பொற்பாதம்

போற்றி, அருளுக நின் ஆதியாம் பாதமலர்,

போற்றி, அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்,

போற்றி, எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,

போற்றி, எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,

போற்றி, எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்,

போற்றி, மால் நான்முகனும் காணாத புண்டரிகம்,

போற்றி, யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்,

போற்றி, யார் மார்கழி நீர் ஆட ஏல் ஓர் எம்பாவாய்

நூல்: திருவெம்பாவை (#20)

பாடியவர்: மாணிக்கவாசகர்

எம்பெருமானே, உன்னை வணங்குகிறோம்,

எல்லாவற்றுக்கும் தொடக்கம், உன்னுடைய பாத மலர்கள், எல்லாவற்றுக்கும் முடிவு, அதுவும் சிவந்த தளிர் போன்ற உன்னுடைய பாதங்கள்தான். அவற்றை நாங்கள் வணங்குகிறோம்,

எல்லா உயிர்களும் உண்டாகக் காரணமாக இருந்த உன்னுடைய பொன் பாதங்களை வணங்குகிறோம், அனைத்து உயிர்களையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் கழல் அணிந்த உன்னுடைய திருவடிகளை வணங்குகிறோம், எல்லா உயிர்களுக்கும் முடிவு கொடுக்கும் உன்னுடைய இரண்டு பாதங்களை வணங்குகிறோம், திருமாலும் பிரமனும் பார்க்கமுடியாத தாமரைப் பாதங்களை வணங்குகிறோம், எங்களுக்கு நல்வாழ்க்கையை அருள்கின்ற அந்தப் பொன் மலர்ப் பாதங்களை வணங்கி நாங்கள் மார்கழி நீராடுகிறோம்!

183/365

This entry was posted in சிவன், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி, பாவைப் பாட்டு, பெண்மொழி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

3 Responses to பொற்பாதம்

 1. amas32 says:

  வைகுண்ட ஏகாதசிக்கு சிவனின் பாடல்! அரியும் சிவனும் ஒன்று என்பதற்கு நல்ல உதாரணம் திரு சொக்கரே 🙂
  திருமாலும் பிரமனும் பார்க்கமுடியாத தாமரைப் பாதங்களை நம் எளிய பக்தியால் அடைய முடிவது இறைவன் நம் மேல் வைத்துள்ள அளப்பரியா கருணையை காட்டுகிறது.
  மஹாபலி சக்கரவர்த்தி திருமாலின் திருப்பாதங்களை தலையில் தாங்கிக் கொள்ள என்ன பேறு பெற்றிருக்க வேண்டும்!
  தாமரை போன்ற சிவந்த தளிர் பாதங்கள் என்று சொல்லும்போதோ நினைக்கும் போதோ, உடனே நம் மனதில் இருக்கும் இறுக்கம் குறைந்து மனம் மென்மையாகி விடுகிறது. அதனால் தான் அவன் மலரடியையே நாம் எந்நேரமும் நினைத்திருக்க வேண்டும்! ஆதியும் அந்தமும் இல்லாத ஈஸ்வரனின் பொன் பாதங்களை இன் நன் நாளில் வணங்கி வளம் பெறுவோம்.
  amas32

 2. GiRa ஜிரா says:

  ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு படம் வந்தது. அதுல கதை திரைக்கதை வசனம் இயக்கம் நடிப்புன்னு ஒருத்தரே எல்லாத்தையும் செஞ்சாரு. அவருக்கு title cardல எல்லாம் வரும்.

  அதே மாதிரி ஈசனார்க்கு ஒரு title card போடுறாரு மாணிக்கவாசகர்.

  ஆதி, அந்தம், தோற்றம், போகம், ஈறு
  சிவபெருமான்

  இதுதான் அந்த title card.

  ஒருத்தரே அஞ்சு வேலை செய்றாரே. அப்போ எவ்ளோ பெரிய ஆளு.

  ஒருத்தரே எல்லா வேலையும் செய்றாருங்குறது பொய். அவரோட திருவடி மட்டுமே அஞ்சு வேலையும் செய்யுது.

  அப்ப அதுக்கு மேல இருக்குறதெல்லாம் சும்மாயிருக்கா? under utilisation of resources?!

  இல்ல. உலக உயிர்கள் எல்லாத்தையும் பாத்துக்க திருவடி மட்டுமே போதும். அதுக்கு மேல இருக்குறதெல்லாம் வேற வேல பண்ணுது. அதை புரிந்து கொள்ளும் திறமை நமக்கில்லை.

  ஒரு கேள்வி. அதான் ஆதி அந்தம்னு சொல்லியாச்சே. அப்புறமென்ன தோற்றம் ஈறுன்னு தனியா வேற. இவரு மாணிக்கவாசகரா? மேஜர்சுந்தரராஜனா? ஆங்கிலம்/வடமொழில சொல்லீட்டு தமிழ்ல அதையே திருப்பிச் சொல்றதுக்கு! 🙂

  ஆதி வேற. தோற்றம் வேற. அந்தம் வேற. ஈறு வேற. 

  புரியலையா?

  சமையல் பண்ற கைக்கு வளையல் போடனும்னு சொல்றோம்ல.
  அதுல சமையல் நம்மள்ளாம். கை உண்டாக்குது. மூளை உண்டாக்க வைக்குது.

  கை செய்வது – தோற்றம்
  மூளை செய்வது – ஆதி

  அதான் ஈசன் திருவடிகளே ஆதியாவும் தோற்றமாகவும் இருக்கின்றன. இது மொத ரெண்டு வேலை.

  அது மட்டுமா? அந்தச் சாப்பாடும் அது கொடுக்கும் இன்பமும் ஈசனார் அடிகள்தானாம்.

  அதான் மூனாவது வேலை. “உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்”.

  புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அடுத்த ரெண்டு வேலையப் பாக்கலாம் இப்போ.

  சாப்டாச்சு. மிச்சமீதியெல்லாம் தூக்கிப் போட்டுக் கழுவிச் சுத்தமா வைக்கனும்ல. அந்த வேலையைக் கை செய்யும். செய்யச் சொல்வது மூளை.

  இந்த இடத்துல,
  கையின் செயல் – ஈறு
  மூளையின் செயல் – அந்தம்

  இந்த எடுத்துக்காட்டல்லாம் புரிஞ்சிக்கச் சொல்றது. புரிஞ்ச பிறகு எடுத்துக்காட்ட விட்டிருங்க. பாட்டப் பிடிச்சுக்கோங்க

  நமஹன்னு சொன்ன காலத்துல நமச்சிவாய வாழ்கன்னு சொன்னவரு மாணிக்கவாசகர்.

  ஈசன் அடி போற்றி
  எந்தை அடி போற்றி
  நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
  மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

  • கடவுள் மீதான புரிதல்களை தாண்டி, மாணிக்கவாசகரின் எழுத்துகளின் எளிமையிலும்,கோர்வையிலும் பெரும் ஈடுபாடு உண்டு எனக்கு. மிக எளிய பாடல் என்று நினைத்த இதற்குள் இத்தனை அர்த்தங்களா? நன்றி GIRA

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s