நரை முடிச் சோழன்

உரைமுடிவு காணான் இளமையோன்; என்ற

நரை முது மக்கள் உவப்ப … நரை முடித்துச்

சொல்லால் முறை செய்தான் சோழன், குல விச்சை

கல்லாமல் பாகம் படும்

நூல்: பழமொழி நானூறு (#6)

பாடியவர்: முன்றுரையரையனார்

சூழல்: கீழே ’முன்கதை’யில் காண்க

முன்கதை

கரிகால் சோழன் மிகச் சிறிய வயதிலேயே அரசனாகிவிட்டவன். போதுமான அனுபவம் இல்லாவிட்டாலும் அவனுக்குப் புத்திக் கூர்மை அதிகம்.

ஒருநாள், கரிகாலனின் சபையில் ஒரு புதிய வழக்கு. வழக்கம்போல் அவன் அதை முறைப்படி விசாரித்துத் தீர்ப்புச் சொல்லத் தயாரானான்.

ஆனால், அந்த வழக்கைத் தொடுத்தவர், மறுத்தவர் இருவருமே இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ’நீயோ சின்னப் பையன், எங்களுடைய பிரச்னையோ மிகச் சிக்கலானது, அதைப் புரிந்துகொண்டு நீதி வழங்குகிற அளவுக்கு முதிர்ச்சி உள்ள ஒருவர்தான் இந்த வழக்கை விசாரிக்கவேண்டும்’ என்றார்கள்.

‘நல்லது’ என்றான் கரிகாலன். ‘நீங்கள் நாளைக்கு வாருங்கள், இந்த வழக்கை விசாரிப்பதற்காக அனுபவசாலியான ஒரு நீதிபதியை அனுப்பிவைக்கிறேன்’ என்றான்.

மறுநாள், அவர்கள் மீண்டும் அதே சபைக்கு வந்தார்கள். நீதிபதி ஆசனத்தில் தலைமுடி முழுவதும் நரைத்த முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். விசாரணை தொடங்கியது.

கரிகாலன் ‘அனுப்பிவைத்த’ அந்த நீதிபதி வழக்கைத் தெளிவாகப் புரிந்துகொண்டார், சரியான தீர்ப்பை வழங்கினார், எல்லாருக்கும் திருப்தி.

ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம், அந்த ‘நரை முடி’ நீதிபதி வேறு யாரும் இல்லை, கரிகாலனேதான், வயதைக் காரணம் காட்டித் தன்னுடைய திறமையின்மேல் சந்தேகப்படுகிறவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக அவனே மாறுவேஷத்தில் வந்திருந்தான்.

உரை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நாங்கள் சொல்லும் வழக்கைப் புரிந்துகொண்டு, ஆராய்ந்து நல்ல தீர்ப்பைச் சொல்லும் தகுதி இந்த இளைஞனுக்கு இல்லை’ என்று தலை நரைத்த முதியவர்கள் சிலர் கரிகாலனைக் கேலி செய்தார்கள்.

ஆகவே, அவர்களுடைய மனம் மகிழும்படி கரிகால் சோழன் நரை முடி சூடினான், வழக்கை விசாரித்து நல்ல தீர்ப்புச் சொன்னான், நீதியை நிலைநாட்டினான்.

சில திறமைகள் கல்வியால்மட்டும், அனுபவத்தால் மலர்கிறவை அல்ல, அந்தந்தக் குடும்பச் சூழலில் வளர்கிறவர்களுக்குத் தானே அமையும்.

துக்கடா

 • இந்தப் பாடல் ’குலவித்தை தானாக அமையும்’ என்பதை வலியுறுத்துகிறது. இங்கே ‘குலம்’ என்பது ஜாதியைக் குறிக்கிறதோ என்று தயங்கி இன்று காலை இப்படி ஒரு வரி சேர்த்தேன் : இந்த நம்பிக்கை / பழமொழியைக் கடுமையாக மறுக்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அதையும் இங்கே பதிவு செய்துவிடுவது அவசியம்
 • உண்மையில் குலம் என்பது இங்கே குடும்பத்தைதான் குறிக்கிறது என்று நண்பர் இலவசக் கொத்தனார் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, இசைச் சூழலில் வளர்ந்த குழந்தை தானே அந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ளும், பாடும், அல்லது ரசிக்கும், அதுபோல கரிகாலன் வளர்ந்த சூழலில் நீதி, நியாயம் போன்றவை தொடர்ந்து பேசப்பட்டிருந்தால், அவன் இளம் வயதிலேயே அவற்றைக் கற்றுக்கொண்டிருப்பான், யாரும் வலியச் சென்று சொல்லித்தரவேண்டியிருக்காது என்று அவர் விளக்கினார்
 • இந்த விளக்கத்தைப் பொருத்திப் பார்க்கிறபோது, பாடல் இன்னும் அழகாகத் தெரிகிறது. கொத்தனாருக்கு நன்றியுடன் மேலே உள்ள உரையையும் திருத்திவிட்டேன்
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
 • நரைமுது மக்கள் உவப்ப … நரைமுடித்துச்
 • சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
 • கல்லாமல் பாகம் படும்
166/365
Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சோழன், நீதி, பழமொழி நானூறு, வெண்பா. Bookmark the permalink.

7 Responses to நரை முடிச் சோழன்

 1. Madhan says:

  பள்ளி நாட்களில் மனபாட பகுதியில் படித்த செய்யுள். எங்களது தமிழ் அய்யாவும் “குலவித்தை தானாகவே அமையும்” என்ற விளக்கம் தான் கொடுத்தார், ஆனால் “ஜெனிடிக்ஸ்” துணை கொண்டு விளக்கினார்.
  MMKR ல் “ராஜு” சொல்வது போல “அதெல்லாம் அப்படியே வரது தான் இல்ல”, Catch my Point 🙂

 2. amas32 says:

  என் தோழி ஒரு மாண்டிசோரி பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியை. அவள் வகுப்பில் ஒரு பெரிய அரசியல் தலைவரின் மகன் படித்துக்கொண்டிருக்கிறான். அவனுடன் படிக்கும் அவன் குழுவில் இருக்கும் சிறுவன் ஒருவனை அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவன் அந்த சிறுவனிடம் வெத்துக் காகிதத்தில் கையெழுத்து வாங்கி, பின் அதில் இவனே அந்தப் பையன் எழுதியது போல், குழுவில் இருந்து அந்தப் பையனே விலகிக் கொள்வதாக எழுதி வகுப்பு ஆசிரியையிடம் கொடுத்திருக்கிறான். பின் உண்மை வெளி வந்திருக்கிறது 🙂

  அதனால் ரத்தத்திலேயே வர வேண்டிய அனைத்துத் திறமையும் வந்து விடுகிறது. அதனால் தான் இப்பொழுதெல்லாம் நடிகர்களின் பிள்ளைகளும் மற்றத்துறைகளிலும் வாரிசுகள் இளம் வயதிலேயே திறம்பட கொடிகட்டிப் பறக்கின்றனர். என்ன இங்கே கரிகாலன் தன திறமையை வெளிப்படுத்த நரை முடி போட வேண்டியிருந்தது. அங்கும் அரசுனுக்குரியச் சாணக்கியம் தான் தெரிகிறது. நான் அரசன், நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று சொல்லாமல் குடிமக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய மாறு வேடம் பூண்டிருக்கிறான்.

  சுவையான வித விதமான பாடல்களை தினம் தருகிறீர்கள், நன்றி 🙂
  amas32

 3. இந்த கதையையும் ‘நரை முடித்து நல்லுரை வழங்கியோன்’ ங்கற பதத்தையும் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னிக்கு தான் பாட்டு தெரிஞ்சது. நன்றி.

 4. அறிவு என்பது பட்டதால் வரும், கற்றதால் வரும். எதற்காக நரைமுடி இருக்கிறவங்களைத் தேடறாங்க? அப்படி இருந்தா பல விதமான அனுபவங்கள் இருக்கும். அந்த அனுபவங்களின் பொழுது கற்ற பாடங்களினால் விசாலமான அறிவு படைத்தவராக இருப்பார். இதுதானே ஏரணம்?

  எந்த வேலைக்குச் சென்றாலும் முன் அனுபவம் இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். எதற்காக அப்படிக் கேட்கிறார்கள், ஒன்று செய்ய வேண்டிய வேலையை விரைவாகச் செய்ய முடியும். இரண்டாவது, செய்யும் பொழுது எதேனும் தடைகள் வந்தால் அவற்றைத் தாண்டிச் செல்வது எப்படி என்பது அனுபவம் மிக்கவர்களுக்கு கை வந்த கலையாக இருக்கும்.

  ஆங்கிலத்தில் கூட experience is the best teacher எனச் சொல்கிறோம். இந்த வழியில் கற்று முடித்திருக்க கரிகாலனுக்கு வயதில்லை. அடுத்ததாக எப்படி அறிவு வந்திருக்கும்? பள்ளிக்குச் சென்று கற்றுக் கொண்டிருக்கலாம்.

  இந்தியன் பீனல் கோட் மாதிரி ஒரு புஸ்தகத்தைக் கரைத்து குடித்து இருந்தால் சட்டதிட்டங்களின்படி எது சரி எது தவறு என்று தெரியும். அப்படி அன்று இதுதான் சட்டம் என நிறுவப்பட்டிருக்குமா? தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், இது அந்தக்கால சினிமாவில் சொல்வது மாதிரி – இது வரலாறு காணாத விசித்திர வழக்கு – வகையாக இருந்தால் இருக்கும் சட்டதிட்டங்களில் இதைப் பற்றிப் பேசி இருக்குமா தெரியாது. ஆகவே படிப்பால் வந்த அறிவும் வேலைக்கு ஆகாது.

  இங்கதான் மூணாவது விதமா ஒரு மேட்டர் வருது. Experience, Conscious Learning என்ற இரண்டையும் தாண்டி Subconscious Learning. இன்று தாயின் வயிற்றினுள் இருக்கும் குழந்தைக்குக் கூட வெளியிலிருந்து ஓசைகள் கேட்கும் என நிரூபணம் செய்திருக்கின்றனர். தாயின் குரலுக்கும் மற்றவர் குரலுக்கும் வேறுபாடு தெரியும் என்பதும் நிரூபணம் ஆகி இருக்கின்றது. நம் புராணங்களிலும் கூட இது பற்றிப் பேச்சு உண்டு. அர்ஜுனன் சுபத்திரையிடம் சக்கரவியூகம் பற்றிப் பேசுவது அவள் வயிற்றில் இருக்கும் அபிமன்யூவிற்குப் புரிந்ததாக மஹாபாரதத்தில் வரும்.

  குழந்தைகள் பிறந்த பின்பும் புரியாத வயதில் கேட்கப்படும் இசையானது ஆழ்மனதில் பதிந்து பின்னர் வெகுகாலத்திற்குப் பின் கேட்டாலும் அவை பரிச்சியமானதாகவே தோன்றும் என்பதும் இன்று அறிஞர்கள் ஒப்புக் கொள்ளும் கருத்தே. இந்த ஆழ்மனக் கல்வியைத் தருவது அந்தக் குழந்தை வளரும் சூழலே. ஒருவரின் வீட்டில் பிறந்தது முதல் நிலவும் சூழலில் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வது அநேகம். சங்கீத உலகில் கொடி கட்டிப் பறக்கும் பலரும் தங்கள் சூழலை ஒரு காரணியாகக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. இன்று குழந்தைகள் நம்மை விட ஐபோனும் ஐபேடும் பாவிப்பதில் எவ்வளவு கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இதை யார் அவர்களுக்குக் கற்றுத் தருகிறார்கள்? Exposure என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே. அந்த வாய்ப்பு இருப்பதால் இது அவர்களே கற்றுக் கொள்கிறார்கள். இந்த சூழலும் வாய்ப்பும் பெற்று தானே பெறும் அறிவும் மூன்றாவது வகை அறிவு.

  அது போல ஒரு அரசனின் மகனாகப் பிறந்த கரிகாலனும் எப்பொழுதும் நீதி நேர்மை நாணயம் என்று பேசி வரும் பெரியோர்களுக்கிடையே வளர்ந்து வந்திருப்பான். அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருக்கும் செய்திகளை இவனும் செவிவழியாக உள்வாங்கிக் கொண்டிருப்பான். அப்படி ஒரு சூழலில் வளர்ந்த அவனுக்கு, முறையாக கற்றுத்தான் ஆக வேண்டும் என்றோ அனுபவமாகப் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்றோ இல்லை. இந்த மூன்றாவது வகையில் பெற்ற அறிவானது அவனுக்குக் கை கொடுத்து இருக்கும் என்பதுதான் பாடியவர் இங்கு சொல்ல வருவது. குலம் என்பதற்கு குடும்பம் என்ற பொருளும் உண்டு. இந்தக் குடும்பச்சூழலில் வளர்ந்த கரிகாலனுக்கு இது தண்ணீர் பட்ட பாடு என்றுதான் சொல்கிறார். குலம் என்றாலே சாதி தொடர்பானது என்று சமகால பயன்பாட்டால் நாம் நினைப்பதே தவிர அதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.

  அதே போல, ஒரு அரசனிடம் சென்று பிராது கொடுத்தவர், ”நீ சின்னப் பையன், உனக்கு இந்த வழக்கை எடுத்து நடத்த அனுபவம் பற்றாது. எனக்கு நீ இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்வதில் ஒப்புதல் இல்லை. வேறு யாரையேனும் கொண்டு வா” என்கிறார். அரசனும் எமக்கு எல்லாம் தெரியும் என திருவிளையாடல் வசனம் பேசாமல், சரி என ஒப்புக் கொண்டு செல்கிறான். இதுதான்யா மக்களாட்சி. இன்றைக்கு இப்படி நடக்குமா? வெறும் பாடலைப் படிக்காமல் இந்த மாதிரி சூழலை எல்லாமும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

  (நீளமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்!)

 5. /சில திறமைகள் கல்வியால், அனுபவத்தால் மலர்கிறவை அல்ல, அந்தந்தக் குடும்பச் சூழலில் வளர்கிறவர்களுக்குத் தானே அமையும்./

  கல்வியால் / அனுபவத்தால் மலர்கிறவை அல்ல என்பது சரி இல்லை. கல்வி கற்காமலும், அனுபவம் பெறாமலும் கூட சரியான சூழலில் வளர்ந்ததால் இது அமையப் பெறும் என்பதுதான் சரி.

 6. எஸ்.உமாபதி says:

  அந்த வழக்கு யாதெனில்,
  ஒருவர் இன்னொருவரிடம் நிலம் வாங்குகிறார். கிரயம் முடிந்த பின் நிலத்தைப் பண்படுத்துகிறார். அப்போது நிலத்தினுள் புதையல் தென்படுகிறது. அக்காலத்தில் புதையல் யாருக்குக் கிடைக்கிறதோ அவருக்கே சொந்தம். நிலத்தை வாங்கியவர் விற்றவரிடம் சென்று “நான் நிலத்திற்குத் தான் பணம் கொடுத்தேன், இப்புதையலுக்கு அல்ல” என்று கூறி அவரிடம் கொடுக்க, விற்றவரோ “நான் எப்போது நிலத்தை விற்றேனோ அப்போதே அந்நிலத்திலுள்ள அனைத்தும் உமக்கே சொந்தமாகி விட்டது. அதனால் இதைப் பெறமாட்டேன்” என்று மறுக்கிறார். இவ்வழக்கு கரிகாலனிடம் வந்தது.

  கரியன் வழங்கிய தீர்ப்பு:
  வாதிக்கு மணவயதில் ஒரு பிள்ளையும் பிரதிவாதிக்கு ஒரு விவாஹ வயதில் ஒரு பெண்ணூம் இருப்பதைக் கேட்டறிந்து, அம்மக்களிருவருக்கும் விவாஹம் செய்து வைத்து அவர்களுக்கு கல்யாணப்பரிசாக இப்புதையலைக் கொடுக்குமாறு தீர்ப்பளித்தான்.
  (நான் சிறுவயதில் படித்தது)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s