மெல்ல நடந்தாள்

மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத, வான் கருப்பு

வில்லி கணை தெரிந்து மெய் காப்ப, முல்லை மலர்

மென் மாலைத் தோள் அசைய மெல்ல நடந்ததே

புன் மாலை அந்திப் பொழுது

நூல்: நளவெண்பா

பாடியவர்: புகழேந்தி

சூழல்: நளன்மீது காதல்வயப்படுகிறாள் தமயந்தி, அப்போது நிகழும் ஒரு மாலை நேரக் காட்சி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

கொத்தாகப் பூத்திருக்கும் மல்லிகைகளைப் பார்த்த வண்டுகள் அவற்றை வெள்ளை நிறச் சங்குகளாக நினைத்து ஊதுகின்றன (உறிஞ்சித் தேன் குடிக்கின்றன).

கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன், மனிதர்களைக் காதல்வயப்படுத்துவதற்காகச் சிறந்த அம்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருகிறான்.

இந்த அந்திப் பொழுது ஓர் அழகிய பெண்ணைப்போலத் தோன்றுகிறது, முல்லை மலர்களால் ஆன மெல்லிய மாலை ஒன்றை அணிந்தபடி தோள் அசைய மெல்ல நடந்துசெல்கிறது.

துக்கடா

 • அழகான இந்த வர்ணனைப் பாடலைப் பற்றிய சுவாரஸ்யமான பின்கதை ஒன்று உண்டு. சரித்திர ஆதாரமெல்லாம் கிடையாது, ஆனால் ஜாலியாகப் படிக்கலாம்:
 • புகழேந்திப் புலவர் நளவெண்பாவை அரங்கேற்றியபோது, அந்தச் சபையில் ஒட்டக்கூத்தரும் இருந்தாராம். இந்தப் பாடலை அவர் பாடியவுடன் சட்டென்று எழுந்து நின்று ‘உங்கள் பாட்டில் பிழை உள்ளது’ என்றாராம்.
 • ’என்ன பிழை?’ அமைதியாகக் கேட்டார் புகழேந்தி.
 • ‘வெள்ளை நிறச் சங்குக்கு மல்லிகைப் பூ உவமை, சரி. ஆனால், குறுகலாக இருக்கும் பின்பக்கமாகதான் அந்தச் சங்கை ஊதமுடியும், அகலமாக விரிந்திருக்கும் முன்பக்கமாக ஊதமுடியாது, இல்லையா?’
 • ‘ஆமாம், அதற்கு என்ன?’
 • ’அப்படியானால், உங்களுடைய உவமைப்படி வண்டு அந்த மல்லிகைப்பூவின் பின்பக்கத்தில், அதாவது காம்புப் பகுதியில்தானே சென்று ஊதவேண்டும்? ஆனால் நிஜத்தில் அது முன்பக்கத்தில், அதாவது மலரின் இதழ்கள் உள்ள பகுதியில்தானே ஊதுகிறது? உங்கள் உவமை தப்புதானே?’
 • ஒட்டக்கூத்தர் நக்கீரரைப்போல் லாஜிக் பேசி மடக்கிவிட்டார். ஆனால் அதைக் கேட்டுப் பயந்து நடுங்குவதற்கு புகழேந்தி என்ன தருமியா? அசராமல் ஒரு பதிலைப் போட்டார், ‘யோவ், அது தேன் குடித்த வண்டு, போதை மயக்கத்தில் மாற்றி ஊதுகிறது, அவ்ளோதான்’ 😉
 • இதுக்குதான் கமலாழ்வார் சொன்னார் ‘அனுபவிக்கணும், ஆராயக்கூடாது!’ 😉
 • கமலைப்பற்றிச் சொன்னபின் ரஜினியைச் சொல்லாமல் இருக்கமுடியுமா? ரஜினிகாந்தின் 100வது படமான ‘ஸ்ரீராகவேந்திரா’வில் ‘ஆடல் கலையே தேவன் தந்தது’ என்ற அட்டகாசமான பாடல் உண்டு. அதில் இந்த வெண்பாவின் முதல் வரியைப் பயன்படுத்தியிருப்பார் வாலி. இப்படி: ‘மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும் மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்.’ (அதாவது, மல்லிகையில் வண்டுகள் ஊதினால் ஒரு மெலிதான சத்தம் வருமல்லவா, அப்படி மென்மையாகச் சிரிக்கிறாளாம் இவள் :>)
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
 • வில்லி கணைதெரிந்து மெய்காப்ப, முல்லைமலர்
 • மென்மாலைத் தோளசைய மெல்ல நடந்ததே,
 • புன்மாலை அந்திப் பொழுது

177/365

Advertisements
This entry was posted in இயற்கை, கதை கேளு கதை கேளு, சினிமா, நளவெண்பா, மாலை, வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

6 Responses to மெல்ல நடந்தாள்

 1. GiRa ஜிரா says:

  ஒட்டக்கூத்தர் வில்லத்தனங்கள் கற்பனையே. 🙂 அம்பிகை வழிபாட்டில் சிறந்த அவருக்கு இதெல்லாம் தேவையா?! 🙂

  புகழேந்தியின் புகழ் ஏந்தி நளவெண்பாவில் ஒவ்வொரு வெண்பாவும் பெருமை பெறுகிறது. வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி என்பது அவருக்குக் கிடைத்த புகழ்மொழி.

  “கவிதைகளாலே தசரதன் மகனை
  அழகாக்கினான் ஒரு கவிஞன்” என்று முதலில் கம்பனைப் புகழ்ந்த கவியரசர் கண்ணதாசன், அடுத்த அடியில்
  “உவமைகளாலே தமயந்தி அழகை உருவாக்கினான் ஒரு புலவன்” என்று புகழேந்தியைப் புகழ்கிறார்.

  அதுவும் திரைப்படத்துக் காதல் பாடலில். பாமா ருக்மணி படத்தில் இடம் பெற்ற “நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்” என்ற பாடலில் மேற்கூறிய வரிகள் உள்ளன.

  புலவர்களிலே புகழேந்தியை எனக்கும் பிடிக்கும். பாண்டி நாட்டுப் புலவன். பாண்டிய இளவரசி சோழனை மணந்த போது மதுரைத் தமிழுக்காகவே புகழேந்தியையும் அழைத்துச் சென்றதாகவும் கூறுவார்கள்.

 2. amas32 says:

  “இதுக்குதான் கமலாழ்வார் சொன்னார் ‘அனுபவிக்கணும், ஆராயக்கூடாது!’” நல்லா சொல்லியிருக்கீங்க 🙂
  மாலை நேரத்தை, அழகிய மாலை அணிந்த நேரமாகப் புகழேந்தி புலவர் நயம்பட கவி இயற்றியுள்ளார்.
  காதல் வயப்படுவதற்கும் நல்ல சூழல் தேவைப்படுகிறது 🙂
  திரு சொக்கன் அவர்களே, நீங்கள் சொல்லும் பாடலுக்குப் பின்/முன் கதைகள் வெகு சுவாரஸ்யம்.
  amas32

 3. ஸோமநாதன் says:

  புதிய மன்னர்கள் படத்தில் ரஹ்மான் இசையில் நீ கட்டும் சேலை ” என்ற பாடலில் வரும் வரிகள்

  வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
  மனசு ஆசையினலே ஊஞ்சல் ஆடுது மாமா
  நினைவுக்கு வந்தன

 4. வினோதரஸமஞ்சரி என்ற ஒரு புத்தகத்தில் இந்த பாடலைப் பற்றி படித்திருக்கிறேன். அதில் ஒரு சொலவடை வரும்- ’சங்கு சூத்தும் ஆண்டி வாயும்’ என்பது உமக்குத் தெரியாதா? என்று புகழேந்தியிடம் கேட்பது போல் வரும். வார்த்தைகளை எப்படி சுருக்கமாக, அதே சமயத்தில் தெளிவாக எழுதுவது என்பதற்காக இதைச் சொன்னேன். இடக்கரடக்கல் மற்றவை வேறு விஷயம்.

 5. Pingback: இயற்கை என்னும் இளைய கன்னி | நாலு வரி நோட்டு

 6. Pingback: Artistic rivalry and artful exaggeration | Kaaviya Varigal (Literary Verses)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s