அவளோடு வாழ்க!

வெண் தலைக் குருகின் மென் பறை விளிக்குரல்

நீள் வயல் நண்ணி இமிழும் ஊர!

எம் இவண் நல்குதல் அரிது,

நும் மனை மடந்தையொடு தலைப் பெய்தீமே!

நூல்: ஐங்குறுநூறு (#86)

பாடியவர்: ஓரம்போகியார்

சூழல்: மருதத் திணை. சொந்த மனைவியை மறந்து இன்னொருத்தியுடன் வாழ்கிறான் ஒருவன். இந்தச் சூழ்நிலையில் ஒருநாள் அவன் தன்னுடைய மகனை எதேச்சையாக எங்கேயோ பார்த்துக் கொஞ்சுகிறான். இந்த விஷயம் எப்படியோ அவனுடைய ஆசை நாயகி(பரத்தை)க்குத் தெரிந்துவிடுகிறது. வீடு திரும்பியவனைப் போட்டு வறுத்தெடுக்கிறாள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

வெண்மையான தலையை உடைய குருகு(ஒரு வகைக் கொக்கு)க் குஞ்சுகள் தம் கூட்டில் இருந்தபடி மெல்ல மேலே எழுந்து பறக்க முயற்சி செய்யும். அப்போது அவை எழுப்புகிற சத்தம் வயல் வெளிகளிலெல்லாம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஊரின் தலைவனே,

இப்போது உனக்கு உன் மகன் முக்கியமாகிவிட்டான். இனிமேல் நீ என்னோடு தங்கமாட்டாய்.

போ, அப்படியே போய் உன்னுடைய மனைவியுடன் சேர்ந்து சந்தோஷமாக இரு!

துக்கடா

 • சங்க இலக்கியத்தில் தலைவன், தலைவி, தோழி, தாய், செவிலித் தாய் போன்றவர்களுக்கு இணையாக, இந்தப் ‘பரத்தை’யும் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரம். பல காதல் கதைகள் இவளை வைத்துதான் சுழல்கின்றன. பரத்தையின் கோபமும் ஆதங்கமும் ஏக்கமும் ஆற்றாமையும் ஆவேசமும் காதலும் காமமும் பல பாடல்களில் அருமையாகப் பதிவாகியிருக்கிறது. அதில் ஒரு துளிதான், இன்றைய பாடல், ‘போ, அவளோடயே போய்ச் சேர்ந்துக்கோ, இங்கே வராதே’!
 • இப்படிப் பரத்தை சொன்னால் அடுத்துக் காதலன் என்ன செய்வான்? அது உங்கள் கற்பனைக்கு :>

176/365

Advertisements
This entry was posted in ஊடல், ஐங்குறுநூறு, பரத்தை, பெண்மொழி, மருதம். Bookmark the permalink.

7 Responses to அவளோடு வாழ்க!

 1. வேகமாகச் சில கருத்துக்கள் (Dec 28):

  1. சங்க காலத்தில் பரத்தையர் நிலை பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதி வருகிறேன் = “சங்கத் தமிழில் பரத்தையின் கற்பு”
  இராம. கி. ஐயா மேற்பார்வை இடுவார்கள்! முன்பு எழுதிய “சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்” என்ற கட்டுரை போலவே, இதுவும் தரவுகளோடு அமையும்!
  http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html

  2. பரத்தை = நல்லவளா? கெட்டவளா?
  குடும்பத்தைப் பிரிப்பவளா? (அ) விதியால் ஒடுங்கி வாழ்பவளா?

  3. ஓரம் போகியார் பெரும்பாலும், இந்த உறவின் ஆழத்தையே பாடுவார்!
  ஓரம் போதல் = அந்த வீட்டுக்குப் போதல்; அக்காலக் குறிப்பு மொழி! அதனால் தான் அதைப் பாடிய இவர் பேரும் “ஓரம் போகியார்” என்று ஆனது!

  4. ஐங்குறு நூறு பாடல்கள் பல, குறுந்தொகையை விடக் குறுகியவை!

  5. குறிஞ்சி/முல்லையில் இல்லாத பரத்தையர், மருதத் திணையில் மட்டும் காணப்படுவது ஏன்?

 2. * பரத்தை என்ற வழக்கம், இரு பாலுக்கும் பொருந்தும்! = ஆண் பரத்தை/ பெண் பரத்தை
  * சங்கத் தமிழில், இது ஒரு அமைப்பு முறை அல்ல! இறைவன்/கலையின் பேரால், சிலர் கொட்டமடிக்க உருவான முறையான தேவதாசி முறை கிடையாது!

  * இது அவரவர் தனிப்பட்ட தேர்வு முறை! பரம்பரை வழக்கமும் இல்லை!
  * இற் பரத்தை/ நயப்புப் பரத்தை என இரு வகை உண்டு! இரண்டாம் வகைக்குச் சான்றோர் ஆதரவு இல்லை!

  * பரத்தையர் தொழில், காலம் தோறும் புது உருவங்களுக்கு மாறினாலும், காலங் காலமாக பல நாடுகளில் இருந்து வந்துள்ளது!
  வேளாண்/நெசவுத் தொழில் எவ்வளவு பழமையோ…அவ்வளவு பழமை பரத்தையர்!

  * தலைவன்-தலைவியே காமமும் காதலுமாய்க் களிக்கும் போது, ஏன் பரத்தையரை நாட வேண்டும்?
  * பரத்தை தானே உருவாகிறாளா? (அ) உருவாக்கப் படுகிறாளா? அவள் வாழ்வின் கதி என்ன?

  * சங்கத் தமிழ், இது போன்ற பரத்தைக் காதல்/ இன்பத்தை ஏற்கிறதா?? வள்ளுவத்தின் நிலை என்ன?

  – இன்னும் பல கேள்விகள்:))) முருகா!

 3. சொக்கர் தந்த இந்தப் பாட்டின் நுட்பம் மட்டும் பாருங்களேன்….

  ஒரு பரத்தையின் வாழ்வு முடிவுக்கு வரப் போவுது! அதை அவ அறிஞ்சே வச்சிருக்கா!
  மகனைப் பார்த்த பின், தலைவனின் நிலை மாறும்-ன்னு அவளுக்கும் தெரியும்! அதை எப்படிக் குறிப்பால் காட்டுகிறாள் பாருங்க!

  குருகுப் பறவையின் குஞ்சு, எம்பத் தொடங்கி விட்டதால், அதுக்கு இரை தேடி எடுத்து வரணுமே! இல்லீன்னா பசியால் ஒரே சத்தம் போடுமே!
  அந்தச் சத்தம் ஊருக்கே கேட்குதாம்! = விளிக்குரல், நீள் வயல் நண்ணி இமிழும் ஊர!
  அதே போல், ஊருக்கே தன் குழந்தை அழுவது தெரிஞ்சா? இதான் பாட்டின் குறிப்பு!

  தலைவன் தன் கடமையையும் எண்ணத் துவங்கி விட்டான்! முன்பு போல் காமம் ஒன்றே இலட்சியமாக இல்லை!:))
  அதே சமயம், இவளையும் அம்போ-ன்னு கைவிட்டுவிட முடியாது! என்ன செய்வான்?
  —————–

  அவ கோவப்பட்டு ஒன்னும் ஆவப் போறதில்லை! இருந்தாலும் ஒரு வித பொய்க் கோபத்துடன் பேசுகிறாள்!
  அவனே பேச்சை ஆரம்பிக்கும் முன், இவளே ஆரம்பித்து விடுகிறாள்! என்னவொரு நல்ல பரத்தை!:)

  எம் இவண் நல்குதல் அரிது = நாம, கடிதத்தில், இவண்-ரவி ன்னு எழுதுவோம்ல்ல? அந்த இவண் = இங்கு!
  நும் மனை மடந்தையொடு தலைப் பெய்தீமே! = மனை மடந்தை! அது என்ன “தலைப் பெய்தீமே”? = இனி “தலையாய கவனம்” அங்கு இருக்கட்டும்!
  இங்கு “கொஞ்சம் கவனம்” இருந்தால் போதும்! நான் உன் நினைப்பிலேயே வாழ்ந்து கரைந்து விடுவேன்!

  • amas32 says:

   மடை திறந்த வெள்ளம் போல் எழுதுகிறீர்கள். தகவல் களஞ்சியம்! Were you declared a prodigy when you were a kid?
   amas32

 4. amas32 says:

  “இப்படிப் பரத்தை சொன்னால் அடுத்துக் காதலன் என்ன செய்வான்? அது உங்கள் கற்பனைக்கு :>” ஒன்று, பரத்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவளுடனே தொடர்ந்து இருப்பான். அல்லது, இது தான் சாக்கு என்று தன மனைவி மக்களோடு போய் வாழத் துவங்குவான். இவை இரண்டும் இல்லாமல் இருவரையும் கைவிட முடியாமல் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவருடன் தொடர்பை நீட்டித்துக் கொண்டும் போகலாம், பிடிபடும் வரை! அரசியல் தலைவர் முதல் நடிகர், கிரிகெட் வீரர் வரை இந்த நிலையில் இருக்கும் எல்லாரும் படும் துன்பத்தை தான் நாம் வார இதழ்களில் வரும் கிசு கிசுவில் படிக்கிறோமே. உண்மையில் பார்த்தால் எல்லார் பக்கமும் சில நியாயங்கள் இருக்கும். அனைவரும் பாவமே. இங்கே மனைவியிடம் இருக்கும் முக்கியமான துருப்புச் சீட்டு குழந்தை! அது பரத்தையிடமும் இருந்தால் சரியான போட்டி தான்.
  amas32

 5. பிரமாதமான பாடல். சிறப்பான விளக்கம். நன்றி.
  இவ்வளவையும் எப்பொ படிக்கிறது? ஒரு வருஷம் குதிச்சு ப்ராக்டீஸ் பண்ணாலும் முடியாது போலயிருக்கே.

 6. hema says:

  விளக்கத்துடன் பாடலைக் கொடுக்கும் உங்களுக்கு நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s