உன் விருப்பம்

வேண்டத் தக்கது அறிவோய் நீ,

வேண்ட முழுவதும் தருவோய் நீ,

வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீ யாது அருள் செய்தாய்,

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,

அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

நூல்: திருவாசகம் (குழைத்த பத்து #6)

பாடியவர்: மாணிக்கவாசகர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

இறைவா,

எனக்கு வேண்டியது எது என்று உனக்குதான் தெரியும். அதை நான் விரும்பிக் கேட்டால் அப்படியே தந்துவிடுகிறவன் நீ.

பிரமனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள். ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை. எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய்.

நான் எதை விரும்பவேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, சொல். நான் அதையே உன்னிடம் வேண்டுவேன்.

’ம்ஹூம், அதெல்லாம் சரிப்படாது, நீயாக எதையாவது கேள்’ என்கிறாயா?

நீ இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும்? நான் எதைக் கேட்பேன்? அப்படியே நான் கேட்டாலும், அதுவும் உன்னுடைய விருப்பம்தானே?

துக்கடா

 • சமீபத்தில் சிவசமுத்ரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அங்கே ஒரு சிறு கோயில். சிவபெருமான் சன்னிதி. மேலே ஒரு மீனின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டிய அர்ச்சகர் ‘இந்த மீனுக்குக் கீழே நின்று நீங்கள் எதை வேண்டினாலும் அப்படியே கிடைக்கும், வேண்டிக்கொள்ளுங்கள்’ என்றார்.
 • நாங்களும் நின்றோம். ஆனால் அந்த விநாடியில் எதையும் கேட்கத் தோன்றவில்லை. எத்தனையோ விருப்பங்கள் இருந்தும், ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை. ‘எங்களுக்கு எது சரி என்று நினைக்கிறாயோ அதைச் செய்’ என்றுதான் சொல்லத் தோன்றியது
 • மாணிக்கவாசகரின் இந்த அற்புதமான பாடலைப் படித்தவுடன் அந்த மீன் பொம்மைதான் ஞாபகம் வந்தது. நாம் என்ன வேண்டவேண்டும் என்று தீர்மானிக்கிறவன் இறைவன். நாம் சரியானதைக் கேட்டால் உடனே தந்துவிடுவானாம், அதுவும் குறை வைக்காமல் முழுசாகத் தந்துவிடுவானாம்
 • ஒருவேளை அவன் விரும்பாத ஒன்றை நாம் கேட்டால்? இறைவன் தரமாட்டானா? அவனால் முடியாதா?
 • முடியும். ஆனால் தரமாட்டான். பாலோ சாப்பாடோ கேட்கும் குழந்தைக்கு உடனே தரும் தாய், சாக்லெட் கேட்டால் மறுப்பதுபோலதான், ஃப்ரிட்ஜுக்குள் டப்பா நிறைய சாக்லெட் இருந்தாலும்கூட அவள் மறுப்பது ஏன்? அதே லாஜிக் இங்கேயும் 🙂
 • அயன் (பிரமன்), மால் (திருமால் / விஷ்ணு) ஆகியோருக்கு அரியோய் நீ என்ற வரியில் ஒரு பிரபலமான கதை இருக்கிறது. கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவேளை தெரியாது என்றால் சுருக்கமாக இங்கே: பிரமனுக்கும் திருமாலுக்கும் யார் பெரியவர் என்கிற சர்ச்சை, அதைத் தீர்த்துவைப்பதற்காகச் சிவன் ஒளிப்பிழம்பாகிறார், அவரது முடியைத் தேடிப் பிரமன் அன்னப்பறவையாகப் பறக்கிறார், காலடியைத் தேடித் திருமால் பன்றி உருவெடுத்துக் கீழே செல்கிறார், ஆனால் இருவருக்கும் சிவனின் அடி, முடி தென்படவில்லை. கர்வம் கலைகிறது
 • இப்படி பிரமனுக்கும் திருமாலுக்கும் தண்ணி காட்டிய சிவன், இங்கே மாணிக்கவாசகரின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவனே விரும்பி வருகிறான். பக்தர் பெருமை!

159/365

This entry was posted in கதை கேளு கதை கேளு, சிவன், திருவாசகம், பக்தி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

14 Responses to உன் விருப்பம்

 1. Nagu says:

  அருமையான பாடல். அருமையான விளக்கம். தொடரட்டும் உங்கள் ‘பா’த்தொண்டு.

  கர்வம் கலைகிறது என்பதற்கும் தாண்டி அந்தக் கதை செல்கிறது. சிவன் முடியிலிருந்து விழுந்த மலரை வைத்து பிரம்மன் தலையைத் தொட்டுவிட்டேன் என்று ஜல்லியடிக்கிறார். அடியைக் காணவில்லை என்று விஷ்ணு தோல்வியை ஒத்துக் கொள்கிறார். பொய் சொன்னதற்காக பிரம்மாவிற்கு சாபம் கிடைத்தது – அதனால் அவருக்கு எந்தக் கோயிலும், வழிபாடும் கிடையாது..

  • psankar says:

   துக்கடா: அப்படி விழுந்த மலர் ஒரு தாழம்பூ. தாழம்பூ பிரம்மா இருவரும் கூட்டாக சேர்ந்து செயல்பட்டனர். அதனால் தான் சிவன் கோவிலில் தாழம்பூ வழிபாடு கிடையாது 🙂

 2. //பாலோ சாப்பாடோ கேட்கும் குழந்தைக்கு உடனே தரும் தாய், சாக்லெட் கேட்டால் மறுப்பதுபோலதான்//

  “ஆராய்ந்து” அருளேலோ ரெம்பாவாய்! 🙂 – தோழி கோதையின் வாக்கு!

  ஒரு குழந்தைக்கு நேத்து பூரா வயித்துவலி!
  இன்னிக்கி பலாச்சுளை வேணும்-ன்னு அழுவுது!
  கொடுப்பாளா?
  குழந்தை வீல் வீல்-ன்னு கத்தி, அம்மாவைத் திட்டுது!
  திட்டில் இருந்து தப்பிப்போம்-ன்னாச்சும் குடுப்பாளா?
  தன்னையே மறுதலித்தாலும், அவள் தரமாட்டாள்!

  தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் வரட்டும்! ஆனால் குழந்தை நலமே முக்கியம்! = இதுவே ஆத்திகர்கள்/நாத்திகர்கள் பாலும், இறைவனின் உள்ளம்!

  அதுக்காக, குடுக்கவே மாட்டாள்-ன்னு இல்ல! இன்று தர மாட்டாள்! வலி தீர்ந்து, குணமானதும் தருவாள்! நாம் “குணம்” பெற்றதும், அவன் குடுப்பான்!:) = தாயுமானவன்!

 3. GiRa says:

  “அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே” அப்படீன்னு ஒருத்தர் சொன்னாரு.

  மலையப் பிடிக்க முடியுமா? தொலைவிலிருந்து பாக்கலாம். கொஞ்சம் பக்கத்துல போனா அங்கங்க தொட்டுப்பாக்கலாம். பிடிக்க முடியுமா? அதென்ன லட்டா? ஆனா இவரு பிடிச்சிருக்காரு. கையால இல்ல. அன்பால. அப்படிப்பிடிபட்ட மலைதான் அண்ணாமலை.

  இதுதான் அடிமுடி அறிய ஒன்னாத கதை. கதைய விடுங்க. கருத்தப் பிடிங்க? அன்பெனும் பிடிக்குள் அகப்படும் கருத்தே. 🙂

  உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்னு இன்னொருத்தரு சொன்னாரு. அறியவன்னுதானே சொல்லீருக்கனும். அதுக்கு மேல மரியாதை வேற இல்ல. அரியவர்னு சொன்னாலும் செய்யுள் இலக்கணம் சரியாத்தானே இருக்கு.

  ஏன்னா அன்பெனும் பிடிக்குள்ள அகப்பட்ட பிறகு மரியாதையாவது மண்ணாங்கட்டியாவது. “கணவனார் மேல் மரியாதை உண்டு ஆகையால் எந்தச் சூழ்நிலையிலும் என் கால் அவர் மேல் பட்டு அவமரியாதை” ஆகக்கூடாதுன்னு மனைவி நெனச்சா குடும்பம் நடக்குறது எப்படி? 🙂 கணவன் கிட்டயே அன்பு மிகும் சமயங்கள்ள மரியாதை காட்டுறதில்ல. கடவுள் கிட்ட மட்டும் அது எதுக்கு. அதுதான் அரியவன்னு கூப்புடுறதுக்கான காரணம்.

  அறியவன் அரியவன் பிரச்சனைக்கு அடுத்து வருவோம். வரிய நல்லாப் படிப்போம். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்.

  ரொம்பப் பேரு வேற மாதிரி சொல்வாங்க. நான் மாத்திச் சொல்றேன்.

  இறைவன் எங்க இருக்காரு?

  எல்லா எடத்துலயும் தான். அதாவது தானே உலகாகித் தனக்குள்ளே தான் அடங்கி இருக்கிறான்.

  அப்படி உலகெலாம் இருக்கும் ஆண்டவனை உணர்ந்து ஓதுவது எளிமையானதா? அன்பிருந்தா எளிமை. இல்லைன்னா அரியதுதானே. நம்ம கிட்ட தூய அன்பு இருந்தா உலகெலாம் உணர்ந்து ஓதற்கு எளியவன். 🙂

  ஒரு ஊர்ல ஒரு மடம். அந்த மடச் சாமியார் தெனமும் பூஜை தியானம் செய்வாரு. மடத்துல உக்காந்து நமச்சிவாயம் நமச்சிவாயம்னு சொல்வாரு. அந்த வழியா தெனமும் ஒருத்தன் வயலுக்குப் போறான். அவன் சிவலிங்கத்தப் பாத்து கும்புடு போட்டுப் போவான். அவனுக்கு அதான் தெரியும். மடச் சாமியாரோ ரொம்பப் படிச்சவரு.

  இந்த விவசாயி வரும் போது அவனப் பாத்துக் கும்புட்டு நமச்சிவாய வாழ்கன்னு சொல்வாரு. என்ன சாமி அவரக் கும்புடுறீன்னு கேட்டா…..

 4. GiRa says:

  நமச்சிவாயம் உலகத்துல எல்லாம் இருக்குறான். அந்த விவசாயிக்குள்ளயும் இருக்குறான். அவனுக்குள்ள ஆண்டவனப் பாக்குறேன்னு உருகுவாரு. அதப்பாத்து மக்களெல்லாம் உருகுவாங்க.

  எல்லாரும் போனதும் நமசிவாயத்துல இருக்குற மவை முழுங்கீட்டு நசிவாய நசிவாயன்னு திட்டுவாரு. ஏன்? தெனமும் வந்து கும்புடுற விவசாயி ஒரு நாளாச்சும் வாழக்கா வாழப்பூ நெல்லு பருப்பு பழம்னு கொண்டாந்து குடுத்திருப்பானா! அதான் அவருக்குக் கோவம். ஊருக்கு முன்னாடி நமசிவாய. தனியா நசிவாய.

  மடச் சாமியாரே உலகெல்லாம் உணர்ந்து ஓதலையே! அதுதான் அறியவனைக்கூட அரியவாக்குது.

  ஆனா ஒன்னும் படிக்காத கண்ணப்பருக்கு அரியவன் அறியவன் ஆனான்.

  அதுதான் “வேண்டும் அயன் மால்க்கு அரியோய் நீ”ன்னு இந்தப் பாட்டுல மாணிக்க வாசகர் சொல்றது.

  ஆகா… இது வரைக்கும் ஒரு வரிதான் பாத்துருக்கோமா? இன்னும் நெறைய வரிகள் இருக்கே! 🙂

 5. //அயன் (பிரமன்), மால் (திருமால் / விஷ்ணு) ஆகியோருக்கு அரியோய் நீ என்ற வரியில் ஒரு பிரபலமான கதை இருக்கிறது//

  கதையில் சிறு சிறு தகவல் பிழைகள் மலிந்துள்ளன!
  பல முறை சொல்லிச் சொல்லி, அப்பாவிகளான பாமரர்கள் மத்தியிலும் அப்படியே பரவி விட்டது:(

  யார் பெரியவர் என்ற போட்டியோ, ஆணவமோ திருமாலுக்கு இல்லை!
  இதன் மூலக் கதை = சிவ புராணம்/ ஸ்காந்த புராணத்தில் வருகிறது!
  அதை ஏபி நாகராஜன் அவர்கள், தசாவதாரம் படத்திலும் சொல்லி இருப்பார்! சுருக்கமாச் சொல்லுறேன்:)
  —————-

  படைக்கும் தொழில் கொண்ட நான்முகனுக்கு, எதற்கு ‘அழித்தல்’ என்ற தனியான தொழில்?
  அதான், படைக்கும் போதே, விதியும் எழுதி விடுகிறேனே! விதி முடிஞ்சதும் தானாகவே அழிந்து விடும் அல்லவா?-ன்னு ஒரு எண்ணம்!
  தனியாக சிவம்/அழித்தல் தேவையா?-ன்னு ஒரு logical question:) தவறில்லை!

  ஒரு கடிகாரம் தானாய் ஓடுவது போல் இருந்தாலும், அதுக்குச் சாவி குடுப்பது ஒருவன்!
  அதே போல் விதியை எழுதி விட்டாலும், அதை முடுக்கி விட்டு நடத்திச் செல்வது ஈசன்! – இதை உணர்த்த எண்ணினார் பிரமனுக்கு! திருமாலைத் துணைக்கு அழைத்தார் நாடகத்துக்கு!:)
  ——————

  அடி-முடி தேடும் போட்டி!
  பிரமனுக்கும் கர்வம் எல்லாம் இல்லை! தானும் மும்மூர்த்திகளுள் ஒருவர் தானே! எதற்கு இன்னொரு peer-க்குத் தனி வணக்கம் வைக்கணும்-ன்னு Thinking!:)
  அடி என்றால் வணங்க வேண்டுமே! முடியைத் தேடுவோம்-ன்னு கிளம்பிட்டாரு!
  திருமால், வழக்கம் போல் சாந்த சொரூபமாக, காலடியைத் தேடிக் கிளம்பிட்டாரு!

  ஓங்கிய தீப்பிழம்பின் எல்லைகள் தெரியவே இல்லை!

  திருமால், வழக்கம் போல் மாயம் செய்வவன் அல்லவா?:) தன்னால் அடி காண முடியவில்லை! எனவே இப்போது நான் கண்ட நிலையே, அடியாகக் கருதிக் கொள்ளுங்கள்-ன்னு, அந்த அடிகளையே பிடித்து, வணங்க….
  ஈசன் பதறிப் போய் விட்டார் contnd…

  • GiRa says:

   நீங்கள் சொல்லும் மூலக்கதை வரிகளைத் தர முடியுமா? நன்றி.

   இன்னொரு தகவல். தசாவதாரம் படத்தை இயக்கியது கே.எஸ்.கோபால கிருஷ்ணன். ஏ.பி.நாகராஜன் அல்ல.

   ஆதிபராசக்தியை நினைத்துக் கொண்டு தசாவதாரத்தை இடித்து விட்டார். படம் ஓடவில்லை. அத்தோடு கே.எஸ்.ஜியின் படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கும். தசாவதாரத்தில் அது நடக்கவில்லை. இசை எஸ்.ராஜேஷ்வரராவ். இவர் சந்திரலேகா படத்திற்கு இசையமைத்தவர். 1976ல் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

 6. GiRa says:

  ஒரு வரியை மட்டும் பாத்தோம். அந்த வரி வர்ர மொத நாலு வரிய மட்டும் பாப்போம்.

  வேண்டத்தக்கது அறிவோய் நீ – எனக்கு என்ன வேணும்னு ஒனக்குத் தெரியும். அறிவோய் நீவிர்னு சொல்லலை. நீதான். ஆண்டவனுக்கும் அவ்வளவுதான் மரியாதை.  அன்பு மரியாதை. வருவான் வடிவேலன், சொல்லடி அபிராமி, நீலவண்ணக் கண்ணா வாடா…. 🙂

  வேண்ட முழுவதும் அருள்வோய் நீ – நான் எதாச்சும் கேட்டா கேட்டதக் குடுத்துர்ர.

  வேண்டும் அயன் மால்க்கு அரியோய் நீ – பெரிய பெரியவங்களுக்கெல்லாம் தண்ணி காட்டுறவன் நீ

  வேண்டி என்னைப் பணி கொண்டாய் – என்னையும் உன்னோட அடியாளாச் சேத்துக்கிட்டியே சிவனே!

  இந்தப் பணிங்குற சொல் ரொம்ப முக்கியம். குறிச்சிக்கோங்க. பின்னாடி பாப்போம்.

  அயன் மால்க்கு அரியோய்னு சொல்றதுல ஒரு உட்பொருள் இருக்கு.

  அயன் யாரு? சூர்யான்னு சொல்லீராதீங்க 🙂 அயன்னா நான்முகன். அதாவது கலைமகளாகிய கல்விக்கு நாயகன்.

  மால் யாரு? அலைமகளாகிய செல்வத்து நாயகன்.

  கல்வியின் கர்வத்தினாலும் செல்வத்தின் செருக்கினாலும் ஆண்டனை அறிய முடியாது. இதுதான் உட்பொருள்.

  ஆனா நம்ம கதையப் பிடிச்சிக்கிட்டோம். கருத்த விட்டுட்டோம்.

  சரி. இப்போ பணிக்கு வருவோம். அதென்ன பணி?

  அதுவும் எனக்கு வேண்டியது உனக்குத் தெரியும்னும் கேட்டா அதக் கொடுக்குறன்னும் சொல்லீட்டு பணி கொண்டாய்னு சொல்றது?

  வேறொரு எடுத்துக்காட்டு சொல்றேன். லேசாப் புரிஞ்சிரும்.

  கந்தர் அநுபூதி கேள்விப்பட்டிருப்பீங்க. அருணகிரியார் எழுதுனது. எப்படித் தொடங்குறாரு?

  ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்

  அடடா! ஆண்டவரு முன்னால இருக்காரு. அவர் கிட்ட என்னல்லாம் கேக்கலாம்!
  பெங்களூர்லயும் சென்னையிலயும் ரெண்டு மூனு பங்களா
  ஏற்காடு மலையில ஏலக்கா எஸ்டேட்டு
  ஒவ்வொரு பங்களாவுக்கும் ரெவ்வெண்டு காரு
  ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு டிரைவரு
  நூறு கிலோ தங்கம் பிஸ்கட்டா
  ஆயிரம் கிலோ வெள்ளி பாளமா
  வைர வைடூரியம் ஒவ்வொன்னுலயும் அஞ்சஞ்சு கிலோ
  ஸ்விஸ் சிங்கை அக்கவுண்டுகள்ள 2G scam அளவுக்குப் பணம்
  மூனு வேளையும் நல்ல சாப்பாடு
  நல்ல ஆரோக்கியம்

  இப்படியெல்லாம் கேக்காம பாடும் பணியே பணியாய் அருள்வாய்னு வாய் விட்டுக் கேக்குறாரே!

  மாணிக்கவாசகர் சொன்ன மாதிரி கேட்டதக் குடுத்துட்டாரு முருகன். பாட்டு படபடன்னு வருது.

  அந்தப் பாட்டுல சொல்றாரு “யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்”

  ஆண்டவனுக்கு அந்தப் பாட்டு சொல்லும் கருத்து தெரியாதா? ஏன் அருணகிரி வழியாக் கேக்கனும்?

  அப்பா இஞ்சினியரு. அம்மா டாட்டரு. கொழந்தைய தூக்கி வெச்சுக்கிட்டு அப்பா அம்மா பேரு என்னன்னு கேப்பாங்க.

  அவங்களுக்குப் பேரு தெரியுந்தானே. இருந்தாலும் குழந்தை சொல்லும் வர்ர இன்பம். அடடா! அதத்தான் அருணகிரி வாயால முருகன் கேக்குறான். 🙂

 7. தன் காலைத் திருமால் பிடிக்கிறாரே-ன்னு பதறிய ஈசன்…குனிந்து அவரைத் தூக்க, குனிந்ததால், முடியும் தெரிந்தது:)
  முடியும் கண்டேன்-ன்னு திருமால் சிரிக்க…ஈசன் சிரிக்க…பிரம்மனுக்கு உண்மை புரிகிறது!

  தன்னறிவால் தேடிக் கிடைக்காத ஒன்று, பணிவு கொண்டால், உடனே…தானே தென்படுகிறது என்பதைப் பிரமன் உணர்ந்து கொண்டார்!
  —————-

  இப்படி ஈசன்…
  பணியுமாம் என்றும் பெருமை – சிறுமை
  அணியுமாம் தன்னை வியந்து
  என்பதைக் காட்டிக் குடுக்கிறார்!

  இந்த நிகழ்ச்சியை, இதே மாணிக்கவாசகர், “நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க”-வில் பாடுகிறார்!
  புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
  “சிரங் குவிவார்” ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

  – இதுவே உண்மையான அடி-முடி தேடிய நிகழ்வு!
  (சமயப் பூசலால், ஒன்றை ஏற்றி, இன்னொன்றை இறக்கும் கதைகளில், இது பின்பு வேறு மாதிரிப் பரப்பப்பட்டு…இன்றளவும் பலர் அறியாது, கதையை வேறு மாதிரி அறிந்து வைத்துள்ளார்கள்:)

 8. அருமையான பாடல். இறைவனிடம் மட்டுமே நாம் அது வேண்டும்,இது வேண்டும் என அல்லாடுகிறோம்..மனித வாழ்வே “அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே” என்று சொல்லக்கூடிய பசித்தீ,காமத்தீ,கோபத்தீ ஆகிய மூன்று ஆசைகளிலேயே அல்லாடுகிறது.. இந்த ஆசை,அபிலாஷைகள் நிரம்பிய விருப்பு,வெறுப்புக்கள் இந்த மூன்று தீயில் மட்டும் சுற்றிச், சுழலும் மானிடப் பிறப்புக்களுக்கு மட்டுமே..அதற்கும் மேலான யோகத்தீ,ஞானாக்னியை அடைய முற்பட்டவர்களுக்கு வேண்டுதலும்,விருப்பும் அற்றுப் போய் மனம் பூரண நிலையை அடையும்.. அந்த ஞான ஆத்மாக்களுக்கு “இறவியொடு பிறவியற” என்ற ஒரே சிந்தனைதான்.. சுவாதிஸ்டானம்,மணிப்பூரகம்,விசுத்தி,ஆக்ஞை(மீதி பூச்சி சுற்றுகிறது ஐயா Kannabiran Ravishankar அவர்களிடம் விண்ணப்பிக்கிறேன்)….

  இந்த ஆக்ஞை என்பது இரண்டு இதழ்களை உடையது.. விருப்பு,வெறுப்பு.. மனிதனின் எந்த சிந்தனையும் விருப்பு,வெறுப்பு என்ற இரண்டை மட்டுமே சுற்றி நிற்கும்.. இதைக் கடந்தவர்களே அக்னிப் பிழம்பாக நிற்கும், காமனைக் கண்ணால் எரித்தவனும், காலனைக் காலால் உதைத்தவனுமாகிய, நித்திய யோகீஸ்வரனான, திரிசடையோனை அடைய முடியும்.(ஜீவனும்,சிவனும் ஒன்றுபடுதல்)….

  இதைத்தான் வள்ளுவன் குறிப்பிடுகிறார்..”வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு”… அவன் வேண்டுதல்,வேண்டாமை என்ற நிலைகளைக் கடந்தவன்.. அவனை அடைய வேண்டுமென்றால்,அவன் பாதத்தில் சேர வேண்டுமென்றால், மனித நிலையிலிருந்து உயர்ந்த ஞானத்தைத் தரிசிக்க வேண்டுமென்றால், விருப்பு,வெறுப்பு கடந்த நிலையை அடைந்தால் மட்டுமே சாத்தியம்… எல்லாம் ஈசன் செயல்… நற்றுணையாவது நமச்சிவாயமே…

  • :))
   1. மூலாதாரம்,
   2. சுவாதிஷ்டானம்,
   3. மணிபூரகம்,
   4. அநாகதம்,
   5. விசுக்தி,
   6. ஆக்ஞை
   – இந்த ஆறும் தான் முருகனுக்கு ஆறு திருமுகங்கள்-ன்னு வடமொழியில் சொல்லுவாய்ங்க:)
   ———————

   ஆனா…இந்தக் கணக்குகளை எல்லாம் தாண்டி, யோகம்/ஞானம்-ன்னு எல்லாம் ரொம்பப் போட்டுக் குழப்பிக்காம…
   ராகவன் சொன்ன கதையில் வரும் மடத்துச் சாமி போல் இல்லாது,

   அன்பினால்….அவனை நினைத்த மாத்திரத்தில், கண்ணில் ஒரு ஓரமா நீர் துளிர்க்கும் = “வினையேன் அழுது உனைப் பெறலாமே”!!!

   மாணிக்கவாசகர் பாட்டில் சொல்வது அஃதே!
   //வேண்டி நீ யாது அருள் செய்தாய்// = வேண்டித் தானா அருள்?

   அம்மா, மதியம் சாப்பாடு போடுவ-ல்ல? இரவு சோறு எனக்கு உண்டு-ல்ல?-ன்னு எந்தக் குழந்தையும் வாய் விட்டுக் கேக்குதா என்ன? இல்லை யோகம்/ஞானம் எல்லாம் பண்ணுதா?
   திடமான நம்பிக்கை, அம்மா மேல! தான் மறந்தாலும், கூப்பிட்டுச் சோறு போடுவாங்க-ன்னு! அதான் வேணும்! யோகம்/ஞானம் அல்ல!:))
   ——————–

   //வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்// = பரிசேலோ ரெம்பாவாய்!
   //அதுவும் உன் தன் விருப்பு அன்றே// = மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
   உன் விருப்பத்துக்கு நான் இருக்கணும்! உன் விருப்பமே என் விருப்பம்! மற்றைய விருப்பங்கள் எல்லாம் மாற்றி விடு!:)))

 9. அதேதான்… என்று இறையும்,மனமும் ஒன்றுபடுகிறதோ, சித்தமெல்லாம் சிவமயமாகிறதோ, அங்கு யோகமும், ஞானமும் தேடத் தேவையில்லை..அந்த மகா சங்கமத்திலேயே அவை கமண்டலம் பிடிக்காமல் கிடைத்துவிடுகிறது… எப்படி ஒரு சிறு குழந்தை பல் துலக்கினால் ஏற்படும் பலன்களையும்,அறிவியல் பூர்வமான கருத்துக்களையும் கற்றுணர்ந்துதான் நான் பல் துலக்குவேன் என்று அடம்பிடிக்காமல், சிறுவயதிலிருந்தே அதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், பல் துலக்கினால் பயன் அடைகிறதோ, அதைப் போல்தான் யோகம்,ஞானம் போன்றவற்றைத் துருவித் துழாவிச் சடைபிடிக்காமல், சிந்தையால் சிவத்தை ஒன்றுவதே பலன். கண்ணப்ப நாயனார் என்ன யோகம்,ஞானம் போன்றவற்றை கரைத்துக் குடித்த ஞானியா?..ஈசன்பால் அவர்கொண்ட அன்பு, அவர் அந்நிலைகளையும் கடந்து நிற்கச் செய்தது….Hats off Ravi sir… வேண்டுதல்,விருப்பு என்றவுடன் கரை கடந்து விட்டேன்.. அடியோர் மன்னித்தருள்க…

  • :)))
   Good!

   நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து – அன்பே
   நெகிழ்ந்து நெகிழ்ந்து, “ஊற்றெழும் கண்ணீர்” அதனால் உடம்பு

   நனைந்து நனைந்து, அருள் அமுதே, நன் நிதியே – ஞான
   நடத்தரசே, “என்னுரிமை நாயகனே” என்று

   வனைந்து வனைந்து, ஏத்துதம் நாம் – வம்மின் உலகியலீர்…

   புனைந்து உரையேன், பொய் புகலேன், சத்தியம் சொல்கின்றேன்
   பொற்சபையில், சிற்சபையில், புகும் தருணம் இதுவே!

 10. amas32 says:

  இன்று மிக இனிமையானதொரு நன்னாள். திரு சொக்கன் அவர்களே, நீங்கள் தேர்ந்தெடுத்த இந்தப் பாடல் எவ்வளவு உன்னதமான கருத்து பரிமாற்றங்களைக் வெளிக் கொண்டுவந்திருக்கு! எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று, இறைவா இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக இறைவா நீயே வேண்டும் என்று கேட்டு விட்டால் எல்லாம் கிடைத்தது. ஆனால் தினப்படி வாழ்க்கையில் எத்தனை இடர்கள், ஆரோக்கியம் வேண்டும், செல்வம் வேண்டும், ஞானம் வேண்டும். அதையும் தாண்டி நம் உள்ளம் இறைவன் பால் ஈர்க்கப்பட்டு இறைவா நீயே வேண்டும் என்று கேட்கும் பக்குவத்தையும் அந்த இறைவனே தர வேண்டும்! We do have a free will which determines our destiny. At any particular point we have choices and it is up to us to make our choice. He puts the onus on us. Let us pray to always wish for what is best!
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s