முத்து இட்டல்

நகை செய் தன்மையின் நம்பு இழீஇத் தாய், துகள்

பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற,

முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும்,

குகை செய் இன்பு எழக் கோலம் இட்டு ஒத்ததே

நூல்: தேம்பாவணி

பாடியவர்: வீரமாமுனிவர்

சூழல்: இயேசு பிறந்ததும் அன்னை மரியாள் அவரை அள்ளி எடுத்து முத்தமிடும் காட்சி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

குழந்தை அழகாகப் புன்னகை செய்தது. உடனே அன்னை மரியாளுக்கு ஆசை பொங்கியது. பாவத்துக்குப் பகையாகிய அவளது நல்ல நெஞ்சத்தில் அன்பு பெருகியது.

அரும்பைப்போன்ற மேனி கொண்ட குழந்தை இயேசுவை மரியாள் அள்ளி அணைத்து முத்தமிட்டாள். அப்போது அவர்கள் தங்கியிருந்த அந்தக் குகை மொத்தமும் இன்பம் பொங்கிக் கோலம் இட்டதுபோல் அலங்காரமாகத் தோன்றியது.

துக்கடா

 • அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அழகான இன்றைய பாடலைத் தேர்வு செய்து தந்தவர் நண்பர் @kryes அவருக்கு நன்றிகள்
 • தேம்பாவணி = தேம்பா அணி (வாடாத மாலை) அல்லது தேன் பா அணி (தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு)
 • வீரமாமுனிவர் எழுதிய இந்தக் காவியம் முழுமையையும் விளக்க உரையுடன் இங்கே படிக்கலாம் : http://www.tamilvu.org/library/l4310/html/l4310fir.htm

172/365

Advertisements
This entry was posted in இயேசு, நண்பர் விருப்பம், பக்தி, பண்டிகை, பிள்ளைத்தமிழ், வீரமாமுனிவர். Bookmark the permalink.

6 Responses to முத்து இட்டல்

 1. “குகை செய், இன்பு எழ, கோலம் இட்டு, ஒத்ததே” – இது மனப்பாடப் பா!:)) அப்படியே மனசுக்குள்ள பதிஞ்சி போச்சி!:)
  #365paa வாசகர்கள் அனைவருக்கும், இயேசு நாதப் பெருமான் திருவவதார தினத்திலே, இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! 🙂
  ————

  முயலும் படிவாழ் திருச்செந்தூர்
  முருகா முத்தம் தருகவே
  -ன்னு அடிக்கடி மனசுக்குள்ள சொல்லிப்பேன்…:)
  இங்கு அன்னை மரியாள், அழகுக் குழந்தையை….முத்தமிடும் காட்சி! அதே போல் கொள்ளை அழகு! = முத்தைத் தரு:)

  முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும் = குழந்தை இயேசுவுக்கு முகை செய் மேனியாம்! அவரு உடம்பு, முகையால் செய்யப்பட்டிருக்காம்! அம்புட்டு மென்மையா?
  அது என்ன முகை???

 2. பூ என்பது பொதுவான பெயர்
  * அரும்பும் போது = அரும்பு
  -அது அரும்பி பனியில் நனையும் போது = நனை
  -அது நனைந்து முத்தாகும் போது = முகை!
  – அது வெடிக்கத் தயாரா இருக்கும் போது = மொக்குள்!

  * அரும்பி, விரிந்து கொண்டே இருக்கும் போது = போது
  * மணம் வீசத் தொடங்கும் போது = முகிழ்
  * மலர்ந்த பின் = மலர்
  * கூட்டமாய் மலர்ந்தால் = பொதும்பர்

  * வீழும் போது = வீ
  * உதிர்ந்து கிடக்கும் பூக்கள் = பொம்மல்
  * பழுப்பாய் வாடிய பின் = செம்மலர் (செம்மல்)
  ————————–

  இதுல முகை = ஈரத்தில் நனைந்து முத்தாகும் நிலை!
  அன்னை மரியாள் எச்சில் முத்தத்தால் நனைந்து, முத்து போல் சிரிக்கும் இயேசுக் குழந்தையை = முகை செய் மேனி-ன்னு சொல்லுறது எம்புட்டு பொருத்தம்! ஆகா!

 3. நம்ம மனசுக்குப் பிடித்தமானவங்களைக் கொஞ்சும் போது…
  தாய்தந்தை – குழந்தை
  காதலன் – காதலி…
  அந்த இடமே பிரகாசமாய், இன்ப மயமாய் இருப்பது போலத் தோனும்!

  * காதலில் முதல் முத்தம் குடுத்த இடத்தைப் பார்க்கும் போதெல்லாம்…
  * அவனோ/அவளோ அப்போ அருகில் இல்லீன்னாக் கூட…
  * பழைய நினைவுகளால்…அந்த இடத்தைப் பாக்கும் போதெல்லாம்…மனசு குழைஞ்சி இன்பமாகும் தெரியுமா?:))
  Oppice வேலையா Amsterdam/Paris போகும் போது, எனக்கும் இப்படித் தோனும்:))
  —————

  பாருங்க, குழந்தை இயேசுவுக்கு குடுத்த முத்தத்தால்…அந்த இருட்டுக் குகையே இன்ப மயம் ஆயிருச்சாம்!
  முகை செய் மேனி தழுவி, முத்து இட்டலும்,
  குகை செய் இன்பு எழ, கோலம் இட்டு ஒத்ததே!

  ஆகா! என்னவொரு பாட்டு!

 4. அம்மா முத்தமிட்டதைச் சொல்லிட்டு…அப்பா கொஞ்சியதைச் சொல்லலீன்னா எப்படி?:)
  என் இன்னொரு நேயர் விருப்பம் – ஆனா ரெண்டு பா, ஒரே சமயத்தில், சொக்கனின் சபையேறாது என்பதால்…பின்னூட்டச் சபையில் ஏற்றுகிறேன் :))
  ———-

  சூசை-குழந்தை இயேசு கனிவு:

  இந்து நேர் நுதல், மீன்கள் நேர் விழி,
  இண்டை நேர் முக நீர்மையால்,
  கந்தம் நேர் நளிர், தாது நேர் உடல்,
  காட்டு நாதனை, அம்புயச்
  சந்தம் நேரிய கன்னி நேர் கையில்,
  தாமம் நேரிய முத்து என,
  சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில்
  தேற நோக்கினன் சூசையே

 5. amas32 says:

  தெய்வக் குழந்தை ஆதலால் பிறந்ததுமே புன்னகைத்திருக்கிறது. ஒரு தாய்க்கு குழந்தையின் சிரிப்பை விட வேறு என்ன பரிசு வேண்டும்! அவளின் குழந்தையை அள்ளி முத்தமிடும் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை. குழந்தை ஏசுவின சிரிப்பும், மரியம்மையின் அன்பும் சேர்ந்து அந்த எளிமையான குகை அழகான, அலங்காரமான இடமாக மாறியதில் வியப்பில்லை!
  amas32

 6. Naanjilpeter says:

  தேம்பாவணிக்கு முழுமையாக உரை எழுதிய பேராசிரியர் வி. மரிய அந்தோணி எனது பெரியப்பா. அவரின் வாழ்நாளில் இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தினல்லை. இப்போது அவரை நினைத்து பெருமைப் படுகிறோம். வீரமாமுனிவரின் எழுத்தாற்றலைக் கண்டு வியக்கிறோம். நாஞ்சில் நாடு எங்கள் நாடு. அருளோதயம் என்ற காப்பியநூலில் ஒட்டு மொத்த பைபிளையும் ஒரு தமிழ் காவியமாக எழுதியுள்ளார்கள். அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு பின் 2006 ல் வெளிவந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s