சிரஞ்சீவி

ஒன்றும் அசைவில்லாமல்

….உடம்பையும் மறந்தோம்,

கொன்ற உயிர்களை நீ

….கொடுக்கவே, சிறந்தோம்,

அன்று தசரதன் பெற்று

….ஆர் உயிர் இறந்தோம்,

இன்று உனது வயிற்றில்

….இருவரும் பிறந்தோம்

*

விழிபோலும் என் தம்பி

….மெய் உயிர் போயே,

முழுகாதபடி காத்தாய்

….முழுதும் காப்பாயே,

பழிகாரன் முன் இந்தப்

….பயம் தீர்த்தாயே,

அழியாத சிரஞ்சீவி

….யாய் இருப்பாயே!

நூல்: இராம நாடகக் கீர்த்தனைகள்

பாடியவர்: சீர்காழி அருணாசலக் கவிராயர்

சூழல்: இலங்கையில் ராவணனுடன் போரிடுகிறது ராமனின் படை. இந்தச் சண்டையில் லட்சுமணனும் பலரும் அடிபட்டு மூர்ச்சையடைகிறார்கள். தம்பியை இழந்துவிட்டோமோ என்று கலங்குகிறார் ராமர். அப்போது அனுமன் தொலைதூரம் பறந்து சென்று சஞ்சீவி மலையைக் கொண்டுவருகிறான். அதில் உள்ள மூலிகைகளினால் லட்சுமணனும் மற்றவர்களும் உயிர் பிழைத்து எழுகிறார்கள். பரவசம் கொண்ட ராமர் அனுமனுக்கு நன்றி சொல்கிறார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நாங்கள் பிரம்மாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டோம். அசைவின்றி மயங்கி விழுந்துவிட்டோம்.

இப்படிப் போரில் இறந்த எங்கள் உயிர்களை நீதான் மீட்டுக் கொடுத்தாய். அதனால் நாங்கள் இப்போது சிறப்பாக எழுந்து நிற்கிறோம்.

நானும் லட்சுமணனும் அன்றைக்குத் தசரதன் மகன்களாகப் பிறந்தோம். அந்த ஆருயிரை இந்தப் போரில் இழந்தோம், இன்றைக்கு நாங்கள் இருவரும் உன் வயிற்றில் மறுபடி பிறந்தோம்.

*

என்னுடைய கண்ணைப்போன்ற தம்பியின் உயிர் போய்விடாதபடி காப்பாற்றினாய், இனிமேல் எங்களுக்கு எந்தக் குறையும் வராதபடி காத்து நில்.

ராவணன் என்ற பழிகாரனுக்கு முன்னால் நாங்கள் பயந்து நடுங்காதபடி செய்த மாருதி, நீ என்றைக்கும் அழியாத சிரஞ்சீவியாக வாழ்க!

துக்கடா

 • இன்று அனுமத் ஜெயந்தி. அதற்காக இந்தச் சிறப்புப் பா
 • அனுமன் பரம பக்தன், தன்னைப் பற்றி யாராவது புகழ்ந்து பேசினாலும்கூட ‘அது கெடக்குது, என் ராமனைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்’ என்று பேச்சை மாற்றிவிடுவான், அதனால்தான், ராமனே அனுமனின் புகழைப் பாடுவதுபோன்ற இந்தப் பாடலை விரும்பித் தேர்ந்தெடுத்தேன்
 • ‘சீதைக்கு ராமன் சித்தப்பன்’ என்று நம் ஊரில் ஒரு கிண்டல் மொழி உண்டு, இந்தப் பாட்டு ‘ராமனுக்கு அனுமன் தகப்பன்’ என்கிறது!
 • ராம ராவண யுத்தத்தின்போது லட்சுமணன்மட்டும் மூர்ச்சையாகி விழுந்ததாகவும் அதன்பிறகு ராமர், சீதை வருந்தி (தனித்தனியே) சோகப் பாட்டெல்லாம் பாடியதாகவும் சீர்காழி அருணாசலக் கவிராயரின் ‘இராம நாடகக் கீர்த்தனை’ நூல் சொல்கிறது, ஆனால் இந்தப் பாட்டில் ‘இறந்தோம், மறுபடி பிறந்தோம்’ என்று ராமர் பன்மையில் பேசுகிறார், அப்படியென்றால் என்ன அர்த்தம்? ராமரும் பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்து மூர்ச்சையானாரா? கம்ப ராமாயணம் அப்படிதான் சொல்கிறது
 • ஒருவேளை நாம் அதை நம்ப விரும்பாவிட்டால், கொஞ்சம் மாறுபட்ட ஒரு விளக்கம் எடுத்துக்கொள்ளலாம், லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்தான், அதைப் பார்த்த ராமருக்கு வேதனை தாங்கவில்லை, தானும் மூர்ச்சையாகிவிட்டார், பின்னர் அனுமன் லட்சுமணனைப் பிழைக்கவைத்தபின் அவரும் மறுபடி எழுந்தார், இந்தப் பாட்டைப் பாடினார்… கோர்வையாக வருகிறதா? 🙂

171/365

Advertisements
This entry was posted in அனுமன், கதை கேளு கதை கேளு, நாடகம், பக்தி, ராமன். Bookmark the permalink.

5 Responses to சிரஞ்சீவி

 1. amas32 says:

  அனுமனைப் புகழ்ந்து இராமன் பாடுவது போல் உள்ளதால் இதன் சுவையே தனி! சீர்காழி அருணாசலக் கவிராயருக்கு நன்றி. அனுமனுக்கும் இராமனுக்கும் தான் என்ன ஒரு நெருக்கம். அனுமன், வைகுந்தமே வேண்டாம், இங்கேயே இராம நாமத்தை ஜபித்தும் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறேன் என்று சொன்னவராயிற்றே!
  நம் குழந்தையை கொஞ்சும் பொழுது சில சமயம் என் அப்பாவே, என் அம்மாவே என்று கொஞ்சுவோம். மிகுதியான அன்பின் வெளிப்பாடு அது. அதையே தான் இராமனும் இங்கே செய்கிறார். ஆனால் இராம இலக்குவன் இருவரையும் உண்மையாகவே உயிர்பித்திருக்கிறார் ஆஞ்சநேயர். அதனால் அவர் சொல்வதில் பாசத்தோடு உண்மையும் உள்ளது. அனுமத் ஜெயந்திக்கு, ஸ்ரீ ராமன் அனுமனைப் பார்த்து சிரஞ்சீவியாக இரு என்ற வாழ்த்தும் பாடல் அருமை!
  amas32

 2. Sathya says:

  ஸ்ரீ மத்வாசாரியார் எழுதிய ராமாயண விளக்கத்தின்படி:

  * சகடாயுதத்தை ராவணன் லக்ஷ்மணன் மீது ஏவிய வேகத்தால், ராவணனுக்கே செம வலியாம். அவருடைய ‘பத்து’ வாயிலிருந்தும் ரத்தம் கொட்டியதாம்.
  * லக்ஷ்மணன் மயங்கியதும், ஹனுமான் அவரை ஏந்திக் கொண்டு, ராமனிடத்தில் கொண்டு சென்றார் (ராமருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிகிறது!)
  * ராமர் கேட்டுக்கொண்டபடி ஹனுமான் மூலிகைகளை கொண்டு வர, அந்த மூலிகைகளின் வாசத்திற்கே லஷ்மணன் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தார்.
  * ராமர் லஷ்மணனை ஆரத்தழுவினார்.
  * இலங்கையில் இருந்தபடியே அந்த மலையை ஹனுமார் தூக்கி ஏறிய, ஐம்பதாயிரம் யோஜனைகள் தாண்டிப் போய் அந்த மலை முன்னம் இருந்ததைப் போலவே ஆகிவிட்டதாம்.
  * அந்த மூலிகைகளின் வாசத்தில், அடிபட்டுக் கிடந்த பற்பல வானரங்களும் குணமாகி எழ; அடிபட்ட/இறந்த ராவண சேனைகள் அங்கிருந்து அப்புறப்பட்டு விட்டதால், அவர்கள் குணமாகவில்லை.

  நிற்க.
  கீழே வருவது நகைச்சுவைக்கு.
  இந்த சிச்சுவேஷனுக்கு இரண்டு நாட்கள் முன்னே நான் போட்ட ஒரு ட்வீட்:

  லக்ஷ்மணன் மயங்கிட்டாரு. மூலிகைகள் தேவை. யாராவது சஞ்சீவி மலை பக்கத்தில் இருக்கீங்களா? Pls RT.

 3. Sathya says:

  oops. ராமர் ‘ஹனுமனை’ ஆரத்தழுவினார் என்று இருக்கணும். 🙂

 4. GiRa says:

  அருணாச்சலக் கவிராயர் ஒரு ஒதுக்கப்பட்ட மாசிலா மாணிக்கம்.

  அவர் செய்தது மிகப்பெரிது. இசை மும்மூர்த்திகள் என்று தமிழ் கற்றோரால் போற்றப்படுகின்றவர்கள் அருணாச்சலக் கவிராயர், முத்துத்தாண்டவப்பிள்ளை, மாரிமுத்தாப்பிள்ளை.

  இவர்கள் காலத்தால் இன்றைக்கு மும்மூர்த்திகள் என்று சொல்லப்படுகின்றவர்களை விட மூத்தவர்கள்.

  பாக்களிலிருந்து பண்ணிசைக்குப் புதுப்பாதை இட்ட மும்மணிகள். ஆனால் அவர்களுக்கும் அவர்கள் பாக்களுக்குமான இன்றைய நிலை?! வேதனை.

  சரி. பாடலுக்கு வருவோம்.

  இராமனும் இலக்குவனும் இந்திரஜித்தினால் தாக்கப்பட்டு நாகபந்தத்தில் சிக்கிச் செயலற்று விழுகிறார்கள். அப்போது கருடனை அழைத்து இவர்களைக் காத்தது அனுமன்.

  அப்படியிருந்தும் இலக்குவன் இந்திரஜித்தோடு தனியாகப் போரிடுகிறான். மீண்டுமொரு முறை நல்ல அடி. பேச்சுமில்லை மூச்சுமில்லை. சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து காப்பாற்றினான்.

  ஆகையால் உயிர் கொடுக்கக் காரணமான வகையில் அனுமன் தந்தையாகிறான். பூம்பாவைக்குத் திருஞான சம்பந்தர் தந்தையானது போல. 

 5. ஸ்ரீதர் says:

  தங்கள் நற்பணி தொடரட்டும்.மிக்க நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s