பெரு மழைக் கண்கள்

பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து

எல்லாரும் அறிய நோய் செய்தனவே

தே மொழித் திரண்ட மென் தோள் மா மலைப்

பரீஇ வித்திய ஏனல்

குரீஇ ஒப்புவாள் பெரு மழைக் கண்ணே

நூல்: குறுந்தொகை (#72)

பாடியவர்: மள்ளனார்

சூழல்: குறிஞ்சித் திணை : ஓர் இளைஞன். ‘ஒருமாதிரி’ சுற்றிக்கொண்டிருக்கிறான். ‘என்னாச்சுடா உனக்கு?’ என்று கேட்கிறான் அவனுடைய தோழன் (பாங்கன்), அதற்கு அவன் சொல்லும் பதில்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நண்பா,

அந்தப் பெரிய மலைப் பக்கத்தில் நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன், தேன் போன்ற இனிய சொற்களைப் பேசுகிறவள், திரண்ட, மென்மையான தோள்களைக் கொண்டவள்!

நான் அவளைச் சந்தித்த இடம், ஒரு தினைவயல். அந்த வயலில் ஆங்காங்கே பருத்தியும் விதைக்கப்பட்டிருந்தது.

அந்தத் தினைப் பயிர்களைச் சாப்பிடுவதற்காகக் குருவிகள்வந்தன, அவற்றை ஓட்டுவதற்காக இவள் வந்தாள்!

அவளுடைய பெரிய, குளிர்ச்சியான கண்கள் பூப்போன்றவைதான். ஆனால் ஏனோ, எனக்குமட்டும் அவை அம்புகளைப்போல் தோன்றுகின்றன, என்னைக் குத்தி ரணமாக்கித் துன்பம் தருகின்றன, எல்லோரும் அறியும்படி காதல் நோயை உண்டாக்குகின்றன.

துக்கடா

 • இத்தனை மயக்கத்திலும் இந்தக் காதலன் எத்தனை தெளிவாக ஓர் FIR தருகிறான் பாருங்கள்: ’சம்பவம்’ எங்கே நடந்தது? அதற்குக் காரணம் யார்? சம்பந்தப்பட்ட நபரின் அங்க அடையாளங்கள் என்னென்ன? எப்படி நடந்தது? எதனால் நடந்தது? அதன் பின்விளைவுகள் என்னென்ன? (மறைமுகமாக) இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி?
 • தினை வயலில் நடுவில் பருத்தி எதற்கு? ‘ஊடுபயிர்’ என்பதுபோலவா? நிலத்தின் வளத்தை அதிகப்படுத்தவா? விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்

184/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, உவமை நயம், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழன், நட்பு. Bookmark the permalink.

4 Responses to பெரு மழைக் கண்கள்

 1. amas32 says:

  “ஒரு மாதிரி” திரிகிறான் என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பது, இக்கால வழக்கில் “ஒரு மார்க்கமா” என்ற பொருளில் வருமா 🙂
  வடிவேலு, சரத்குமார், நமிதா நகைச்சுவை காட்சி தான் ஞாபகத்துக்கு வருது! வடிவேலுவிடம், பெண்ணை சரியாகவே பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு நமிதாவை தலை முதல் கால் வரை வர்ணிப்பார் சரத்குமார்.
  மென்மைக்கு இலக்கணமான பெண்ணுக்கு அவளுடைய தாமரை போன்ற கண்களே ஆயுதம் ஆவது வியப்பு தான் !
  amas32

 2. ஆனந்தன் says:

  ஐயா, உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்!
  சில நாட்களுக்கு முன்னர் தான் சந்தாதாரர் ஆனேன்.
  பாடல்களுக்குப் பதவுரையையும் தந்து உதவினால் உங்கள் தயவிலே நன்றாகத் தமிழ் கற்றுவிடலாம் அல்லவா! தயைகூர்ந்து இதைக் கருத்தில் எடுப்பீர்களா? உங்கள் பணிக்கு மீண்டும் நன்றிகள்!

 3. GiRa ஜிரா says:

  இந்தப் பாடலுக்கு நேற்றே பின்னூட்டமிட இயலவில்லை.

  ஒரு கவிஞர்.. முத்துலிங்கம்னு நெனைக்கிறேன். கிட்டத்தட்ட கீழ இருக்குற மாதிரி ஒரு எம்.ஜி.ஆர் படத்துக்குப் பாட்டு எழுதியிருக்காரு.
  உன் கண்கள் மன்மதன் படைக்கலம்
  காதலில் வேண்டும் அடைக்கலம்
  இதுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனும் அருமையா இசையமைச்சிருக்காரு. அந்தப் பாட்டைக் கேட்ட எம்.ஜி.ஆர், மெட்டெல்லாம் நல்லாருக்கு. ஆனா அடைக்கலம்னு எல்லாம் கிருஸ்துவப் பேர் மாதிரி காதல் பாட்டுல இருக்கே. மொழி விளையாண்ட அளவுக்குப் பாட்டுல காதல் விளையாடலையேன்னு சொன்னாங்களாம்.

  சரின்னு மறுபடி ஒரு பாட்டெழுதி மெட்டுப் போட்டு… அதுதான் தங்கத்தில் முகமெடுத்து.. .சந்தனத்தில் உடலெடுத்து பாட்டு.

  ஏன் சொன்னேன்னா… அதுல வர்ர “கண்கள் மன்மதன் படைக்கலம்” என்கின்ற வரிகள்.

  இதே மாதிரிப் பொருள்ல பல பாடலாசிரியர்கள் எழுதியிருக்காங்க.

  இளையராஜா இசையில் இளமைக்காலங்கள் படத்துல வர்ர ”பாட வந்ததோர் ராகம்” பாட்டுல (இசையரசி பி.சுசீலா, ஏசுதாஸ் பாடியது)
  “கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்” என்ற வரிகள் இந்தக் குறுந்தொகைப் பாட்டின் முதலிரண்டு வரிகளைச் சுருக்கமாகச் சொல்கின்றன.

  சினிமாப்பாட்டிலும் இலக்கியம் உண்டு.

  காதல் கண்ணுலதான் தொடங்குது. கண்பார்வையற்றவர்களுக்குக் காதில் தொடங்கும்.

  அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். கம்பர் காட்டும் காட்சி. அப்பக் கூட அண்ணல் முதல்ல நோக்குனாருன்னுதான் கம்பர் சொல்றாரு. ஒரு விதத்துல ஆணாதிக்கம்தான்.

 4. GiRa ஜிரா says:

  இந்த மாதிரி பாடல்கள் படிக்கிறப்போ சில ஒப்புமைகள் நாமளாச் செஞ்சிக்கனும். அதுக்கான குறிப்பு அந்தப் பாட்டுலயே இருக்கும்.

  தினைப்புனத்துல தலைவி இருக்கா. தினைப்புனம் குருவிகளை ஈர்க்குது. ஆனா தலைவி குருவிகளை விரட்டுறா. இது பாட்டுல தலைவி என்ன செய்றான்னு நேரடியாச் சொல்ற பொருள்.

  எப்படி இதைத் தலைவன் கருத்தோட தொடுக்கனும்னு சொல்றேன்.

  தினைப்புனத்துல தலைவி இருக்கா. இனிய மொழி, மென் தோள், அழகிய கண்கள்னு தலைவி தலைவனை ஈர்க்குறா. தினைப்புனத்துக்குக் குருவி வந்த மாதிரி தலைவன் வர்ரான். குருவியைக் கல்வீசி விரட்டும் தலைவி, தலைவனைக் கண் வீசி விரட்டுறாள்.

  அதுதான் ”எல்லாரும் அறிய நோய் செய்தனவே”.

  நாலு பேர் இருக்குற எடத்துல என்னக் கண்டுக்காம அவமானப்படுத்தீட்டாளேன்னு புலம்புறாங்கள்ள. அந்த மாதிரி.

  தினைப்புனம் – தலைவி
  குருவி – தலைவன்
  கல் – தலைவியின் கண்கள்

  இப்பப் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

  பருத்திக்கு ஊடுபயிர் போடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை. எனக்குத் தெரிஞ்சு ஒரு பயிர் விளஞ்சப்புறமா இன்னொரு பயிர் வளர்ப்பது உண்டு. அதுவும் ஒருவிதத்துல நிலத்தின் வளத்தைக் காப்பாற்றத்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s