புலவர் பெருமை

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,

’நெடிய’ என்னாது, சுரம் பல கடந்து,

வடியா நாவின் வல் ஆங்குப் பாடி,

பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,

ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,

வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை

பிறர்க்குத் தீது அறிந்து அன்றோ? இன்றே; திறப்பட

நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,

ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்

மண்ணாள் செல்வம் எய்திய

நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே

நூல்: புறநானூறு (#47)

பாடியவர்: கோவூர் கிழார்

சூழல்: வஞ்சித் திணை, துணை வஞ்சித் துறை, மேல் விளக்கம் ‘கதை’ப் பகுதியில்

முன்கதை

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற இரண்டு அரசர்கள். இருவருக்கும் இடையே ’கொலவெறி’ச் சண்டை.

இந்தச் சூழ்நிலையில், நலங்கிள்ளியின் நாட்டைச் சேர்ந்த ஒரு புலவர் நெடுங்கிள்ளியின் நாட்டுக்கு வருகிறார். அவர் பெயர் இளந்தத்தன்.

இவரைப் பார்த்த சிலர் அரசனிடம் சென்று வத்திவைக்கிறார்கள். ‘இந்தப் பயலப் பார்த்தா சந்தேகமா இருக்கு, ஒருவேளை நலங்கிள்ளியோட ஒற்றனா இருப்பானோ? நம்மை உளவு பார்க்க வந்திருப்பானோ?’

இவர்கள் சொன்னதை நெடுங்கிள்ளி நம்பிவிடுகிறான். இளந்தத்தனைக் கொல்லத் தீர்மானித்துவிடுகிறான்.

நெடுங்கிள்ளியின் அரசவையில் இருந்த கோவூர் கிழார் பதறிப்போகிறார். ‘ஐயா, புலவர்கள் பிழைப்பே ஊர் ஊராப் போய்ப் பாட்டுப் பாடிச் சம்பாதிக்கறதுதான், எங்கமேல சந்தேகப்படாதீங்க, உங்களுக்குப் புண்ணியமாப் போகும்’ என்று இந்தப் பாட்டைப் பாடி இளந்தத்தனைக் காப்பாற்றுகிறார்.

உரை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அரசே,

நல்ல திறமையைக் கண்டால் பாராட்டும் பரிசும் அள்ளித் தருகிற வள்ளல்கள் இந்த உலகில் நிறையப் பேர் உண்டு. அவர்களைத் தேடிப் போவதுதான் புலவர்களின் வாழ்க்கை. பழம் உள்ள மரத்தை நாடிச் செல்லும் பறவைகள் நாங்கள்.

இதற்காகப் புலவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமில்லை, பல காட்டுப் பாதைகளைக் கடந்து செல்லவேண்டியிருக்கும், அப்போதும் நாங்கள் ‘தூரம் அதிகமாச்சே’ என்று புலம்பாமல் நடக்கிறோம், வள்ளல்கள் இருக்கும் நாட்டுக்குச் சென்று சேர்கிறோம், அங்கே எங்களது குற்றமில்லாத நாக்கினால் அந்தப் பெரியோர்களின் வல்லமையைப் பாடுகிறோம், அவர்கள் தருகிற பரிசை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

அந்தப் பரிசுகளையும் நாங்களே வைத்துக்கொள்வதில்லை, எல்லோரோடும் பகிர்ந்து சாப்பிடுகிறோம், எங்களிடம் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளித் தருகிறோம்.

புலவர்களுடைய ஆசையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எங்களது புலமையை உலகம்மதிக்கவேண்டும், அதற்கு ஏற்ற மரியாதையையும் பரிசையும் தரவேண்டும்.

இதுதான் எங்கள் வாழ்க்கை. நாங்கள் எப்போதும் மற்றவர்களுக்குத் தீமை நினைக்கமாட்டோம். ஒருவேளை யாராவது எங்களைச் சவாலுக்கு அழைத்தால்கூட, அவர்களைப் புத்தியால் வெல்வோம், எதிர்த்தவர்கள் தலை குனிந்து வெட்கப்படும்படி கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நடப்போம்.

அரசனே, சிறந்த புகழும் மண்ணை ஆளும் செல்வமும் நிறைந்த உங்களைப் போன்ற செம்மல்களை நம்பிதான் புலவர்கள் வாழ்கிறோம். எங்களில் ஒருவரான இந்த இளந்தத்தன்மீது தயவுசெய்து சந்தேகப்படவேண்டாம், தண்டிக்கவேண்டாம்.

துக்கடா

 • சண்டை போடும் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவரும் ஏற்கெனவே #365paa வரிசையில் வந்தவர்கள்தான் : https://365paa.wordpress.com/2011/07/10/005/
 • இந்தப் பாடலின் விசேஷம், அந்தக் காலப் புலவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாக விவரிப்பது. முக்கியமாக ‘பரிசில் வாழ்க்கை’ என்ற இரண்டு வார்த்தைகளில் எத்தனை சோகம்!
 • அது சரி, இளந்தத்தன் நிஜமாகவே அப்பாவியா? அல்லது ஒற்றரா? கோவூர் கிழார் இந்தப் பாடலைப் பாடியதும் அரசன் இளந்தத்தனை விடுவித்துவிட்டானா? பதிலுக்கு இளந்தத்தன் எந்தப் பாடலும் பாடவில்லையா? அந்தப் பின்கதை உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்

163/365

Advertisements
This entry was posted in ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, நாடகம், புறநானூறு, புறம். Bookmark the permalink.

4 Responses to புலவர் பெருமை

 1. புறநானூற்று பாடல்களில் புலவர் பெருமை பேசும் பாடல்கள் பல உள்ளன. அவற்றுள் எனக்கு பிடித்த பாடலின் ஒரு வரி:
  “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”

 2. amas32 says:

  நேற்றைய பாடலில் ஒரு பாணன் மற்றொரு பாணனுக்கு அரசனிடம் சென்று பரிசு கிடைத்து வறுமை நீங்க வழி காட்டுகிறான். இன்றைய பாடலில் உயிரையே காக்கிறான். என் மனதை எப்பவும் மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு நிகழ்வு என்னவென்றால் கலைஞர்கள் ஏழ்மையில் வாடுவது தான். ஒரு சில கலைஞர்களே வெளிச்சத்துக்கு வந்து பெரும் புகழும் செல்வமும் பெறுகிறார்கள். ஏனையோர்கள் வறுமையிலேயே வாடுகிறார்கள். அது என்ன சாபமோ தெரியவில்லை. இங்கும் கோவூர் கிழார் எப்படி புலவர்கள் ஊர் ஊராகச் சென்று, அரசனை புகழ்ந்து கவி இயற்றி, அவர் தரும் பரிசில் வாழ்கையை ஓட்டுகின்றனர் என்பதைக் கூறும் பொழுது மனம் வலிக்கின்றது. இந்தப் பாடலில் புலவர்கள்படும் அல்லல்களைப் பற்றி பல செய்திகளை சொல்கிறார். குறைப்பட்டுக் கொள்ளாமல், கொடுப்பதை மகிழ்ச்சியுடன் பெற்று, அவற்றையும் பிறருடன் பகிர்ந்து, தனித் திறமையால் அரசரையும் பாடி, தங்களை சவாலுக்கு அழைப்பவர்களையும் அறிவினால் வெல்லும் திறன் படைத்தவர்களே ஆயினும், வாழும் வகைக்கு அரசனையே அண்டி இருக்க வேண்டியுள்ள நிலைமையை எடுத்துரைக்கிறார் கோவூர் கிழார். அவனுக்காக வாதாடியதற்காக இளந்தத்தன் இவருக்கு மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறான்.
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s