மாலை தா!

ஆழி இழைப்பப் பகல் போம், இரவு வரின்,

தோழி துணையாத் துயர் தீரும்; வாழி

நறு மாலை தாராய், திரையவோ என்னும்

சிறு மாலை சென்று அடையும் போழ்து

நூல்: யாப்பருங்கலக் காரிகை

பாடியவர்: அமுதசாகரர்

சூழல்: காதல் கொண்ட ஒருத்தி. துணையைப் பிரிந்து அவள் படுகிற வேதனையைக் கண்ட செவிலித் தாய்க்கு ஆதங்கம். அந்தக் காதலனை நேரில் சந்தித்துப் பேசுகிறாள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

உன் காதலி, பகல்முழுவதும் ‘ஆழி இழைத்து’க்கொண்டிருக்கிறாள், அதனால் எப்படியோ நேரம் ஓடிவிடுகிறது.

ராத்திரியானால், அவள் தன் தோழியுடன் படுத்துக்கொண்டு உன்னைப்பற்றிக் கதை பேசுகிறாள். உங்களுடைய காதல் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறாள், அந்தப் பரவசப் பேச்சில் ராத்திரிப் பொழுதையும் சமாளித்துவிடுகிறாள்.

ஆனால் நடுவில் வருகிற இந்த மாலை நேரம்? அதுதான் அவளுக்குத் தாங்கமுடியாத வேதனையைத் தருகிறது, உன் ஞாபகமும் ஏக்கமும் அவளை வாட்டுகிறது.

நல்ல வாசனை கொண்ட மாலையை அணிகிறவனே, சீக்கிரமாக அந்த மாலையை அவள் கழுத்தில் போட்டு உன் மனைவியாக்கிக்கொள்ளமாட்டாயா?

துக்கடா

 • ’ஆழி இழைத்தல்’ என்பது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. காதலனோ காதலியோ தன்னுடைய துணையை நினைத்தபடி கண்ணை மூடிக்கொண்டு மணலில் வரிசையாக வட்டங்கள் வரைவார்கள் (Springபோல ஒருவட்டத்தின் முடிவில் இன்னொன்று தொடங்கும், அப்படியே வட்டமாகச் சுற்றி வரும், கிட்டத்தட்ட ஜிலேபிமாதிரி என்று சொல்லலாமா?)
 • இப்படி அவர்கள் பல வட்டங்களை வரைந்துகொண்டே வரும்போது, கடைசி வட்டம் முதல் வட்டத்துடன் பொருந்திவிட்டால், அவர்களுடைய காதல் நிறைவேறும் என்று அர்த்தம், இல்லாவிட்டால்? நோ ப்ராப்ளம், மணலைக் கலைத்துவிட்டு மறுபடி வட்டம் போடவேண்டியதுதான் 😉
 • வழக்கமாக இதுபோன்ற பாடல்களில் ‘தோழி’தான் காதலிக்காகத் தூது போவாள், இந்தப் பாடலில் தோழியின் தாய், அதாவது காதலியின் செவிலித் தாய் தான் வளர்த்த மகளுக்காகப் பேசுகிறார்!
 • பாட்டுக்கு நடுவே ‘திரைய’ என்று ஒரு வார்த்தை வருகிறதே, அதன் அர்த்தம் என்ன?
 • தமிழில் திரை என்றால் அலை, திரையன் என்றால் அலைகளுக்குச் சொந்தமானவன், கடற்கரை நாட்டுத் தலைவன்!
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • ஆழி இழைப்பப் பகல்போம், இரவுவரின்
 • தோழி துணையாத் துயர்தீரும்; வாழி
 • நறுமாலை தாராய் திரையவோ என்னும்
 • சிறுமாலை சென்றடையும் போழ்து

173/365

Advertisements
This entry was posted in அகம், காதல், பிரிவு, பெண்மொழி, யாப்பருங்கலக் காரிகை, வெண்பா. Bookmark the permalink.

7 Responses to மாலை தா!

 1. Adhityan says:

  Can you please let us know where we can find the description of this game in detail. Very interesting comments. Keep it up

 2. PVR says:

  ஆழி இழைத்தல், இவ்ளோ நல்ல விளைட்டா…. ஆஹா… தெரியாம போச்சே.

 3. sankaranarayanan says:

  Aandal also plays this in Nachiyar Thirumozhi in 10 songs.
  The first one is தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,
  வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,
  பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,
  கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1
  Koodal is another name of Aazhi izhaithal. ( Appologise me for writing in English )

 4. amas32 says:

  கண்ணை மூடிக்கொண்டு வெறும் வட்டம் போடுவோம். ஆரம்பித்த இடத்தில் முடித்தோம் என்றால் எண்ணிய எண்ணம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு. நானே விளயாடியிருக்கேன். ஆனால் ஜிலேபி எல்லாம் மணலில் சுத்தியதில்லை 🙂
  சாயந்திரப் பொழுதில் துணை இல்லாமல் தவிக்கும் போது வரும் melancholy moodஐ இந்தப் பாடலை படிக்கும் பொழுது நன்கு உணர முடிகிறது. தாயே தூது போகிறாள். பெண் அவ்வளவு துன்பப் படுகிறாள் போலும்!
  amas32

 5. யாப்பருங்கலக்காரிகை ஒரு இலக்கண நூல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!

 6. இந்த விளையாட்டு பற்றிச் சுருக்கமாச் சொல்லுறேன்….இப்போ வெளியே கிறிஸ்துமஸ் மரம் பாக்கப் போயிங்…வந்து விரிவா:))

  இந்த ஆழி இழைக்கும் விளையாட்டுக்கு “கூடல்” ன்னு பேரு! Very Romantic!:) Andal playing this game!
  கண்ணை மூடிக்கிட்டு தான் வட்டம் போடணும், துவங்கிய இடத்திலேயே வட்டம் வந்து கூடணும்! கூடினாக் கூடுவான்!:))

  1st time கூடலயா? Draw 3 times, 5 times….odd numberல வந்தாக் கூடுவான்!:)
  தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
  வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்
  பள்ளி கொள்ளும் இடத்திடைக் கொட்டிட
  கொள்ளுமாயின் நீ “கூடிடு கூடலே”

 7. Pingback: அவன் வருவானா? | தினம் ஒரு ’பா’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s