அரவு

சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்,

நின்றால் மரவடியாம், நீள்கடலுள் என்றும்

புணையாம், மணிவிளக்காம், பூம்பட்டாம், புல்கும்

அணையாம் திருமால்க்கு அரவு

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல்

பாடியவர்: பொய்கையாழ்வார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

திருமால் எங்கேயாவது நடந்து சென்றால், ஆதிசேஷன் அவருக்குக் குடை ஆகிறான்.

அவர் உட்கார்ந்தால், இவன் அவருக்குச் சிங்காசனமாக / இருக்கையாக மாறுகிறான்.

அவர் நின்றால், இவன் அவருக்குக் காலணியாக மாறுகிறான்.

அவர் தூங்கும்போது, நீண்ட படுக்கையாகிறான், மணிவிளக்காகிறான், பூம்பட்டாகிறான், தழுவிக்கொள்ளும் தலையணையாகிறான்!

துக்கடா

 • ஆதிசேஷனாகிய நாகம் (அரவு) திருமாலுக்குச் செய்யும் பலவிதமான சேவைகளை நான்கே வரிகளில் மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறார் பொய்கையாழ்வார்!
 • முக்கியமாக ‘புல்கும் அணையாம்’ என்ற வரி ரொம்பச் சுவாரஸ்யமானது. தலையணையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கும் பழக்கம் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. கொஞ்சம் விசாரித்தால் Teddy Bearகூடச் சிக்குமோ என்னவோ!
 • இன்றைய பாடலின் வெண்பா வடிவம்:
 • சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
 • நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
 • புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
 • அணையாம் திருமால்க் கரவு
153/365
Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பட்டியல், வெண்பா. Bookmark the permalink.

16 Responses to அரவு

 1. கடைசி வரியில் தளை தட்டுதே!

  அணையாம் திருமால்க் கரவு

  இப்படி இருக்கணுமோ?

  / நான்கே வரிகளில் மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறார் /

  ரெண்டு வரி / நாலு வரியில் என்ன வேணா சொல்ல முடியும். அதான் வெண்பாவின் சிறப்பு!

 2. Nagu says:

  அழகான வரிகள். ஆனால் ‘திருமால்க்கு’ என்றா இருக்கிறது? எனக்கு இலக்கணம் தெரியாது… திருமால்க்கு சரியாகப் படவில்லை.

  – நாகு என்கிற ‘நாகேந்திரன்’. 🙂

 3. Nagu says:

  http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=2723

  திருமாற் கரவு என்று முடிகிறது…

 4. GiRa says:

  ஒரு பொருள். பல பயன்கள். 🙂 multipurpose 🙂

  நடந்தா படுத்தா நின்னா உக்காந்தான்னு சொன்ன ஆழ்வார் ஆடுனா மேடைன்னு சொல்லாம விட்டுட்டாரே. ஒரு வேளை அது வேற பாம்பு. இது வேற பாம்புன்னு விட்டுட்டாரோ என்னவோ! காளிங்கன் தலைல தில்லானா ஆடுனாரே.

  கொஞ்சம் வேற விதமா யோசிச்சேன். ரொம்பவும் பொருந்தி வரல. ஆனாலும் சொல்றேன்.

  வடமதுரையில் கஞ்சனார் சிறையில் பிறந்து கோகுலத்துக்குப் போகும் பொழுது பெருமழை கொடும் வெள்ளம். அப்பொழுது குடையாய் வந்தான் ஆதிசேடன்.

  பரமபதத்தில் அமர்ந்து ஆன்மாக்களுக்கு அருளும் பொழுது இருக்கையாய்ச் சுருண்டான் ஆதிசேடன்.

  செருப்பு நாம் போகுமிடமெல்லாம் வருவது. ராமனாய் வில் பிடித்து நின்ற பொழுது மரவடியாய் எங்கும் தொடர்ந்தது ஆதிசேடன் (இலக்குவண்).

  ஊரெங்கும் சுற்றினாலும் பாற்கடலில் பையத் துயின்ற பரமனுக்குப் பாயாய் மணிவிளக்காய் அணையாய் இருப்பவன் ஆதிசேடன்.

 5. ” ….நீள்கடலுள் என்றும்
  புணையாம், மணிவிளக்காம், பூம்பட்டாம், புல்கும்
  அணையாம் திருமால்க்கு அரவு”

  //அவர் தூங்கும்போது, நீண்ட படுக்கையாகிறான், மணிவிளக்காகிறான், பூம்பட்டாகிறான், தழுவிக்கொள்ளும் தலையணையாகிறான்!//

  ஆதிசேடன் தலையணையா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. தேடி பார்த்த போது,
  “புணை என்றால் நீரில் மிதக்கும் கலம்/படகு என்று பொருள், அணை என்றால் தான் படுக்கை என்று பொருள்” என்று ஒரு தமிழகராதி கூறுகிறது!

  http://www.lifcobooks.com/tamildictionary/

  சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும் 🙂

  • சரியே…
   கீழேயுள்ள பின்னூட்டுகளைப் பார்க்கவும்:)

   * புணை=தெப்பம்/மிதவை (ஏமப் புணையைச் சுடும்-குறள்)
   * அணை=படுக்கை/இருக்கை (பஞ்சணை/தலையணை/அரியணை)

 6. S. Krishnamoorthy says:

  ரசம் சொட்டுகிறது விளக்கத்தில்.

 7. amas32 says:

  திருமழிசையாழ்வார், தன்னுடைய தொண்டன் கணிக்கண்ணரை காஞ்சி அரசன் நாடு கடத்தியதை கேட்டு பெருமாளிடம் “பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்” நாம் இங்கிருந்து கிளம்பலாம் என்று வேண்ட பெருமாளும் அவர் சொல்லுக்கிணங்கி காஞ்சியை விட்டுக் கிளம்பி ஓரிக்கை போய்ச சேர்ந்தார். பின் அரசன் மன்னிப்புக் கேட்க ஆழ்வாரும் பெருமாளிடம்

  கண்ணன் போக் கொழிந்தான் காமரு பூங்கச்சி
  மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
  செந்நாப்புலவனும் போக் கொழிந்தேன் நீயும் உன்றன்
  பைந்நாகப் பாய் படுத்துக் கொள்

  என்று இறைஞ்ச பெருமாளும் திரும்ப வந்து திருமுடியை மாற்றி வைத்துப் பள்ளிக் கொண்டார். அதனால் அவருக்கு “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” என்று பெயர்.

  அரவணையாக இருப்பதால் ஆழ்வார் கட்டளைக்கிணங்க எளிதாகப் பெருமாள் சுருட்டிக் கொண்டு கிளம்பவும் திரும்ப வந்து விரித்துக் கொண்டு படுக்கவும் ஏதுவாகவும் உள்ளது 🙂
  amas32

 8. ஆழ்வார்கள் வாழி! அருளிச்செயல் வாழி!

  திவ்ய பிரபந்தம் என்பது பின்னாளைய பெயர் = அருளிச் செயல் என்பதே தூய தமிழ்ப் பெயர்!

  கோயிலின் உள்ளே தமிழை நுழைக்க வேண்டி, ‘திவ்ய பிரபந்தம்’ என்று அதற்கு ஒப்பனை செய்து,
  அதே வேத ஒலியில் நீட்டி முழக்கி, கருவறைக்கு உள்ளே நுழைத்தார்கள்….1000 ஆண்டுக்கு முன்னால்….
  ————-

  இந்தப் பா, முதல் முதல் ஆழ்வாரான பொய்கையார் தந்த பா!
  ஒரு நல்ல அடியவன், எப்படியெல்லாம் இருப்பான் எனப் படம் பிடித்துக் காட்டும் பா…

  ஒரு நல்ல ஆண்மகன், ஒருத்திக்கு எப்படியெல்லாம் இருப்பான்?
  * பஞ்சணையில் மிஞ்சுபவன்
  * பின்னர் தான் கொஞ்சுபவன்
  * காலை வேளைகளில்/சமையலில் உடன் உதவி செய்யும் பணியாள்
  * அலுவலகம் செல்லும் போது, ஓட்டுநர்
  * நடு நடுவே, தொலைபேசியில் அழைக்கும் காதலன்
  * மாலையில் மனம் விட்டுப் பேசும் தோழன்
  * துன்பத்தில், அணைத்துக் கொள்ளும் அம்மா/அப்பா
  * விளையாட்டாய் சண்டையிடும் போது தம்பி/தங்கை
  * இரவில்…அத்தை மடி மெத்தையடி என்று தூங்க வைப்பவனும் கூட….
  —————

  இதே போல், பலப்பல வடிவங்களில், பலப்பல தொண்டுகள் செய்கிறதாம் அரவு…திருமாலுக்கு!

 9. சென்றால் குடையாம் = குடை, வெயில்/மழை இரண்டுக்குமே உதவும்!
  ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில், யமுனையைக் கடக்கும் போது, நந்தகோபன் குமரனுக்கு, குடையாய் விரிந்ததே!

  அது மட்டுமல்ல! வெண்கொற்றக் குடை = பெருமையின் சின்னம் கூட!
  அரசனுக்கு நிழல் மட்டும் தருவதா வெண்கொற்றக் குடை? கம்பீரமாக, கூடவே சென்று, அவன் பெருமையை ஊரெல்லாம் பேச வைக்கும்!
  ———–

  இருந்தால் சிங் காசனமாம் = அமர்வதற்கு ஆசனம்!

  ஒரு நல்ல ஆசனத்தில் அமர்ந்து பணி புரிவது போல் வராது! கணினித் துறை மக்களுக்கு இது நல்லாத் தெரியும்:)
  சாயவும், ஓயவும், நிமரவும், அமரவும்…. = இருக்கை!
  ———-

  நின்றால் மரவடியாம் = நிக்கும் போது எதுக்கு செருப்பு? நடக்கும் போது தானே? ஏன் ஆழ்வார் தப்பு தப்பா பாடுறாரு?- சொல்லுங்க பார்ப்போம்:))

 10. புணையாம் = புணை-ன்னா தெப்பம்! இனம் என்னும் ஏமப் ‘புணையை”ச் சுடும்-ன்னு குறள்…

  புணை = தெப்பம்/ அதாச்சும் மிதக்கும் கட்டில்!
  கட்டில்-ன்னாலே ஒரு மிதப்பு தான்! இதுல அந்தக் கட்டிலே மிதந்தா? ஆகா…எப்படி மிதப்பா இருக்கும்-ன்னு யோசிச்சிப் பாருங்க!
  —————-

  நீள்கடலுள் என்றும்…

  * புணையாம் = கட்டிலாய் மிதப்பானாம்! எதுக்கு?
  * மணிவிளக்காம் = குத்து விளக்காய் நிற்பானாம்! எதுக்கு?
  * பூம்பட்டாம் = பூ+பட்டு போல் போர்வை! எதுக்கு?
  * புல்கும் அணையாம் = கட்டிக் கொள்ளும் தலையணையாம் எதுக்கு?

  முந்தைய வரியில்…
  சென்றால்=குடை, அமர்ந்தால்=அரியணை, நின்றால்=மரவடி-ன்னு ஒவ்வொன்னுக்கும் தனியா சொன்னவரு….

  கடலில் படுக்கும் போது மட்டும், ஒரே ஆள்…
  கட்டில் + விளக்கு + போர்வை + தலையணை-ன்னு இத்தனையும் சேர்த்துச் சொல்லுறாரே…ஏன்-ன்னு யோசிச்சிப் பார்த்தீங்களா?

  அப்படியென்ன, படுக்கும் போது மட்டும், ஒரே ஆள், இத்தனை விதமாய் இருக்கான்? Any Answers?:))

 11. raa. narasimman says:

  திருமாற்கரவு தான் சரி. திருமால்க்கரவு ஒலிக்குச் சற்றே இனிமை கூட்டச் செய்யப்பட்ட மாற்றமாய் இருக்கும். ரசிகமணி டி.கே.சி. இப்படித்தான் திருத்தினார். அவர் கம்பராமாயணத்தின் பல பாடல்களை இடைச்செருகல் என்று ஒதுக்கினார்.
  ‘ திவ்யப்பிரபந்தம் ஓதுகையில் ‘ ற்ற’ எனும் ஒளியை ‘த்த’ என்று உச்சரிப்பார்கள்: ‘ சித்தம்சிறுகாலே’,
  ‘பெத்தம் மேய்த்துண்ணும்’ என்றெல்லாம்.
  தமிழ்வாணனின் பத்திரிகை ‘கல்கண்டு’ !
  ரா. நரசிம்மன்

 12. @சாதாரணன்
  //வெயில்ல ரொம்ப நேரம் நிற்க முடியாதே! அதற்காக இருக்கலாம்!//

  he he…nice:)

  இந்தப் பாட்டு, கொஞ்சம் ஆழமான பாசுரம்! வெறுமனே list போடும் பாசுரம் அல்ல! அதான் சில கேள்விகளை இங்கே கேட்டிருந்தேன்:)

  நின்றால் = வெறுமனே செங்குத்தா நிற்பதைக் குறிப்பதல்ல:)
  நின்றால் = நிலைத்து நிற்றல்…

  * எது அன்று நிலைத்து நின்றது? = மரவடிகள் (பாதுகை)
  * எது இன்றும் நிலைத்து நிற்கிறது? = சடாரி (பாதுகை)

  இறைவனின் பெருமை உலகில் “நிலைத்து நிற்பதில்”, பெரும் பணி செய்வது, அவன் மரவடிகள்!
  அதான் நின்றால் = மரவடியாம்!
  ———————

  இந்தப் பாசுரம், அகம்/புறம்-ன்னு இரண்டு உட்கூறுகள்!

  புறம்:
  * சென்றால் = குடையாம்
  * இருந்தால் = சிங்காசனமாம்
  * நின்றால் = மரவடியாம்
  இவை இறைவனின் புறப் பெருமைகள்! குடை, சிங்காசனமெல்லாம் அடியார்கள் பார்த்து மகிழும் புறக் கூறுகள்! உலகியற் கூறுகள்!

  ஆனால்…தனியா இருக்கும் போது?
  = அகம்
  அப்பவும்…அவனுக்கு இதமாக இருக்கணும்!
  * புணையாய்
  * பூம்பட்டாய்
  * அணையாய்…
  அவன் “போகத்துக்கு” நாம் இருக்கணும் என்பதைச் சொல்லும் பாசுரம்!

 13. அருமை!! எவ்வளவு படித்தாலும் ஆராவமுது இந்த பிரபந்தங்கள். அரும்பொருள் கூறிய விதம் அவ்வளவு அருமை! 🙂 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s