நான் இல்லை, நீ!

தேன் என்ற இன்சொல் தெரிந்து நின்னைப் பாடுகின்றேன்

நான் என்று உரைத்தல் நகை அன்றோ, வான் நின்ற

ஒண்பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன்சொல்லும்

வண்பொருளும் ஈதல் மறந்து

நூல்: திருவருட்பா

பாடியவர்: இராமலிங்க வள்ளலார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

இறைவா,

தேன் போன்ற இனிமையான தமிழ்ப் பாடல்களால் நான் உன்னைப் புகழ்ந்து பாடுகிறேனாம், இவர்களெல்லாம் சொல்கிறார்கள், அதைக் கேட்டால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது.

விண்ணில் நிலைத்துநிற்கும் பெரியவனாகிய நீதான்,என்மேல் அன்பு வைத்து இனிய சொற்களையும், அதற்குள் வளமையான கருத்துகளையும் அள்ளித் தருகிறாய். அதை மறந்து இந்தப் பாடல்களை என்னுடைய படைப்பு என்று நான் எப்படிச் சொல்லிக்கொள்ளமுடியும்?

துக்கடா

 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • தேனென்ற இன்சொல் தெரிந்துநின்னைப் பாடுகின்றேன்
 • நானென் றுரைத்தல் நகையன்றோ … வான்நின்ற
 • ஒண்பொருள்நீ உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
 • வண்பொருளும் ஈதல் மறந்து

182/365

Advertisements
This entry was posted in திருவருட்பா, பக்தி, வள்ளலார், வெண்பா. Bookmark the permalink.

5 Responses to நான் இல்லை, நீ!

 1. GiRa ஜிரா says:

  கொடுப்பதெல்லாம் அவன் என்றானபின் அவனைப் புகழும் சொல்லும் பொருளும் அவனிடமிருந்துதானே வரவேண்டும்.

  இதே கருத்தை கந்தர் அநுபூதியில் அருணகிரிப் பெருமானும் குறிப்பிடுகிறார்.

  யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
  தாமே பெற வேலவர் தந்ததினால்

  இவர் கற்ற கல்வியும், அதனால் பெருகிய அறிவும், அந்த அறிவினால் விளைந்த பயன்களாகிய பாடல்களும் வேலவர் குடுத்தாராம். அதுவும் தாமே பெற.

  குழந்தைக்கு அப்பாம்மா கண்ணு காது மூக்கு எல்லாம் சொல்லிக் குடுப்பாங்க. அவங்களே கண்ணு எது காது எதுன்னு கேட்டுக் கொழந்த சொல்லவும் ஆனந்தப்படுவாங்க.

  அது மாதிரிதான் முருகனும். மேற்சொன்ன பாடலுக்கு முன்பு நானெழுதிய விளக்கத்திற்குச் சுட்டி கீழே

  http://iniyathu.blogspot.com/2006/05/18.html

 2. திருவருட்பாவில் வள்ளலார் அருளிச் செய்த சன்மார்க்க நெறிப்பாடல்களில் ஒன்றைத் தந்தமைக்காக சங்கத் தலைவருக்கு ஜே…

  ராமலிங்க வள்ளலார் சமரச சன்மார்க்க நெறிகளைத் தெளிவாகப் பரப்பியவர்…

  ராமலிங்க அடிகளார் எல்லோரையும் போலே படிக்காமல் ஊர் சுற்றித் திரிந்தவர்தான்… அவருடைய அண்ணன்-அண்ணி இருவருடைய பராமரிப்பில்தான் அவர் வளர்ந்து வந்தார்..ஒரு நாள் உபாத்தியாயரிடம் இருந்து, அவர் திண்ணைப் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றித் திரியும் விஷயம் அவருடைய அண்ணனுக்குத் தெரிய வந்தது…. அவருடைய அண்ணன் அவரைக் கண்டித்தபிறகும், அவர் வழக்கம்போல் அதைத் தொடரவே, அவருடைய அண்ணன் தன் மனைவியிடம், இனிமேல் ராமலிங்கத்துக்கு உணவிட வேண்டாம் என கண்டிப்புடன் கூறிவிட்டார்..

  ஒரு நாள் விசேஷமான நாளை முன்னிட்டு அவருடைய அண்ணன் சில சாதுக்களைக் கூட்டி வந்து உணவு படைத்தார்.. விருந்து முடிந்தபின், அண்ணியார் ராமலிங்க அடிகளாரைக் கொல்லைப்புறமாக அழைத்து அவருக்கு உணவிட்டார்..அப்போது, அண்ணியார் கண்ணீருடன் உணவு படைப்பதைக் கண்டு, வள்ளலார் “ஏன் அழுகின்றீர்கள்?” எனக் கேட்டார். அண்ணியார், “நீங்கள் இப்படி வந்து உணவருந்துவதைக் கண்டால் மனம் தாங்கவில்லை..அண்ணன் படிக்கத்தானே சொல்கிறார்.நீங்கள் ஒழுங்காகப் பாடசாலைக்குச் சென்று படித்தால் நான் மிகவும் மகிழ்வேன்” என்று மனம் வருந்திச் சொன்னதைக் கேட்ட வள்ளலார் அண்ணியிடம், “அண்ணியாரே..தாங்கள் மனம் வருந்த வேண்டாம்..நாளையிலிருந்து நான் படிக்கிறேன்.. ஆனால், அதற்கு எனக்குத் தனி அறையும்,ஒரு கண்ணாடியும்,விளக்கும் எனக்குத் தேவை” எனக் கூறினார்.. அவையனைத்தும் கொடுக்கப்பட்டது… வள்ளலார் அந்த அறையில் கண்ணாடியை வைத்து, ஒரு தீபத்தை ஏற்றி அந்த தீபத்தின் பின்னாலிருந்து கண்ணாடியில் தீபத்தின் ஒளியைப் பார்த்தாவாறே இருந்தார்… இவ்வாறு இருக்கும் போது, ஒரு நாள் தீபத்தின் ஒளியோடு தெரிந்த தன் உருவம் மறைந்து, அந்த வெற்றிவேலன் தணிகைமலைத் தலைவனே அழலுருவாகத் தெரிந்தான்…. திருத்தணிகை முருகனைக் கண்ட அந்த நொடி முதல், ராமலிங்க அடிகளார் வள்ளலார் ஆனார்… ஞானத்தலைவனே பாடம் சொல்லிய பிறகு மற்ற பாடமும் தேவையா? அதிலிருந்து அனைத்தும் கைவந்தது வள்ளலாருக்கு…

  இன்றும் வடலூரில் தனிப்பெருங்கருணையின் ஊற்றாக விளங்கும் ஜோதி, என் தலைவன் தணிகைமலை வேலவனே…. வெற்றிவேலனின் அருள் அருளிய ஞானமே வள்ளலாரே திருவருட்பாவைப் பாடவைத்தது…

  தெளிவாகத்தான் பாடியிருக்கிறார்.. தேனினிய வார்த்தைகளையெல்லாம் வார்த்து அளிப்பவன் அகத்தியருக்கே தமிழைப் போதித்த ஞானக்குழந்தை முருகனே…

 3. இன்னொரு விஷயத்தினையும் இங்கு கூற விழைகிறேன்… பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வள்ளலாரின் மீது பெருமதிப்பு கொண்டவர்…

  வருடா வருடம் தைப்பூசத்தின் போது சன்மார்க்க நெறியினைப் பற்றி மடை திறந்த வெள்ளமாக சொற்பொழிவு பொழிவார்..

  அப்படி ஒரு சன்மார்க்க சொற்பொழிவு நடத்த அவர் வடலூர் சென்றிருந்த போது, ஓமந்தூரார் அவரைத் தனியாகச் சந்தித்து,”ஐயா..வள்ளலாரின் உறவினரிடத்தில் வள்ளலார் திருவருட்பாவில் இயற்றிய பத்துப்பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடி ஒன்று உள்ளது… அதை இதுவரை வெளியுலத்திற்கு அவர்கள் தரவில்லை.. அதனால் அந்தப் பாடல்கள் மக்களுக்குப் பயன்படாமல் போய்விடுமோ என்று ஐயமாக உள்ளது.. நீங்கள் அவர்களிடம் பேசி எப்படியாவது அதை வெளிக்கொணரச் செய்யுமாறு அவர்களிடம் கூற வேண்டும்” என்று கூறினார்..

  இதைக் கேட்ட தேவர் திருமகனார்,”அடியேன் பார்த்துக்கொள்கிறேன்..கவலைப்படவேண்டாம்” என சொல்லி அனுப்பினார்..

  சன்மார்க்க சொற்பொழிவு மேடை..தைப்பூசத்தில் வெள்ளமெனக் கூட்டம்… தேவர் சன்மார்க்க நெறியினைப் பற்றி அற்புதமாகச் சொற்பொழிவாற்றி முடித்தார்…முடிக்கும் சமயம் ஓமந்தூராரைப் பார்த்துவிட்டு மேடையில்,” வள்ளலாரின் பத்துபாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடியை அவருடைய உறவினர் ஒருவர் யாருக்கும் பயன்படாமல் தன்னுடனே வைத்திருப்பதாக அடியேன் அறிந்தேன்..அவர்களுக்கு அடியேன் ஒன்றைக் கூறுகின்றேன்…அந்த ஓலையை மற்றவருக்கும் பயன்படுமாறு வெளியோருக்குக் கொடுத்து உதவுங்கள்..இல்லையென்றால், அந்தப் பாடல்கள் வெளியுலத்திற்குத் தெரியாமலேயே போகும் என்று நினைக்க வேண்டாம்..வள்ளலாரின் சில பாடல்களை மறைத்துவைத்திருக்கிறோம் என்று நீங்கள் கருதும் அந்தப் பாடல்களை அடியேன் பாடுகிறேன்.கேளுங்கள்” என்று கூறி, கட கட வென பாட ஆரம்பித்து விட்டார் தேவர் பெருமகனார்..

  பாடி முடித்ததும்,கூட்டத்திலிருந்து ஒருவர் மேடைமீது ஏறி,”ஐயா..நான் தான் நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பாவி..என்னை மன்னியுங்கள்..உங்களை வள்ளலாராகவே எனக்குத் தோன்றுகிறது.” என்று வணங்கி தேவரின் கையில் அந்த ஓலைச்சுவடிகளை ஒப்படைத்தார்..

  தேவர்,”எல்லாம் ஈசன் செயல்” என்று கூறி முடிப்பதற்குள்ளாகவே, ஓமந்தூரார் தேவரைக் கட்டிப்பிடித்து, “வள்ளலாரே உங்கள் உருவில் வந்துள்ளார்” என்று வணங்கிப் பாராட்டினார்..

  • amas32 says:

   படிக்கப் படிக்க உடல் புல்லரிக்கிறது. அரிய தகவல் தந்தமைக்கு நன்றி!
   amas32

 4. amas32 says:

  தெய்வத் திருமகன்கள் அனைவருமே இறைவன் பால் அன்பருக பாடிய பாக்களுக்கு என்றுமே உரிமை கொண்டாடியதில்லை. எல்லா திறனையும் இறைவனுக்கே அர்ப்பணித்தனர்.
  வள்ளலார் அன்பே உருவானவர். எப்பொழுதுமே வள்ளலார் கதையைப் படிக்கும் பொழுது அவர் அண்ணியை நினைத்து மகிழ்வேன். எப்படி ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து இராமலிங்க அடிகளாரை கவனித்துக் கொண்டார் பாருங்கள். அந்தத் தாயன்புக்கு நான் தலை வணங்குகிறேன்.
  இந்தப் பாடலை இன்று பதிவில் ஏற்றி என்னை வள்ளலாரை நினைத்து உருக வைத்தமைக்கு நன்றி சொக்கரே. பாலாவுக்கும் ராகவனுக்கும் நன்றி 🙂
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s