போரில் சிறந்தது

வாரிக் களத்து அடிக்கும், வந்து பின்பு கோட்டை புகும்,

போரில் சிறந்து பொலிவாகும் … சீர் உற்ற

செக்கோலமேனித் திருமலைராயன் வரையில்

வைக்கோலும் மால் யானையாம்.

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: வைக்கோலும் யானையும் ஒன்றுதான் என்ற பொருளில் பாடிய சிலேடை வெண்பா

பல சிறப்புகள் நிறைந்தவன், சிவந்த திருமேனியைக் கொண்டவன், அந்தத் திருமலைராயனின் மலைச்சாரலிலே வைக்கோலும் மத யானையும் ஒன்றுதான்.

எப்படி? இதோ இப்படி:

வைக்கோல்:

வாரிக் களத்து அடிக்கும்:

வயலில் அறுவடை செய்து முடித்தவர்கள் நெல்லை வாரி வந்து களத்துமேட்டில் அடிப்பார்கள். அதனால் நெல் பிரிந்து வைக்கோல் உருவாகும்

வந்து பின்பு கோட்டை புகும்:

அதன்பிறகு, கோட்டைக்குள் புகுந்துகொள்ளும் (இதற்கான விளக்கம் ‘துக்கடா’வில்)

போரில் சிறந்து பொலிவாகும்:

வைக்கோல் போராகக் குவிக்கப்பட்டு அழகாகத் திகழும்

யானை

வாரிக் களத்து அடிக்கும்:

போர்க்களத்தில் பகைவர்களைத் தும்பிக்கையால் தூக்கிக் கீழே அடிக்கும்

வந்து பின்பு கோட்டை புகும்:

பின்னர் எதிரியின் கோட்டை வாசல் கதவைத் தாக்கி உடைத்து உள்ளே நுழையும்

போரில் சிறந்து பொலிவாகும்:

இதுபோல் பல போர்களில் சண்டையிட்டு ஜெயித்துச் சிறந்து விளங்கும்

துக்கடா

 • ’#365paa வரிசையில் சிலேடைப் பாடல்கள் வேண்டும்’ என்று நண்பர் சண்முக சுந்தரம் (http://twitter.com/#!/sashasundar) ட்விட்டரில் கேட்டார். அவருக்காக இன்றைய பாடல்
 • ’நெல் கோட்டை’ என்றால், விதை நெல்லைப் பதப்படுத்திவைப்பதற்கான ஒரு பழங்கால முறை என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இன்று இந்தப் பாடலைப் பிரசுரித்தபின் இணையத்தில் அதுபற்றி மேலும் படித்துத் தெரிந்துகொண்டேன். முதலில், விதை நெல்லை வெய்யிலில் நன்றாகக் காயவைப்பார்களாம், பின்னர் வைக்கோலைக் கயிறுபோல் திரித்துக் கூண்டுபோன்ற ஒரு வடிவத்தைச் செய்வார்களாம், அதற்குள் இன்னும் கொஞ்சம் வைக்கோலைப் பரப்பி, மேலே விதைநெல்லைப் போட்டு மூடிவிடுவார்களாம். இதற்கு மேலே மாட்டுச்சாணத்தைப் பூசிப் பாதுகாத்துவைப்பார்களாம். இதன்மூலம் விதை நெல் ஒரே வெப்பநிலையில் பராமரிக்கப்படுமாம், சாணம் பூசப்பட்டுள்ளதால் பூச்சிகளும் அதனை நெருங்காதாம்
 • மேல்விவரங்கள், புகைப்படம் இங்கே : http://www.dinakaran.com/Books_detail_2011.asp?Nid=572
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • வாரிக் களத்தடிக்கும், வந்துபின்பு கோட்டைபுகும்
 • போரில் சிறந்து பொலிவாகும் … சீருற்ற
 • செங்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
 • வைக்கோலு மால்யானை யாம்

160/365

Advertisements
This entry was posted in காளமேகம், சிலேடை, தனிப்பாடல், நண்பர் விருப்பம், வார்த்தை விளையாட்டு, வெண்பா. Bookmark the permalink.

11 Responses to போரில் சிறந்தது

 1. haiya…
  எனக்குப் புடிச்ச நெல்லுத் தகவல்கள்! நன்றி சொக்கரே!:) மொத்தம் மூனு இருக்கு!
  1. நெல்லுக்கூடு/ நெற்குதிர்
  2. நெல்லுக் கோட்டை
  3. நெற்குன்றம்
  மூனுமே எங்கூரு வாழைப்பந்தல்-ல்ல செய்யறது வழக்கம் தான்!
  ————

  நெல்லுக்கூடு
  = வீட்டிலே, உணவு நெல்லைச் சேகரித்து வைக்கும் குதிர்! ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல’-பழமொழியும் இதுல இருந்து தான்:)

  குதிர் ஆளு உசரத்துக்கு இருக்கும்! அதுல கொட்டி வைச்சா, நெல்லு தண்ணி பட்டு உளுத்துப் போகாது!
  வேணுங்கறப்போ எடுத்து, நெல்லு குத்தி, அரிசி ஆக்கி, சோறு பொங்கிப்பாங்க! = Fresh Rice!
  நெல்லுக் குத்தி எடுக்கும் அரிசியில், அப்போதே வைக்கும் சோற்றின் வாசமே தனி:)))
  ———–

  நெல்லுக் கோட்டை
  = நீங்க சொன்னது தான்! = விதை நெல்லுக்கு கட்டி வைக்கறது!
  பேரு தான் கோட்டை, ஆனா நெற்குதிரை விடச் சிறுசாத் தான் இருக்கும்! இதை விடச் சிறுசு நெற்குன்றம்! Actually Reverse Orderல்ல பேரு வச்சிருக்காக:)

  விதை நெல்லு, ரொம்ப கவனமா, களத்து மேட்டிலேயே அறுக்கும் போது, பிரிச்சி வச்சிருவாங்க! அம்மனுக்கு வேண்டிக்கிட்டு, காய வச்சி, நெல்லுக் கோட்டை கட்டிருவாங்க! பூச்சிப் பொட்டுத் தாக்காம, உள்ளேயே சூடா இருக்கும்!

  திருப்பி, ஆடி மாசம் விதைக்கும் போது, நெல்லுக் கோட்டையில் இருந்து எடுத்து, தண்ணியில் ஊற வச்சி, மூட்டம் போட்டு, அப்பறமாத் தெளிப்பாங்க!
  ———–

  நெற்குன்றம்
  = இது கொஞ்சம் வேலை வாங்கும்! ஆனா இதுவே Best!
  விதை நெல்லு, என்ன தான் பார்த்துப் பார்த்து தூவினாலும், எலி தின்னுரும்! இல்ல பறவை கொத்திக்கிட்டுப் போவும்! விதைச்சதுல பாதி தான் காணும்! :((

  இதுக்கு என்ன பண்ணுவாங்க…
  விதை நெல்லை, களி மண்ணு/வயக்காட்டு மண்ணுல பிறட்டி…அந்த உருண்டையை, மணல் சல்லடையில் தேய்ப்பாங்க!
  களிமண் உருண்டை, பொடி உருண்டையா விழும்! ஒவ்வொரு பொடியிலும் ஒத்தை/ரெட்டை நெல்லு இருக்கும்!
  இதைத் தூவினா, பறவை/எலி திங்க முடியாது! மொத்த விதைப்பும் காணும்!

  இப்படியெல்லாம் கடினப்பட்டு, பயிரு வச்சா, அதன் அருமை தெரியாம…நாம சாப்பாட்டை வீண் அடிக்கிறோம்!:((
  Computer Program மாதிரி பொத்தானை அழுத்தி, மாத்திக்கிற விசயம் இல்ல விவசாயம்! Ctrl C, Ctrl V பண்ண முடியாது….ஒவ்வொரு விதைநெல்லும் பாடுபட்டுத் தான் பயிர் ஆவுது! முருகா!

 2. balaraman says:

  திரு. சொக்கநாதனுக்கும், திரு. கண்ணபிரான் ரவிசங்கருக்கும் என் பாராட்டுகள்! நான் வியந்து போற்றும் புலவர்களில் ஒருவர் காளமேகப்புலவர். அவருடைய பாடலுக்கு இங்கே விளக்கம் கொடுத்ததற்கு நன்றிங்க.

  காளமேகப்புலவர் பாணியில் நானும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறேன்! :)))
  http://bit.ly/9QXRAD

  ஒரு மாறுபட்ட பொருள்கோள் கொண்டு படைத்த கவிதை இது! 🙂 – http://bit.ly/dUOI6t

 3. amas32 says:

  நீங்க இங்க பதிஞ்சிருக்கற செய்திகள் எல்லாம் இந்த கால குழந்தைகளுக்கு சிறிதும் தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஈடுபாடும் இல்லை. நல்ல வேளை நாம் இன்னும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கத்தை கடைபிடிக்கிறோம். புராணக் கதைகளுடன் இந்த மாதிரி முக்கியமாக, நாம் சாப்பிடும் சோறு எங்கிருந்து வருகிறது என்பதையும் விவரமாகக் கதை வடிவில் அவர்களுக்கு சொல்ல வேண்டும். விதை நெல்லில் ஆரம்பித்து வீட்டில் சோறு பொங்கும் வரை நடக்கும் நிகழ்வுகளை விவசாயக் கதையாகச் சொல்லி வளர்த்தால் நன்றாக இருக்கும். எனக்கு என் தாய் சோறு ஊட்டும் பொழுது நான் சாப்பிடாமல் வீணடிக்கும் ஒவ்வொரு பருக்கையும் கடற்கரையில் நின்று அழும் என்று கதை சொல்லியிருந்தார்கள். இன்றும், சிறு வயதில் என் கற்பனையில் விரிந்த அந்த காட்சி சாப்பாட்டை வீண் செய்யாமல் சாப்பிட உதவுகிறது 🙂 அதே மாதிரி இப்பொழுதும் தாய்மார்கள் விவசாயி எவ்வளவு கஷ்டப்பட்டு விவசாயம் செய்து தானியங்களை வழங்குகிறார் என்று சொல்லிக் கொடுத்தால் சாப்பாட்டை வீணடிக்க மாட்டார்கள்.
  வைக்கோலையும் சம்மந்தமே இல்லாத யானையும் ஒன்றே என்ற பொருளில் பாடிய காளமேகப் புலவரின் சிலேடை அருமை 🙂
  amas32

 4. காளமேகம்… எப்பேர்ப்பட்ட சிலேடைக் கவிஞர்… முன்னொருகாலத்தில் அஷ்டாவதானம், தசாவதானம் என்று முறைகள் இருந்தது.. அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஒரே சமயத்தில் கவிபாடிக்கொண்டே எட்டு செயல்களைச் செய்வது அஷ்டாவதானம்.. பத்து செயல்களைச் செய்வது தசாவதானம்.. இதில் சதாவதானம் என்றொரு நிலையும் உண்டு..அதாவது, பாடிக்கொண்டே நூறு விதமான செயல்களை முறைப்படி செய்வது… அதனிடையே எப்பேர்ப்பட்ட விஷயங்களையும் ஞாபகம் வைத்திருப்பது.. காளமேகம் எப்பேர்ப்பட்ட சதாவதானி என்றால், நீண்ட தந்தங்களை உடைய யானையை வரச்செய்து, அதன் தந்தங்களில் நீண்ட வாட்களைப் பொருத்தி, அந்த வாட்களுக்கு நடுவில் தன் தலையைப் புகுத்தி, யானை தன் தலையை ஆட்டிக்கொண்டே இருக்கும்..அதன் அசைவுக்கு ஏற்ப தந்தமும்,அதில் பொருத்தப்பட்ட வாட்களும் அசையும்… காளமேகம் அதன் அசைவிற்கேற்ப தன் தலையை அசைத்து,அசைத்து மேற்கூறிய சதாவதானம் செய்வதில் ஆகச்சிறந்தவர்…. கொஞ்சம் பிசகினாலும், தலை துண்டாகிவிடும்.. அந்த நிலைமையில் சதாவதானம் செய்யக்கூடிய அற்புதமான மனிதர்…

  அந்த ஆகச்சிறந்த பல்கலை வல்லுனரை நினைவுபடுத்துமாறு பாடல் இட்டமைக்கு சங்கத் தலைவர் @nchokkan அவர்களுக்கு என் நன்றிகள்.

  • amas32 says:

   காளமேகப் புலவரைப் பற்றிய இந்த அறிய செய்திக்கு நன்றி.
   amas32

  • சதாவதானம் – காளமேகம் பற்றிச் சொன்னதுக்கு நன்றி பாலா!:)

   காளமேகம் பத்தி நெறைய “செவி வழிக்” கதைகள் உண்டு!
   மன்னன் கண்டு கொள்ளாததால், மேலே உள்ள பாடலில் வரும் திருமலைராயன் பட்டினத்தை, பாடியே அழிச்சாரு என்றும் ஒரு கதை!:)

   தோழன் இராகவன் முன்பு இட்ட காளமேகப் பதிவு இதோ
   http://gragavan.blogspot.com/2005/07/blog-post.html

 5. senthilkumar says:

  Can you get me the Poem மூடி திறகின் முகம் கட்டும் similarity between snake and sesame oil

  • ஆடிக் குடத்து அடையும், ஆடும் போதே இரையும்
   மூடித் திறக்கின் முகம் காட்டும் – ஓடி,மண்டை
   பற்றின் பரபர என்னும், பாரில் பிண்ணாக்கும் உண்டாம்
   உற்றிடு பாம்பு எள் எனவே ஓது! 🙂

   • senthilkumar says:

    Dear KRS, மிக்க நன்றி ,

    இது போல் வேறு இருப்பின் தயவு செய்து தொடர்ந்து பதிவு செய்யவும்

 6. குதிர், கோட்டை, குன்று விவரங்களைச் சொன்னதற்கு மிக்க நன்றி இரவி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s