மதி நிறைந்த நல் நாள்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நல் நாளால்

நீர் ஆடப் போதுவீர்! போதுமினோ, நேர் இழையீர்!

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,

கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே, நமக்கே பறை தருவான்,

பாரோர் புகழப் படிந்தேல், ஓர் எம்பாவாய்.

நூல்: திருப்பாவை (#1) நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல்

பாடியவர்: ஆண்டாள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பெண்களே, சிறப்புகள் நிறைந்த ஆயர்பாடியில் வளரும் செல்வச் சிறுமிகளே,

மார்கழி மாதம் பிறந்துவிட்டது, வானத்தில் முழு நிலா ஜொலிக்கும் பௌர்ணமி நன்னாள் இது, குளிக்கப் போகலாம்,வாருங்கள்.

கூரான வேலைக் கொண்டு எதிரிகளை அழிக்கின்றவன் நந்தகோபன், அழகு நிறைந்த கண்களைக் கொண்டவள் யசோதை, இவர்களுடைய மகனாகிய இளம்சிங்கம், என் கண்ணன்.

கருத்த உடல், சிவந்த கண்கள், ஒளி மிகுந்த நிலாவைப் போன்ற முகம்… அந்த நாராயணன் நாம் கேட்டதையெல்லாம் தருவான். உலகமே புகழுகின்ற அவனுடைய பெருமைகளைப் பாடியபடி நீராடச் செல்லலாம், வாருங்கள்.

துக்கடா

 • இன்று மார்கழி 1. பாவைப் பாட்டுக்கு விசேஷமான மாதம். #365paa வரிசையில் இன்று திருப்பாவை, நாளை திருவெம்பாவை 🙂
 • திருப்பாவையைப் பக்தி இலக்கியமாக மட்டுமின்றி, நல்ல தமிழ்ப் பாடல் தொகுப்பாகவும் வாசிக்கலாம், ஆண்டாளின் தமிழ் மிக எளிது, நேரடியாகப் பொருள் தரக்கூடியது, உணர்ச்சிகள் நிறைந்தது, தமிழில் அவள் அளவுக்குப் பாட்டுக்குள் தன் ஆளுமையைத் தளும்பத் தளும்பக் கொட்டிவைத்தவர்கள் குறைவு, இதற்குக் காரணம் நாம் நிறையக் கேட்ட ‘சூடித் தந்த சுடர்க்கொடி’ கதைகளாகவும் இருக்கலாம் 🙂
 • தமிழில் இசை வடிவம் பெற்ற இலக்கியங்களில் திருப்பாவைக்குதான் முதல் இடம், அநேகமாக இதனைப் பாடாத பாடகர்களே கிடையாது, அதன் உள்பொருள்களை விவரிக்காத உபன்யாசகர்களே கிடையாது இணையத்தில் தேடினால் நிறையக் கிடைக்கும். உதாரணத்துக்குச் சிலதுமட்டும் இங்கே :
 • 1. ஆண்டாள் அறிமுகம் & திருப்பாவை முதல் பாடலுக்கு வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம் : http://temple.dinamalar.com/tamil_temple_videos.php?id=63
 • 2. திருப்பாவை முதல் பாடல் எம். எல். வசந்தகுமாரி குரலில் : http://www.fulfillr.com/music/gallery/Margazhi-Thingal-Madhi-by-MLV-Naattai-Ragam
 • 3. திருப்பாவை முதல் பாடல் சுதா ரகுநாதன் குரலில் : http://www.raaga.com/player4/?id=40692&mode=100&rand=0.6117707977537066
 • 4. திருப்பாவை முதல் 4 பாடல்களை நித்யஸ்ரீ மகாதேவன் பாடியது : http://www.youtube.com/watch?v=v2DIpRE-ovQ
 • 5. திருப்பாவை முதல் பாடல் அனுராதா கிருஷ்ணமூர்த்தி குரலில் : http://www.dhingana.com/play/marghali-thingal/ODE4NTM%3D/pop/1
 • 6. ஆண்டாள் ஹரிகதையின் இடையே திருப்பாவை முதல் பாடல், விசாகா ஹரி பாடியது : http://www.youtube.com/watch?v=Fz8rM5tn96o

164/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆண்டாள், திருப்பாவை, திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பாவைப் பாட்டு, பெண்மொழி, விஷ்ணு. Bookmark the permalink.

19 Responses to மதி நிறைந்த நல் நாள்

 1. I always thought the songs goes like
  “மார்கழித் திங்கள்
  மடி நிறையப் பொங்கல்….”

  • அப்பறம்..? முழுக்கச் சொல்லணும்-ல்ல?:)

   மார்கழித் திங்கள்
   மடி நிறையப் பொங்கல்
   வாயெல்லாம் திங்கல்
   கோலமிடும் பெண்கள்
   என்னென்னமோ போங்கள்:)))

   • சுப. இராமனாதன் says:

    அடுத்த வருடம் மார்கழி முதல் நாளுக்கு இந்த சரித்திரத்தில் இடம்பிடிக்க வேண்டிய, தமிழர் ரசனைகளை, குணநலங்களை விவரிக்கும் பாடலுக்கு உரை எழுதுமாறு சொக்கன் அவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். 🙂

 2. GiRa says:

  மார்கழி பிறந்து விட்டது. பொருத்தமாக நாக சொக்கனின் பாவும் வந்து விட்டது. 🙂

  திருப்பாவையின் முதற்பாடலை இன்றைய பாடலாக பதிந்திருப்பது மிகப் பொருத்தம்.

  பாடலுக்குப் போவதற்கு முன் சில செய்திகள்.

  பாவை என்றாலே திருப்பாவையும் திருவெம்பாவையும் மிகப்புகழ் பெற்றுள்ளன. ஆனால் பாவைப்பாடல் என்பது சங்ககாலத்திலிருந்தே இருந்திருக்கிறது. இருக்கின்ற நூல்களை வைத்துக் கொண்டு ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் திருவெம்பாவையை எழுதினார். அடுத்து பத்தாம் நூற்றாண்டில் திருப்பாவை என்று சொல்வது ஓரளவுக்கு மட்டுமே சரி.

  பல பழைய பாவைப்பாடல்கள் காணாமலே போயின. சமண முனிவர் ஒரு பாவை நூல் இருந்து காணாமல் போய்விட்டது. ஆனால் அதிலொரு பாடல் மட்டும் தப்பிப் பிழைத்தது.

  சரி. இப்பொழுது பெயரளவிலிருந்தாவது நமக்குத் தெரிந்த பாவைப் பாடல்கள் எவை?

  சமணப்பாவை
  திருவெம்பாவை
  திருப்பாவை
  தத்துவராய சுவாமிகள் – 2 பாவை நூல்கள்

  சரி. அந்தத் தப்பிப் பிழைத்த சமணப் பாவைப் பாடலைப் பார்ப்போமா.

  கோழியும் கூவின குக்கில் அழைத்தன
  தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ
  ஆழிசூழ் வையத்து அறிவன் அடியேத்தி
  கூழை நனையக் குடைந்தும் குளிர்புனல்
  ஊழியுள் மன்னுவோம் என்றேலோர் எம்பாவாய்

  இது கூட பின்னாளில் எழுந்த யாப்பருங்கல விருத்தியுரை என்ற ஒரு உரை நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டதால் பிழைத்தது.

  மார்கழி நீராடல் என்று இப்பொழுது சொன்னாலும், சங்ககாலத்தில் தைநீராடல் என்றே பாவைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தை பிறந்தால் வழி பிறக்கும்.

  • பாவை – சங்க கால வழக்கம்!
   தைந்நீராடல், மார்கழி நீராடல் இரண்டுமே உண்டு!
   திருப்பாவையும் முடித்த ஆண்டாளின் அடுத்த பாட்டு = தையொரு திங்களும் தரை விளக்கி

   சமணப் பாவைகளின் அழிவு…மனம் வலிக்கும்! வேண்டாம்,
   சமய மனப்பான்மையால், மனப் பான்மையின்றி, நெருப்பிலும் நீரிலும் போனவை அந்த அருந்தமிழ்:(
   ————-

   //ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் திருவெம்பாவையை எழுதினார். அடுத்து பத்தாம் நூற்றாண்டில் திருப்பாவை //

   அல்ல!
   ஆண்டாள் காலம் = கிபி 730
   (சாமி சிதம்பரனார்/ மா இராசமாணிக்கனார்)

 3. GiRa says:

  முன்பு இனியது கேட்கின் வலைப்பூவில் மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாவிற்கு விளக்கம் சொன்னேன். அதில் முதல் பாவைக்கான விளக்கம் இங்கே.
  http://iniyathu.blogspot.com/2005/12/blog-post_15.html

  பாடலின் சிற்சில இடங்களை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

  பாவைப்பாட்டு தொடங்கியது ஆண்டாள் எதற்கு அழைக்கிறாள்? சாமி கும்பிடவா? கோலம் போடவா? பால் காய்ச்சவா? வீடு வாசலைக் கூட்டவா?

  இவைகள் எதுவுமே இல்லை. நீராடப் போதுவீர் என்றுதான் அழைக்கிறாள். எழுந்ததும் நீராட வேண்டுமாம். அதுவும் மார்கழி மாதக் குளிரில். ஏன் அப்படி?

  ஓய்வெடுத்து உடல் உறங்கும் பொழுது மனக்குரங்கு எங்கெங்கோ சென்று விடுகிறது. சொல்லக்கூடியதும் சொல்லக்கூடாததும் ஆகிய பலப்பல எண்ணங்கள் கனவுகள் என்னும் பெயரில் கூத்தடிக்கும். அதனால்தான் நாம் எழுந்திருக்கும் பொழுது மனமும் உடலும் சற்று விலகியிருப்பது போல இருக்கும்.

  இந்த இரண்டையும் எப்படி ஒன்றாக்குவது? நீராடித்தான். தலையில் ஊற்றும் நீர் மூளையை விழிப்பித்துப் பின்னர் உடல் வழியே வழிந்து ஒவ்வொரு உறுப்பாக சுறுசுறுப்பாக்கும். மனமும் உடலும் விழித்துச் செயல் சிறக்கும்.

  அந்த ஒரு நிலையில் ஆண்டவனை வணங்கல் வேண்டும் என்பதால்தான் “நீராடப் போதுவீர்” என்று முதலில் சொன்னாள் ஆண்டாள்.

 4. Vijay says:

  நீங்கள் இன்று ட்விட்டரில் போட்ட ட்விட்டுரையை தொகுத்து storify-யில் போட்டிருக்கிறேன். ட்விட்டரில் இல்லாத உங்கள் வாசகர்கள் படித்து மகிழ இங்கே உரல் கொடுக்கிறேன்.

  http://sfy.co/RwF

 5. amas32 says:

  உங்கள் பதிவை சென்று பார்த்தேன். மிகவும் உணர்வு பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள். உடல் தூய்மை உள்ளதூய்மைக்கு அடிகோலிடுகிறது. உடம்பு முடியாதவர்கள் கூட நீரை தலையில் தெளித்துக் கொண்டு சுத்தி செய்து கொள்கின்றனர். நீருக்கு அத்தனை மகிமை.
  amas32

  • GiRa says:

   உண்மை. தூய்மை செய்கின்றவை இரண்டு. ஒன்று நீர். மற்றொன்று நெருப்பு. நெருப்பானது தூய்மை செய்யும் பொழுது முழுதும் தூய்மையாக்கிவிடுகின்றது. அதுவும் தூய்மை செய்தல்தான். ஆனால் அதற்குப் பெயர் மறைத்தல். பழந்தமிழில் சொன்னால் மறைத்தல். காத்தவண்ணம் கரந்தவளே என்று அபிராமி பட்டர் சொல்கின்றார் அல்லவா.

   ஆனால் நீர்? அதுதான் கழுவுகின்றது. உயிரற்ற பொருள்களை மேலோட்டமாகவும், உயிருள்ளவைகளை மேலோட்டமாகவும் உட்புறமாகவும் தூய்மைப்படுத்துகிறது. அதனால்தான் நீரின்றி அமையாது உலகு.

 6. amas32 says:

  My last reply was for Raghavan. It does not show like that.
  amas32

 7. amas32 says:

  இங்கே பறை என்பது இறை சேவை என்றே நினைக்கிறேன். பறை தருவாய் என்று ஆண்டாள் நாச்சியார் இறைவனை வேண்டுவது, இறைவனுக்கு சேவை செய்யும் பெரும் பாக்கியத்தை எமக்கு அருள வேண்டும் என்பதே. பறை என்று அவள் இங்கு கேட்பது வாத்திய கருவி அல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆண்டாளின் பாசுரங்கள் எளிமையானவை , அனால் அவற்றில் உண்மையின் ஆதிக்கம் அதிகம். திருப்பாவையின் நோக்கம் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு முன்னேறி செல்கின்ற வழிபாட்டு இயக்கத்தை உருவாக்குவது தான்.
  ஆண்டாள் திருவடிகளே சரணம்.
  amas32

  • பறை = இசைக் கருவியே தான்!
   சங்க காலத் தமிழ் விழாக்களில் – தொட்டில் முதல் போர் வரை – அனைத்திலும் பறை உண்டு!
   அரிப் பறை, செருப் பறை, ஆகுளிப் பறை-ன்னு பல பறைகள்!
   —–

   ஆனால், ஆண்டாள், வேறு எந்த ஆழ்வார்/நாயன்மாரும் செய்யாத ஒரு புதுமையைச் செய்கிறாள்! Poetical Abstraction = கவிதை மறைக்கரு! மொத்தம் 11 பாட்டுல பறையைச் சொல்கிறாள்!

   பறை என்ற இசைக் கருவியைக் காட்டுவது போல் காட்டி, அதுல வேற என்னத்தையோ சொல்லுறா! என்ன?
   அதான் பறை வாத்தியம் ஏற்கனவே இருக்கே! அப்பறம் எதுக்கு “பறை தருவாய்”?
   —–

   பறையடிச்ச பின், தங்கள் கூலியை, பறையைக் கவிழ்த்துப் பெற்றுக் கொள்ளும் வழக்கம் அன்றும் உண்டு!
   இன்றும் கழைக் கூத்தாடும் தெருவோரச் சிறுவர்கள் மத்தியில் உண்டு:((

   பறை = பூசனைக்குரிய கருவி தான்! என்றாலும்…..அதைக் கவிழ்த்து, கோதை, அவனிடம் தனக்குரிய கூலியை உரிமையோடு கேட்கிறாள்!

   * பறை = இசைக்கருவி
   * பறை = அதில் படியளந்து பெறும் கூலி
   * பறை = எனக்கு-அவனே என்ற பேரின்பக் கூலி! = பேறு

   ஒரு காதல் உள்ளத்துக்கு, “அவன்” கொடுக்கும் உச்சகட்ட இன்பக் கூலியே=பறை!

  • “பறை” எங்கெல்லாம் வருகிறது?
   —————-

   1. நமக்கே “பறை” தருவான் (திருப்பாவை:1 – மார்கழித் திங்கள்)
   2. பாவாய் எழுந்திராய், பாடிப் “பறை” கொண்டு (தி:8 – கீழ்வானம் வெள்ளென்று)
   3. போற்றப் “பறை” தரும் புண்ணியனால் பண்டொரு நாள் (தி:10 – நோற்றுச் சுவர்க்கம்)

   4. ஆயர் சிறுமியரோமுக்கு அறை “பறை” மாயன் மணிவண்ணன் (தி:16 – நாயகனாய் நின்று)
   5. நின் கையில் வேல் போற்றி! என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் “பறை” கொள்வாம் (தி:24 – அன்று இவ்வுலகம்)
   6. உன்னை அருத்தித்து வந்தோம் “பறை” தருதியாகில் (தி:25 – ஒருத்தி மகனாய்)

   7. சாலப்பெரும் “பறை”யே பல்லாண்டு இசைப்பாரே (தி:26 – மாலே மணிவண்ணா)
   8. பாடிப் “பறை”கொண்டு யாம்பெறும் சம்மானம் (தி:27 – கூடாரை வெல்லும்சீர்)
   9. இறைவா நீ தாராய் “பறை”யேலோ ரெம்பாவாய் (தி:28 – கறவைகள் பின்சென்று)

   10. இற்றைப் “பறை” கொள்வாம் அன்று காண்! கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் (தி:29 – சிற்றஞ் சிறுகாலே)
   11. அங்கு அப்”பறை” கொண்ட ஆற்றை, அணி புதுவை…பட்டர்பிரான் கோதை சொன்ன =(தி:30 – வங்கக் கடல்கடைந்த)

 8. சுப. இராமனாதன் says:

  அப்ப, இந்த பாட்ட எழுதினது வைரமுத்து இல்லையா? 🙂

 9. சுப. இராமனாதன் says:

  ஆண்டாள் கற்பனைப்பாத்திரம் என்றல்லவோ நினைத்திருந்தேன்! திருப்பாவை முழுவதும் எழுதியது ஆண்டாளா?

  • ஆண்டாள் கற்பனைப் பாத்திரம் என்று சொன்னவர் இராஜாஜி:) அதுக்கு தமிழறிஞர்களிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்!:)

   பெரியாழ்வார், தன் பெண் பற்றி ஓரிரு பாட்டிலும்,
   இவள் தன் தந்தையைப் பற்றி பல பாடல்களிலும் குறிப்பிடுவது வழக்கம்!
   இயற்பெயர் = கோதை!
   இறைவனின் மாலையைத் தானே சூடி, அன்பால் ஆண்டதால் = ஆண்டாள்!

   இவளைப் பற்றிய குறிப்பு வரலாற்றிலும், இன்னும் சமகாலக் கவிஞர்களின் படைப்புகளிலும் இருக்கு! எனவே அவள் கற்பனையும் அல்ல! விற்பனையும் அல்ல!

 10. சுப. இராமனாதன் says:

  ஆண்டாள் என்ற அவரது பெயரை, காரணப்பெயராகவும் பார்க்கலாம். இதைப்போன்ற சுவையான சம்பவம் ஒன்று:

  சட்டசபையில் பதவி ஏற்போர் ‘கடவுள் சாட்சியாக’ என்றோ, ‘உளமாற’ என்றோ கூறிப் பதவிப் பிரமாணம் ஏற்பது வழக்கம். 2006-ல் ஜெயலலிதா ஆட்சி நீங்கி, புதிய அரசு பொறுப்பேற்ற போது பதவிப்பிரமாணம் ஏற்ற தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன், “ஆண்டவர்” சாட்சியாக என்று கூறி பதவி ஏற்றார், அதற்கு முன் தமிழகத்தை ஆண்டவர் ஜெயலலிதா என்றும், அவர் கடவுளுக்கு நிகர் என்பதையும் குறிப்பால் உணர்த்த. என்ன சொல்லாட்சி!

  மற்றபடி, கலைஞரின் சொல்லாட்சியைக் காண விரும்புவோர் இதைக்காணலாம்: http://img35.imageshack.us/img35/8415/thunai.jpg
  சட்டசபையில் அவரது துணைவியார் பற்றிய பேச்சு வந்தபோது, பீட்டர் அல்போன்சுக்கு துண்டுச்சீட்டில் கலைஞர் எழுதி அனுப்பியது! (செப்டம்பர் 2006)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s