின்றன?

  ஒரு ஆ. அதன் கன்று. ஒரு ஆடு.

  இங்கு ஆ(பசு) தலைவியின் தாயைக் குறிக்கும். மருள்கின்ற கன்று தலைவியைக் குறிக்கும்.

  மலைகளில் ஏறித் தழைகளைத் தின்னும் ஆடு தலைவனைக் குறிக்கும்.

  இதை வைத்து உட்பொருளாகத் தோழி சொல்வது என்ன?

  தலைவி இன்னும் தாய்க்கு மகளாகவே இருக்கிறாள். அம்மாவிற்குச் சற்றுப் பயந்தவளும் கூட.

  தலைவனானவன் தன்னிச்சையானவன். தெய்வம் வாழும் மலையூரன். 

  கொஞ்சம் பெரிய வீட்டுப் பையன் போல. அதுனால இப்பிடியெல்லாம் ஏதாச்சும் கொண்டு வந்து குடுத்தா மாட்டிக்குவ. அதுக்குப் பதிலா நேர்மையா வீட்டுல வந்து பேசு.

  இனிமே அடுத்த பாட்டுல வர்ர கருப்பொருள்களை வெச்சு நீங்களே விளக்கம் சொல்லீருவீங்கன்னு நம்புறேன் 🙂

 4. gardenerat60 says:

  அழகான பாடல். ; மலர்களும் அரிய இலைகளையும் தழைகளையும் பிணைத்து ஒரு ஆடை! எத்தனை பொறுப்பான பசுமை சுழல் பாதுகாப்பு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s