கப்பல் செல்லும் பாதை

திரைத்த விரிக்கின் திரைப்பின் நாவாய்போல்

உரைத்த உரை அதனைக் கேட்டும் … உரைத்த

பயன் தவா செய்வார் சிலர், ஏதம் நெஞ்சத்து

இயன்ற அவா செய்வார் பலர்

நூல்: இன்னிலை (#5)

பாடியவர்: பொய்கையார்

UPDATE: கீழே நண்பர்கள் @kryes மற்றும் @elavasam எழுதியுள்ள அருமையான விளக்கங்களைப் பார்க்கவும், அவற்றின் அடிப்படையில் நான் தவறாக எழுதிய உரையை மாற்றியுள்ளேன்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

ஒரு கப்பல், அதன் பாயை விரித்துவைக்கிறோம், உடனே அது சரியான பாதையில் சென்றுவிடுமா?

ம்ஹூம், அது காற்றின் திசையில்தான் செல்லும், மாலுமி நினைத்த வழியில் செல்லாது. ஆகவே, காற்றின் திசையைப் பொறுத்து அந்த மாலுமி பாயை விரித்துவைப்பார், அல்லது சுருட்டிவைப்பார். அதனால் கப்பல் சரியான பாதையில் விரைவாகச் செல்லும். இதைப் பற்றிக் கவலைப்படாமல் காற்று தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கும்!

அதுபோல, நல்லவர்களின் பேச்சை நிறைய பேர் கேட்கிறார்கள். ஆனால் அதில் சிலர்மட்டும்தான் அவர்கள் சொல்லும் நல்வழியில் செல்கிறார்கள், பயனுள்ள விஷயங்களைச் செய்கிறார்கள், பலர் தங்கள் இஷ்டப்படிதான் நடந்துகொள்கிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் நல்லவர்கள் தங்களுடைய அறிவுரைகளைத் தொடர்ந்து சொல்லியபடி இருப்பார்கள்.

துக்கடா

 • இந்தப் பாட்டுக்கு இரண்டு கோணங்கள் உண்டு. ஒன்று, நீங்கள் அறிவுரை கேட்பவராக இருந்தால், வெறுமனே கேட்டுவிட்டுச் செல்லாமல் பின்பற்றவேண்டும், அடுத்து, நீங்கள் புத்தி சொல்பவராக இருந்தால், அதோடு நிறுத்திக்கணும், அதை எல்லோரும் பின்பற்றுகிறார்களா என்று நோண்டக்கூடாது, சிலர் பின்பற்றுவார்கள், பலர் இந்தக் காதில் கேட்டு அந்தக் காதில் விட்டுவிடுவார்கள், அதுதான் எதார்த்தம், அது அவர்களுடைய பிரச்னை, உங்களுடைய பிரச்னை அல்ல!
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • திரைத்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்
 • உரைத்த உரையதனைக் கேட்டும் … உரைத்த
 • பயன்தவாச் செய்வார் சிலர்ஏதம் நெஞ்சத்
 • தியன்றவா செய்வார் பலர்

170/365

Advertisements
This entry was posted in அறிவுரை, இன்னிலை, வெண்பா. Bookmark the permalink.

11 Responses to கப்பல் செல்லும் பாதை

 1. இன்னிலை = ஆகா! பேரே எவ்ளோ நல்லா இருக்கு!
  இனிய நிலை = இன்னிலை!
  இனியது கேட்கின் போலவே இருக்கு:)

  இது 18 கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று!
  ஆனா, இது இல்ல! கைந்நிலை தான்-ன்னு சொல்வாரும் சொற்பமாய் உளர்!

  இன்னிலை காஞ்சியுடனே ஏலாதி என்பவே,
  கைந்நிலைய வாம்,கீழ்க் கணக்கு!
  -ன்னு வெண்பா எழுதி வச்சிட்டாங்க:))

  ஆனா, வ.உ.சி தான் தரவெல்லாம் குடுத்து, அரும்பாடுபட்டு, இன்னிலையை நிலைநாட்டினார்!
  ஆனா, பாவம் மனுசன்; தமிழ் இலக்கிய உலகில், முக்கியப் புள்ளிகளின் கருத்துக்கு மாறாக தரவு குடுத்ததால்…..பல எதிரிகளையும் சம்பாதித்துக் கொண்டார்!

  இறுதி நாட்களில்… காங்கிரசும் உதவாமல், தமிழ்ப் பதிப்புலகமும் உதவாமல்….’செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சி, அம்போ என்று போனார் 😦
  ————

  வ.உ.சி அவர்களை விடுதலை வீரரா மட்டுமே பார்க்கிறோம்!
  சங்கத் தமிழுக்கு அவரின் உரைகளும், அவரின் மற்ற படைப்புகளையும் நாம் கட்டாயம் படிக்கணும்!
  சமயப் பூச்சு களைந்த சங்கத் தமிழ் உரை-ன்னா = அன்று வ.உ.சி மட்டுமே! பின்பு பாவாணர், முவ, பெருஞ்சித்திரனார் என்று பலரும்…

 2. இன்னிலை திருக்குறள் போலவே…
  அறப்பால்
  பொருட்பால்
  இன்பப்பால்
  +
  வீட்டுப்பால்
  துறவு-ன்னு மொத்தம் ஐந்து அதிகாரம்!

  இதுல, இன்பம் = களவு வாழ்க்கை; வீடு = கற்பு வாழ்க்கை :))
  ————–

  இதை எழுதியவர் = பொய்கையார்! பொய்கை ஆழ்வார் அல்லர்!
  நல்ல வேளை….கபிலர், பரணரை எல்லாம் கபில தேவ நாயனார், பரண தேவ நாயனார்-ன்னு ஆக்கியது போல்….
  சங்கக் கவிஞர் பொய்கையாரை, பொய்கை ஆழ்வாரோட சேர்த்து முடிச்சிப் போடலை!

  இதான் நல்லது! இந்தச் சமயம் கடந்த தமிழ்ப் பான்மை, மனசாற வரணும்!

 3. amas32 says:

  அறிவுரைக் கொடுப்பவருக்கு நீங்கள் சொல்லியிருப்பது பாய்ன்ட்! நிறைய பேர் அவர்கள் சொன்னதை நாம் செய்யவில்லை என்றால் ரொம்ப தொல்லை பண்ணுவார்கள். அறிவுரையை எடுத்துக்கொள்வதற்கும் நல்ல அறிவு வேண்டும். அகங்காரம் இருந்தால் யார் சொல் பேச்சும் எடுபடாது. நல்வார்த்தையின் மதிப்பு நல்லவர்களுக்குத் தான் புரிகிறது. மற்றவர்களுக்கும் புரிந்தால் அது நன்மையை தரும் – அவருக்கும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும்! பாய் விரிக் கப்பலின் தன்னிச்சை செயல்பாட்டோடு இதனை புலவர் பொய்கையார் எவ்வளவு அழகாக உவமைப் படுத்தியிருகார்.
  amas32

 4. // ஒரு கப்பல், அதன் பாயை விரித்துவைக்கிறோம், உடனே அது சரியான பாதையில் சென்றுவிடுமா?
  ம்ஹூம், அது காற்றின் திசையில்தான் செல்லும், மாலுமி நினைத்த வழியில் செல்லாது. //

  செல்லும்!
  அதுக்குத் தான் பாய்மரம் என்ற தொழில் நுட்பமே!

  சொக்கரே,
  விளக்கத்தில் சற்றே தவறு! சரியாக உரைக்கத் தங்கள் அனுமதி வேண்டுகிறேன்!

  பாய் மரம் விரிச்சா, Captain சொல்லுறாப் போலத் தான் கேட்கும்!
  அவன் காற்றின் திசைக்கு ஏற்றா மாதிரி, மாத்தி மாத்தி விரிச்சி வைச்சித் தான், கப்பலை நகர்த்துவான்!

  //திரைத்த விரிக்கின் திரைப்பின் நாவாய்போல்// – இதை எப்படி எடுத்துக்கணும்-ன்னா…
  விரிக்கின் நாவாய்போல், திரைப்பின் நாவாய்போல்… = Two test cases

  1. விரிக்கின் நாவாய்போல் = பாய்மரம் விரிச்சி வைப்பது போல் = மனசை விரிச்சி வச்சி, உரையை, நல்லபடியா எடுத்துப்பார்கள்
  2. திரைப்பின் நாவாய்போல் = பாய்மரம் திரைத்து (மடக்கி) வைப்பது போல் = மனசை மடக்கி வச்சி, உரையை நல்லபடியா எடுத்துக்க மாட்டாங்க!

  பாய்மரம் என்னவோ ஒன்னு தான்!
  அதே போல் உரைச்ச உரையும் ஒன்னு தான்!
  விரிக்கிறோமா/ மடக்குறோமா என்பதில் தான்…செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றடைவோம்!

  உவமை நயம்:
  * பாய்மரம் = சான்றோர் உரை
  * கப்பல் = நாம்
  * விரித்தல் = ஏற்றுக் கொள்ளல்; (மனசை விரிச்சி)
  * திரைத்தல் = ஏற்றுக் கொள்ள மறுத்தல் (மனசைக் குறுக்கி)
  * ஊருக்குப் போய்ச் சேர்வது = விரித்து வைச்சா மட்டுமே!

 5. சொக்கன்,

  உங்க உரை எனக்குப் புரிஞ்சுக்கக் கஷ்டமா இருக்கு. எனக்குப் புரிஞ்சதைச் சொல்லறேன். தப்பா இருந்தா ரொம்பத் திட்டாதீங்க.
  கடலில் காத்து வீசிக்கிட்டேதான் இருக்கும். காற்று வீசும் திசையில் பயணம் செய்யணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணறது மாலுமி. அந்த திசையில் போகணும்ன்னு முடிவு பண்ணினா பாய்மரத்தை விரிப்பான், காற்றின் சக்தியை தனக்கு உதவியாக்கிப்பான். வேகமா நினைத்த இடத்தைப் பார்த்து போய்கிட்டே இருப்பான்.

  அந்த திசை எனக்கு வேண்டாம்ன்னு முடிவு பண்ணின மாலுமி பாயை மூடிட்டு இருப்பான். அவனுக்கு இந்த காத்தால ஒரு பயனும் கிடையாது.
  (ஆனா காத்து அதுபாட்டுக்கு வீசிக்கிட்டேதான் இருக்கும். நம்மால மாலுமிகளுக்குப் பயன் இருக்கா இல்லையான்னு எல்லாம் யோசிக்காது. இது வெளிப்படையா பாட்டுல இல்லை. இருந்தாலும் ஒரு முழுமைக்குச் சொல்லி வைக்கறேன்.)

  அந்த மாதிரி நல்லவங்க பேச்சை கேட்டு தன்னை நல்வழியில் செலுத்திக்கறவங்க பயன் தரும் விஷயங்களைச் செய்வாங்க. மத்தவங்க இந்த அறிவுரையைப் பயன்படுத்திக்காம அவங்க பாட்டுக்கு இருப்பாங்க. நீ நல்ல வழியில் போகணுமான பெரியவங்க அறிவுரையைக் கேட்டு நடந்துக்க. அது உனக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

  (அறிவுரை சொல்பவனான நீ எப்போதும் நல்வழிக்கான அறிவுரைகளையே சொல்லிக்கிட்டு இரு. அதை எடுத்துக்கறதும், எடுத்துக்காததும் கேட்கறவங்க விருப்பம். நீ அதை பத்திக் கவலைப்படாம என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு நல்வழி பத்திப் பேசிக்கிட்டு இரு.)

  ரவியும் இந்தக் கருத்தைத்தான் சொல்லி இருக்கார்ன்னு நினைக்கிறேன். ஆனா அவர் விளக்கமும் எனக்கு கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு. அதுனால எனக்குப் புரிஞ்சதையும் எழுதிட்டேன். அடுத்துப் படிக்க வரவங்க குழம்ப இப்போ மூணு சாய்ஸ் இருக்கு!

  • கொத்ஸ்,
   மாலுமி வரை….தாங்களும், நானும் சொல்வது அதே தான்! நன்றி மேல் விளக்கத்துக்கு!
   ஆனா, நீங்க சொல்லும் அடுத்த பகுதி மட்டும், நாமளா எடுத்துக்கறது! பாட்டுக்கும் அதுக்கும் தொடர்பில்லை!:)

   அதாச்சும் என் கடன் பணி செய்து கிடப்பதே, கவலைப்படாம பேசிக்கிட்டே இரு-ன்னு சொன்னா…இங்கே பாட்டில் விபரீதம் ஆயீரும்!
   என் கடன் பணி செய்வது மட்டுமே! கப்பல் போய்ச் சேருதா இல்லையா-ன்னு கவலை இல்ல-ன்னு ஒரு மாலுமி சொல்ல முடியுமா?:))) சொன்னாக் கப்பல் என்னத்துக்கு ஆகும்? அதோ கதி தான்!:)))

   அதனால், the next part of explanation – will not fit into this song context! நீங்க சொன்ன முதல் பாதியோடு நிறுத்தி விட வேணும்! அடுத்த ஒப்புமை பாட்டின் மையப் பொருளுக்குப் பொருந்தி வராது!

 6. ரவி,

  நான் மாலுமியைக் கவலைப் படாதேன்னு சொல்லலை. இந்த மாலுமி பாய்மரத்தை விரிச்சு இருக்கானே, அந்த மாலுமி விரிக்கலையேன்னு கவலைப்படாமல் காற்று அது பாட்டுக்கு வீசும்ன்னுதான் சொன்னேன்.

  தவறேதும் இருந்தால் மன்னிப்பீராக!

  • இது என்னய்யா மன்னிப்பு, அண்ணிப்பூ-ன்னு கிட்டு?:)
   நாலு பேரு பேசினாத் தானேய்யா விளக்கம் வரும்!:))
   மிகவும் நன்றி, தங்களின் மேல்-விளக்கத்துக்கு!

   இன்னோன்னு கவனிச்சீரா?
   //தவா செய்வார் சிலர், அவா செய்வார் பலர்//
   எடுத்துக்கறவங்க=சிலர்; எடுத்துக்காதவங்க=பலர் ன்னு அவருக்கே தெரிஞ்சி இருக்கு! :))))

 7. பாய்மரம் Technology! (இது புரிஞ்சா, பாட்டை இன்னும் நல்லா விளங்கிக்கலாம்)

  ஒரு மாலுமி, பாய்களைப் பல விதமா விரித்தும் மடக்கியும், கப்பலைச் செலுத்துவான்! காற்று வீசுவதைப் பொருத்து!
  காற்றுக்கு எதிர் திசையில் செல்லவோ, அல்லது, காற்று வீசும் திசையிலேயே செல்லவோ, இது உதவும்!

  மாலுமிக்கு, போய்ச் சேர வேண்டிய திசை ரொம்ப முக்கியம்! அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவனால் இருக்க முடியாது!

  காற்று, destination directionஐ நோக்கி வீசினால், பாய்மரத்தைச் சுருட்டி, idle modeக்கு போட்டுருவான்!
  பெரும் பாய் மட்டும் விரிஞ்சி இருக்கும்! அதில் காற்று பட்டு உந்த, கப்பல் தானாவே அந்தத் திசை நோக்கி நகரும்!

  ஆனா, எப்பவும் காற்று ஒரே மாதிரி வீசாதே!
  காற்று மாறி வீசும் போது, பாய்மரங்(கள்) விதம் விதமான angle-இல் விரிக்கப்படும்!
  காற்றின் திசைக்கு எதிராக, ஆனால் destination directionஐ முன்னோக்கிச் செல்லும்!
  ———————

  அதே போல்…
  சான்றோர்கள், உரைகள் செய்து கொண்டே இருப்பார்கள்! அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய இடம் முக்கியம்!
  * பாயை விரிச்சா = காற்றால் உந்தப்பட்டு, போய்ச் சேரலாம்
  * பாயை விரிக்கலீன்னா = நமக்குத் தான் நட்டம்!

  ஆனா மாலுமி, கவலைப்பட்டே ஆகணும்! ஒரு பாய் விரிய மறுத்து சுருட்டிக்கிட்டால்?….எப்படியோ போங்க…நான் என் கடமையைச் செஞ்சேன்-ன்னு அவன் விட்டுற முடியாது:)))
  ஒரு பாய் விரிய மறுத்தா….போய்ச் சேரக் கொஞ்சம் லேட் ஆகும்! ஆனாலும், மற்ற பாய்களை வேற மாதிரி விரிச்சி…செல்ல வேண்டிய திசையில் செலுத்துவான்!

  இப்போ, பாட்டை மறுகா வாசிங்க! உங்களுக்கே ஈசியாப் புரியும்!:)

 8. Abarajithan says:

  ஒரு சின்ன முரண்பாடு.. தப்பா எடுத்துக்காதீங்க..

  வீசுற காத்து அறிவுரைகளுக்கு உவமை. கப்பலின் பயணம் கேட்பவனின் நடத்தை. ஆனா, எல்லா காத்தும் சரியானதில்லை. காத்து வீசுற திசையிலேயே கண்ண மூடிட்டு போனா, சரியான இலக்கைவிட்டு வேற எங்கேயாவது கப்பல் போயிடும்.. சிலவேளை ஆபத்தில மாட்டிகிட்டு உடைஞ்சு நொறுங்கிடும்.. கப்பல் மாலுமிதான் எந்தக் காற்றை பயன்படுத்தறதுன்னு யோசிச்சு கப்பலை செலுத்துவான்.. கப்பலும் சரியா இளைக்கி அடையும்…

  அப்படிப் பாத்தா எல்லா அட்வைசையும் கண்ணை மூடிட்டு கேக்க கூடாதுன்னு ஒரு அர்த்தம் வருதே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s