நல்லவங்க வாழும் ஊர்

’யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்

யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்,

யான் கண்டு அனையர் என் இளையரும், வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும், அதன் தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.

நூல்: புறநானூறு (#191)

பாடியவர்: பிசிராந்தையார்

சூழல்: தன்னுடைய நெடுநாள் நண்பன் (Pen Friend 🙂 கோப்பெருஞ்சோழனை முதன்முறையாக நேரில் சந்திக்கிறார் பிசிராந்தையார். அவருக்கு வயது அதிகம். ஆனால் தலையில் முடி எதுவும் நரைக்கவில்லை. அதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறான் சோழன். அவனுக்குப் புலவர் சொல்லும் பதில் இது. பொதுவியல் திணை, பொருண்மொழிக் காஞ்சித் துறை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

’வயசானாலும் உங்க தலைமுடிமட்டும் நரைக்கலையே! எப்படி?’ என்று கேட்கிறீர்களா? அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதலில், என்னுடைய மனைவி நல்ல குணம் உடையவள். என்னுடைய குழந்தைகளும் அறிவு நிறைந்தவர்கள்.

எங்கள் வீட்டு வேலைக்காரர்கள் எல்லோரும் ரொம்பச் சூட்டிகை. நான் நினைத்ததை உடனே செய்து முடித்துவிடுவார்கள்.

என்னுடைய தேசத்தை ஆள்கின்ற மன்னனும் மிக நல்லவன். மக்களுக்கு நல்லதைமட்டுமே செய்கிறான், கெட்டதைச் செய்வதில்லை. எங்களை அக்கறையாகப் பாதுகாக்கிறான்.

எங்கள் நாட்டில் நல்லவர்கள் நிறைய உண்டு. அவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆளுகிறார்கள், உயர்ந்தவர்களை மதித்து வணங்கிப் போற்றுகிறார்கள், நல்ல கொள்கையைப் பின்பற்றி வாழ்கிறார்கள்.

இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வதால் எனக்குக் கவலைகள் ஏதும் இல்லை. நரை இல்லாதவனாக இருக்கிறேன்!

துக்கடா

 • புறநானூறுப் பாடல்களிலேயே மிகப் பிரபலமான ‘டாப் 10’ பட்டியலில் இதுவும் ஒன்று. இதனைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவர் நண்பர் இராகவன் கோபால்சாமி. அவருக்கு நன்றிகள்
 • பிசிராந்தையாரின் இந்த அட்டகாசமான லாஜிக்கை இன்றைய மருத்துவம் / மனோதத்துவம் ஏற்றுக்கொள்கிறதா? 🙂
 • இன்றைய அரிய சொல் : மாண்ட = மாட்சிமை தாங்கிய / சிறந்த குணங்களைக் கொண்ட
 • உதாரணங்கள்:
 • 1. குடி மடிந்து குற்றம் பெருகும், மடி மடிந்து மாண்ட உஞற்றில் அவர்க்கு : திருக்குறள்
 • 2. மாண்ட களிறு ஊர்ந்தார் : முத்தொள்ளாயிரம்

151/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, நண்பர் விருப்பம், புறநானூறு, புறம். Bookmark the permalink.

14 Responses to நல்லவங்க வாழும் ஊர்

 1. amas32 says:

  கவலை தான் நரைக்குக் காரணம் என்கிறார்! நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போ என் கணவரின் நரைக்கு நானும் என் குழந்தைகளுமே காரணம் போல 🙂 ஆனால் இப்பொழுது நிறைய பேருக்கு இளமையிலேயே நரைத்து விடுகிறது. கண்டிப்பாக வாழ்க்கை முறை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
  amas32

 2. ஊருப்பக்கம் இதைதான் சொல்வாக.. “அவனுக்கு என்னகவலையோ… அதான் இப்படி நரைமுடியோட திரியுறா”ன்னு.. அதை நிறை செய்யும் விதமாக.. , இளநரை இளவட்டங்களை உற்சாகப்படுத்தும் விதமாக “பணக்காரனா வருவான்யா,..” என்பார்கள். அப்றம் இனொன்னு .., இந்த (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) இது எந்த நூலிலும் இல்லாத, மிகவும் பயனுள்ள, எளிதில் யாருக்கும் புரியக்கூடிய விதமாக இருக்கிறது.

 3. nvaanathi says:

  ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு “மனப்பாடப்பா”.. எப்போ படித்தது என்று மறந்துபோச். 🙂

 4. GiRa says:

  இந்தப் பாடலில் ஒரு உண்மை உள்ளது. நாம் கண்டிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டியது.

  முதலில் மேலோட்டமாக பார்த்து விட்டு ஆழமாகப் போகலாம்.

  இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம் stress எனப்படும் மன அழுத்தம். ஆகையால்தான் முன்பெல்லாம் அரிதாக இருந்த மாரடைப்பு இப்பொழுது இளம் வயதினரையும் தாக்கத் தொடங்கியிருப்பது.

  அது மட்டுமல்ல மன அழுத்தம் தொடர்பாக பலப்பல நோய்கள் வருகின்றன. ஏற்கனவே அழுத்தம் கொடுக்கும் துன்பம். அத்தோடு இந்த நோய்கள் கொடுக்கும் துன்பம் என்று வாழ்க்கை துன்பமயமாகிறது.

  ஒருவருக்கு மன அழுத்தம் எப்படி வருகிறது? குடும்பத்தினர், அலுவலகத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், மற்றும் நாம் தொடர்பு கொள்ளும் அனைவரும் காரணமாக ஆக வாய்ப்பிருக்கிறது.

  எல்லாருக்கும் எல்லாமும் அமைந்து விடுவதில்லை. குடும்பத்திலும் கூட. ஆகையால்தான் ஏறுக்கு மாறானால் கூசாமல் சன்யாசம் கொள் என்றாள் ஒரு தமிழ்க் கிழவி. சற்றே வேறு விதமாக “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

  வீட்டில் நொச்சுப்பட்டும் அலுவலகத்தில் நச்சுப்பட்டும் நண்பன் என்ற பெயர் வைத்துக் கொண்டவர்களிடத்திலும் உற்றார் உறவினர்களிடத்தில் சீழ்ப்பட்டும் ஒருத்தன் இருந்தால் அவன் எப்படி நன்றாக இருப்பான்?

  பிசிராந்தையார் என்ன தவமெல்லாம் செய்தாரோ! அவருக்கு எல்லாமும் நன்றாக அமைந்து விட்டது. அதன் பலன் என்ன? நல்வாழ்வு. நிம்மதி. நல்ல உடல்நிலை.

  நிம்மதி மிகப் பெரிது. சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ஒன்று உண்டு. முருகன் பாடல்தான். பழநி மலை முருகா பழம் நீ திருக்குமாரா என்று தொடங்கும் அழகான பாடல்.

  அதில் வரிகள் இப்படி வரும்.
  இளமை நில்லாது
  யாக்கையோ நிலையாது
  வளமையோ செல்வமோ பயனொன்றும் தாராது
  நிலமை இதுவாகத்
  தலைமைப் பொருளாக
  நிம்மதியை எந்தனுக்குத்தா முருகா
  நிம்மதியை எந்தனுக்குத்தா

  நானும் நாளும் முருகனிடம் வேண்டுவது நிம்மதியைத்தான்.

 5. GiRa says:

  // மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர் //

  மாண் = மாண்பு

  நுண்மாண் நுழைபுலன் இல்லான் என்ற குறளிலும் வருகின்றதே.

  மாண்பு கொண்ட = மாண்ட

  உண் – உண்ட
  கொள் – கொண்ட
  மாண் – மாண்ட

  மனைவி மாண்புடையவள். அப்படியானால் அவர்களுக்குள் இன்பம் மட்டுமே இருக்கும். அவர்களுக்கு மக்களும் உண்டு.

  அந்த மக்களும் மனைவியும் நிரம்பியவர்கள் ஆவர். என்ன நிரம்பியவர்கள்? அறிவுச் செல்வம் நிரம்பியவர்கள். அறிவுச் செல்வம் நிரம்பியவர்களுக்கு எதையும் சிந்தித்துச் செயலாற்றும் திறன் இருக்கும். இல்லையென்றால் குடும்பத்திற்குள் emotional blackmail தான் இருக்கும். அது நல்லதல்ல. அந்தச் சூழ்நிலையில் எரிச்சலும் சண்டையுந்தான் உண்டாகும்.

  // யான் கண்டு அனையர் என் இளையரும் //

  இங்கு இளையர் என்பவர் பிசிராந்தையாரிடத்துப் பணிபுரிகின்றவர்கள். அவர் புலவராயினும் உழவர். புலமை மாணாக்கர்களோடு உழவரும் உளர். இவர்கள் பிசிராந்தையாரின் எண்ணத்தைப் புரிந்து அதற்குத் தக்க செயலாற்றும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்களிடமும் எரிந்து விழுந்து அதட்டிப் பேசத் தேவையில்லை.

  // வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் //

  வேந்தன் நல்லவன். அவனுடைய ஆட்சி மாட்சி நிறைந்ததாக இருக்கிறது. ஆகையால் வருத்தமோ ஆத்திரமோ இல்லை. சாலைகள் குண்டும் குழியாக இருக்கிறதே என்று தினமும் தேரோட்டும் பொழுது எரிச்சல் வருவதில்லை. நாட்டில் குப்பைகள் பெருகுகின்றனவே என்று அடிக்கடி மூக்கைப் பொத்திக் கொண்டு வருத்தப்படத் தேவையில்லை. தேவையான அளவிற்கு நீர்ப்பாசன வசதி செய்யவில்லையே என்று தொழிலுக்காகவும் வாழ்வியலுக்காகவும் வீண்கவலை கொள்ளத் தேவையில்லை. இப்படி எல்லா விதத்திலும் சிறப்பானதொரு ஆட்சியை மன்னன் ஆண்டு கொண்டிருக்கிறான்.

  அப்படியொரு இன்பம் நிறைந்த வாழ்வு என்னுடையது. அதுதான் இத்தனை வயதாகியும் நரையில்லாதவனாகவும் உடல் நலம் மிக்கவனாகவும் வாழ முடிகிறது என்கிறார் பிசிராந்தையார்.

  • amas32 says:

   மாண்ட என்பதற்கு விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. நானே திரு சொக்கனிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். அதே போல் நல்லாட்சியின் மேன்மையையும் அழகுர விளக்கியுள்ளீர்கள்!
   amas32

   • GiRa says:

    நன்றி. 🙂

    சில சொற்கள் முதலில் புரியாது. ஆனால் கொஞ்சம் விளக்கினால் நமக்குத் தெரிந்த பொருளாகவே இருக்கும்.

    எளிய எடுத்துக்காட்டு வளி. வளி என்றால் காற்று. பொதுவாக மக்களுக்குத் தெரியாது. ஆனால் சூறாவளி தெரியும். 🙂 அதைச் சொல்லி இதைச் சொன்னால் மக்களுக்குப் புரியும்.

    கலிழும் கண்கள் என்று ஒரு சொல்லாடல். என்னடாவென்று பார்த்தால் கலங்கியழும் கண்கள் என்று பொருள். 🙂

 6. சிறந்த பா, சிறந்தவன் தந்த தேர்வாக, இன்று சிறப்பிக்கிறது! நன்றி ராகவா!
  ————

  பிசிர் + ஆந்தையார் = பிசிர் என்னும் ஊரில் பிறந்தவர்! (மதுரைப் பக்கம்); பெயர் = ஆந்தையார்!
  தமிழ்க் கவிஞர்கள் பலருக்குப் பறவை/ விலங்குகளின் பேரு இருக்கும்! என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்

  காக்கைப் பாடினியார்
  பிசிராந்தையார்
  கழைதின் யானையார்

  இவரு பாண்டியர் வம்சம்; நண்பனோ சோழ வம்சம்! ரெண்டுமே அரசியலில் எதிரி முகாம்கள்!
  ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே…அப்படியென்ன நட்பு? எத்தனை வருசம்? அந்த நட்பு நிலைக்குமா?
  பார்த்து, ஒட்டி உறவாடி, ஒருவருக்கொருவர் Partyக்கு போய், என்சாய் பண்ணி…இப்படி இருந்தாத் தானே நிலைக்கும்?
  ————

  பிசிராந்தையார்…உள்ளத்தால் பழகியவர், உடலால் அல்ல!

  எப்பமே உள்ளத்தில் அமிழ்ந்து இருக்கும் போது….துன்பம் வந்தாலும், நோய் வந்தாலும், எதிர்ப்பு வந்தாலும்…அந்த உள்ளத்து ஒன்றுதலே, அவர்கட்கு “நிம்மதி” குடுக்கும்!

  போலிச் சாமியார்களையோ (அ) பலான பெண்களையோ தேடி ஓட வைக்காது! = “நிம்மதி” என்பது “உள்ளே”, வெளியே அல்ல!

  அதனால் “உள்ளேயே” நட்பில் ஆழ்ந்து விடுவதால், அந்த ஆழமான நட்பு/காதல்…தோழமை அருகில் இல்லீன்னாலும் கூட…அந்த உணர்விலேயே தோய்வதால்…அதுவே ஆறுதலும் நிம்மதியும் குடுக்கும்!
  அருகில் இல்லாத போதும், நட்பு/காதலின் பேரை வாய்விட்டுத் தனிமையில் சொல்லிப் பாருங்கள்…டேய் *** நீ எங்கடா இருக்க..ன்னு சொல்லும் போது, தனித் தெம்பு வரும்:))

  பிசிராந்தையார் தோழமை இத்தகைய “உள்ளத்து அளவில்”! அது நிலைக்கும்! அது வாழி!

 7. சாந்தமு லேகா, செளக்கியமு லேது….என்று ஒரு தியாகராஜ கீர்த்தனை…= சாந்தம் இல்லாட்டாச் செளக்கியம் இல்லை!

  “நிம்மதி” தான் நிலையானது!
  நிம்மதி இருந்தாத் தான் மற்ற இன்பங்கள் இனிக்கும்!இல்லீன்னா அதுவே கசக்கும்!

  * புது காரு வாங்கினா இன்பம்! ஆனா மீட்டர் வட்டியில் வாங்கி, கடன்காரன் மானத்தை வாங்கினா…அதுவே துன்பம்!
  * புதுப் பொண்ணு அறிமுகம் ஆனா இன்பம்! ஆனா அவளே துன்பமும் தரக்கூடும்! தன்னையே முன்னிறுத்திக்கிட்டு, தனக்காகத் தான் அவன்-ன்னு treat பண்ணா…துன்பம்!

  இன்பங்கள் இனிக்கணும்-ன்னா, “நிம்மதி” முக்கியம்!
  தவம் இருந்தாலும் கிடைக்காதது “நிம்மதி”..முருகா…அதைத் தருவது உன் சன்னிதி!
  ——————

  சன்னிதி = கோயில்-ன்னு நினைச்சிக்கிட வேணாம்! இப்பல்லாம் அங்கே நிம்மதியை விட, பணமும் கூச்சலும் தான் அதிகம்!
  சன்னிதி = உடன்+இருப்பு!
  முருகன் சன்னிதி = முருகன் + உடன்+இருப்பு

  எப்படி முருகன் உடன் இருக்க முடியும்?
  * ஆண்டாள் எப்படிக் கண்ணனுடன் உடன் இருந்தா?
  * பிசிராந்தையார் எப்படிச் சோழனுடன் உடன் இருந்தார்?

  புரியுதா? அப்படித் தான்!
  உள்ளத்தால் ஒன்றி இருக்கும் போது….காதலோ/நட்போ/பாசமோ….தங்களை அறியாமல் சிறு துன்பம் தந்தாலும், அது வலிப்பதில்லை! ஏன்னா…அங்கே “இன்பம்” என்பதை விட, அந்த “நிம்மதி” இருக்கு!
  அவனே என்ற நிம்மதி இருக்கு!
  முருகவா என்ற நிம்மதி இருக்கு!

 8. பாட்டைப் பாருங்க
  யாண்டு, யாங்கு, யான்-ன்னு ஒரே யா-வா இருக்கு-ல்ல? What Ya?:)

  * யாண்டு = ஆண்டு = முதற்போலி
  * யாங்கு = எப்படி/எங்கு = வினாவெழுத்து
  * யான் = நான் (தன்மை-முன்னிலை-படர்க்கையில்…இது தன்மைப் பெயர்ச்சொல்)
  ————

  புறநானூறு = 400 பாடல்களின் தொகுப்பு; பல்வேறு கவிஞர்கள்!
  பண்டைத் தமிழகத்தின் பல செய்திகளை இதில் காணலாம்…பிரியாணிச் சோறு, satellite orbit உட்பட:)

  ஒவ்வொரு பாட்டுக்கும் திணை/துறை இருக்கும்!
  திணை=Genre (Ex: Pop Music)
  துறை=Sub genre (Ex: Indie Pop)

  அகத் திணைகள் (Love) = 5
  புறத் திணைகள் (Social Life) = 12

  இந்தப் பாடல் புற-நானூறு என்பதால்..புறத்திணையில் வரும்
  திணை = பொதுவியல் திணை (Generics)
  துறை = பொருண்மொழிக் காஞ்சி (வாழ்க்கைத் தத்துவங்களை…பொருள் மொழிவது)

 9. விமான நிலையத்தில் இருந்து எழுதறேன்…Rio போகும் முன்னால்…ஒன்னு சொல்லணும்:)
  இந்தப் பாடல் தேர்ந்தெடுத்துக் குடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு:) நேரடியாப் பேசுவது போல் ஒரு உணர்வு!

  என்னடா….பிசிராந்தையார் சொல்லாததையெல்லாம் இந்த ரவி சொல்லுறான்…தானா அடிச்சி விடறானோ?:)

  “மத்தவங்க என்கிட்ட நல்லபடியா நடந்துக்கறாங்க…அதுனால நரை இல்லாம இருக்கேன்” – இதான பாட்டுல இருக்கு?

  ஆனா krs, “உள்ளத்தில் ஒன்றி இருத்தலால்”, பிசிராந்தையார் நிம்மதியா இருந்தார்-ன்னு extra-வா சொல்லுறானே..
  இது பாட்டுல எங்கே இருக்கு?-ன்னு தேடுறீங்களா? ha ha ha! i like it 🙂 பாட்டின் கடேசி வரியைப் பாருங்க…
  ————————–

  சான்றோர் “பலர்” யான் வாழும் ஊரே…

  அந்த ஊரில் சான்றோர்கள் = பலராம்!
  சிலர் அல்ல! பலர்!
  அதில் பிசிராந்தையாரும் ஒருவர்!

  ‘மத்தவங்க என்கிட்ட நல்லபடியா நடந்துக்கறாங்க…அதுனால நரை இல்லாம இருக்கேன்’-ன்னு இவரு சொன்னா…
  அதையே மத்தவங்களும் சொல்லணும்-ல்ல? அதுக்கு இவரும் அதே போல மத்தவங்க கிட்ட நடந்துக்கணும்-ல்ல?

  அதான் “பல” சான்றோர்கள் – சான்று காட்ட வல்லவர்கள் இருக்காங்களாம்!
  அப்படீன்னா…அத்தனை பேருக்கும் தலை நரைக்கலை!

  ஏன்னா…
  தன் கிட்ட மனைவி, பிள்ளைகள், வேந்தன்-ன்னு பலரும் நல்லபடியா நடந்து கொள்வது போல்…
  தானும், அவங்க கிட்ட நல்லபடியா நடந்துக்கறாரு! அதான் சான்றோர் “பலர்” யான் வாழும் ஊரே…
  ————————–

  சங்கத் தமிழ் இலக்கியம் = வெறும் பேச்சு அல்ல! வெறுமனே எழுத்து அலங்காரமோ ரசனையோ அல்ல!
  = அது ஒரு வாழ்வியல்! நாமும் முயல்வோம்
  = உள்ளத்தால் ஒன்றி வாழ்வது! அப்படி “ஒன்றி” வாழ்ந்த பிசிராந்தையார் தோழமைக்கு…என் கை கூப்பிய வந்தனங்கள்!

  • amas32 says:

   அப்பா! என்ன ஒரு விளக்கம்! எந்த ஜென்மத்திலோ நான் செய்த நன்மை நீங்களும், சொக்கனும், இராகவனும் எழுதும் அமுதத்தைப் படித்து இன்புறும் பாக்கியம் பெற்றுள்ளேன்!
   amas32

 10. ஐயா கனவான்களே.. அவரு சொக்கன் பத்தவைக்க நீங்க கண்ணபிரான் / ராகவன் ரெண்டு பேரும் ஊதி ஊதி நல்ல எரியவிடுங்க..! குளிர் காய நாங்க இருக்கோம்..! அருமையான விளக்கம். அதும் நண்பர்கள் இருவரும் முரண் படாமல்..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s