தும்பிக்கையான் பாதம்

வாக்கு உண்டாம், நல்ல மனம் உண்டாம், மாமலராள்

நோக்கு உண்டாம், மேனி நுடங்காது … பூக் கொண்டு

துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

நூல்: வாக்குண்டாம் (கடவுள் வாழ்த்து)

பாடியவர்: ஔவையார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பவளம் போன்ற சிவந்த திருமேனியைக் கொண்ட தும்பிக்கையான் (பிள்ளையார்) பாதத்தை நாள்தவறாமல் வணங்குபவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள்:

1. வார்த்தை வளம் பெருகும் (பேச்சு, எழுத்து போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்)

2. நல்ல மனம் உள்ளவர்களாக வாழ்வார்கள்

3. சிறந்த தாமரை மலரில் அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் (செல்வம் பெருகும்)

4. அவர்களுடைய உடலுக்கு எந்தக் குறைபாடும் வராது (நலமாக வாழ்வார்கள்)

துக்கடா

 • இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலின் சிறப்புக்காக, இந்த நூலுக்கே ‘வாக்குண்டாம்’ என்று பெயர் அமைந்துவிட்டது. இதன் இன்னொரு பெயர் ‘மூதுரை’!
 • ‘தினம் ஒரு பா’ 150வது நாள் இது. இந்தப் பதிவுகளை நாள்தவறாமல் படிக்கும் சுமார் இருநூறு நண்பர்களுக்கு நன்றி, நாள்தவறாமல் பின்னூட்டம் எழுதும் கேஆரெஸ், இராகவன் கோபால்சாமி மற்றும் amas32 ஆகியோருக்கும், நாள்தவறாமல் இந்தப் பதிவுகளை ‘like’ செய்து பிரபலப்படுத்தும் டாக்டர் விஜய் (@scanman) அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி 🙂
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
 • நோக்குண்டாம் மேனி நுடங்காது … பூக்கொண்டு
 • துப்பார்த் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
 • தப்பாமல் சார்வார் தமக்கு
 • இன்றைய அரிய சொல் : துப்பு = பவளம்
 • உதாரணங்கள்:
 • 1. துப்பு உறழ் துவர் வாய் : கம்ப ராமாயணம்
 • 2. துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி : திருப்புகழ்

150/365

This entry was posted in ஔவையார், பக்தி, பிள்ளையார், வாக்குண்டாம், வெண்பா. Bookmark the permalink.

15 Responses to தும்பிக்கையான் பாதம்

 1. வெண்பா வடிவம் சரியா இருக்கா?
  தும்பிக்கையான் – இது கனிச்சீர் ஆச்சே.

  அரிய சொல்லில் நுடங்காது என்பதையும் சேர்க்க வேண்டும். அதற்கும் பொருள் சொல்லி வேறு எடுத்துக்காட்டுகள் இருந்தால் தாருங்களேன்.

  • நுடங்குதல் = படபடத்தல், வேகமாக அசைதல்
   கொடி காற்றில் நுடங்கும்!
   ‘பல் கொடி நுடங்கும் செறுநர்’-ன்னு பாட்டே இருக்கு!

   கும்பிடும் போது, கண்ட யோசனையில் படபடப்பு இல்லாமல், ஒருமையுடன் வணங்கணும் என்பதால் = மேனி நுடங்காது, பூக்கொண்டு

 2. பாதம் தப்பாமல் – இங்க தளை தட்டுது..

  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் -இப்படி எழுதினா எல்லாமே சரி ஆகுது. கொஞ்சம் செக் பண்ணிடுங்க.

 3. amas32 says:

  எவ்வளவு எளிமயானப் பாடலைத் தேர்ந்து எடுத்து இருக்கீறீர்கள், அதுவும் விநாயகர் பாடல், நன்றி 🙂 மற்றுமொரு நன்றி என்னையும் மென்ஷன் பண்ணியதற்கு. குழந்தைகளுக்கு எளிமையா சொல்லித் தர உகந்த பாடல். அனைத்துத் தேவைகளையும் ஒரே துதியில் பெற்றுவிடலாம்! மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் தான் பவள நிறமாக விநாயகர் உள்ளார். இங்கெல்லாம் இல்லையே, ஔவ்வையார் எப்படி கூறினார்?
  amas32

  • ஒளவையைக் கைலாசத்துக்கே தும்பிக்கையால் Transport பண்ணதாகப் பிள்ளையார் கதை! தோ..இருக்குற மும்பைக்கு Transfer பண்ணி இருக்க மாட்டாரா என்ன?:))

   Jokes apart…
   துப்பு ஆர் திரு மேனி = துப்பு என்பதற்கு தூய்மை/பொருள்/செல்வம் என்றும் பொருளுண்டு!
   துப்பார்க்குத் துப்பாய, துப்புடை மன்னர்க்கெல்லாம்….

   தூய்மையான திரு மேனி என்றும் பொருள் கொள்ளலாம்!

   பவள மேனி = ஈசனுக்கும்/ முருகனுக்கும் மட்டுமே, பல துதிப்பாடல்கள் பேசினாலும்…
   அப்பாவின் சொத்து மகனுக்கும் என்பது போல், பவள போல் மேனியில் பால் வெண்ணீறும்…இவருக்கும் வந்ததாக எடுத்துக்கிடவும்:)))

 4. 150 ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள்!
  365paa = கிட்டத்தட்ட பாதிக் கிணறு தாண்டி இருக்கா?:))
  ————-

  இன்னும் சில வாசக அன்பர்களின் பேர் சொல்லி, நன்றி கூற விழைகின்றேன்!
  குறிப்பாக, @dagalti,
  @to_pvr, @mayilsenthil, @4sn, @nvaanathi
  sree guruparan, குடந்தை மணி, இலவசக் கொத்தனார்

  இந்தத் தமிழ்ப் பூங்காவில் தேன் மாந்தும் அனைத்து வண்டுகளும்….
  எங்கும் தமிழருள் பெற்று…இன்புறுவ ரெம்பாவாய்!

  • நன்றி! எல்லோரும் இன்புற்றிருக்க நீங்கள் ஆற்றும் தமிழ் தொண்டுக்கு இன்னுமொரு நன்றி. 🙂

 5. சொக்கன் அண்ணா,
  150 வது பாடல் வாக்குண்டாம் , பல நாட்கள் காலையில் தினமும் சொன்னால் தான் சிற்றுண்டி தருவார்கள் என்று அர்த்தம் தெரியாமல் சத்தமாக ஒப்புவித்த பாடல் …. எனது 37 வது வயதில் இதற்கு உங்களால் அர்த்தம் கிடைகிறது நன்றி உங்களிடம் பா பயிலும்
  தம்பி விக்ரம் .@vikramtnj

 6. 150 நாட்கள் போனதே தெரியவில்லை! ஒவ்வொரு நாளும் இன்று என்ன பாடல், இதறக்கு கேஆரெஸ், இராகவன் கோபால்சாமி என்ன விளக்கம் சொல்வார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள ஆர்வ மிகுதியில் ஒரே நாளில் பல முறை தளத்தை வந்து படித்திருக்கிறேன்.

  சொக்கனுக்கு வாழ்த்துக்கள்! கேஆரெஸ் மற்றும் இராகவன் கோபால்சாமி அவர்களுக்கு நன்றி!

 7. எனக்கு பிடித்த ஐந்து பாடல்கள்:

  1 மாலைமாற்று (https://365paa.wordpress.com/2011/07/30/025/) – இப்படி ஒன்று தமிழில் இருந்ததே அப்போது தான் தெரித்தது.
  2 நட்பைக்கூட நெருப்பைப்போல எண்ணுவேன் (https://365paa.wordpress.com/2011/07/31/026/) – யாருக்குதான் நட்பு பிடிக்காமல் போகும். தீயோடான நட்பின் உவமை இப்பாடலுக்கு இன்னும் சிறப்பு.
  3 மயக்குறு மக்கள் (https://365paa.wordpress.com/2011/09/06/063/) – குழந்தைகள். ஆசிரியர் குறிப்பு: கவிதையோடு ஒப்பிடும்போது உரைநடை எப்பேர்ப்பட்ட ஏழை என்று இதுபோன்ற பாடல்களை ‘விளக்க’ முற்படும்போதுதான் புரிகிறது. ஒரு முறை படித்தாலே பாட்டு மனதில் நின்று விடுகிறது.
  4 கோத்தும்பி! (https://365paa.wordpress.com/2011/07/18/013/) – திருவாசக பாடல். இதனை தொடர்ந்து தேவார பாடல்கள் என உரையும், விளக்கமும் சிறப்பு.
  5 வீணாகும் பால் (https://365paa.wordpress.com/2011/09/07/064/) – வெள்ளிவீதியார் காதல் பாட்டு. இராகவன், கேஆரெஸ் தரும் விளக்கங்களை படிக்க தவறாதீர்கள்.

 8. GiRa says:

  நூற்றைம்பது பாக்கள். அதிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பா. ஒவ்வொரு நூல். ஒவ்வொரு நூற்றாண்டு. ஒவ்வொரு புலவர். இது எளிய செயல் அல்ல.

  வெளிநாடு போனாலும், வெளியூர் போனாலும், அது ஆனாலும், இது ஆகாவிட்டாலும், தவறாமல் வந்து விடும் பாக்கள்.

  எங்களையும் சொல்லிப் பெருமைப் படுத்தியிருக்கிறான் என்.சொக்கன். அதற்கு நன்றி. ஆனால் நாம் இன்றும் பார்த்து வியக்கும் அவரின் உழைப்புக்குதான் முதல் மதிப்பு இங்கு.

  ஆற்றுக்குத் துறை கட்டுவதும் நூலுக்கு உரை கட்டுவதும் எளிய செயல்களே அல்ல. செய்யும் மனத்துணிவும் உடற்துணிவும் தேவை. எத்தனையோ நூல்களை என்.சொக்கன் அவர்களே எழுதி விட்டார். எத்தனை இதழ்களில் தொடர் கட்டுரைகள். அப்படியிருப்பவர் இப்படி ஒன்றைச் செய்யத்தான் வேண்டுமா? வேண்டும் என்று அவரே சொல்லிச் செய்கிறார். ஏன்? ஈடுபாடு. நமக்கெல்லாம் ஒரு பாடமாய்ச் செய்யும் தமிழ்த்தொண்டுக்கு எனது பாராட்டுகள்.

  இந்த நூல்கள் இருப்பது பலருக்குத் தெரியும். அவைகளுக்கு உரைகளும் இருப்பது பலருக்குத் தெரியும். ஆனால் யார் எடுத்தார்? யார் வலைப்பூவில் தொடுத்தார்? இவர்தான் செய்தார். ஓடும் தேரோட அதில் ஆடும் மணியாக எங்களைப் போன்றோரின் பின்னூட்டங்கள். மணியில்லாமலும் தேரோடும். தேரில்லாமல் மணியாடாது. 🙂 ஆகையால் இதற்கான முழுப் பெருமையும் இனிய நண்பர் என்.சொக்கன் அவர்களுக்கே என்பது என் கருத்து.

  நான் ரசிகன். அந்த ரசிப்புக்குத் தீனி போடுகின்றது இந்த வலைப்பூ. அதற்கு என்னுடைய நன்றி பல. 🙂

 9. எனக்கு பிடித்த ஐந்து பாடல்கள்:

  1. மாலைமாற்று (365paa wordpress com/2011/07/30/025/) – இப்படி ஒன்று தமிழில் இருந்ததே அப்போது தான் தெரித்தது.
  2. நட்பைக்கூட நெருப்பைப்போல எண்ணுவேன் (365paa wordpress com/2011/07/31/026/) – யாருக்குதான் நட்பு பிடிக்காமல் போகும். தீயோடான நட்பின் உவமை இப்பாடலுக்கு இன்னும் சிறப்பு.
  3. மயக்குறு மக்கள் (365paa wordpress com/2011/09/06/063/) – குழந்தைகள். ஆசிரியர் குறிப்பு: கவிதையோடு ஒப்பிடும்போது உரைநடை எப்பேர்ப்பட்ட ஏழை என்று இதுபோன்ற பாடல்களை ‘விளக்க’ முற்படும்போதுதான் புரிகிறது. ஒரு முறை படித்தாலே பாட்டு மனதில் நின்று விடுகிறது.
  4. கோத்தும்பி! ( 365paa wordpress com/2011/07/18/013/) – திருவாசக பாடல். இதனை தொடர்ந்து தேவார பாடல்கள் என உரையும், விளக்கமும் சிறப்பு.
  5. வீணாகும் பால் ( 365paa wordpress com/2011/09/07/064/) – வெள்ளிவீதியார் காதல் பாட்டு. இராகவன், கேஆரெஸ் தரும் விளக்கங்களை படிக்க தவறாதீர்கள்.

  (இதற்கு முன் இட்ட பின்னூட்டம் ஐந்து பாடல்களுக்கும் இணைப்பு கொடுத்திருந்ததால் என்னவோ வரவில்லை, மேலே 365paa wordpress com இடையே “.” இட்டு கொள்ளுங்கள் )

 10. சத்தம் போடாமல் தொடர்ந்து வருபவனிடமிருந்தும் வாழ்த்துகள். இது ஒரு இனிய முயற்சி. இனியும் தொடர்ந்து வருவேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s