தூதன்

கொல்லல் ஆம் வலத்தனும் அல்லன்; கொற்றமும்

வெல்லல் ஆம் தரத்தனும் அல்லன்; மேலை நாள்

அல் எலாம் திரண்டு ஆன திறத்தன் ஆற்றலை

வெல்லலாம் இராமனால்; பிறரும் வெல்வரோ?

*

என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்

தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால்

அன்னவே காலங்கள் கழியும்; ஆதலான்,

துன்ன அரும் செரும் தொழில் தொடங்கல் தூயதோ?

*

’ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற,

பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை

பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம்’ என

ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால்.

*

’இங்கு ஒரு திங்களே இருப்பன் யான்’ என

அம் கண் நாயகன் தனது ஆணை கூறிய

மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்

பொங்கு வெம் செருவிடைப் பொழுது போக்கினால்

*

’ஆதலான், அமர்த் தொழில் அழகிற்று அன்று; அரும்

தூதன் ஆம் தன்மையே தூயது’ என்று உன்னினான்;

வேத நாயகன் தனித் துணைவன், வென்றி சால்

ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான்.

நூல்: கம்ப ராமாயணம் (சுந்தர காண்டம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: சீதையைத் தேடி இலங்கை செல்கிறான் அனுமன். அங்கே சில கலாட்டாக்களுக்குப்பின் ராவணனின் சபைக்குக் கொண்டுசெல்லப்படுகிறான். அப்போது அனுமன் மனத்தில் ஓடும் எண்ணங்கள் இவை

(இந்த உரை கிட்டத்தட்ட நாடக வசன பாணியில் எழுதப்பட்டுள்ளது. இதில் பல வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

வேத நாயகனாகிய ராமனின் நண்பனான அனுமன், தனக்கு எதிரியாகிவிட்ட ராவணனின் சபையை நெருங்கினான். அவன் மனத்தில் பலவிதமான சிந்தனைகள்:

*

ராவணனிடம் என்னை அழைத்துச் செல்கிறார்கள். நான் இப்போது என்ன செய்யவேண்டும்? அமைதியாகப் பேசுவதா? அல்லது, சண்டை போடுவதா?

இந்த ராவணன் நோஞ்சான் இல்லை. இவனை யாராலும் சுலபத்தில் கொன்றுவிடமுடியாது.

அட, கொல்வது இருக்கட்டும், இவனுடைய படைகள், இவன் இதுவரை அடைந்திருக்கும் வெற்றிகளையெல்லாம் பார்த்தால், இவனைப் போரில் தோற்கடித்து விரட்டுவதுகூட அத்தனை சுலபம் இல்லை.

பழைய காலம் தொடங்கி இன்றுவரை உலகில் சேர்ந்த இருள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் திரட்டியதுபோன்ற நிறம் கொண்டவன் இந்த ராவணன். அவனுடைய வலிமையை முறியடித்து வெல்லக்கூடிய திறமை ராமனுக்குமட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் இல்லை.

*

ஒருவேளை, நான் இவனோடு சண்டை போடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். என்னால் இவனைச் சுலபத்தில் ஜெயித்துவிடமுடியாது. இவனாலும் என்னைச் சுலபத்தில் ஜெயித்துவிடமுடியாது. ஏனெனில், நாங்கள் சம அளவு பலம் கொண்டவர்கள்.

ஆகவே, நாங்கள் மோத ஆரம்பித்தால், அநாவசியமாக நேரம்தான் வீணாகும். ஆகவே, இப்போது சண்டை போடுவது புத்திசாலித்தனம் இல்லை.

*

தவிர, ராவணனைக் கொல்வேன் என்று ராமன் சபதம் எடுத்திருக்கிறான். ‘அவனுடைய பெரிய, பலம் வாய்ந்த தோள்களையும் பத்துத் தலைகளையும் வெட்டித் தள்ளிப் புழுதியில் புரட்டுவேன்’ என்று விரதம் பூண்டிருக்கிறான். ஏழு உலகங்களும் சந்தோஷப்படும்படி ராமன் அந்தச் சபதத்தை முடிக்கவேண்டும். அதற்கு, இப்போது நான் ராவணனைத் தாக்கக்கூடாது.

*

அழகிய கண்களைக் கொண்ட ராமன்மீது ஆணை வைத்துச் சீதையும் ஒரு சபதம் செய்திருக்கிறாள். ‘இந்த இலங்கையில் நான் ஒரு மாதம்தான் காத்திருப்பேன். அப்போதும் என்னை மீட்க ராமர் வராவிட்டால், இங்கேயே உயிர் துறந்துவிடுவேன்.’

சீதை சொன்னதைச் செய்கிறவள். நான் சண்டை போட்டு நேரத்தை வீணாக்கினால் அவளுடைய உயிருக்கு ஆபத்து.

*

இப்படி எந்தக் கோணத்தில் யோசித்தாலும், இப்போது சண்டை போடுவது புத்திசாலித்தனம் அல்ல. தூதனாக அமைதியுடன் பேசுவதே நல்லது.

துக்கடா

 • உரையைப் படித்தபிறகு, மேலே உள்ள பாடல்களை இன்னொருமுறை படித்துப் பாருங்கள். மேதைமை என்பது சிக்கலாக எழுதுவது அல்ல என்று கம்பன் சொல்லித்தருவான்!
 • இன்றைய அரிய சொல் : அமர் = போர் / சண்டையிடுதல்
 • உதாரணங்கள்:
 • 1. அமர்க் கடந்த நின் ஆற்றல்… : புறநானூறு
 • 2. அவுணர் … அழிய அமர் செய்து அருள்வோனே : திருப்புகழ்

149/365

Advertisements
This entry was posted in அனுமன், கம்ப ராமாயணம், கம்பர், நாடகம், ராமன். Bookmark the permalink.

14 Responses to தூதன்

 1. PVR says:

  The thought process Hanuman had will be eternal. Will eminently suit everyone who goes negotiate, for any result. Mergers & Acquisitions or just with an irritating client. Kamban நல்ல ஆசான். எழுத்திலும், எண்ணத்திலும்.

  சொக்கவைக்கும் சொக்கனுக்கு நன்றிகள் பல. 🙂

 2. PVR says:

  //everyone who goes negotiate// ‘goes to negotiate’.

 3. அடேய்…கம்பா, கம்பா….கலக்குறியே-டா:)

  கண்ணதாசன் எளிய தமிழ்-ல நச்-ன்னு அடிச்சி கலக்குவாரு, தெரியும்!
  இளையராஜா, நீர்க்குமிழி-க்குக் கூட இசையைப் போட்டுக் கலக்குவாரு, தெரியும்!

  ஆனா நீயி, இயல்-இசை-நாடகம்-ன்னு, எல்லாத்துலயும் சும்மா நவுத்தி அடிக்கிறியே….
  உன்னை என்ன பண்ணாத் தகும்? பாவி பாவி… 🙂

  கம்பனும் நீயோ? கவின் தமிழும் உன்னதோ?
  வம்பனாம் உன்னை அறிந்’தே’ ஓதினேன்!! – என்னை
  விரைந்தேற்றுக் கொள்ளாத முருகுண்டோ? உண்டோ
  கரைந்தேற்றுக் கொள்ளாத தமிழ்!!

 4. ‘கம்பன் கவியில் அப்பிடி என்ன பெருசா இருக்கு?
  சும்மா பேசிப்பேசியே கம்பனை ஏத்தி வுட்டுட்டாங்க!
  இதைப் போல விருத்தப் பாக்கள் பல பேரு எழுதி இருக்காங்களே’-ன்னு சிலர் நினைக்கலாம்!

  ஆனால்…அவர்கள் வெறும் வெத்து இலக்கணம் மட்டுமே பார்ப்பவர்கள்! நேர் நேர் தேமா, மாமா, வாம்மா-ன்னு எழுத்து விளையாட்டு மட்டுமே அவர்கள் வாடிக்கை! ஆனால், அதையெல்லாம் தாண்டி….

  ஒரு காட்சி
  ஒரு மனித மனம்
  ஒரு பேச்சு
  ஒரு உணர்ச்சி
  ஒரு வாழ்வு
  ஒரு உண்மை
  ஒரு தமிழ்ப்பீடு-ன்னு
  பொடேர்-ன்னு…..
  ஒரே வரியில்…..

  போட்டு உடைக்கிற ஆற்றல் கம்பனுக்கு உண்டு….பின்னர் கண்ணதாசனுக்கு உண்டு!
  அதான் கம்பன் இத்தினி முறை பேசப்படுவதற்குக் காரணம்!
  ————-
  //மேதைமை என்பது சிக்கலாக எழுதுவது அல்ல என்று கம்பன் சொல்லித்தருவான்!//

  சொக்கரின் மேற்கண்ட வாக்கியத்தை 1008 முறை வழிமொழிகிறேன்!

 5. அனுமன் விரைந்து யோசிப்பவன், சொல்லின் செல்வன்-ன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்!
  கதிரவன் கிட்ட பாடம் கேட்டவன் அல்லவா? விரைஞ்சி தான் யோசிக்கணும், விரைஞ்சி தான் படிக்கணும், விரைஞ்சி தான் பாயணும்!

  விரைந்து யோசிப்பவன் = ஆனா…அதை எப்படி நம்ம எல்லாருக்கும் சொல்வது?

  “சொல்லிற் செல்வன் அனுமன் தோன்றினான்”-ன்னு பாடி, அனுமனுக்குப் பட்டம் குடுத்துட்டா……..கவிஞர் நம்ம மேல, அவர் கருத்தைத் திணிக்கறாரு-ன்னு ஆயீரும்!
  ——————-

  கம்பன் அப்படி எங்குமே செய்வதில்லை!
  பிற/பிற்காலப் “புராண” எழுத்தாளர்கள், அப்படிச் செய்வார்கள்! (பேர் சொல்ல விருப்பமில்லை)

  ஆனால், கம்பன், சங்கத் தமிழ் மாண்பு அறிந்தவன்! தன் கருத்தைத் திணிக்காமல்…காட்சி அமைப்பிலேயே….காட்டி விடுவான்!

  வாலி வதமா? இராமன் யோக்கியனா? = வாலி-அவன் மனைவி பேசுவதிலேயே தெரிந்து விடும்! இராமனே குற்றத்தை ஒப்புக் கொள்வான்!

  கும்பகருணனா? அண்ணன் தப்பே செஞ்சாலும், அவன் பக்கம் நிக்கணுமா? ஏன்? = கும்பகருணன்-வீடணன் உரையாடலிலேயே தெரிஞ்சீரும்….
  “நீர்க்கோல வாழ்வை நச்சி”-பாட்டைப் படிச்சிப் பாருங்க! அப்படியே Total flat :))
  ——————-

  இங்கும், அனுமன் செய்கையை வைச்சே….அவன் விரைந்து யோசிப்பதைக் காட்டுகிறான்!
  எப்படி??? பார்க்கலாமா???

 6. //கொல்லல் ஆம் வலத்தனும் அல்லன்; கொற்றமும்
  வெல்லல் ஆம் தரத்தனும் அல்லன்;//

  எதிரியை எப்படி “எடை போடுறான்” பாருங்க!
  கூடவே “கொல்லல் ஆம், வெல்லல் ஆம், அல்லல் ஆம்”-ன்னு சொல்லாட்சி!
  “வலத்தன்-தரத்தன்-திறத்தன்” ன்னு சும்மா சொல்லால வூடு கட்டி, பொருளால புதைச்சி வைக்கிறாரு!:)
  —————–

  //என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்
  தன்னையும் வெலற்கு அரிது எனக்கு//

  இதைச் சொல்ல, எத்தனை “நேர்மை” இருக்க வேண்டும் அனுமனுக்கு?
  என்னாலயும் இவனை வெல்ல முடியாது, இவனாலயும் என்னை வெல்ல முடியாது…

  சிலர் என்ன பண்ணுவாங்க? வாடா ஓண்டிக்கு ஒண்டி-ன்னு மார் தட்டுவாங்க! தன் தகுதி என்னா-ன்னே தெரியாது! கேட்டா “எலக்கியச் சண்டை” :))
  ஆனா அனுமன்?

 7. ஆனா அனுமன்?
  1) வினை வலியும் 2) தன் வலியும் 3) மாற்றான் வலியும்
  4) துணை வலியும் தூக்கிச் செயல் (குறள்)
  ———————

  இப்போ கம்பனையும், குறளையும் ஒரு சேரப் பாருங்க!

  * தன் வலி = என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு
  * மாற்றான் வலி = இவன் தன்னையும் வெலற்கு அரிது எனக்கு
  * துணை வலி = மேலை நாள் – கொற்றம் – அல் எலாம் திரண்டு
  * வினை வலி = தாக்கினால் அன்னவே காலங்கள் கழியும்

  எப்பிடி, கம்பனும்-வள்ளுவரும் conference call போட்டு பேசறாங்க பாருங்க!
  வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும்
  துணைவலியும் தூக்கிச் செயல் (குறள்)

 8. குறளையும் தாண்டி, ஒரு படி மேலே எட்டிப் பாக்குறான் கம்பன்!
  அதான் பெண்-வலி! காதல்-வலி!

  நான் இவன் கூட மூனு நாள் தொடர்ந்து வம்பு இழுக்கப் போறேன்…
  ஆனா, என் காதல் உள்ளம் ஒன்னு, மருத்துவமனையில் போராடிக்கிட்டு இருக்கு!
  நான் இங்க இருந்து இவனை வீழ்த்துவதா? இல்லை அங்கிருந்து அவளுக்கு ஆறுதல் தருவதா?
  ——————–

  //ஆணை கூறிய மங்கையும்
  இன் உயிர் துறத்தல் வாய்மையால்//

  அப்பவே சீதை தற்கொலைக்கு முயன்றாளே!
  ஏதோ, தெய்வாதீனமா…வழியில் எங்கும் மாட்டிக்காம வந்ததால…சரியான சமயத்துக்கு வந்து…காப்பாத்த முடிஞ்சுது…

  ஆனா, இராவணன் மிரட்டிய மிரட்டில்…அவன் குடுத்த ஒரு மாதக் கெடுவில்…இவ மறுபடியும் தற்கொலைக்கு முயன்றா?
  ——————–

  ஒருமுறை தற்கொலை முயற்சி செஞ்சவ கிட்ட…எப்படிப் பேசணும்-ன்னு ஒரு மனிதநேயம் இருக்குல்ல?
  சுடுசொல் தாளாமல், மறுபடியும் செய்துக்குவாங்களோ?-ன்னு உடம்பு பதறும்-ல்ல?

  அனுமன்…ஒரு குரங்கு…
  மனிதனுக்குப் பதறாதது….மிருகத்துக்குப் பதறியது!

  சீதையின் தற்கொலையை மனசார நினைச்ச மாத்திரத்தில்…All Switch Off!
  எந்த வம்பும் வளர்க்காம, நல்லபடியா வேலையை முடிச்சிட்டு, இராகவனை அழைச்சிட்டு வந்துறணும்! ஒரு மாசத்துக்குள்ள எல்லாம் நல்லபடியா நடக்கணும்….

  அதுக்கு…அமைதி என்னும் ஆயுதம் ஏந்துவோம்!
  = இதுவே அனுமன்! அல்ல அல்ல! இதுவே கம்பன்!

 9. வழக்கம் போல நல்ல தேர்வு.

  ‘அல் எலாம் திரண்ட’

  அதே போல, தாடகையை ‘அல்-ஒக்கும் நிறத்தினாள் ‘ங்கறார்.

  அல்-னா இருள். அதாவது, அல்-னா இன்மை. ஒளியின்மை இருள்.
  அல் எலாம் திரண்ட – இன்மையின் தொகுப்பு! இது ‘வெறும்’ physical வர்ணணை இல்லை.

  அசோகவனத்தை அனுமன் நாசம் பண்றப்போ ஒரு பாட்டு:


  முடிந்தன பிளந்தன முரிந்தன நெரிந்த
  மடிந்தன பொடிந்தன மறிந்தன முறிந்த
  இடிந்தன தகர்ந்தன எரிந்தன கரிந்த
  ஒடிந்தன ஒசிந்தன உதிர்ந்தன பிதிர்ந்த

  நடக்குற அட்டகாசம் வார்த்தைகள்ல தெளிவா படம்பிடிச்சிருக்கார்.

  சந்தத்தோட உரக்க படிச்சா அதகளம் காதுல கேக்குது.

  • என்ன @dagalati, உங்க கம்பன், எங்க அருணகிரி கூட போட்டி போடுறானா?:)))

   Jokes apart!
   கம்பன் ஆங்காங்கே, சந்தத்திலும் கலக்குவான்!
   @dagalti குடுத்த பாட்டில்….”ஒடிந்தன ஒசிந்தன உதிர்ந்தன பிதிர்ந்த”! எப்படிக் கொட்டுது பாருங்க சொற் குற்றாலம்!

   சிந்து பைரவி படத்தில், ஆரோசை (ஆரோகணம்) மட்டுமே இருக்கும் “கலைவாணியே” பாட்டு ராஜா போடுவாரு-ல்ல?
   அதே போல், கம்பன்…வெறுமனே வல்லினமா வச்சிப் பாடுவான்…அப்பறம், மெல்லினமா வச்சிப் பாடுவான்!

   பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
   செஞ் செவிய கஞ்ச நிமிர் சீறடியள் ஆகி
   அஞ் சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
   வஞ்சி யென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்!

   வேகமாப் படிங்க! ஙஞணநமன நாக்குல குழறும்:)

  • amas32 says:

   That’s what I did just now 🙂 சந்தத்தோட உரக்க படிச்சா காட்சி கண் முன் விரிகிறது!
   amsa32

 10. amas32 says:

  விவேகம் முக்கியம் என்று உணர்த்துகிறார் அனுமன். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் தூதுவனுக்குரிய இலக்கணத்தை நாம் இங்கே காண்கிறோம். யாராவது கம்ப ராமாயண வகுப்பு எடுத்தால் ஆவலுடன் சேருவேன்.
  amas32

 11. அருமைங்க இதெல்லாம் படிக்க வழி காமிச்ச கேயாரெஸுக்கு அவர் சொல்லிலேயே … நனி நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s