தயிர்ப்பானைக்குள் புலி

நள் இருள் விடியல் புள் எழப் போகி

புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி

ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ்

உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து

புகர் வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ

நாள் மோர் மாறும்…

நூல்: பெரும்பாணாற்றுப்படை (வரிகள் 155முதல் 160வரை)

பாடியவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்

சூழல்: பாடாண் திணை, ஆற்றுப்படைத் துறை (இதுபற்றிய விளக்கம் துக்கடாவில்), ஆயர்கள் வீட்டில் நிகழும் ஒரு காலை நேரக் காட்சி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அதிகாலை நேரம். ராத்திரி முழுக்கக் கனமாகக் கவிந்திருந்த இருட்டு இப்போதுதான் விலகத் தொடங்கியிருக்கிறது. பறவைகள் தூக்கம் கலைந்து எழுகின்றன. கூடவே ஆயர் குலப் பெண்களும் எழுந்துவிட்டார்கள். சுறுசுறுப்பாக வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.

பானையில் இனிப்பான தயிர் கெட்டியாகத் தோய்ந்திருக்கிறது. காளான் மொட்டைப்போல் குவிந்த சிறு மொட்டுகள் அதன்மீது உறைந்துள்ளன.

அந்தத் தயிர்ப் பானையில் ஆயர் பெண்கள் மத்தைப் போட்டுக் கடைந்து வெண்ணெய் எடுக்கிறார்கள். அப்போது புலி உறுமுவதுபோல் சத்தம் எழுகிறது. சுற்றி எங்கும் நுரை சிதறுகிறது.

வெண்ணெய் எடுத்தபிறகு, மீதமுள்ள மோரை ஒரு பானையில் ஊற்றுகிறார்கள். அந்தப் பானையின் விளிம்பில் தயிர்ப் புள்ளிகள் தெறித்துள்ளன.

பின்னர் அவர்கள் தலையில் சும்மாடை வைத்துக்கொள்கிறார்கள். அதன்மீது மோர்ப் பானையை வைத்துக்கொண்டு விற்கக் கிளம்புகிறார்கள்.

துக்கடா

 • ’ஆற்றுப்படை’ என்றால், ‘ஆற்றுப்படுத்துதல்’, சிபாரிசு செய்தல், ‘எனக்கு இது கிடைத்தது, நீயும் போய்ப் பெற்றுக்கொள்’ என்று வழி காட்டுவது (கிட்டத்தட்ட Employee Referralமாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்!)
 • பெரும்பாணாற்றுப்படையில் வரும் பாணன் (பண் இசைத்துப் பாடுகிற கலைஞன்) வறுமையில் வாடியவன், தொண்டைமான் இளந்திரையன் என்ற அரசனைச் சந்தித்துப் பாடுகிறான், அவனிடம் பெரும் பரிசுகளைப் பெறுகிறான், அதனால் அவனது ஏழைமை தீர்கிறது
 • அதன்பிறகு, அவன் இன்னொரு பாணனைச் சந்திக்கிறான். ’நீயும் தொண்டைமான் இளந்திரையனைச் சென்று பார், உனக்கும் அவன் பரிசுகளை அள்ளித் தருவான், உன் வாழ்க்கையும் வளமாகிவிடும்’ என்று ஆற்றுப்படுத்துகிறான்
 • ஜஸ்ட் ஐந்தே வரிகளில் இந்தப் பாடல் எத்தனை நுணுக்கமான விஷயங்களைச் சொல்லிவிடுகிறது பாருங்கள்:
 • 1. நன்கு உறைந்துள்ள தயிரின் மேல்பகுதியில் சிறு கொப்பளங்களைப் பார்க்கலாம் (கொப்பளமா? கொப்புளமா? எது சரி?) அதைக் கவனித்து, காளான் மொட்டை உவமையாகச் சொல்கிறார்!
 • 2. பானையில் மத்தைப் போட்டுக் கடையும்போது ஏற்படுகிற சத்தத்துக்குப் புலியின் குரல் உவமை
 • 3. தயிர் கடையும்போது சுற்றிலும் துளிகள் தெறிக்கும், அவை பக்கத்தில் உள்ள மோர்ப் பானையின் விளிம்பில் பட்டுள்ளன
 • 4. அதேபோல், தயிர் கடையும்போது வருகிற நுரை, வெண்ணெய் வரப்போவதன் அடையாளம், அதையும் இங்கே பதிவு செய்துள்ளார் புலவர்
 • 5. அடுத்து, மோர்ப்பானையைத் தூக்கிச் செல்வதற்காக ஒரு மெல்லிய துணியைச் சுருட்டிச் சும்மாடாக்கித் தலையில் வைக்கிறார்கள் ‘சுமட்டு’ என்பதுதான் பின்னர் ‘சும்மாடு’ என்று திரிந்துவிட்டது, இப்போதும் வியாபாரிகள் / கட்டட வேலை செய்கிறவர்கள் தலையில் சும்மாடைப் பார்க்கலாம்
 • 6. ‘நாள் மோர்’ என்றால் அன்றைக்குக் கடைந்த Fresh மோர். அதுவும் அதிகாலையிலேயே விற்பனை!
 • முக்கியமாக, நமக்கு இது ஒரு காட்சிமட்டுமே, ஆயர் குலப் பெண்களுக்குத் தினசரிக் கடமை. நாள்தவறாமல் செய்தாகவேண்டிய விஷயம். இதை நினைத்து வியக்காமல் இருக்கமுடியாது!

162/365

Advertisements
This entry was posted in ஆற்றுப்படை, பாடாண், வர்ணனை. Bookmark the permalink.

5 Responses to தயிர்ப்பானைக்குள் புலி

 1. Arunkumar says:

  puli muzhangaadhu. Urumave seiyum. Siriya marabu vazhu.

 2. amas32 says:

  தான் பெற்ற நன்மையை தனக்கு மட்டுமே என்று எண்ணாமல் பிறரும் நன்மை பயக்கட்டும் என்று புலவர் பிரான் மற்றொரு பாணனுக்கு வழிக்காட்டியது சிலாகிக்க வேண்டிய ஒரு செயல்! வறுமையில் வாடியவருக்கு தான் இன்னொரு வறுமையில் வாடுபவரின் துன்பம் விளங்கும்.
  கடியலூர் உருத்திரங்கண்ணனார் எப்படி ஒரு ஆயர் குல பெண்மணியாக, தயிர் கடைந்து மோர் ஆக்கும் வித்தையை கற்று வைத்திருந்தார்? இன்றும் பாரையாகத் தோய்ந்த தயிரின் மேல் சிறு bubbles பார்க்கலாம். வெண்ணெய் எடுத்த மோரின் ருசியே அலாதியானது. அந்த வெண்ணையும் மிகச்சுவையாக இருக்கும். திரைப்படம் போல் காட்சி விரிகிறது, திரு சொக்கன் அவர்களே உங்கள் விளக்கத்தில்! இருபது வருடத்துக்கு முன் கூட எங்கள் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கும் வழக்கம் இருந்தது. இப்பொழுது வீட்டில் வாங்குவதே ஒரு சதவிகித கொழுப்பு சத்து உள்ள பால் தான், எங்கேயிருந்து வெண்ணெய் வரும்?
  amas32

 3. தயிர்ப் பானையில் எலுமிச்சை/ சில சமயம் புளி போட்டு வைப்பாங்க! புளியா? புலியா?:))
  நல்லாச் சத்தம் போடுது போங்க பானையும் மத்தும்:) Sampleக்கு ஒரு audio file போட்டிருக்கலாம்-ல்ல?:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s